படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, December 31, 2004

இப்படியும் கொடுக்கலாம்-குறுஞ்செய்தி

இப்படியும் கொடுக்கலாம் - Frequent Flyer Miles

அதேபோல, ஐரோப்பாவின் சில நாடுகளில், நிவாரண நிதியைக் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதன் வாயிலாகச் சேகரிக்கிறார்கள்.

செல்பேசிப் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குக் (உ-ம்: 9999) குறிப்பிட்ட வார்த்தையுடன் (உ-ம்: சுனாமி, ஆசியா...) ஒரு குறுஞ்செய்தியை அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு கு.செவுக்கும் வழக்கத்தைவிட அதிகமான தொகையொன்று வசூலிக்கப்படும். அத்தொகையை சேவை வழங்குவோர் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துவிடுவர்.

ஸ்விஸில் இரண்டு தொலைபேசிச் சேவை வழங்குநர்கள் இப்பணியில் தொண்டு அமைப்புகளுக்கு உதவி புரிந்துள்ளனர். ஒரு நிறுவனம் கு.செ ஒன்றுக்கு 1 ஃப்ராங்கும் (சுமார் 90 அமெரிக்க சென்ட்டுகள்), மற்றொரு நிறுவனம் 5 ஃப்ராங்குகளும் வசூலிக்கின்றன. இவை முறையே காரிடாஸ், யூனிசெஃப் தொண்டு அமைப்புகளுக்குப் போய்ச்சேரும், மில்லியன்களில்.

வருடத்தின் இறுதிநாள்

இன்னும் சிலமணி நேரங்களில் இவ்வாண்டு வரலாறாகிவிடும். எளிதில் மறந்துவிடமுடியாத சோகத்தை எல்லோர் மனதிலும் அப்பிச் சென்றுவிட்ட வருடமிது.

உலகில் பலரும் பல வழிகளில் தம்மாலான உதவிகளைச் செய்துவருகின்றனர்; அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லபடியாகச் சென்றடையட்டும். அத்துடன், இறந்த குழந்தைகள் முதலானோரை நினைவுகூறும் விதத்திலும், அனைத்தையும் இழந்து நொந்துகிடப்போரின் துயரில் பங்குகொள்ளும் வண்ணமும் ஒவ்வொரு வீட்டிலும் இன்று விளக்கையோ, மெழுகுவர்த்திகளையோ ஏற்றி வைப்போம். இதனால் ஆகிவிடப்போவதொன்றுமில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் காட்டும் மானசீக ஆதரவின் அடையாளமாக அதைக் கொள்ளலாம்.

கனத்த நினைவுகளுடன் புதுவருடத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். வருங்காலமாவது மக்களுக்கு நிம்மதியை அளிக்கட்டும்!

Sunday, December 26, 2004

நிலஅதிர்வு-சுனாமி-உயிரிழப்புகள்

காலையில் இந்தியாவிலிருந்து குறுஞ்செய்தியொன்று தமிழகத்தில் நடந்த இயற்கைப் பேரழிவுச் செய்தியைத் தாங்கிவந்தது. சென்ற 5-ம் தேதியன்று எதிர்கொண்ட நிலஅதிர்வினைத் தொடர்ந்து இம்மாதத்தில் கேட்கும் மற்றொரு நிலநடுக்கச் செய்தி இது.
ஒருவிதப் பதற்றத்துடன் உடனடியாக தொ.கா., இணையம் ஆகியவற்றின் மூலமாக நடந்தவைகளைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தோம். நேரமாக ஆக உயிரிழப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் அதன் விளைவாகத் தோன்றிய சுனாமியின் தாக்குதலால் இறந்தோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. இந்தோனேஷியா, தாய்லாந்தைக் காட்டிலும் இந்தியா மற்றும் இலங்கையில் அது மிக அதிகம். நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் மனித உயிர்களுக்கு கிடைக்கும் மதிப்பு குறைவு. அதனாலேயே இறப்போரின் எண்ணிக்கை சர்வசாதாரணமாகக் கூடுகிறது.

சில விருப்பங்கள்/வேண்டுகோள்கள்: இதுபோன்ற இயற்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்த மற்றும் செயல் நிலைகளைக் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். மக்களுக்குச் சொல்லப்படும் தகவல்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் சென்றடைவதில்லை. இவை வதந்திகளுக்கும் தேவையற்ற பதற்றங்களுக்கும் வழிசெய்கின்றன. ஊடகங்கள் மக்களைப் பயமுறுத்தாவண்ணம் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்பேரில் ஒருங்கிணைந்த செய்திகளைத் தருவதற்கான ஏற்பாடுகள் இருக்கவேண்டும். தமிழகம் பலமுறை புயல் மற்றும் வெள்ளச் சேதங்களுக்கு இலக்காகியுள்ளது. நீண்ட கடற்கரையைக் கொண்ட இப்பகுதியில் நடக்கும் எந்தச் சீரழிவுகளையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இறப்போரில் பெரும்பாலும் கடலையொட்டி வாழும் ஏழை மீனவர்களே; அவர்களுக்குத்தான் எவ்வளவு துயர், வாழ்நாள் முழுவதும்!

சில சுட்டிகள்:
நிலநடுக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன?
http://www.bbc.co.uk/science/hottopics/naturaldisasters/earthquakes.shtml
சுனாமி என்றால் என்ன?
http://www.geophys.washington.edu/tsunami/general/physics/physics.html

Friday, December 24, 2004

தினமணி - சில புலம்பல்கள்

"பல சமயங்களில் மிகவும் சாதாரணமான கட்டுரைகளே தினமணியில் வெளியாகின்றன." இதை வாசித்ததும் மனதிலிருந்த புலம்பல்கள் சில மீண்டும் தலைதூக்கின.

தற்காலங்களில் மற்ற பத்திரிக்கைகளுக்கும் தினமணிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மிகமுக்கியமாக எதாவது நடந்துகொண்டிருக்கும், இங்கு பர்வேஸ் முசாரஃப் பற்றி தலையங்கம் எழுதிக்கொண்டிருப்பார்கள். கட்டுரைகள் அறிவுரை போதிப்பவைகளாகவோ அல்லது ரவி ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டது போல சாதாரணமானவைகளாகவே இருக்கின்றன, பெரும்பாலும். தமிழ் உபயோகத்திற்கு சற்று முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருந்தனர், அதுவும் பழங்கதையாகிவிட்டது.

பள்ளி, கல்லூரி நாட்களில் தினமணியைப் பற்றிய பெரிய பிம்பம் மனதில் இருந்தது. தினமணியில் (நாளிதழ், தமிழ்மணி, கதிர் ...) வரும் தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றை கத்தரித்துச் சேகரித்துவைத்த காலமெல்லாம் ஒன்று. ஒருவேளை அப்பொழுதும் இப்படித்தான் இருந்ததோ?!

Thursday, December 23, 2004

எங்கே இருக்கின்றன இந்தியப் பல்கலைக்கழகங்கள்?

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 21-ம் தேதியன்று வந்த ஒரு செய்தியின்படி ஆசிய அளவிலும் சரி, உலக அளவிலும் சரி இந்தியப் பல்கலைக்கழகங்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. உயர் கல்வி வளர அரசாங்கம் அதிக நிதி ஒதுக்கி, தேவையான வசதிகளைச் செய்ய முன்வர வேண்டும்; கல்வியாளர்களும் மனது வைக்கவேண்டும்.

Friday, December 17, 2004

தமிழ்நாட்டில் டிஸ்னியின் ஒளிபரப்பு

டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பைத் துவங்கியிருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது; தமிழிலும் தனியாக ஒளிபரப்புகிறார்கள். இதற்கு முன்னதாக ‘டிஸ்கவரி சேனல்’ போன்றவையும் தமிழில் வந்ததாகச் சொன்னார்கள்; எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றது எனத் தெரியவில்லை. தற்காலத்தில் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தைத் தொலைக்காட்சியில் செலவிடுவதால் அவர்களுக்கெனத் தனியாக உருப்படியான நிகழ்ச்சிகள் அவசியம் தேவைப்படுகின்றன.

Wednesday, December 15, 2004

பொன்னொன்று கண்டேன்...

பொன்னொன்று கண்டேன்
பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
...

இப்பாடலை ஏனோ திடீரென்று இன்று மாலை கேட்கத் தோன்றியது. தமிழ்த் திரைப் பாடல்களில் துவக்கத்திலேயே அருமையான இசையுடன் துவங்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று. பாடல் ஆரம்பித்த ஒரு சில விநாடிகளில் வயலினை லேசாக இசைத்து விடுவார்கள் பாருங்கள், மயிலிறகால் தொடுவதைப் போன்ற உணர்வு.

பாடலைக் கேட்க இங்கு செல்லவும்.

Sunday, December 05, 2004

நில அதிர்வு

லேசான குலங்கலுடன் ஏற்பட்ட சப்தம் கேட்டு உறக்கத்திலிருந்து விருட்டென எழுந்தோம்; ஒரு கணம் ஆடிப்போய்த்தான் விட்டிருந்தது. சரியாக அப்போது இரவு 2.53 மணி. நில அதிர்வால் ஏற்பட்ட குலுங்கல் அதுவென உடனடியாக உணரமுடிந்தது. நல்ல வேளையாக அசம்பாவிதம் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. படுக்கையைவிட்டு எழுந்து கண்ணாடி சன்னல் வழியாகவும், கதவு வழியாகவும் வெளியில் பார்த்தபோது அக்கம்பக்கத்தில் யாரும் தென்படவில்லை. இருப்பது இரண்டாவது மாடியில், மீண்டும் குலுக்கல் ஏற்படுமா என்ற அச்சம் வேறு! கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு மீண்டும் போய்ப்படுக்க உறக்கம் வருவதாயில்லை. குஜராத், ஈரான் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கக் காட்சிகள் கண்முன் ஓடின.

காலையில் எழுந்து இணையப் பத்திரிக்கையொன்றைப் பார்த்தபோது ஜெர்மனியின் தென்பகுதியிலுள்ள கருங்காட்டுப் (Black Forest) பகுதியில் 5.4 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் இருந்ததாகவும் (சேதம் பற்றிய தகவல் இதுவரை ஒன்றும் இல்லை) அதன் பாதிப்பை வடக்கு சுவிட்சர்லாந்தின் பகுதிகளில உணரமுடிந்ததாகவும் எழுதியிருந்தனர். ஜூரிக்கிற்கும் தெற்கே இருந்ததா என்று நாளைக்கு அலுவலகம் போனால் தெரியும்.

வாழ்க்கையில் முதன் முதலாக எதிர்கொண்ட நில அதிர்வு. சென்ற இரவு மறக்க முடியாதவொன்று!

Thursday, December 02, 2004

ஓ ஃபார்சூனா

இங்கே க்ளிக்கிவிட்டு, கீழுள்ள உரையைப் (லத்தீன் மொழியில்) பார்த்துக் கொண்டே இப்பாடலைக் கேளுங்கள்; புரிய வேண்டியதெல்லாம் இல்லை, இசையே போதும். (எங்கோ கேட்ட மாதிரியே இருக்கலாம்.)

O Fortuna,
velut Luna
statu variabilis,
semper crescis
aut decrescis;
vita detestabilis
nunc obdurat
et tunc curat
ludo mentis aciem,
egestatem,
potestatem
dissolvit ut glaciem.

Sors immanis
et inanis,
rota tu volubilis,
status malus,
vana salus
semper dissolubilis,
obumbrata
et velata
mihi quoque niteris;
nunc per ludum
dorsum nudum
fero tui sceleris.

Sors salutis
et virtutis
mihi nunc contraria
est affectus
et defectus
semper in angaria.
Hac in hora
sine mora
cordum pulsum tangite;
quod per sortem
sternit fortem,
mecum omnes plangite!

இதை முதன் முதலில் நம்மூரில் ஒரு முகச் சவரப் பொருளுக்கான விளம்பரத்தில் கேட்டதுண்டு. பிற்பாடு தொ.காவில் காண்பிக்கப்படும் இசை நிகழ்ச்சிகள் ஏதாவதொன்றில் பார்த்துக் கேட்டதுமுண்டு (இன்றொரு முறை). சேர்ந்திசைப் பாடல்களில் (கோரஸ்) உலகப் புகழ்பெற்ற பாடலிது.

ஜெர்மானிய இசையமைப்பாளர் கார்ல் ஓர்ஃப் (1895-1982) என்பவரால் இசையமைக்கப்பட்ட கார்மீனா புரானா(Carmina Burana)-வில் வரும் ஒரு பாடலாகும். கார்மீனா புரானா என்பது 13-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் அடங்கிய தொகுப்பு. அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஓர்ஃப் இசையமைத்துள்ளார்.

மேலும் சில தொடுப்புகள்:
கார்ல் ஓர்ஃப் - 1 2
கார்மீனா புரானா
மேற்கண்ட பாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு

Wednesday, December 01, 2004

எய்ட்ஸ்

எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்துள்ளோரில் பெரும்பாலானோர் வளரா மற்றும் வளரும் நாடுகளில் வசிக்கும் மக்கள்; அதிலும் குறிப்பாகப் பெண்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாக உள்ளது. இந்நோயினால் நாளொன்றிற்குச் சுமார் 600 பேர் இறப்பதாகச் சொல்கின்றனர். பாதிக்கப்பட்டோர், நோயின் தொந்தரவுடன், சக மனிதர்களின் வெறுப்பு, ஒதுக்குதல், கேலி, தாக்குதல் முதலானவற்றிற்கு உள்ளாவது மிகவும் கொடுமையானது.

அரசுகளும், அரசு சாரா அமைப்புகளும் இந்நோயைத் தடுக்கும் முறைகளை எவ்வளவோ முயன்று பிரச்சாரம் செய்கின்றன. இருப்பினும், அறியாமை, அலட்சியம் போன்றவற்றால் இந்த அவலம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. நிரந்தர தீர்விற்கான மருந்துகள் வரும் வரை இன்னும் பல உயிர்கள் மாய்வது தொடரவே செய்யும்.

எய்ட்ஸ் பற்றிய உயிரியல் கூறுகளைச் சுருக்கமாக இங்கு காணமுடிகிறது.

Monday, November 29, 2004

இன்றைய நகைச்சுவை

"சங்கராச்சாரியாரான ஜெயேந்திரரை உள்நோக்கத்துடன் ஜெயலலிதா அரசு கைது செய்துள்ளது. சோனியா காந்தியின் நிர்பந்தம் காரணமாகவே ஜெயலலிதா இவ்வாறு செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

டிசம்பர் 1ம் தேதிக்குள் ஜெயேந்திரரை விடுதலை செய்ய வேண்டும்.....இல்லாவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களைத் திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன்"

- சு.சுவாமி

Monday, November 22, 2004

ஜான் பில்கர்

இதழியல் புலனாய்வுத்துறையில் குறிப்பிட்டுச் சொல்லப்படத்தக்கவர்களில் ஒருவர் ஜான் பில்கர் (John Pilger). சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் பரிந்துரைத்த புத்தகம் ஒன்றின் மூலமாக இவரைப் பற்றித் தெரிய வந்தது. The new rulers of the world என்ற நான்கைந்து கட்டுரைகளை உள்ளடக்கிய அப்புத்தகத்தின் வாயிலாக நவீன ஏகாதிபத்தியத்தின் ரகசியங்களையும், மாயைகளையும் போட்டுடைக்கிறார். இந்தோனேஷியாவில் மில்லியன் கணக்கில் மக்கள் சந்தடியில்லாமல் சாகடிக்கப்பட்டுள்ள வரலாறு, ஈராக்கில் வளைகுடாப் போரையடுத்து விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் விளைவாக நிகழ்ந்த கொடூரங்கள், அமெரிக்காவின் வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதி போன்றவற்றைப் படம்பிடித்துக் காட்டும் கட்டுரைகள். (பிற்பாடு வந்த பதிப்பில் பாலஸ்தீனப் பிரச்சனை குறித்த கட்டுரையொன்றும் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது). இவற்றில் சில ஆவணப்படங்களாகவும் இவரால் எடுக்கப்பட்டுள்ளன.

பில்கரின் பல்வேறு புத்தகங்களும், ஆவணப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை. அவுட்லுக் இந்தியா பத்திரிக்கையிலும் அவ்வப்போது இவரது கட்டுரைகளைக் காணலாம். http://pilger.carlton.com/ தளத்தில் இவரைப் பற்றிய குறிப்புகள், படைப்புகள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

Saturday, November 20, 2004

அமுக்கிப் பேசு

ஜி.எஸ்.எம். நுட்பியலில் இயங்கும் செல்பேசிகளில் வரப்போகும் மற்றொரு சேவை 'Push to Talk on Cellular' [சுருக்கமாக PoC என்றழைக்கிறார்கள்; நாம் அதை 'அமுக்கிப் பேசு' என்போமே! ;-)]. வழக்கமாக செல்பேசிகளில் ஒருவரை அழைக்க முழு எண்ணையோ அல்லது பெயரைத் தேர்ந்தெடுத்தோ அழுத்துகிறோம். மேற்குறிப்பிட்ட புதிய சேவையில் ஒரேயொரு பொத்தானைத் தட்டி ஒருவருடனோ அல்லது ஒரே சமயத்தில் பலருடனோ தொடர்பு கொள்ளமுடியும். ஒற்றை வரியில் சொன்னால், செல்பேசியில் 'வாக்கி-டாக்கி', அவ்வளவுதான்.

இச்சேவையைப் பற்றிய சில விவரங்களை அறிய இங்கே க்ளிக்கவும். (சொடுக்குதல் என்பதைவிட 'க்ளிக்' சரியாக இருக்குமென்றே நினைக்கிறேன்; மேலும் இது ஒலியில் இருந்து எழுந்த சொல்லாக இருப்பதால் அப்படியே சொல்லாமென்றும் தோன்றுகிறது.) மேலும் நுட்பியல் விவரங்கள் வேண்டுவோருக்கு 'ஓப்பன் மொபைல் அலையன்ஸ்'-ன் தளம் உதவக்கூடும்.

Thursday, November 11, 2004

யாசர் அராஃபாத் (1929 - 2004)

கடந்த பத்து நாட்களுக்குள் அரபுப் பிரதேசத்திலிருந்து மற்றொரு முக்கிய மரணச் செய்தி. யாசர் அராஃபத்தின் மரணச் செய்தி இன்று அதிகாலை பிரான்ஸில் அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக இறுதிவரை தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடி, இறுதியில் நோய்வாய்பட்டு மாய்ந்த மனிதர். பாலஸ்தீனர்களின் தனிநாடு என்ற கனவுச் சுடர் அழியாமல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்ததற்கு முக்கிய காரணமாக விளங்கினார். ஆயுதமேந்திய போராட்டங்களாலும், பின்னர் சமாதானப் பேச்சு வார்த்தைகள் வாயிலாகவும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருந்தார். இஸ்ரேலுடன் கண்ட சமாதான உடன்படிக்கைக்காக 1994-ல் கூட்டாக நோபல் பரிசைப் பெற்றார். இன்று ஒரு சகாப்தம் முடிவுற்றது; பாலஸ்தீன மக்கள் தங்களது மாபெரும் தலைவரை இழந்து நிற்கின்றனர்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் அராஃபத்தின் உடல் இறுதிச் சடங்கிற்காக கெய்ரோவை அடைந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. பல நாட்டுத் தலைவர்கள், பிரதமர்கள், வெளியுறவு அமைச்சர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அங்கு செல்கின்றனர். இந்தியாவின் சார்பில் சோனியா காந்தியும், வெளியுறவு அமைச்சரும் செல்வதாக ஒரு செய்தி தென்பட்டது. (இந்தியாதான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கரித்த முதல் முஸ்லிம்கள் அல்லாத அரசாகும்; ஆனால் சமீப காலத்தில் இஸ்ரேலுடன் இந்தியா தொடர்பை பலப்படுத்தியுள்ளது; என்ன காரணங்களோ?!) கெய்ரோவில் இறுதிச் சடங்கு முடிந்தபின் அவரது உடல் மேற்குக் கரைப்பகுதியிலுள்ள ரமல்லாவிற்கு எடுத்துவரப்பட்டு வரும் சனிக்கிழமையன்று அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

யாசர் அராஃபாத்தின் மரணச் செய்தி மேற்குலகின் செய்தி ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு கோணங்களில் (வாழ்க்கை, போராட்டம், அரசியல், சொத்து, அடுத்த தலைமை....) அலசல்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

9/11க்குப் பிறகு தீவிரவாதம் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசும் அமெரிக்க, இஸ்ரேலிய அரசுகள் அவை உருவானதற்கான காரணங்களை வசதியாக கண்டுகொள்ள மறுக்கின்றன. தீவிரவாதத்தால் சாதாரண மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தோடு மட்டுமன்றி ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். அதே சமயத்தில், இவர்களால் அனைத்தும் இழந்து, நாதியின்றி தினம்தினம் செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களைப் பற்றி இவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை. அடுத்தவர் வாழ்ந்த இடத்தை அதிகாரம், படைபலம் கொண்டு அடித்துத் துரத்திவிட்டு குடியேற்றங்களை ஏற்படுத்தி பெரும் பாதுகாப்பின் கீழ் வாழும் இம்மக்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர்களும் தங்களை நாகரிகமடைந்தோர், அமைதி விரும்புவோர் என்று கூறிக்கொள்வது மகா வெட்கக்கேடு. அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான ஒருதலைப்பட்ச ஆதரவு தொடரும் வரை பாலஸ்தீனப் பிரச்சனை ஓயப்போவதில்லை. இப்பிரச்சனையைத் தனியாகத் தீர்த்து வைக்கும் சூழ்நிலையில் அவர்களை விட்டால் வேறு எந்த நாடும் இப்போதைக்கு இல்லை. பிரச்சனை ஓயாத வரையில் இஸ்ரேலின் கையே இதில் ஓங்கி நிற்கும். அவ்வாறான நிலையில், கடைசியில் பாலஸ்தீனர்கள் ஒன்றுமில்லாதவர்களாகவோ அல்லது வேறு வழியின்றி இட்டதைப் பெற்றுச் செல்லும் பரிதாபத்திற்குரியவர்களாகவோ ஆக நேரிடலாம் (இப்போதே கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் உள்ளது).

யாசர் அராஃபாத்தின் மறைவினைத் தொடர்ந்து அவரது இடத்தில் யார் அமர்வார்கள், எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற அனுமானங்கள் தொடங்கி பலநாட்களாகிவிட்டன. அங்குள்ள தலைவர்கள் குழப்பமில்லாமல், ஒற்றுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டால் வருங்காலத்தில் ஏதேனும் உருப்படியான வழி உருவாகலாம். நம்பிக்கை வைப்போம்.

Wednesday, November 03, 2004

புஷ்ஷின் வெற்றி

தேசப் பாதுகாப்பு என்ற மிகைப்படுத்தப்பட்ட பயமுறுத்தலுக்குக் கிடைத்த வெற்றி. இப்பயமுறுத்தல்கள் இனி பல வடிவங்களில் அமெரிக்க மக்களின் வாழ்வில் அங்கம் பெறலாம்.

2005-ல் பாலஸ்தீன நாடு உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்ற ஆண்டு புஷ் தெரிவித்திருந்தார். அதற்கு 'கோவிந்தா' போடப்பட்டுவிடுமெனத் தோன்றுகிறது.

ஈராக்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கேட்பாரில்லை. ஈரான் தாக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இஸ்ரேலுக்குப் பெரும் கொண்டாட்டம்தான்.

அமெரிக்க மக்களிடையே பெரும் பிளவேற்பட்டிருப்பதாக இன்று கெர்ரி பேசினார். எவ்வித பாதிப்புகளை அது உண்டாக்கும் என்று போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.

வாழ்க அமெரிக்க மக்கள்! இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஷேக் ஜாயத் அவர்களின் மரணம்

நேற்றைய தொலைக்காட்சிச் செய்தியொன்றில் ஐக்கிய அரபுக் குடியரசுத் தலைவர் ஷேக் ஜாயத் அவர்கள் உடல் நலம் குன்றியிருப்பதாகச் சொன்னார்கள். இன்று காலை, உடன் பணிபுரியும் அரபு நாட்டைச் சார்ந்த நண்பர் ஒருவர் குடியரசுத் தலைவர் இறந்துவிட்ட தகவலைக் குறுஞ்செய்தி வாயிலாக மிகவும் சோகத்துடன் பகிர்ந்து கொண்டார். நாள் முழுவதும் பலமுறை ஒரு நல்ல மனிதரை நாடு இழந்து விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார்.

1971-ல் அந்நாடு உருவானது முதல் ஷேக் ஜாயத் அதன் தலைவராக இருந்துள்ளார். தன்நாட்டு மக்களின் மதிப்பிற்கும், உண்மையான அன்பிற்கும் பாத்திரமானவர். எண்ணெய் வளத்தால் கிடைத்த செல்வத்தின் பயனை நாடு முழுவதிற்கும் கிடைக்கச் செய்ததோடு மட்டுமன்றி, மிகக் குறைந்த காலத்தில் இந்நாடு மகத்தான வளர்ச்சி கண்டது இவரது ஆட்சியின் கீழ்தான்.

பி.கு.: இன்றைய பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் 1971-ல் ஐக்கிய அரபுக் குடியரசில் சேர்ந்து கொள்ள விடப்பட்ட அழைப்பை, ஏதோ காரணத்தால் அவை ஏற்க மறுத்துவிட்டனவாம்.

Thursday, October 28, 2004

பட்ட காலே படும்!

அது இதுவென்று சொல்லி, ஏற்கனவே பொருளாதாரத் தடைகளால் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்து, நொந்து நூலான நாட்டின் மீது படையெடுத்து, ஆக்கிரமித்து ஒரு வழி செய்து கொண்டுள்ளனர் 'கூட்டணிப்' படையினர். இவர்கள் போதாதென்று தீவிரவாதக் கும்பல்களின் அட்டூழியம் சொல்லி மாளாது. தினம் தினம் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டே உள்ளனர்.

போருக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று இச்செய்தி தெரிவிக்கிறது. இறப்போரில் பெண்களும், குழந்தைகளும் கணிசமானோர். 'ஜனநாயக ஏகாதிபத்திய'மன்றோ! தொடரும் இக்கொடூரச் சூழ்நிலை இன்னும் எத்தனை உயர்களை பலி வாங்கப்போகிறதோ? மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டதாகப் பெருமை வேறு பேசிக்கொள்கிறான்!!

Thursday, October 21, 2004

இப்படியும் நடக்கும் திருட்டு

"...நூலொன்றைப் பழைய புத்தகக்கடையில் வாங்கி அல்லது வாய்ப்புக் கிடைத்த இடத்தில் களவாண்டு கொண்டுவந்து அந்த நூலின் ஆசிரியர் பெயரை நீக்கிவிட்டு, புதிய பெயரொன்றைப்போட்டுப் புதுநூலாக வெளியிட்டால் தமிழர்களால் கண்டுபிடிக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது என்னும் நம்பிக்கை சில பதிப்பகங்களுக்கு இருக்கிறது."

இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என்று சற்றே வியப்பை ஏற்படுத்திய மேலுள்ள வரிகள் இம்மாத காலச்சுவடின் கட்டுரையொன்றில் காணப்பட்டவை. மேலும், தமிழர்களின் சில தனித்தன்மைகளாகப் பின்வருவனவற்றை விவரிக்கிறார் கட்டுரையாசிரியர்:

"தமிழர்கள் வரலாற்று உணர்வு அற்றவர்கள் என்பது பெரும் உண்மை. தங்களிடம் உள்ளவற்றைக்கூடப் பாதுகாத்து வைத்துக்கொள்ளத் தெரியாதவர்கள். இருபதாம் நூற்றாண்டில் வெளியான தமிழ் இதழ்கள், நூல்கள் ஆகியவற்றை ஏதேனும் ஆய்வுக்காகப் பார்க்க வேண்டும் என்றால், அதற்குச் சரியான இடமுண்டா? அவ்வளவு ஏன், 2004 ஜனவரி முதல் வெளியான இதழ்களைப் பார்க்க விரும்பினால், முடியுமா? இத்தகைய ஆவணப்படுத்தும் முயற்சி தமிழர்களின் இரத்தத்திலேயே கிடையாது. அதைவிடப் பெரிய விஷயம், தமிழர்களின் மறதி. எத்தனை பெரிய பாதிப்பையும் மிக எளிதாக மறந்துவிடக்கூடியவர்கள். தமிழர்களை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். கடைசியாக, சிறிய சலுகை ஒன்றைக் கொடுத்துவிட்டால் போதும். பழையவற்றை மறந்துவிட்டுப் பல்லை இளிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழர்களின் மறதிதான் அரசியல், ஆன்மீகம், இலக்கியம் வரைக்கும் பல பேருக்கு மூலதனம்." - என்றேனும் திருந்துவோமா, தெரியவில்லை.

இவ்வாறான திருட்டுகள் பிற்காலத்திலாவது நடவாமல் தடுக்க, பதிப்புரிமை, ISBN முதலானவற்றில் நல்ல பதிப்பகத்தார் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையாதாகும்.

Wednesday, October 20, 2004

Indira Gandhi: The Killing of Mother India

குழந்தைகளுக்கு அம்மாக்கள் நிலாவைக் காட்டிச் சோறூட்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இங்குள்ள மந்தார வானிலையில் நிலாவை எங்கே போய்க் காண்பது? தூறும் மழைக்கு வெளியில் சென்று நின்றால் உடம்பு விறைத்தேவிடும் போலுள்ளது. சாப்பிட வைக்க எதையாவது செய்ய வேண்டுமே! நிலாவின் இடத்தை தொலைக்காட்சிப் பெட்டி எடுத்துக்கொண்டது. ஒளியும் ஒலியுமாக இருக்கிற காட்சிகளுக்குத்தான் குழந்தையிடம் மதிப்பு உண்டு, மற்றவையெல்லாம் கண்டுகொள்ளப்படுவதில்லை! ஏதாவது பாடல் அல்லது விளம்பரத்தைப் பார்த்து மகள் நிற்கும் நேரத்தில் அவள் வாயில் ஊட்டிவிடுவாள் தாய். இன்று தொலை இயக்கியில் ('ரிமோட் கன்ட்ரோலு'க்கு இப்படி ஒரு சொல்லை எப்பொழுதோ படித்ததாக நினைவு; 'ரிமோட் கன்ட்ரோல்', 'ரிமோட்டா'கச் சுருங்கியதைப்போல், தொலை இயக்கிக்குச் சுருக்கமாகத் 'தொயிக்கி' என்றேன் மனைவியிடம், சிரிக்கிறாள்!) காட்சிகளை மாற்றும் வேலை தந்தைக்கு!

அப்படிக் காட்சிகளை மாற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஆங்கிலமல்லாத ஓர் அலைவரிசையில் இந்தியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஓடுவதுபோல் தெரிந்தது. சில விநாடிகள் தொடர்ந்து பார்த்த போது அது இந்திரா காந்தியைப் பற்றிய ஆவணப்படமாக இருந்தது. அவ்வளவாகத் தெரியாத மொழியாகையால் படங்களை மட்டுமே காண வேண்டியதாயிற்று, ஏற்கனவே கொஞ்ச நேரம் ஓடிவிட்டிருந்தது. பிற்பாடு அவ்வலைவரிசையின் தொலையுரைப் (teletext) பக்கங்களைச் சென்று பார்த்தபோது, அது பிபிசி நிகழ்ச்சியின் மொழிபெயர்ப்பு என்று தெரியவந்தது. இந்திய சுதந்திரப் போராட்டக் காட்சிகள், காந்தி, நேரு, காமராஜ், சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி போன்றோரது காட்சிகளுடன், இந்திராவின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்த ஆர்.கே.தவான், ஷீலா தீக்ஷித், குஷ்வந்த சிங், ஐ.கே.குஜ்ரால், பிபிசியின் அந்நாளைய இந்திய செய்தியாளர் முதலானோரின் பேட்டிகளும் இடையிடையே வந்தன.

வரும் 31ம் தேதியுடன் இந்திரா காந்தி இறந்து 20 வருடங்களாகின்றன. அதைக்குறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படமாம். நிக் ரீட் என்பவர் பிபிசிக்காக இந்நிகழச்சியை உருவாக்கியுள்ளார். ஒரு மணி நேரம் சற்று கூடுதலாக இருக்கும் இந்த ஆவணப்படத்தின் தலைப்பு "Indira Gandhi: The Killing of Mother India". இப்படத்தைப் பற்றிய விரிவான அறிமுகம் ஒன்றை இங்கே காணலாம்.

இக்காலத் தலைமுறைக்கு இந்திரா காந்தியைப் பற்றி அறிந்து கொள்ள இச்சிறு படம் ஒரு நல்ல வாய்ப்பு. ஆங்கிலத்தில் கிடைக்கும் போது இதை மற்றொரு முறை பார்க்க வேண்டும். நம்மூர் தொ.கா.க்கள் பிபிசியிடமிருந்து இதை வாங்கி அப்படியே ஆங்கிலத்திலோ அல்லது உள்ளூர் மொழியில் ஆக்கம் செய்தோ ஒளிபரப்பலாம்.

Sunday, October 17, 2004

உறங்கும் ஊடகங்கள்

* ஜெ.ஜெயலலிதாவின் சமீபத்திய பி.பி.சி. பேட்டியைப் பற்றிய உருப்படியான ஓர் அலசல்.
* மு.கருணாநிதி, சென்ற வாரத்தில் தனக்கு விருது வழங்கப்பட்ட விழாவில், ஆட்சிக்கு வந்தால் தமிழை ஆட்சி மொழியாக்குவோம் என்று உறுதியளித்துள்ளார். முந்தைய ஆட்சியின்போது ஏன் அதைச் செய்யவில்லை, ஆட்சி மொழி ஆதல் என்றால் என்ன போன்றவற்றை விளக்கும் விலா வாரியாக ஒரு கட்டுரை.
* ச.ராமதாஸ், தொழில்நுட்ப மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வையே வேண்டாம் என்கிறார். அவர் கூறியவுடன் யாரும் அதை நிறுத்திவிடப்போவதில்லை என்றாலும், அப்படி நிறுத்தினால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி ஒரு பார்வை.
* மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் சீர்குலைவு அல்லது பெருகும் ஒழுக்கக்கேடுகளைப் பற்றிய விமர்சனங்கள்.

இவை போன்றவைகளைப் பற்றியெல்லாம் தமிழக நாளேடுகள் அல்லது/மற்றும் வெகுஜன ஊடகங்களில் எதிர்பார்ப்பதே வீணான ஒன்றோ? எப்போதுதான் அவை விழித்துக்கொள்ளப்போகின்றன?

Saturday, October 09, 2004

"மலைவாழ் பறவைகள்"

பறவைகளைப் பற்றிய செய்திகளில் நாட்டம் உள்ளோர் படிக்க வேண்டிய கட்டுரையொன்று செப்டம்பர்-2004 மாத உயிர்மை இதழில் வந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் மனிதன் இன்னும் முழுமையாக ஊடுருவி நாசம் செய்யாததால் ஓரளவேனும் அதன் வனப்பு தப்பிப் பிழைத்துள்ளது. இல்லையெனில் அவை மொட்டையடித்த மலைகளாகவோ அல்லது பணப்பயிர்கள் இடப்பட்ட தோட்டங்களாகவோ மாறிவிட்டிருக்கும். மனிதனைவிட மோசமான ஜந்து இவ்வுலகிலில்லை என்றே நம்புகிறேன்.

இக்கட்டுரையாளர் சு.தியடோர் பாஸ்கரன் அவர்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. முனைவர் க.ரத்னம் அவர்கள் எழுதி, மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியிட்டுள்ள "தமிழ்நாட்டுப் பறவைகள்" என்ற ஓர் அருமையான நூலிற்கு இவர் எழுதிய அணிந்துரையின் மூலமாகத்தான் முதல் அறிமுகம். அதுவரை பெயரை மட்டும் எங்கோ கேட்ட மாதிரி நினைவு, அவ்வளவே. "மலைவாழ் பறவைகள்" கட்டுரை வாயிலாகத் தன் பறவை பார்க்கும் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுவரை எத்தனையோ அரிய பறவைகளின் காட்சிகளை அவர் கண்டிருக்கக்கூடும். அவ்வாறான காட்சிகளைப் படமாக்கித் தொகுத்து வெளியிட முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தனியாளாக இம்முயற்சியைச் செய்வதென்பது அவ்வளவு சுலபமானதாகத் தோன்றவில்லை. பணம் கொழிக்கும் நம்மூர் தனியார் தொலைக்காட்சிகள் இத்தகையோர்களை மேலும் ஊக்கப்படுத்தி, வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பறவைகளைப் பற்றி பிரத்யேகமான நிகழ்ச்சிகளை உண்டாக்கலாம், மனது வைத்தால்.

மெய்யப்பன் தமிழாய்வகமும் "தமிழ்நாட்டுப் பறவைகள்" நூலின் மூலம் தான் அறிமுகமாயிற்று. சமையல், சோதிடம் மற்றும் ஒன்றுக்குமாகாத சில கதைப் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் பதிப்பகங்களுகிடையில் இதுபோன்று ஆக்கபூர்வமான பணிகளைச் செய்யும் பதிப்பகங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதன் நிறுவனர் திரு.ச.மெய்யப்பன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இயற்கை எய்திய செய்தியைக் கேள்வியுற்றதும் வருத்தமேற்பட்டது. மேற்குறிப்பிட்ட புத்தகமே அவரது ஆர்வத்திற்குச் சான்று. "துறவிகளாலும் துறக்க இயலாத" சாதனையாளராகத் திகழ்ந்தவர் அவர். செப்டம்பர்-2004 காலச்சுவடைத் தவிர வேறு எந்த ஊடகத்திலேனும் இவரது மறைவு குறித்த செய்தி வந்ததா என்று தெரியவில்லை.

Wednesday, October 06, 2004

திசைகள்-அக்டோபர் 2004

அக்டோபர் 2004 திசைகள் இதழில் இராம.கி. அவர்களின் நேர்காணல் வந்துள்ளது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு மடலாற் குழுக்களில் தமிழ் யுனிகோடு பற்றி மிக விரிவாக எழுதியிருந்தார். நம் மக்களுக்குக் கருத்தாடல்கள் என்றாலே ஒவ்வாதா என்ன?

அதோடு, "காணாமல் போகும் வாசகர்கள்" என்ற சில கட்டுரைகளும் கவனிக்கப்பட வேண்டியவை.

சில கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்ற அளவிலேயே திசைகள் உள்ளது. பல்துறை சார்ந்த நல்ல எழுத்தாளர்கள் இதில் எழுத முன்வரவேண்டும். இணையத்திலாவது உருப்படியாக வாசிக்க ஏதேனும் கிடைக்கட்டும்.

Sunday, September 26, 2004

இந்தியாவும் ஐநா பாதுகாப்புக் குழுவும்

சமீப காலங்களில் ஐநா பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடம்பெறக் கோரி இந்தியா முயற்சித்துக்கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. எதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளத் தலைப்பட்டபோது தெரிந்து கொண்ட விஷயங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட ஐந்து நிரந்தர உறுப்பினர்களை அடங்கிய ஐநா பாதுகாப்புக் குழு, உலகைச் சரியான வகையில் பிரநிதித்துவப்படுத்தவில்லை என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து. ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதன் மூலம், அது ஜனநாயகத்துவம் மிக்க, அதிக பிரதிநிதித்துவம் கொண்ட, மேலும் வலுவான அமைப்பாக விளங்கும் என்கிறார்கள். அதற்காகக் கூறப்படும் காரணங்களில் சில:

இந்தியா ஒரு பில்லியனுக்கும் (நூறு கோடி) அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது (உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட இது ஆறில் ஒரு பகுதி).
உலகின் மிகப்பெரிய, நிலையான, இயங்கும் ஜனநாயக நாடாக விளங்குகிறது.
வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
அளவில் பெரியதும், நுட்பியல் வல்லமையும் பெற்ற பலமான இராணுவத்தைக் கொண்டுள்ளது.
உலகின் ஆபத்தான சில பகுதிகளில் ஏற்கனவே இந்திய இராணுவம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

ஐநா பாதுகாப்புக் குழுவானது ஐந்து நிரந்தர (அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா), பத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஆயுள் இரண்டாண்டு காலம்; ஒரு வருட இடைவெளியை அடுத்து மீண்டும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புண்டு. இந்தியாவும் சில முறை தேர்ந்தெடுக்கப்பட்டதுண்டு.

ஐநாவின் மற்ற அமைப்புகளெல்லாம் அரசாங்கங்களுக்கு பரிந்துரைகளையே வழங்க இயலும், ஆனால் பாதுகாப்புக் குழுவிற்கு மட்டுமே உள்ள அதிகாரத்தின்படி உறுப்பு நாடுகள் அதன் முடிவுகளைக் கண்டிப்பாக செயல்படுத்தியாக வேண்டும். பாதுகாப்புக் குழுவின் முடிவுகளை ஏற்று அவற்றை நடைமுறைப்படுத்த ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஐநா பாதுகாப்புக் குழுவின் செயல்பாடுகளும் அதிகாரங்களும்

ஐநாவின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கிணங்க உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரித்தல்;
பன்னாட்டு நெருக்கடியைத் தோற்றுவிக்க வழிகோலும் பிரச்சனைகள் அல்லது சூழ்நிலைகளை ஆராய்தல்;
அவ்வாறான பிரச்சனைகளுக்கு ஒத்துப் போகும் அல்லது தீர்க்கும் வழிகளைப் பரிந்துரைத்தல்;
ஆயுதங்களை ஒழுங்கமைக்கும் அமைப்பை உருவாக்கத் திட்டங்களை வரைதல்;
அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஓர் அச்சுறுத்தல் அல்லது படையெடுப்பைக் கண்டறிந்து அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாமெனப் பரிந்துரைத்தல்;
படையெடுப்பு நடவாதிருக்க அல்லது தடுக்கும் பொருட்டு பொருளாதாரத் தடைகள் மற்றும் இதர நடவடிக்கைகளை எடுக்க மற்ற உறுப்பினர்களை அழைத்தல்;
படையெடுப்பாளரின் மீது இராணுவ நடவடிக்கையெடுத்தல்;
புதிய உறுப்பினர்களின் சேர்க்கையைப் பரிந்துரைத்தல்;
பொதுச் செயலாளரை நியமிக்க ஐநா பொதுச்சபைக்குப் பரிந்துரைத்தல், பொதுச்சபையுடன் சேர்ந்து பன்னாட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தல்.

இங்கிலாந்து பிரதமர் இந்தியாவிற்கான ஆதரவை சென்ற வாரத்தில் மறுஉறுதி செய்துள்ளார். ஏற்கனவே ரஷ்யா, பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்காவும், சீனாவும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா ஆதரவு தெரிவித்தால் இந்தியாவின் இடம் உறுதியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவைத் தவிர ஜப்பான், ஜெர்மனி, (பிரேசில், தென்ஆப்பிரிக்கா?) ஆகிய நாடுகளும் நிரந்த உறுப்பினராகக் கோரியுள்ளனர்.

தொடுப்புகள் சில:

ஐநா பாதுகாப்புக் குழு

ஐநா பொதுச்சபை
http://www.meadev.nic.in/opn/2000may/27hin.htm

Tuesday, September 21, 2004

புதிய எழுத்து - <'ஸ'வைவிட softஆனது>

பத்ரி சேஷாத்ரியின் சமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல் பதிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கான பதிலும்.

கேள்வி: "தமிழக அரசு பரிந்துரைத்துள்ள யுனிகோடு அகரவரிசை அட்டவணையில் E34 நிரலைக் (column) கவனித்தீர்களா? அதில் உள்ளது என்ன எழுத்து?"

பத்ரி சேஷாத்ரி: "அது 'ஸ' உச்சரிப்பு. 'ஸ'வைவிட softஆனது (அப்படித்தான் எனக்கு ஞாபகம்!). கிரந்த எழுத்துகளிலிருந்து வருவது. இப்பொழுதைக்கு 'ஸ1' என்று இதைக் குறிப்போம்.

பொதுவாக ஸ, ஜ, ஷ, ஹ என்றுதான் (நாகரியில்) வரிசைப்படுத்துவது வழக்கம். ஸ1 உச்சரிப்பு என்னைப் பொருத்தவரை தமிழுக்குத் தேவையில்லை. பாருங்கள்... உங்களுக்கு அது என்ன எழுத்தென்றே தெரியவில்லை! பலருக்கும் அப்படியே!

ஸ, ஜ, ஷ, ஹ வே தேவையில்லை எனச் சொல்வாரும் உளர்!

ஆனால் இந்த வரிசையில் புதிய 'ஸ1' ஐக் கொண்டுவந்து வரிசையை மாற்றி அமைத்து,் குழப்பி... தமிழக அரசின் திட்டம் எனக்குப் புரியவில்லை."

இப்படியொரு எழுத்தை யார், எப்போது அறிவித்தார்கள் அல்லது அறிமுகம் செய்தார்கள் என்றே தெரியவில்லை.

Sunday, September 19, 2004

நொய்யல்

வீட்டிலிருந்த தமிழக வரைபடத்தைக் கண்டுகொண்டிருந்த போது நொய்யலாற்றை நோக்கி கவனம் சென்றது. கோயமுத்தூரினருகே அது இருந்ததாலோ!

காட்டாறான நொய்யல், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வெள்ளிங்கிரி மலையிலிருந்து (இம்மலைக்கு ஏறிச்செல்வோரும் உண்டு; சென்று வந்தவர்கள் எழுதுக) துவங்கி (இதன் வழியில் கோவை, திருப்பூர் ஆகிய நகரங்கள்
அமைந்துள்ளன), கிட்டத்தட்ட 180 கி.மீ பயணித்துக் காவிரியில் கலக்கிறது. நான் பார்த்த வரையில் இதில் மழைக்காலத்தில் மட்டுமே கலங்கிய வெள்ள நீர் சில நாட்கள் ஓடிக்கொண்டிருக்கும்; மற்ற சமயங்களில் பேருந்தில் செல்லும்போது எட்டிப்பார்த்தால் நாணல் செடிகளினூடே சாக்கடை நீர் ஓடுவதுதான் தெரியும். கீழுள்ள படத்தில் ஆற்றின் தடத்தைச் செந்நிறத்தில் சுமாராகக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.



கோவைக்கு அருகே இவ்வாற்றின் கரையிலுள்ள பேரூர் என்ற ஊரில் புகழ்பெற்ற பட்டீசுவரன் என்ற சிவன் கோவில் ஒன்றுள்ளது (அதனுள்ளில் உள்ள மண்டபம் ஒன்றிலிருக்கும் அற்புதமான சிற்பங்களை சில மனித ஜந்துகளிடமிருந்து காப்பாற்ற கம்பி வலை போட்டு வைத்திருக்கிறார்கள்!). ஒரு காலத்தில், ஆலயத்திற்கு செல்லும் மக்கள் அருகிலுள்ள நொய்யலாற்றில் முழுகிவிட்டுப் போவார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அங்கு சென்ற போது, பெருங்குழியில் கலங்கிய நீர் தேங்கியிருந்ததை மட்டும்தான் காணமுடிந்தது. அதைப் பார்த்தால் ஆறென்று சொல்லத் தோன்றாது.

கோவையில் சாக்கடை கலக்கிறதென்றால், திருப்பூரில் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் நச்சு வேதிப்பொருட்கள்! திட்டமின்றி விரிவடைந்துகொண்டிருக்கும் இந்நகரங்களால் மக்களுக்கு எந்த அளவிற்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கின்றனவோ, அந்த அளவிற்கு (கூடுதலாகவும்) சூழியல் சீர்கேடுகளின் பலன்களும் கிடைத்துக் கொண்டுள்ளன. இதைப் பற்றி தமிழில் ஒன்றும் பெரிதாக வாசிக்கக் கிடைக்கவில்லை (இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுத நம் பத்திரிக்கைகள் இளிச்சவாயர்களா என்ன!); ஆனால் ஆங்கிலத்தில் கொஞ்சம் கிடைத்தது (சில தொடுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன).

மழை நீர் சேகரிப்பைப் பற்றி இன்று பரவலாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, கோவையிலும் அதைச் சுற்றிலும் உள்ள 19 ஏரிகள் (இப்பொழுது 11தான் உள்ளன), ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு மழைக்காலத்தில் நொய்யலாற்றில் மிகுந்து வரும் நீரால் நிரம்பி, அப்பகுதியின் பாசனம் மற்றும் நிலத்தடி நீராதாரங்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததாம். எல்லாம் பழங்கதையானது இன்று. அக்கால மக்கள் சிந்தித்துச் செயற்படுத்திய இவ்வரிய அமைப்பை தொழிற்நுட்பத்தில் முன்னேறியதாக தம்பட்டமடித்துக்கொள்ளும் இக்காலத்தவர்களாகிய நாம் தொலைத்துவிட்டுத் தவிக்கிறோம். ஆறுகளைச் சாக்கடைகளாகவும், நச்சுக் கழிவுப் பாதைகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

மேலும் வாசிக்க சில இணைப்புகள்

http://www.hinduonnet.com/thehindu/mp/2003/05/19/stories/2003051900900100.htm
http://www.siwi.org/waterweek2003/Workshop%208%20Oral(30).htm
http://www.rainwaterharvesting.org/Crisis/river-noyyal.htm

Saturday, September 11, 2004

இரண்டு பாடல்கள்

அருமையான படப்பாடல்கள் இரண்டு. ஒன்று, வேற்று மொழிப்படத்தில் வரும் தமிழ்ப் பாடல்; மற்றொன்று, தமிழ்ப்படத்தில் வரும் வேற்று மொழிப்பாடல். இரண்டு பாடல்களின் கடைசிப்பகுதி தத்தம் மொழிகளில்!

1. மணிச்சித்திரத் தாழு - ஒரு முறை வந்து பார்த்தாயா? - சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்
2. மகாநதி - எங்கேயோ தெக்கு திசை - கமல்ஹாசன்

நான், நானேதான்!

நான்!

ஒருக்காலும் இல்லை, நான் தான்! என்னால் தான்!

என்னது நீயா? அட, நானப்பா!

நானுந்தான்!

யார் சொன்னது? அவரால்தான்!

நாங்களுந்தான்!

நம்மால்தான்!

எல்லோராலுந்தான்!

ஏய், நாந்தாங்கறேன்!

Tuesday, August 24, 2004

இன்றைய கேள்வி - 7

இரண்டு வாரங்களுக்கு முன்பு வலைப்பூவில் 'இன்றைய கேள்வி' என்று சில கேள்விகளைக் கேட்டு வைத்தேன்; அதை இங்கும் தொடரலாம் என்று நினைக்கிறேன். தினமும் இல்லையென்றாலும், தோன்றிய போது கேட்டெழுத முயல்கிறேன். வரப்போகும் பதில்களால் (ஒரு வேளை ஏதேனும் வந்தால்) ஆகப்போவது ஒன்றுமில்லையென்றாலும் மற்றவர்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்களெனத் தெரிந்துகொள்ளலாம் என்றோர் ஆவல், அவ்வளவுதான். இக்கேள்விகளுக்கு சரியான பதில், எனக்குத் தெரியாதவைகளாகவோ அல்லது இங்கு வழங்கப்படாதவைகளாகவோ இருக்கலாம். பதில்களாக இங்கே சொல்லப்படுபவை சட்டென்று மனதில் தோன்றியவைகளே.

தமிழகம் மற்றும் இந்தியாவில் உருவாக்கப்படும் இணைய தளங்கள் (சில அரசாங்க மற்றும் சொற்ப இதர இணைய தளங்களைத் தவிர) தங்கள் முகவரியின் நீட்டத்தை (Extensions) ".in" என்றில்லாமல் ".com" என்று கொண்டுள்ளதேன்?

1) .com என்றே எல்லோரும் உபயோகிப்பதால், புதிதாக வருவோர் .in-ப்பற்றி கவலைப்படுவதில்லை.
2) .in என்று இருப்பதே தெரியாது.
3) தெரியும், ஆனால் அதற்கு அவசியமில்லை.
4) தெரியும், ஆனால் எப்படி அதைப் பெறுவது என்று தெரியாது.
5) .com-ற்கு என்ன குறைச்சல், எதற்காக .in போடவேண்டும்?

Saturday, August 21, 2004

2050-ல்

2050ல் இந்தியா, மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி நிற்கும் என்பது ஒரு விதத்தில் கவலையளிக்கும் 'முன்னேற்றச்' செய்தியாகவே இருக்கிறது. இன்னும் 46 ஆண்டுகளுக்குள், இந்திய மக்கள்தொகை மேலும் சுமார் 50 சதவீதம் பெருகும் என்று கணக்கிட்டுள்ளனர். இதே சமயத்தில் தற்போதைய 'முதல்வனான' சீனாவில் சுமார் 10 சதவீதம் மட்டுமே அதிகரிக்குமாம்! கணக்கீட்டின்படி இந்தியத் திருக்கண்டத்தில் அவ்வாண்டில் 1,628 மில்லியன் மக்கள் (162.8 கோடிகள்) இருப்பார்கள்! (எலி, கொசு, கரப்பான்களின் எண்ணிக்கை ஒரு நாள் பின்தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)

மாநில/மத்திய அரசாங்கங்கள் இது விஷயத்தில் விரைவாகச் செயல்பட்டு மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினால் நல்லது. தென்னாட்டில் கடந்த ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்ட குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்கள், அதிக முனைப்புடன் தொடரப்படவேண்டும்.

நினைத்துப் பார்த்தால் மக்கள் தொகையால் ஏற்படும் நன்மைகளைவிட பாதகங்களே அதிகமாகத் தெரிகிறது. இவையெல்லாம் இப்போதும் உள்ளவைதான்; இருந்தாலும் இதன் அளவு அதிக அளவில் இருக்கப்போவதால் நிலைமை கொஞ்சம், கொஞ்சமென்ன நிறையவே கஷ்டம்தான்!

* மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இளவயதினராக இருக்கப் போவதால் அது உருப்படியாக உபயோகப்படவோ (மனித வளம்) அல்லது பெருந்தலைவலியாக (வேலைவாய்ப்பின்மை, வறுமை...) மாறுவதற்கோ வாய்ப்புண்டு.
* போக்குவரத்து வாகனங்கள் பெருமளவிற்கு அதிகரிக்கும்.
* சுற்றுச் சூழல், கேட்கவே வேண்டாம்.
* எல்லோருக்கும் ஒழுங்காகத் தண்ணீர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கும்.
* எங்குபார்த்தாலும் மக்கள் நெரிசலாக இருக்கப்போவதால் (இப்போதுள்ளதைக் காட்டிலும் பல மடங்கு), ஏதேனும் விபத்து/அசம்பாவிதம் நேரிடின் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்.
* நாட்டின் பாதுகாப்புச் செலவுகள் பலமடங்கு அதிகரிக்கும்.
* நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பு மேலும் அதிகரிக்கும்.
* வறுமை, போதாமை போன்றவற்றால் குற்றங்கள் அதிகப்படியாக நடக்கலாம்.
* வனவளம் தொடர்ந்து அழிக்கப்படும்.
* எங்கும், எதற்கும் போட்டிதான்.
* இன்னும் சாதி, மதம், அரசியல் என்று எத்தனையோ பிரச்சனைகள்.....

'பாஸிட்டிவாவே திங்க் பண்ண.....' என்று 'தமிழ் மனசாட்சி' ஏதோ கேட்க வருகிறது; முடியலயேப்பா!

Monday, August 09, 2004

வலைப்பூவில் வாசம்

ஒரு வாரத்திற்கு "வலைப்பூ"வில் வாசம், அங்கு வாருங்கள் நண்பர்களே!

Friday, August 06, 2004

சென்னையும் மதுரையும்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையொன்றை மதுரையில் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் நாள்தோறும் நடக்கும் சச்சரவுகள் தீர்ந்தபாடில்லை. மெத்தப்படித்த மேதாவிகள் போடும் சண்டைகளைச் சொல்லி மாளாது. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு இத்தனை மாவட்டங்கள் வேண்டும் என்று அங்குள்ள வழக்கறிஞர்களும், தங்களுக்கு ஒதுக்கியதை திரும்பப்பெறக் கூடாதென்று மதுரைப் பக்கத்தில் இருப்போரும் மாறி மாறி நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தும், ஒரு சிலர் நீதிபதிகளுக்கு எதிராக முழங்கிக்கொண்டும் இருப்பதாகப் படித்தறிகிறோம். இவர்களின் செயல்கள் அப்பட்டமான சுயநலமாகவே தெரிகிறது; வருமானத்தை இழந்து விடுவோம் என்பதாலா இவ்வளவு ஆர்ப்பரிக்கிறார்கள்?

(வேறு - மே மாதம் கோவையில் காதில் விழுந்த செய்தி: நீதித்துறையில் தற்சமயம் நடக்கும் கையூட்டுகள்/ஊழல்கள், 'வளம் கொழிக்கும்' பதிவுப் பத்திரத் துறையையே எடுத்து விழுங்கி விடுகிறதாம்!)

Wednesday, August 04, 2004

'கக்கூஸ்'

வார்த்தையைக் கேட்டதும் ஏதாவது துர்நாற்றம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. தமிழ்ச் சமுதாயத்தில் சிறுநீர், மலம் கழிக்கும் அதிஅத்தியாவசிய இடங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலும் அவற்றை ஏதோ தீண்டத்தகாத ஒன்றாகக் கருதுவதை, அவை அமைந்திருக்கும் இடம் மற்றும் அவ்விடங்களைப் பராமரிக்கும் முறைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம் - அது வீடானாலும் சரி, பொதுவிடங்களானலும் சரி.

நகரங்களில் வாழும் கழிப்பிட வசதியில்லா வீடற்ற மக்கள், மலம் கழிக்க நகராட்சியினரால் பராமரிக்கப்படும் (?!) கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கூடும். பெரும்பாலான கழிப்பிடங்கள் கட்டண அடிப்படையில் இயங்குவதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம்போய் நம் மக்கள் செலவு முன்செய்வார்களா, கிடைக்கும் குறைவான வருவாயில்? சாலை/சாக்கடையோரங்களில் யாருமற்ற நேரங்களில் அமர்ந்து எழுவிடும் ஆத்மாக்களும் உண்டு. (மும்பையில் ஒரு முறை காலை நேரத்தில் முக்கியமான சாலையொன்றின் இரு மருங்கிலும் மக்கள் தண்ணீர் 'டப்பா'க்களோடு அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதிலிருந்து பெரு நகரங்களில் கூட இன்னும் சரியான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று தெரியவந்தது). கிராமங்களில் இன்னும் வெட்ட வெளிகளான மந்தைகள்தான் பிரதானமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பல இடங்களில் அரசாங்கம் பேருக்குக் கட்டிக் கொடுக்கும் கழிப்பிடங்கள் போதிய வசதி, பராமரிப்புகளின்றி வீணாக்கப்பட்டே உள்ளன. மந்தைகளுக்குச் செல்வதற்கு பதிலாக அக்கழிப்பிடங்களைச் சுற்றியே பணிகளை முடித்துவிடுகின்றனர்.

இன்றைய காலங்களில் நகரங்களில் கழிப்பிடமற்ற சொந்த வீடுகளைக் காண்பது அரிது. இருப்பினும், எல்லா இடங்களிலும் கழிவுகள் எந்த அளவிற்கு சுத்திரகரிப்பட்டு பொதுச் சாக்கடையில் விடப்படுகிறதென்பது கேள்விக்குரிய ஒன்று.

பொதுவிடங்களில் சுகாதாரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் நமக்கு நிகர் நாம்தான். உதாரணத்திற்குப் பேருந்து நிலையங்களில் ஐம்பது பைசா கொடுத்து சிறுநீர் கழிக்க சங்கடப்பட்டுக் கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுற்றுச் சுவர் ஏதாவதொன்றின்முன் நின்று நீர் பாய்ச்சத் துவங்கிவிடுகின்றனர் நம் ஆண்கள் (பெண்கள் பாடு இங்கும் திண்டாட்டம்தான்!). பிற்பாடு அவ்விடங்களில் நகராட்சியினரால் வெள்ளையாக ஏதாவது ஒரு பொடியைத் தூவுவதுடன் நின்றுபோகிறது நம் சுகாதாரம். பொதுவாகவே கழிப்பிடம் என்ற வார்த்தையைக் கேட்டதும் முகம் தானாக சுழியும் அளவிற்கு அவற்றின் நிலைமை காணப்படுகிறது.

'கக்கூஸ்' என்று ஒன்று வந்த பிறகு மெல்ல மெல்ல மக்கள் ஓரளவேனும் அதைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருந்தாலும், இவ்விஷயத்தில்கூட நம் சமுதாயம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது.

[முற்காலத்தில் தமிழகத்தில் கழிப்பிட முறை (மந்தையைத் தவிர) என்று ஒன்று இருந்ததா? அதைப் பற்றி யாரேனும் எதையேனும் எழுதி வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. அக்கால மன்னர்கள், செல்வந்தர்கள், பிற்கால மேல்தட்டுக் குடிமக்கள் ஆகிய இவர்களின் கழிப்பிடம் எதுவாக இருந்திருக்கும்?]

Friday, July 30, 2004

சூடானில் நடக்கும் கொடுமை

கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் (நம்மூர் செய்தித்தாள்களில் இதைப்பற்றி ஒன்றும் கண்டதாக நினைவில்லை) தவறாது இடம் பெறும் செய்தி சூடான் பிரச்சனை. ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று சகலரும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்று கொண்டுள்ளனர். சூடான் பிரச்சனையை "உலகின் மிக மோசமான மாந்த குல நெருக்கடி" என்று வேதனையோடு ஐ.நா. சொல்கிறது.

அப்படி என்னதான் பிரச்சனை அங்கு? சூடானின் வறுமை நிலவும் மேற்குப் பகுதியான டார்ஃபுரில் சென்ற ஆண்டிலிருந்து (2003) இதுவரை கிட்டத்தட்ட 50,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் (இன்னும் நடந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது), ஒரு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவந்து அகதிகளாக உள்ளனர். அகதி மையங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தற்சமயம் பல உயிர்கள் (குறிப்பாக குழந்தைகள்) போனவண்ணம் உள்ளன.

சூடான் அரசாங்கம் டார்ஃபுர் பகுதியைக் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்வதாகச் சொல்லி 'சூடான் விடுதலைப் படை', 'நீதி மற்றும் சமத்துவ இயக்கம்' என்ற இரு குழுக்கள் அரசுக்கு எதிராக 2003ன் துவக்கத்தில் கலகத்தில் இறங்கின. இக்கலகப் படைகளில் பெரும்பாலும் அப்பகுதியின் சில ஆப்பிரிக்கக் கருப்பினங்களின் மக்கள் இடம்பெற்றிருந்தனர். இப்பகுதியில் பல காலமாகவே உள்ளூர் கருப்பினக் குழுக்களுக்கும், அராபியக்குழுக்களும் (இவர்களை 'ஜன்ஜாவீட்' என்று அழைக்கிறார்கள்) இடையே பூசல்கள் இருந்து வந்துள்ளன. அரசாங்கம், மேற்சொன்ன கலகப் படைகளை ஒடுக்க, அரபுக் குழுக்களைச் சகல வழிகளிலும் ஆதரித்து உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஜன்ஜாவீட், மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, அராபியரால்லாத பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தும், கொடூரமாகப் பெண்களைச் சூறையாடியும், வீடுகள், கிராமங்களைத் தீக்கிறையாக்கியும், உடைமைகளைத் திருடியும் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக இடம் பெயரச் செய்துவிட்டனர். உலகம் இதனை ஓர் 'இன அழிப்பாகவே' பார்க்கிறது. ஆனால், சூடான் அரசாங்கமோ ஜன்ஜாவீடின் மேல் நடவடிக்கை எடுப்பதாக சொல்லிக்கொள்கிறது.

இந்நிலையில் உலக நாடுகள் சூடான் அரசாங்கத்தை, ஜன்ஜாவீடின் ஆயுதங்களைக் களைந்து நடக்கும் வன்முறை நிறுத்தும் பொருட்டு, ராஜீய முறைகளில் நெருக்குதலுக்குள்ளாக்க முயற்சித்துக் கொண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஐ.நா.பாதுகாப்பு சபை, முப்பது நாட்களுக்குள் அரபு வன்முறையாளர்களை அடக்கி ஒடுக்க சூடானுக்கு நிபந்தனை விதித்து தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. ஆனால், சூடான் இத்தீர்மானத்தை நிராகரித்துள்ளது. என்ன நடக்கப் போகிறதோ? அதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? கொடுமையான உலகமிது!

Monday, July 26, 2004

இது நன்மை பயக்குமா?

"உலகளாவிய தமிழ் இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகள், எழுத்துருக்களைக் கண்டறிந்து தேடும் வகையில் தேடுபொறி மென்பொருள் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று சட்டப்பேரவையில் தமிழக அமைச்சர் இன்று அறிவித்துள்ளார். (காண்க - தினமணி செய்தி)

இம்முயற்சி எந்த அளவிற்கு அவசியமானது என்று தெரியவில்லை. மாறாக, அனைவரும் சீரான ஒரு குறியீடு/எழுத்துருவை (உம்.யுனிகோடு) பயன்படுத்துவதற்கு அரசு வழிவகை செய்யலாம்.

Thursday, July 22, 2004

மேற்குக் கரைச் சுவரும் ஐ.நா. தீர்மானமும்

ஐ.நா.சபை, பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரையில் இஸ்ரேல் கட்டிக்கொண்டிருக்கும் தடுப்புச் சுவரைக் கண்டித்து நேற்றுமுன்தினம் (20.07.2004) ஒரு தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. 150 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 6 நாடுகள் எதிர்த்தும், 10 நாடுகள் வாக்கேதும் அளிக்காமல் ஒதுங்கிவிட்டன. கடந்த காலங்களில் இதுபோன்ற எத்தனையோ தீர்மானங்களை மதிக்காமல் ஒதுக்கித் தள்ளிய இஸ்ரேலுக்கு இத்தீர்மானத்தால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை (காப்பாற்றுவதற்கு இருக்கவே இருக்கிறான் பெரியண்ணன்!). கட்டுமான வேலைகள் நடந்துகொண்டுதான் உள்ளன; தொடரத்தான் போகிறது. சபையில் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும், அதற்கு கட்டுப்படுத்தும் அதிகாரம் ஏதும் இல்லை. ஆனால் நிறைவேறிய தீர்மானம், அதிகாரம் பொருந்திய ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஒருக்கால் இத்தீர்மானம் அங்கு கொண்டுவரப்படுமாயின், அமெரிக்கா 'வீட்டோ' எனப்படும் சிறப்பதிகாரத்தால் அதை நிராகரித்து இஸ்ரேலை வழக்கம்போலக் காப்பாற்றிவிடும்.

ஐ.நா. சபை கேட்டுக் கொண்டதற்கினங்க, கடந்த 9 ஜூலை 2004 அன்று பன்னாட்டு நீதிமன்றம் இஸ்ரேல் கட்டிக் கொண்டிருக்கும் தடுப்புச் சுவர் பன்னாட்டு விதிகளுக்குப் புறம்பானது என்று ஏகமனதாகத் தீர்ப்புக் கூறியிருந்தது (அங்கும் அமெரிக்கா மட்டும் தன் எதிர்ப்பைக் காட்டியிருந்தது). அத்தீர்ப்பிற்குப் பிறகு வரையப்பட்டதுதான் நேற்றைய தீர்மானம்.

சுவற்றைப் பற்றி சில வரிகள். மேற்குக் கரையில் 700 கி.மீ. தொலைவிற்கு இச்சுவர் பாலஸ்தீனப் பகுதிக்குள் எழுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. தன் நாட்டு மக்களை தற்கொலைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்கே இச்சுவர் கட்டப்படுவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. பாலஸ்தீனர்களோ, இது தங்கள் நிலத்தை அபகரிக்கும் மற்றும் புதிய எல்லையை வரையறுக்கும் செயல் என்று அஞ்சுகின்றனர். பி.பி.சி. இணைய தளத்தில் காணக்கிடைத்த சில படங்களை இங்கே பார்வைக்கு வைக்கப்படுகிறது.



பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லிக் கொண்டு கட்டப்படும் இச்சுவரை இஸ்ரேல் ஏன் தன் எல்லைக்குள் கட்டாமல் பாலஸ்தீனப் பகுதிக்குள் வந்து கட்டுகிறது என்ற கேள்விக்கு மூன்றாவது படத்தை உற்றுப் பார்த்தபோது பதில் கிடைத்தது, அங்கும் சில 'குடியிருப்புகளை' ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற அக்கிரமம் எங்கும் நடைபெறாது!

பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்

ஐ.நா. சபை தீர்மானம் GA/10248

இதுதொடர்பான மற்ற சில எண்ணங்கள்:

தற்கொலைத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் அங்கு நடக்கும் இச்செயல்களின் வேர் என்ன? இஸ்ரேல் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும்தானே? தங்கள் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்திப் பேசும் இவர்கள் பாலஸ்தீனியர்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கிறார்களா, இல்லை இனிமேல் ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம், செய்த இடங்களிலிருந்து வெளியேறுகிறோம் என்று சொல்கிறார்களா? அந்த எண்ணமே அங்கிருப்பதாகத் தெரியவில்லை. உலகம் முழுதும் உள்ள தங்கள் இன மக்களை வந்து இங்கு குடியேறச் சொல்லிக்கொண்டுள்ளனர், அப்படிச் சிலர் வந்து கொண்டுமுள்ளனர். அவர்களுக்குத்தான் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்ட/கொண்டிருக்கும் இடம் இருக்கிறதே?!

பாலஸ்தீனர்கள் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு அறிவுப் பூர்வமாக செயல்படுவது குறைவென்றே தோன்றுகிறது. அவர்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, மலிந்திருக்கும் ஊழல் போன்றவை அவர்களை மேலும் பலவீனமடையச் செய்கிறது. அரபு நாடுகள் வெற்றுக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை.

தங்கள் அடக்குமுறைகளுக்கும், தாக்குதல்களுக்கும் நியாயம் கற்பிக்க பல அரசாங்கங்களுக்கு 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' மிகவும் வசதியான ஒன்றாகிவிட்டது. தீவிரவாதிகளைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு எத்தனை வீடுகள் பாலஸ்தீனத்தில் தரைமட்டமாக்கப்பட்டுக் கொண்டுள்ளன! பெருங்கொடுமையிது.

யூத சமுதாயத்தின் பலம் (பணம், அரசியல், அதிகாரம்) அமெரிக்காவில் அதிகம் என்று படுகிறது. அரசியல் சுயநலங்களுக்கு வேண்டி அனைத்து அமெரிக்க அரசாங்கங்களும் என்றும் இஸ்ரேலை ஒருதலைப்பட்சமாக ஆதரித்தே வருகின்றன. அவர்கள் நினைத்திருந்தால், நினைத்தால் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனையை எப்பொழுது வேண்டுமானாலும் முடித்து வைக்கலாம், ஆனால் அவ்வாறு நினைக்கமாட்டார்கள் என்றே அஞ்சவேண்டியுள்ளது.

ஐ.நா பாதுகாப்புக் குழுவில் உள்ள 'வீட்டோ' அதிகாரம் அதன் உண்மையான நோக்கத்தை (என்னவாயிருப்பினும்) தக்கவைத்துக்கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

Monday, July 19, 2004

"புத்தர் தேசம்"

'சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தியாகனூரில் உள்ள புத்தர் சிலை' என்றால் வியப்பும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ள மேலும் ஆர்வம் பீறிடுவதும் இயல்புதானே? ஜூலை-2004 மாத 'காலச்சுவடு' இதழில் 'புத்தர் தேசம்' என்றொரு கட்டுரையில்தான் [பக்.46] இவ்வரிய செய்தியைக் கண்டேன். புத்தகத்தின் அச்சுப் பதிப்பில் காணக் கிடைக்கும் சில படங்களை நோக்கினால் 'வயல்வெளி நடுவில் மரத்தடியில் புதர் மண்டிய இடத்தில்' இருக்கும் 'இன்னொரு புத்தர் சிலை' தெரியும். காற்று, மழை, வெயிலுக்கு தாக்குண்டு பல்லாண்டுகளாக வெட்ட வெளியில் இச்சிலைகள் கிடப்பதுபோல் தோன்றுகிறது. கண்டதும், வரலாற்றின் அரிய பொக்கிஷங்களை பாதுகாக்கத் தெரியாதவர்களாக உள்ளோமோ என்ற ஆதங்கமே ஏற்படுகிறது. ("தமிழ்ச் சமூகத்திற்குத் தொன்மையான வராலாறு இருந்தும் அதற்கான ஆதாரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் பண்பு தமிழர்களிடம் மிகவும் குறைவு." என்று அதே புத்தகத்தின் வேறொரு கட்டுரையில் [பக்.22] குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகம் இங்கும் பொருந்துகிறது).

"இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் பெளத்தம் வெகுகாலம் ஆற்றலோடு இருந்தது எனப் பல்வேறு வரலாற்று அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள"தாகக் குறிப்பிடும் கட்டுரையாளர் (விவேகானந்தர், நேதாஜி ஆகியோருடன் தமிழகம் கொண்டிருந்த தொடர்பு ஏனோ இச்சமயத்தில் சட்டென நினைவுக்கு வருகிறது.), "ஆனால் அது பற்றிய ஆய்வுகள்தாம் செய்யப்படவே இல்லை. அவை செய்யப்பட்டால் இப்போதுள்ள பல இந்துக் கோவில்கள் பெளத்தக் கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவைதாம் என்பது தெரியவரும். தஞ்சைப் பெரிய கோவிலேகூட அப்படி இடித்துக் கட்டப்பட்டதுதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கோவிலில் உள்ள புத்தர் சிற்பங்கள் அதற்கு ஆதாரங்களாக உள்ளன"வென்று இதுவரை அறிந்திராத தகவலைத் தருகிறார். [பக்.48]

"தமிழ்நாட்டில்.....பணம், புகழ் ஈட்டும் குறுக்கு வழியாக இப்போது புத்தரின் பெயர் மாற்றப்படுகிறது" [பக்.48] எனச் சுட்டிக்காட்டி, "தமிழ்நாடெங்கும் சிதறிக் கிடக்கும் புத்தர் சிலைகள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்தும்" ஆய்வை மேற்கொள்ள வலியுறுத்துகிறார்.

இதுபோன்று இன்னும் எத்தனை அரிய பொக்கிஷங்கள் கிராமங்களில் மறைந்துள்ளனவோ!

[முழுக் கட்டுரையை இணையத்தில் வாசிக்க...]


Thursday, July 15, 2004

இலங்கையில் மீண்டும் போர் வருமா?

வரவே வேண்டாம் என்றுதான் மனது விரும்புகிறது. ஆனால், கள நிலவரம் அவ்வாறு இல்லையென்று ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக்கொண்டுள்ளன. இணையத் தமிழ் ஊடகமொன்றில் இன்று வந்த செய்தியொன்று இவ்வாறு செல்கிறது:

"இதற்கிடையே, இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கலாம் என 'Stratfor' (strategic forecasting) என்ற சர்வதேச புலனாய்வு மையம் எச்சரித்துள்ளது.

கருணாவைப் பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்து போன்ற செயல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டுள்ளதாகக், போரை நோக்கியே இலங்கை அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.

புலிகளை முறியடிப்பதாற்கான தந்திர உபாயங்களை இலங்கை ராணுவத்தினருக்கு அமெரிக்க நிபுணர்கள் அளித்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது."


[இவர்கள் குறிப்பிட்டுள்ள STRATFOR இணைய தளத்தில் விரிவான செய்திகளைப் படிக்க காசு கொடுக்க வேண்டும் போலுள்ளது.]

வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கதையாகத்தான் கருணா போன்றோரின் சுயநல நடவடிக்கைகள் அமைந்துள்ளன. கடந்த காலப் போரினால் தமிழர்கள் அடைந்த கஷ்டமும், நஷ்டமும் போதும்; அமைதி வரட்டும், அனைவரின் வாழ்வும் செழிக்கட்டும். சுயநலக்காரர்களே! நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்யாதிருங்கள், ஏதாவது புண்ணியம் கிட்டும்.

முடிச்சுகள்

கோடைகாலம் என்றுதான் பெயர், இந்த வருடம் சதா மழை பெய்த வண்ணமே உள்ளது. இவ்வாறு அலுத்துக் கொண்டாலும் மக்கள் ஏதாவது வெளி வேலைகளைச் செய்து கொண்டுதான் உள்ளனர். உடன் பணிபுரியும் ஒருவருக்கு, மரங்களுக்கு இடையில் வலையைக் கட்டித் தொங்கவிட்டுப் படுத்துக்கொள்ள ஆசைபோலுள்ளது; மற்றொரு நண்பரிடம் விசேட முடிச்சு ஒன்றைப்பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பாய்மரக் கலங்களைச் செலுத்துவதில் பயிற்சியுள்ளவர் என்று கேள்வி. [Sailor-க்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?] இவ்வாறு கலங்களைச் செலுத்துவோருக்கு விசேட முடிச்சுகள் போடத்தெரியுமாம்!

இதைக் கண்டுகொண்டிருந்தபோது, நமக்கு எத்தனை வகையான முடிச்சுகள் போடத்தெரியும் என்ற வினா எழுந்தது. ஒரு கை விரல்விட்டு எண்ணுமளவுக்கு இருக்குமா என்பதே சந்தேகந்தான்! அன்றாட வாழ்விலே எங்கேயாவது முடிச்சுகளைப் போட்டுக்கொண்டுதான் உள்ளோம் (ஷு, கொண்டை, கோணிப்பை, பந்தல், மாடு, டை, தாலி,...), ஆனால் அதைப்பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. இந்த இணைய தளத்தைப் பார்த்த போது, இப்படியெல்லாம் முடிச்சுகள் உண்டா என்று ஆச்சரியம் மேலிட்டது.

முடிச்சு என்றதும் ஆரம்பப் பள்ளிக்கூட நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது, தலைமையாசிரியருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளில் ஒன்று, அவர் கொடுக்கும் தாள்களில் துளையிட்டு அவற்றைக் கோப்புகளில் கட்டி வைப்பது (அது கூடச் செய்யாமல் அவருக்கு வேறென்ன வேலையென்று தெரியவில்லை). துளையிடுவதற்கு ஒரு சிறிய இயந்திரம் இருந்ததால் கவலையில்லை, ஆனால் முடிச்சுப் போடவேண்டுமே! போடவும் தெரியாது, போடத்தெரியாதென்று அவரிடம் சொல்லவும் பயம்/தயக்கம். அவர் இருக்கும்போது துளையிட்ட தாளினுள் வேகமாக கயிற்றைச் செருகி முடியிடுவதுபோல் பாவனை செய்து கோப்பை மூடிவிட்டு, ஆள் நகர்ந்தபின் வேறொரு பையனை அழைத்து முடிபோடச் செய்த தமாஷ் கொஞ்ச நாள் நடந்தது. பிறகு எப்படியோ ஒருவழியாகப் பழகிக்கொண்டேன். இப்போது அவற்றை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

Monday, July 12, 2004

"தென்னாட்டு இசையில் மேற்கத்தியக் கருவிகள்"

இனிய தமிழில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் பி.பி.சி.யின் தமிழ் வலைத்தளத்தில் "தென்னாட்டு இசையில் மேற்கத்தியக் கருவிகள்" என்றொரு ஒலித்தொகுப்பில் வயலின் பற்றிய பதிவுகளை சென்ற வார இறுதியில் கேட்டுப்பார்த்தேன். சில கர்நாடக இசை விற்பன்னர்களின் விளக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வயலின், கர்நாடக இசையில் நுழைந்த விதம், அவற்றை வாசிக்கும் விதங்கள், பக்கவாத்தியத்திலிருந்து அது தனி வாத்தியமாக ஆனதெப்படி போன்ற பல தகவல்கள் தெரியவருகின்றன.

உரையாடல்களைக் கேட்கும் சமயத்தில் சற்றே ஏமாற்றம் அடைந்தேன் - நிகழ்ச்சித் தொகுப்பாளர் மட்டும்தான் தமிழில் பேசினார்.

"தமிழ் திரையிசையில் வயலின்" என்று யாரேனும் ஓர் ஆய்வு செய்தால் அதில் இளையராஜாவிற்கு அதிமுக்கிய இடமிருக்குமென்பதில் சந்தேகமில்லை.

Tuesday, July 06, 2004

'பெரிய மனிதர்' கைதுகள் - ஒரு கேள்வி

'பெரிய மனிதர்'களின் 'உள்ளே-வெளியே'யின்போது, அவர்கள் காட்டும் 'சிரித்த' முகத்தைப்பற்றி இன்று அருண் வைத்தியநாதன் எழுதியிருந்ததைக் கண்டதும் அடிக்கடி மனதில் எழும் கேள்வியொன்று மீண்டும் வந்தது.

மேலை நாடுகளில் முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது, அவர்களுக்கு குண்டு துளைக்காத உடையை அணிவித்துச் செல்வதை தொலைக்காட்சியில் பலமுறை கண்டதுண்டு. (சில சமயங்களில் காவலர்களேகூட முகமூடி அணிந்துகொண்டு, குண்டு துளைக்காத உடையுடன் சென்று கைது செய்வதும் உண்டு). இவ்வாறு செய்யப்படுவதற்கான காரணங்கள் பின்வருவனவாக இருக்கலாம் என்று சிலவற்றை யூகிக்கிறேன்:
1) கைதுசெய்யப்பட்டவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று அதன்மூலம் உண்மை தெரியாமல் போகக்கூடும்.
2) மேற்கண்ட நபருக்கு ஒன்று நடக்கும்பட்சத்தில், அக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட வேறு யாரேனும் தப்பித்துச்செல்ல வாய்ப்பு ஏற்படக்கூடும்.
3) குற்றவாளியாகவே இருப்பினும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கும்வரை அந்நபரைப் பாதுகாக்கவேண்டும்.
4) கைதுசெய்யப்பட்டவர் ஒருவேளை குற்றமற்றவராகவும் இருக்கலாம், அதனால் அவரைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

முத்திரைத்தாள் மோசடியில் பல 'முக்கியமான' நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தினம் ஒரு செய்தி வருகிறது, கைதுகளும் நடந்து கொண்டுள்ளது. 'பெரிய மனிதர்'களும் சிரித்துக் கொண்டேதான் உள்ளே போகின்றனர். போகும் மனிதன் நம்மைக் காட்டிக்கொடுத்துவிடுவான் என்ற அச்சத்தில் தொடர்புடைய மற்றொருவரால் இந்நபருக்கு ஊறுவிளைய பெரும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற முக்கிய வழக்குகளில் கைதாபவர்களுக்கு நம்நாட்டில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பதுதான் கேள்வி. வெறுமனே லத்தி அல்லது கத்தித் துப்பாக்கியுடன் சில காவலர்கள் சூழ்ந்து நிற்பது மட்டும் போதாதென்று தோன்றுகிறது, ஏனென்றால் குற்றத்தின் வீச்சு அப்படி - பல ஆயிரம் கோடிகள், பல்வேறு 'முக்கிய' மனிதர்கள் என்று...

Sunday, July 04, 2004

யூரோ 2004 - கிரீடம் சூடியது கிரேக்கம்

யூரோ 2004 தொடரின் இறுதியாட்டத்தை எதிர்நோக்கி போர்ச்சுகல், கிரேக்க நாடுகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. வீதிகளில் தோரணங்கள், அங்கத்தில் வண்ணப் பூச்சுகள், அலங்காரங்கள், கொடிகள், விதவிதமான உடைகள் என்று குதூகலித்துக்கொண்டிருந்தனர். ஐரோப்பா முழுவதும் ஒரு வகையில் இன்று விசேடமான நாளாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

முதல் ஆட்டத்தில் மோதிய அணிகளே இறுதி ஆட்டத்திலும் மோதுவது ஓர் ஆச்சரியமான நிகழ்வு. சுமார் 62,000க்கும் மேற்பட்டோர் நிரம்பிய விளையாட்டரங்கில் போர்ச்சுகல், கிரேக்க அணிகள் களமிறங்கிப் போராடத் துவங்கின. போர்ச்சுகலின் ஜனாதிபதி, பிரதமர், கிரேக்க நாட்டுப் பிரதமர் என்று சகலரும் ஆவலுடன் ஆட்டத்தை காண அமர்ந்திருந்தனர். போர்ச்சுகல் அணி பந்தை அதிக நேரம் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டிருந்தது. வந்த சில வாய்ப்புகளை இரு அணிகளும் நழுவவிட்டன. முதல் பாதியில் இருவரும் ஓரளவு சரி சமமாக மோதியிருந்தும் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று.

ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பில், கிரேக்க வீரர் Angelos Charisteas மூலையில் இருந்து பறந்து வந்த பந்தை கோலுக்குள் தலையால் தள்ளி தங்கள் அணியின் கனவு நனவாவதற்கு அடித்தளமிட்டார். அதற்குப்பிறகு போர்ச்சுகல் அரும்பாடுபட்டதென்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் அவர்களால் கோலெதுவும் போடமுடியாமலேயே போயிற்று. கடைசியில் 0-1 என்ற கணக்கில் போர்ச்சுகலை வென்று கிரேக்க நாடு வாகை சூடியது. [வாகை சூடுதல் என்றால் என்னவென சட்டென ஒரு கேள்வி எழுகிறது. கழகத்தமிழகராதியை வேகமாகப் புரட்ட, ஒரு மரம், அகத்தி முதலான பொருள்கள் தெரியவருகிறது. ஏதேனும் ஒரு பந்தயத்தில் (அ) போரில் வென்றவர்கள், (அகத்தி)மரத்தின் மலர்களைச் (சிவப்பாக பிறை போல இருக்கும்) சூடுவதைத்தான் "வாகை சூடுதல்" என்று சொல்லியிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறிருப்பின், அம்மலர்களைக் கொண்ட மாலையைச் சூடும் வழக்கம் நம் நாட்டில் எப்பொழுது தோன்றியது, அதற்கான குறிப்பான காரணங்கள் ஏதேனும் இருந்திருக்குமா, இன்னும் அவ்வழக்கம் எங்காவது நடைமுறையில் உள்ளதா போன்றவற்றை அறிந்து கொள்ள ஆவலாயுள்ளது.] ஐரோப்பியப் பட்டத்தை (2004) முதன் முறையாக வென்று கிரேக்க வீரர்கள் தங்கள் நாட்டு கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர்.

தங்கள் நாடே நடத்தும் போட்டியில், தங்கள் அணியே இறுதியாட்டத்திற்கு வந்தும் வெல்லாத வருத்தத்தில் உள்நாட்டு ரசிகர்கள் கனத்த மனதுடன் வெளியேறினர். எதிர்ப்பக்கம், ரசிகர்களுடன் கிரேக்கப் பிரதமரும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார். கிரேக்க நாடும் இந்நேரம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒலிம்பிக் பந்தயத்தை நடத்தப்போகும் அவர்களுக்கு இவ்வெற்றி ஓர் உந்துகோலாக இருக்க வாழ்த்துகள்! யூரோ 2008, ஆஸ்திரியா மற்றும் ஸ்விட்சர்லாந்தில் நடக்கவுள்ளன.

Friday, July 02, 2004

கடலில் நதி நீர் வீணாகவா கலக்கிறது?

"கேரளத்திலிருந்து வீணாக கடலை நோக்கிப் பாயும் ஆற்று நீரைத் தமிழகத்திற்கு திருப்பிவிடலாம்", "மழை வெள்ளத்தால் பெருக்கெடுத்து வீணாக கடலில் கலக்கும் நதியின் தண்ணீரை...." போன்ற செய்திகளை அவ்வப்போது ஊடகங்களில் காணும்போது எழும் கேள்வி - "கடலில் நதி நீர் வீணாகவா கலக்கிறது?". தனக்கு பயன்படவில்லையென்றால் ஒன்றை வீண் என்று சொல்லிவிடுவது மனிதனின் வாடிக்கை. எங்கோ ஒரு மலை அல்லது சுனையில் பிறந்து, காடு, மேடு தாண்டி, நாட்டில் உருண்டு கடலில் சென்று சேரும் வண்ணம் இயற்கை ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைப்பு வீணாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணம்.

நம் நாட்டில் சமீப காலங்களில் பேசப்பட்டுவரும் நதி நீர் இணைப்புத் திட்டத்திலும் இவ்வாதம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது எவ்வளவு அபத்தமானது என்பதை ஜூன் மாத காலச்சுவடில் வந்துள்ள கட்டுரை ஒன்று பறைசாற்றுகிறது.

Thursday, July 01, 2004

யூரோ 2004 - 'செக்'கின் கனவு தகர்ந்தது

இன்றைய கடைசி அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வெல்லும் என்ற "பரவலான எதிர்பார்ப்பை" ஒலிம்பிக் நாட்டினர் முறியடித்து செக்கின் கனவைத் தகர்த்தனர். முழு ஆட்ட நேர முடிவில் 0-0 என்ற நிலை ஏற்படவே கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அச்சமயத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பில் கோலைப் போட்டு இறுதிக்கு முன்னேறியுள்ளனர் கிரீஸ். போர்ச்சுகலைப் போலவே இறுதிச் சுற்றுக்குச் செல்வது இவர்களுக்கும் இதுவே முதல் முறை.

ஆரம்பத்திலிருந்து எல்லாப் போட்டிகளிலும் வென்று வந்த செக் அணிக்கு (அந்நாட்டு ரசிகர்களுக்கும்) இன்றைய தோல்வி மிகப்பெரிய ஏமாற்றம். கனத்த மனதுடன் மைதானத்திலிருந்து அவர்கள் வெளியேறிக் கொண்டுள்ளனர். அதேசமயத்தில், ஏதென்ஸ் நகரம் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டுள்ளதாம்.

வரும் ஞாயிறன்று தெரிந்துவிடும் யார் கையில் கோப்பையென்று.

Wednesday, June 30, 2004

யூரோ 2004 - இறுதியாட்டத்தில் போர்ச்சுகல்

சில நிமிடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த யூரோ 2004ன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹாலாந்தை 2 - 1 என்ற 'கோல்' கணக்கில் வென்று முதன் முறையாக யூரோ கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்றைய ஆட்டத்தின் முதல் கோலைப் போர்ச்சுகலின் ரினால்டோ முதல் பாதியிலேயே போட்டார். இரண்டாவது பாதியில், மனீஷ் (போர்ச்சுகல்) சற்று தொலைவிலிருந்தே பந்தை அருமையாகக் கோல் கம்பங்களுக்கு இடையில் செலுத்தி வெற்றிக்கு வித்திட்டார். தொடர்ந்து மூன்றாவது கோலும் போர்ச்சுகலினராலேயே போடப்பட்டது, என்ன இம்முறை தங்கள் பகுதிக்குள்ளேயே போட்டுவிட்டார்கள்!

நடந்தது வெகு பிரமாதமான ஆட்டம் என்று சொல்வதற்கில்லை, இருப்பினும் இறுதியாட்டத்திற்கு முன்னேறும் முனைப்புடன் இரு அணிகளும் நல்ல முயற்சி செய்தனர்.

தோல்வியுற்றாலும், அந்த அணி, ஆட்டம் முடிந்ததும், தங்கள் நாட்டைச் சார்ந்த மற்றும் ஆதரிக்கும் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கிவந்து நன்றி தெரிவிக்கும் வண்ணமாக அவர்களின் கைதட்டலை ஏற்றுச் செல்வது நல்ல வழக்கமாகத் தோன்றுகிறது. அதேபோல ஒவ்வொரு போட்டி துவங்கும்போதும், இரு அணிகளும் வரிசையாக நின்று தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை ரசிகர்களுடன் இணைந்து பாடும் வழக்கத்தை சிலாகித்துச் சொல்லலாம்.

நாளைய இரண்டாவது அரையிறுதி ஆட்டம்: செக் குடியரசு - கிரீஸ். செக் வெல்லும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.

Thursday, June 24, 2004

யூரோ 2004 - என்ன ஒரு பந்தயம்!

அரங்கு நிறைந்த ரசிகர் கூட்டம் (65,000 பேர் என்று கேட்டதாக நினைவு), ஆட்டம் துவங்குகிறது, மின்னலென ஒரு 'கோலை' மூன்றாவது நிமிடத்தில் இங்கிலாந்து போடுகிறது. அவ்வளவுதான் பிறகு ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் போர்ச்சுகலிடம் போயிற்று (65% பந்தை தன்னகத்தே கொண்டிருந்தனர்). இவர்களும் நன்றாகவே விளையாடினர்; இருப்பினும் 'கோல்' ஒன்றும் விழவில்லை. முதல் இடைவேளியின் போது 1-0.

அதே துடிப்போடு ஆட்டம் தொடர்ந்தது. பல வாய்ப்புகளை நழுவவிட்ட போர்ச்சுகல், 83வது நிமிடத்தில் கணக்கைச் சமன் செய்து உள்ளூர் ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச்செய்தது. இரு அணிகளும் ஆட்டநேரம் முடியும்வரை மேற்கொண்டு எண்ணிக்கையைக் கூட்ட முடியாமற்போகவே கூடுதல் நேர ஆட்டம் நடக்கவேண்டியதாயிற்று.

கூடுதல் நேர முதற் பாதி முடியும்போதும் 1-1 என்றுதான் இருந்தது. இரண்டாவது பாதியின் துவக்க கட்டத்தில் போர்ச்சுகல் ஒரு 'கோலை'ப் போட்டு வெற்றியைக் கொண்டாடும் நிலைக்கு வந்ததாகத் தோன்றியது. ஆட்டம் முடிய இன்னும் ஆறே நிமிடம் இருக்கையில், இங்கிலாந்து அருமையான 'கோல்' ஒன்றைப் போட்டு அவர்களது ரசிகர் பட்டாளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். களைத்தே போயிருந்தனர் அனைத்து வீரர்களும். கூடுதல் நேரமும் முடிந்தது; 2-2; இனி 'பெனால்டி'.

முதலில் அடிக்கும் வாய்ப்பு இங்கிலாந்திற்குக் கிடைத்தது. முதல் 'பெனால்டி'யையே வானத்திலா அடிக்கவேண்டும்?! ரசிகர்களின் வயிற்றெறிச்சலை வாங்கிக்கட்டிக் கொண்டிருப்பார் டேவிட் பெக்கம். 5-5 என்று வந்து, கடைசியில் 6வது 'கோலை' போர்ச்சுகல் 'கோல் கீப்பர்' தடுத்து, பிறகு அவரே வந்து தனது அணிக்கான ஆறாவது 'கோலை'யும் போட்டு அரையிறுதிக்கு வழிவகுத்தார். நல்லதொரு வாய்ப்பை இழந்த வருத்தத்துடன் இங்கிலாந்து ரசிகர்கள் வெளியேறத் துவங்கினார்கள் (இவர்களில் சிலர் வெளியில்போய் யாரையாவது அடித்து நொறுக்காமல் இருந்தால் சரி).

முதல் காலிறுதிப்போட்டியே இவ்வளவு பரபரப்பு நிறைந்ததாய் நடந்து முடிந்துள்ளது.

Wednesday, June 23, 2004

யூரோ 2004 - திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும்

இம்மாதம் பன்னிரெண்டாம் தேதி துவங்கிய யூரோ 2004 கால்பந்து ஆட்டத்தின் முதற்சுற்றுப் போட்டிகள் இன்றோடு நிறைவுறுகின்றன (போர்ச்சுகலில்). பதினாரு அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு அணிகள் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

காலிறுதிக்குச் செல்லும் அணிகள்:
குழு A - கிரீஸ், போர்ச்சுகல்
குழு B - இங்கிலாந்து, ஃப்ரான்ஸ்
குழு C - டென்மார்க், ஸ்வீடன்
குழு D - செக் குடியரசு, நெதர்லாந்து

வெளியில் செல்லும் அணிகள்:
குழு A - ரஷ்யா, ஸ்பெயின்
குழு B - குரேஷியா, ஸ்விட்சர்லாந்து
குழு C - இத்தாலி, பல்கேரியா
குழு D - லாத்வியா, ஜெர்மனி

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மன் ரசிகர்களுக்கு இம்முறை பெருத்த ஏமாற்றம்!

இன்றைக்கு வென்றே தீர வேண்டிய நிலையில் இருந்து தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்த ஜெர்மன் அணி பந்தை எதிராளியின் (செக் குடியரசு) 'கோல்'பகுதியில் வெகுநேரம் வைத்திருந்தும் 'கோல்' விழாமல் போனதையும், பல வாய்ப்புகள் காலுக்கு எட்டி 'கோலுக்கு' எட்டாமல் போனதையும் பார்த்தபோது அவர்களது அதிர்ஷ்டத்தைத்தான் நொந்துகொள்ள வேண்டியிருந்தது. செக் அணி சென்ற பந்தயங்களில் விளையாடிய அளவு இன்று விளையாடாவிட்டாலும் அதன் பக்கம் அதிர்ஷ்டக்காற்று நன்றாகவே அடித்தது. இன்றைய போட்டியில் செக் அணி தோற்றிருந்தாலும்கூட அடுத்த சுற்றுக்குச் செல்லும் அளவிற்கு சிறந்த ஆட்டங்களால் ஏற்கனவே முன்னேறிவிட்டிருந்தனர். அடுத்த முறையாவது ஜெர்மன் அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டட்டும்.

நெதர்லாந்து - லாத்வியாவிற்கு இடையே நடந்த பந்தயத்தில் மூன்று 'கோல்'களையிட்டு நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேறிவிட்டது (ஒரு வேளை ஜெர்மனி வென்றிருந்தால் இவர்கள் வந்திருக்க முடியாது, இதையும் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது).

முதல் காலிறுதிப் போட்டி வரும் வியாழன்று (24.06.2004) லிஸ்பனில் சொந்த ஊர்க்காரர்களான போர்ச்சுகலுக்கும், இங்கிலாந்திற்கும் இடையே நடக்கவுள்ளது. பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. காத்திருப்போம்!

Friday, June 18, 2004

சோற்றில் முழுப்பூசணி

பெய்ததோ வான்மழை
பெருகியதோ காவிரி
நிரம்பியதோ அடி அணைகள்
நிர்பந்தமோ கர்நாடகத்திற்கு
குழப்பமோ விவசாயிகளுக்கு
கும்மாளம் மட்டும் நம் அரசியல்வாதிகளுக்கு

Wednesday, June 16, 2004

சதாக்குப்பைகளும் மின்குப்பைகளும்

இந்தியா போன்ற மக்கள்தொகை நிறைந்த நாடுகளில் அன்றாடம் விழும் குப்பைகளைப் பற்றி பெரும் ஆய்வே நடத்தலாம். பொது இடங்களில் குப்பைகளைப் போடுகிறோமே என்ற உணர்வு எந்த மட்டத்திலும் காணப்படவில்லை. எங்கெங்கு காணினும் குப்பையடா! தூய்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைதான் தென்படுகிறது. இவ்வாறாகச் சிதறிக் கிடக்கும் குப்பைகளை ஏதோ ஒரு விதத்தில் சேகரித்து நகராட்சி/பஞ்சாயத்து ஊழியர்கள் நகருக்கு/ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடங்களில் கொண்டுபோய் அப்படியே கொட்டிவிடுகின்றனர் (அவ்வளவுதான் அவர்களால் செய்யமுடியும்). திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் சிக்கல்கள் குறித்துக் கவலைப்பட யாருக்கும் அவகாசமோ, அவசியமோ இல்லை; இதுதான் பரந்துவிரிந்த பூமியாயிற்றே!

இந்நிலையில் சமீபத்தில் கண்ட செய்தியொன்று மிகவும் அச்சுறுத்துவதாயிருந்தது. சென்னையில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அது. ஆஸ்த்ரேலிய நிறுவனமொன்று தமிழக அரசிடம் இன்னும் முழுமையாக சோதிக்கப்பட்டு முடிப்படாத தொழில்நுட்பமொன்றை இதற்காக முன்வைத்துள்ளதாம். இத்திட்டத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் ஆபத்துகளையும் பற்றி விரிவாக இந்த இணையப் பக்கத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். முக்கியமாக சென்னைவாசிகள் கவனித்து விவாதிக்க வேண்டிய விஷயமிது (மற்றவர்களும்தான்).

சாதாக்குப்பைகளின் சங்கதிகளே இதுவென்றால் புதிதாக அச்சுறுத்தும் அடுத்த சமாச்சாரம் மின்குப்பைகள். இந்தியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்கள் வலுவாக இல்லாத காரணத்தாலும், மலிவான கூலிக்கு வேலைகள் நடப்பதாலும் வளரும் நாடுகளில் முறையாகச் சுழற்சிக்கப்பட வேண்டிய மின்சாதனக் குப்பைகள் இந்தியாவிற்குத் திருப்பிவிடப்படுகின்றனவாம். அந்நாடுகளில் சுழற்சிக்க ஆகும் செலவைவிட இந்தியா போன்ற நாடுகளில் கொட்டிவிடுவது அவர்களுக்கு மிகவும் செலவு குறைந்ததும், வசதியானதுமாகும். சட்டங்களும், விதிமுறைகளும் வலுவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தாவிடில் விரைவில் இந்தியா ஒரு மின்குப்பை மேடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுபற்றிய விளக்கமான கட்டுரை ஒன்றை இங்கே காணலாம். ஜப்பானுக்கு சீனா மின்குப்பை மேடென்றால், அமெரிக்காவிற்கு இந்தியா. ம்...!

நன்றி!

விடுமுறை வாழ்த்து தெரிவித்த இணைய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! காசி அவர்களுக்கு தகுந்த நேரத்தில் பதில் தெரிவிக்க முடியாததில் ஓர் ஆதங்கம்.

விடுமுறை (விடுமுறை போலவே இல்லை, அலைச்சல்கள்தான் அதிகம்) முடிந்து வந்து சில நாட்கள் ஆகியும் சில காரணங்களால் எழுத இயலவில்லை. தொடர்ந்து எதையாவது கிறுக்க முயற்சிக்கிறேன்.

Thursday, May 06, 2004

விடுமுறை

கடந்த சில நாட்களாக ஊருக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததால் வலையில் எதையும் பதிக்க முடியவில்லை. ஒரு வழியாக நேற்று மூட்டை முடிச்சுகளை விமான நிலையத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தாயிற்று. இந்த 'ப்ரி-செக்இன்' வசதியால் போகும் நாளன்று அதிக சிரமப்படவேண்டியதில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துவைப்பது, அஞ்சல் நிலையத்தில் கடிதங்களை வைத்திருக்க வேண்டி எழுதிக் கொடுப்பது, வீட்டில் ஏதாவது செடிகள் இருந்தால் தெரிந்தவர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்வது, அது இது என்று அப்பப்பா...!

ஒன்டிக்கட்டையாக இருந்த காலத்தில் எல்லா சமாச்சாரங்களையும் ஒருநாளில் முடித்துவிடலாம். இம்முறை முதல்தடவையாக குழந்தையையும் எடுத்துச் செல்வதால் கேட்கவே வேண்டாம். போதாதற்கு லேசான தூறல் வேறு. இன்னும் ஒரு சில மணி நேரத்தில் விமான நிலையம் செல்லவேண்டும். முதன்முறையாக சென்னை வழியாக கோவைக்குச் செல்கிறேன். வழக்கமான வழி மும்பை (இவ்விமான நிலையத்தைப் பற்றி எனக்கு இன்னும் நல்ல அபிப்பிராயம் வரவில்லை). நான்கு வார விடுமுறையின்போது ஊரில் உள்ள சமயத்தில் வலைப்பதிவுகளைப் படிக்கவோ, எழுதவோ முடியுமா என்று தெரியவில்லை, முயற்சி செய்கிறேன்.

அன்பான வேட்பாளப் பெருமக்களே! எங்கள் வீட்டின் சார்பாக உங்கள் யாரேனுக்கும் இரண்டு 'பொன்னான வாக்குகள்' கண்டிப்பாக உண்டு. வருவதற்குள் ஆட்களை வைத்து 'கள்ள ஓட்டைப்' போட்டுவிடாதீர்கள்!

Sunday, May 02, 2004

எழுத்துச் சீர்திருத்தம்!

தமிழ் எழுத்துகளில் முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தூவப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கில வார்த்தைகள், மெல்லமெல்ல அங்கிங்கெணாதபடி எங்கும் நிரம்பத் துவங்கியது; அதன் 'வளர்ச்சி' தொடர்ந்துகொண்டும் உள்ளது. தமிழின் இவ்'வளர்ச்சி'க்கு பத்திரிக்கைகள் ஆற்றிய, ஆற்றும் தொண்டு மகத்தானது. அவ்வரிசையில் மற்றுமொரு மைல்கல் - ஆங்கில (ரோமன்) எழுத்துகளிலேயே தமிழை எழுத ஆரம்பிப்பது. எப்படியென்றால் - "Siரிப்பு Maaமே, Siரிப்பு!" (ஆனந்த விகடன் - 05.05.04 இணையப்பதிப்பு). பிறகு உயிர், மெய், உயிர்மெய்யெல்லாம் தேவையில்லை; அனைத்தையும் இருபத்தாறு எழுத்துகளுக்குள் அடக்கிவிடலாம். தமிழில் 'எழுத்துச் சீர்திருத்தம்' நடைமுறைக்கும் வந்துவிடும். பொறுங்கள் தமிழர்களே, இது முழுமைப்பட்டு பட்டிதொட்டியெங்கும் வந்து சேருவதற்கு இன்னும் சில பதிற்றாண்டுகளே தேவை. கணினியாளர்கள் டிஸ்கி, யுனிகோடு முதலியவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு மண்டையை உடைத்துக்கொள்ளவும்வேண்டியதில்லை.

[திருத்தங்கள்: 04.05.2004 - Siரிப்பு Maaமே, Siரிப்பு! மற்றும் ஆனந்த விகடன் ஆகியவற்றிற்கான சுட்டிகள் சேர்க்கப்பட்டன.]

Saturday, May 01, 2004

கற்கால மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள்!


நாய்கள்கூட இவ்வாறு செய்யுமா?

என்ன பாவம் செய்தார்கள ஈராக்கிய மக்கள்? தொடர்ச்சியாகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடைகளால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், மக்களும் சரியான உணவு, மருந்தின்றிக் கொல்லப்பட்டனர். பிற்பாடு பேரழிவு ஆயுதங்களை அழிக்கிறோம் (இவர்களிடம் இல்லாதாதா இல்லை இவர்களால் உபயோகப்படுத்தப்படாததா?), கொடுமையான சர்வாதிகாரியை தூக்கி எறிந்து மக்களுக்கு விடுதலை அளிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, நொடிந்துபோன நாடொன்றை மிக நவீனத் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள், படைகளால் கேவலமாக ஆக்கிரமித்து அட்டூழியம் செய்தனர்.

இப்போது அந்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் படலத்தை ஆரம்பித்துள்ளனர் சில ஜந்துகள். ஒன்றுமே செய்யாத ஓர் இளைஞனைப் பிடித்து எப்படியெல்லாம் சித்ரவதை செய்துள்ளனர்! சதாமைக் கொடுமைக்காரன் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்? இவர்களுக்கிடையில் ஏதாவது வித்தியாசம் உண்டா?

Thursday, April 29, 2004

ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம்

நாளை மறுநாள் (01.05.2004) ஐரோப்பிய ஒன்றியத்தில் புதியதாகப் பத்து நாடுகள் இணையப்போகின்றன. இம்முறை இணையும் நாடுகளின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விடக் கூடுதலாகும். 1951-ல் இத்தாலி, ஃபிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், ஜெர்மனி ஆகிய ஆறுநாடுகளுடன் தொடங்கிய இவ்வொன்றியம் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது.

1973 - அயர்லாந்து, இங்கிலாந்து (யு.கி), டென்மார்க்
1981 - கிரேக்கம் (க்ரீஸ்)
1986 - போர்ச்சுகல், ஸ்பெயின்
1995 - ஆஸ்திரியா, ஃபின்லாந்து, ஸ்வீடன்

இன்று வரை உள்ள பதினைந்து நாடுகளுடன் இணையும் நாடுகள்: எஸ்த்தோனியா, செக் குடியரசு, சைப்ரஸ், மால்டா, போலந்து, லாத்வியா, லித்துவேனியா, ஹங்கேரி, ஸ்லொவாக் குடியரசு, ஸ்லொவீனியா. இவற்றில் பல நாடுகள் சமீப காலம் வரை கம்யூனிஸ ஆதிக்கத்தின் கீழிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பல்கேரியா மற்றும் ருமேனியா 2007-ல் சேரும்போலத் தெரிகிறது. துருக்கியின் நிலைமை அதற்குத்தான் தெரியும்.

ஓர் ஐரோப்பிய நாடு இவ்வொன்றியத்தில் சேரவேண்டுமானால், அங்கு

* நிலையான ஜனநாயக நாடாக விளங்க வேண்டும்.
* மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
* சட்டப்படி ஆட்சி நடக்க வேண்டும் (rule of law).
* சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பிருக்க வேண்டும்.
* சந்தைப் பொருளாதாரம் நடைமுறையில் இருக்க வேண்டும்.
* இன்னும் பல...

(படத்தில் 25 நாடுகளின் கொடிகள்)

Tuesday, April 27, 2004

கோடைவிடுமுறை விளையாட்டுகள்

ஒரு வழியாக முழுப்பரிட்சை எழுதி முடித்து "அப்பாடா முடிந்தது!" என்று பிள்ளைகள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் வரவேற்க ஆரம்பித்திருப்பர். தற்காலத்தில் பெரும்பாலும் கிரிக்கெட், தொலைக்காட்சி என்று விடுமுறையைக் களி(ழி)ப்பதாகத் தெரிகிறது. தொ.கா. வந்திராத அந்நாட்களில் ஊரில் நடந்த, பங்கேற்ற சில விளையாட்டுகளை நினைத்துப் பார்த்தால் இப்போதும் உள்ளம் பூரிக்கிறது. அவற்றில் ஒன்றிரண்டு:

கில்லி

குறைந்தது இரண்டு பேரைக் கொண்டு விளையாடப்படும் இதற்குத் தேவைப்பட்டவை ஒரு கில்லியும் (கிட்டத்தட்ட 10-15 செ.மீ உள்ள இரு முனைகளும் சுமாராக் கூராக்கப்பட்ட குண்டான ஒரு குச்சி), ஒரு தாண்டலும் (சுமார் ஒரு அடி நீளமுள்ள ஒரு முனை கூராக்கப்பட்ட குச்சி) மட்டுமே. பெரும்பாலும் இவை இரண்டும் சொந்தத் தயாரிப்புகளாகவே இருக்கும். கொய்யா மரக்குச்சிகளில் செய்தவை தரமானவை என்பது அந்தக்கால அனுபவம்!

விளையாடுவதற்கு எப்போதும் குறைந்தது நான்கைந்து பேர்கள் சேர்வோம். சேர்ந்தவர்கள் பிறகு இரண்டு அணியாகப் பிரிய வேண்டும். இதில் யார் முதலில் கில்லியை அடிப்பது? அதற்குமுண்டே ஒரு வழி. சுண்டுவதற்குக் காசு கிடைப்பதெல்லாம் கொஞ்சம் கடினமாதலால், தட்டையான சிறு கல்லொன்றை எடுத்து அதன் ஒருபக்கத்தை எச்சிலால் ஈரமாக்கி ஒரு அணித்தலைவன் மேலே வீச, மற்றவன் தனக்கு வேண்டிய பக்கத்தைச் சொல்வான். பூவா தலையாவில் வெல்லும் அணி கில்லியை அடிக்கத் துவங்கும், எதிரணி களத்தில் நிற்கும். (கிரிக்கெட்டில் உள்ள மட்டையாளன், பந்து வீச்சாளர்களைப் போல).

திறந்த வெளி நிலத்தின் ஒரு பகுதியில் நெடுவாக்கில் கோடொன்றைக் (கில்லியின் அளவை விடக் கொஞ்சம் பெரிதாக இருக்கும்) கீறி, கோட்டின் மையப்பகுதிக்கு இரண்டு பக்கங்களிலும் தாண்டலால் குத்தி சிறு ஓட்டைகளையும் போட்டுவிட்டால் ஆடுகளம் தயார். ஆட வருபவன், கீறப்பட்ட குழியின்மேல் கில்லியைக் குறுக்காக வைத்துத் தாண்டலின் கூர்புறத்தைக் குழியிலே கில்லியியைத் தொடுமாறு வைத்து, அதன் மேற்புறத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையால் தாண்டலின் கீழ்ப்பகுதியில் ஓங்கி அடிக்க, அடித்தவனின் திறமைக்கேற்ப புழுதி எழும்பி கில்லி பறந்து வீறென்று செல்லும். எதிர்முனையில் நிற்பவன் பறந்துவரும் கில்லியைப் பிடித்தால் அடித்தவன் 'அவுட்'. இல்லையென்றால், விழுந்த இடத்திலிருந்து கில்லியை அடித்த இடம் நோக்கி எதிரணியினர் எறிய வேண்டும். அது சரியாக அடித்த இடத்திலோ அல்லது ஆடுகளத்தின் ஒரு தாண்டல் சுற்றளவுக்குள்ளோ விழுந்தாலும் அடித்தவன் 'அவுட்'.

திருப்பி எறியும்போது கில்லி வந்து குழிக்கு அருகில் விழாமல் போனால், அது தற்போது விழுந்த இடத்திலிருந்து அடிப்பவனால் முன்னோக்கி அடித்துச் செல்லப்படும். மூன்று முறைக்குள் எவ்வளவு தூரம் அடித்துக் கொண்டு செல்கிறானோ அந்த அளவிற்கு புள்ளிகளைச் சேகரிக்கலாம். தரையில் விழுந்துகிடக்கும் கில்லியின் கூரிய பகுதியைத் தாண்டலில் அடித்தால் அது அந்தரத்தில் மேலெழும், அப்போது அதைத் தரையில் விடாமல் எத்தனை முறை திரும்ப அடிக்கிறானோ ('டபுள்', 'ட்ரிபிள்',....) அந்த அளவுக்கு அளக்கும் அளவுகோலானது மாறுபடும். ஒரு அடியிலேயே விட்டுவிட்டால் தாண்டலில் அளக்க வேண்டும். 'டபுளு'க்கு கில்லி; 'ட்ரிபிளு'க்கு அரை கில்லி, கால் கில்லி, பின்னூசி ('பின்'னே ஊசிதானே அப்புறம் என்ன பின்னூசி!)..... கடுகு, மண் என்று பல அளவுகோல்கள்! கால்கில்லிக்குப் போவதே பெரும்பாடாகிவிடும். வழக்கம்போல அதிக புள்ளிகளை எடுக்கும் அணி வென்று ஆட்டம் போடும்.

விளையாட யாரும் கிடைக்காத சமயங்களில் 'டபுள்', 'ட்ரிபிள்' அடித்துப் பழகி பயிற்சி வேறு! இதை ஆபத்தான விளையாட்டு என்று சொல்வார்கள். ஆனால், நல்லவேளையாக எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொண்டதோ, நேரில் கண்டதோ இல்லை. ஒருவேளை, நாங்கள் விளையாடியது (என்ன காரணத்தாலோ) ஆட்கள் நடமாடும் பகுதியைவிட்டுத் தள்ளி இருந்தது காரணமாயிருந்திருக்கலாம்.

நுங்கு வண்டி

ஊரிலிருக்கும் நூற்பாலைக்கு முன்புறமுள்ள பெரிய புளிய மரங்களை ஒட்டியுள்ள பகுதிகளை எங்கிருந்தோ வரும் பல்வேறு வியாபாரிகள் அவ்வப்போது இலவசமாக ஆக்கிரமித்து கடைபரப்பிவிடுவார்கள். கோடைகாலத்தில் அப்படி வரும் கடையொன்றிற்கு முக்கியமாகக் கொண்டுவரப்படும் பொருட்களுள் நுங்கும் ஒன்று. மரத்திலிருந்து வெட்டப்பட்ட குலைகளை அப்படியே எடுத்து வந்து குவித்திருப்பார்கள். பதமான அரிவாளால் குலையிலிருந்து அவற்றை வெட்டிப் பிரித்தெடுத்து மட்டையை அழகாக மேல்புறத்தில் சீவிக் கொடுப்பார்கள். சீவப்பட்ட மட்டையோடு நுங்கை வாங்குவோரும் உண்டு, முழுதாகச் சீவிய மட்டையிலிருந்து எடுத்த நுங்கைப் பச்சையான பெரிய இலைகளில் சுருட்டி (பிளாஸ்டிக் பைகள் எல்லாம் பிற்காலத்தில் வந்தவை) வாங்கிச் செல்வோரும் உண்டு.

சீவப்பட்ட மட்டையிலிருந்து நுங்கை நோண்டி, அதில் வரும் நீரை உறிஞ்சிக் கொண்டே தின்னக் கொஞ்சம் பழகவேண்டும். ஃ போல இருக்கும் மூன்று நுங்குகளும் நோண்டி எடுக்கப்பட்டபின் அழகான குழிகளுடன் கூடிய மட்டையொன்று மிஞ்சும். இவ்வாறு கிடைக்கும் இரண்டு மட்டைகளை, அவற்றின் ஃ பகுதிக்கு நடுவில் கெட்டியான சிறு குச்சியொன்றைச் செருகி இணைத்தால் உருண்டோடும் வண்டியொன்று தயார்! அதை உருட்ட நீளமாக கவட்டைக் குச்சி (ஒரு முனை 'Y' போல இருக்கும்) எங்கிருந்தாவது கிடைக்கும். ஒரு சில நாட்களுக்கு இந்த வண்டி நன்றாக ஓடும். அப்புறம் என்ன, சலிக்கும் வரை மீண்டும் மீண்டும் புதிய வண்டிகளைச் செய்து ஓட்டவேண்டியதுதான்.

இன்னும் பம்பரம் விடுதல், 'டயர்' ஓட்டுதல், கோலி குண்டு விளையாடுதல், காத்தாடி சுற்றுதல், மரக்குரங்கு, நொண்டி, 'ஐஸ் நம்பர்', துணி பந்தில் கிரிக்கெட் என்று எத்தனையோ விளையாட்டுகள்! இப்போதைய சிறுவர்கள் இவற்றையெல்லாம் இழக்கிறார்களா என்று தெரியவில்லை. இன்றைக்குக் கிராமப்புறங்களின் வீதிகளில் விளையாடும் சிறுவர்களைப் பார்ப்பது சற்றே அரிதாகிவிட்டது. நகர்ப்புறங்களிலோ கணினி வகுப்புகள், அடுத்த வருடப் பாடங்களுக்கான 'ட்யூஷன்' (இதைப்போலக் கொடுமை வேறெங்கும் உண்டோ), நீச்சல், நாட்டியம், நுண்கலைகள், கராத்தே, இத்யாதிகள் என்று மாணவ மாணவியரின் வாழ்க்கை வேறு ஒரு திசையில் பயணித்துக்கொண்டுள்ளது.

Monday, April 26, 2004

வளைக்கப்படும் விதிமுறைகள்

இன்றைய தமிழ் நாளிதழ்கள் பெரும்பாலானவற்றில் வந்த 'பரபரப்பான' செய்தியொன்று ஞாயிறன்று சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றியது. மிக முக்கியமான நபர்களின் வாகனங்கள் ஓடுபாதையில் செல்ல அனுமதி வழங்கப்படுமாம்! விமானக்கட்டுப்பாட்டு அறையின் அனுமதியின்றியே, அதுவும் விமானமொன்று தரையிறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், ஓரிரு வாகனங்களை ஓடுபாதையில் செல்லவிட்டுள்ளனர். பல பயணிகளுக்குப் பொறுப்பான அவ்விமானியின் நிலைமை எப்படி இருந்திருக்கும்! அவசரத் தடைகளை (breaks) உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார், பாவம்.

விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் என்ன ஓர் அலட்சியம்! எல்லா இடத்திலும்தான் அது இல்லையென்றாகிவிட்டது, முக்கியமான இடங்களில் கூடவா இப்படி நடக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் இப்படி நிகழ்வது இது மூன்றாவது முறையாம்!? (காண்க, தினமணி 26.04.2004). விசாரணை, அது இது என்கிறார்கள், உருப்படியாக ஏதேனும் விளைந்தால் மகிழ்ச்சியே. நம் நாட்டு விமான நிலையங்களைச் சிலாகித்துப் "பரவாயில்லையே!" என்று சொல்லிக்கொள்ளும் நாள் எந்நாளோ?

Sunday, April 25, 2004

வரலாற்றுத் தீர்ப்பு

நியூயார்க்கிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றமொன்று, போபால் விபத்து சம்பந்தமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை மற்றொரு நீதிமன்றம் இன்னும் கவனிக்க வேண்டியிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. தீர்ப்பின் ஒரு பகுதியாக, யூனியன் கார்பைடு நிறுவனம் (அதன் தற்போதைய உரிமையாளர்கள் - டெளவ் கெமிக்கல்ஸ்), போபாலிலுள்ள கைவிடப்பட்ட பூச்சி மருந்து தயாரிப்பு நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்திருக்கும் மாசுகளை அகற்ற வேண்டும்.

நீதிமன்ற வரலாற்றில், ஒரு நாட்டிலுள்ள நீதிமன்றமொன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றை மற்றொரு நாட்டிற்குப்போய் அவை செய்த சூழமைக் கேடுகளைச் சரிசெய்ய வேண்டுமென்று இதற்குமுன் தீர்ப்பளித்ததில்லையாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தீர்ப்பின் பயன் கிடைக்கவேண்டுமானால், மத்தியப்பிரதேச மற்றும் மத்திய அரசுகள் அமெரிக்க நீதிமன்றத்திடம் அதன் தீர்ப்பை ஏற்றுப் பெறுவதாக ஒப்புதல் அளிக்க வேண்டுமாம். நம் அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

[போபால் குறித்த பழைய பதிவு]

Saturday, April 24, 2004

பேசும் மென்கலன்

இணைய நுட்பத்தில் இயங்கும் மென்கலன் ஒன்று சுவாரசியமாக இருக்கிறது. பயனர் பயிற்சி, விளம்பரங்கள் போன்றவற்றிற்கு இதுபோன்ற தொழில்நுட்பம் வசதியாக இருக்கும். இந்தப்பக்கத்திற்குச் சென்று ஏதேனும் ஒரு சொல் அல்லது வாக்கியத்தை உள்ளீடு செய்து, பக்கத்திலுள்ள பொத்தானைச் சொடுக்கினால், தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில், குரலொன்று அதை ஒலிக்கிறது.

Friday, April 23, 2004

பொட்டலத்தில் சூழமை

சில நாட்களுக்கு முன்பு வாங்கிய பொருளொன்றின் பொட்டலத்தின் பின்புறம் அச்சடிக்கப்பட்டிருந்த சூழமை (Environment-ற்கு இணையான தமிழ்ச் சொல்லாக இராம.கி அவர்கள் திண்ணையில் குறித்திருந்ததை இன்று தற்செயலாகக் கண்டேன்; நன்றாகப்பட்டதால் உபயோகித்துப் பார்க்கிறேன். இதுகாறும் தெரிந்த வார்த்தைகள் - சூழல், சூழியல், சுற்றுப்புறச் சூழல் போன்ற சிலவைதான்) குறித்த சில தகவல்கள் கவனத்தை ஈர்த்தன.

முதலாவது, இப்பொட்டலத்தில் பிவிசி (பாலி வினைல் குளோரைடு) இல்லை. தற்காலத்தில், பிவிசி நம்மூரில் சகட்டு மேனிக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பிளாஸ்டிக் ஆயிற்றே, இதைப்போய் இல்லை என்று சொல்கிறார்களே என்று பார்க்க, பிறகு புரிந்தது இதன் மகத்துவம். பிளாஸ்டிக்குகளிலேயே அதிக அளவில் சூழமையைக் கெடுப்பது பிவிசி-தான் என்கிறார்கள். கிட்டத்தட்ட மறுசுழற்சியே செய்ய இயலாத பிவிசியின் வாழ்க்கைச் சுழற்சியின் எல்லா கட்டங்களிலும் - ஆக்கம், பயன்பாடு, அழிவு - குளோரினை அடிப்படையாகக் கொண்ட நச்சு வேதிப்பொருட்கள் வெளியிடப்படுகின்றன. இதன் விளைவாக, புற்றுநோய் முதலான கடும் உடல்நலக்குறைவுகள் ஏற்படுகின்றன. முடிந்தவரையில் மாற்றுக்களை உபயோகிக்கப் பரிந்துரைக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் பலவுடன், சில அரசாங்கங்களும் (வளர்ந்த நாடுகளில்தான்!) பிவிசி உபயோகத்தை விட்டொழிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளனவாம். நம்மூரில் பரவலாக பிவிசி உபயோகப்படுத்தப்படுவதற்கு அதன் நீடித்த உழைப்புத்தன்மை மற்றும் குறைந்த விலை காரணம் என்று நினைக்கிறேன். கூடவே உடல் நலத்தையும், சூழமையையும் கருத்தில் கொண்டால் சரி.

இரண்டாவது, இக்காகித அட்டை தயாரிக்கும் பொருளில், கரும்புச் சக்கையிலிருந்து எடுக்கப்பட்ட மரமற்ற கூழும் கலந்துள்ளது. அட!

கடைசியாக, ஆவியாகும் கரிம வேதிப் பொருட்களற்ற (VOC-Volatile Organic Compound), தாவர எண்ணையால் தயாரிக்கப்பட்ட மையால் அச்சடிக்கப்பட்டது. பரவாயில்லையே! ஆ.க.வே.பொ [இடையில் புள்ளிகள் இல்லாமல் எழுதினால் 'ஆகவேபொ' :-) ] பற்றி நல்ல பல தகவல்களை இங்கே காணலாம். வேதியியல் வாத்தியார்கள் இவற்றைப் பற்றியெல்லாம் இணையத்தில், தமிழில் எழுதி வைப்பார்களாக!

Wednesday, April 21, 2004

தமிழ் ஒருங்குறி - விளக்கம், விவாதங்கள்

சென்ற வாரத்திலிருந்து தமிழ் ஒருங்குறி (யுனிகோடு) பற்றி காசி, பலருக்கும் பயனளிக்கும் வகையில் எளிமையாக விளக்கி எழுதிவருகிறார்.

தமிழ்-உலகம் மடற் குழுவிலும் கடந்த சில நாட்களாக ஒருங்குறி பற்றிய சூடான விவாதம் நடந்துகொண்டுள்ளது.

Tuesday, April 20, 2004

குளிரே போ...கோடையே வா...

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் (பொதுவாக) மூன்றாவது திங்கட்கிழமையன்று ஜூரிக்கில் (சூரிச் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்) குளிர்காலத்திற்கு விடைகொடுக்கும் விழா ஒன்று நடத்தப்படுகிறது. ஸெஹ்ஸலொய்ட்டன் (ஆறு மணிக்கு எழுப்பப்படும் மணியோசை) என்றழைக்கப்படும் இவ்வண்ணமயமான நிகழ்ச்சி இங்கு நூற்றாண்டுகளாக நடந்துகொண்டுள்ளது.

அக்காலத்தில் மக்கள் சூரிய உதயத்திலிருந்து, அஸ்தமிக்கும் வரை வேலை செய்தனர். பகலும் இரவும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் வசந்த காலத்தில், மாலை ஆறு மணிக்கு தேவாலயங்களில் ஒலிக்கும் மணியோசை அந்நாளைய வேலை நிறைவை அறிவிப்பனவாக இருந்தன. இச்சமயத்தில், மங்கிய குளிர் காலத்திலிருந்து ஒளியான கோடை காலத்தை வரவேற்று உள்ளூர் தொழிற்குழுக்கள் ஒன்றுகூடி உண்டு, குடித்து, பேசிக் களித்தனர்.

அந்தக் காலத்தில் ஐரோப்பிய நகரங்களில் ஒரே மற்றும் ஒத்த தொழில் புரியும் மக்கள் ஒன்று சேர்ந்து குழுக்களை (ஆங்கிலத்தில் Guild) அமைத்தனர். கல்வி, அரசியல், பொருளாதார, இத்யாதிகளைக் கட்டுப்படுத்துமளவிற்கு இக்குழுக்கள் செல்வாக்கு பெற்றிருந்தன. அவ்வழியில் ஜூரிக்கில் ஆரம்பத்தில் 13 குழுக்கள் தோன்றின (படைவீரர், பொற்கொல்லர், வணிகர்கள், திராட்சை ரசம் தயாரிப்போர், ரொட்டி தயாரிப்போர், நெசவாளர்..... என்று சகல தொழில்புரிவோர்). பிற்காலத்தில் தொழிலை அல்லாது வசிப்பிடத்தை மையமாகக் கொண்ட வட்டாரக் குழுக்களும் தோன்றின.

தற்காலத்தில் இக்குழுக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு தங்களைப் பறைசாற்றும்வண்ணம் வீதிகளில் அணிவகுத்து வந்து ஒரு திறந்த வெளி மைதானத்தில்கூடுகின்றனர். இம்மைதானத்தின் நடுவே ஒரு 'பனி மனிதனை' நிறுத்தி வைத்துள்ளனர். பருத்தி மற்றும் எளிதில் எரியக் கூடிய பொருட்களாலான வெண்ணிற பொம்மைக்குச் சரியான ஆறுமணிக்குத் தீவைக்கப்படுகிறது. எவ்வளவு சீக்கிரம் இப்பனிமனிதனுக்குத் தீப்பற்றி எரித்து வெடிக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் கோடையும் வந்து நீண்ட நாளைக்கு இருக்குமென்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை (சும்மாநாச்சுக்கேனும்!).

பின்பு இக்குழுக்கள் தங்களுக்கென உள்ள விடுதிகளுக்குச் சென்று உண்டு களிக்கின்றனர்.

நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள்:

பனிமனிதன்


அணிவகுப்பு






வெடிக்கப்போகும் பனிமனிதன்




லத்தி சுத்தும் கையில் மலர்க் கொத்து... நாட்டுப்புற இசை வெள்ளம் (எந்த நாடு என்று தெரியவில்லை).

Sunday, April 18, 2004

தேர்தல்-வாகனங்கள்-பாட்டு

"தொலைந்து போய்விட்டனர்
தேசபக்தர்கள்
மறைந்து போய்விட்டனர்
மக்கள் நேசர்கள்
கொள்ளை அடிக்கவே உள்ளே புகும்
வேட்பாளர்கள்
சில்லரைக் காசுக்கு சொல்லை விற்கும்
வாக்காளர்கள்?!"

[பூரணி கவிதைகள், பக்.93, காலச்சுவடு பதிப்பகம், ISBN 81-87477-65-2]
-----------------

வாகனங்கள் தொடர்பான சில தமிழ்ச்சொற்கள்: இராம.கி, யாகூ தமிழ்-உலகம் மடற்குழு

Vehicle - வண்டி
Bicycle - மிதிவண்டி
Two wheeler - இருவளை
Motorcycle - உந்துவளை
Scooter - துள்ளுந்து
Car - சீருந்து
Van - சாரையுந்து
Sedan - கூட்டுவண்டி
Mini bus - சின்னப் பேருந்து
Lorry (Truck) - சரக்குந்து
Traffic - துரவுகை/துரப்பு
Acceleration - முடுக்குதல்
Driver - துரவர்
Safety - சேமம்
-----------------

சிறிது நேரத் தேடலுக்குப் பின்னர், பின்வரும் பாடல் இணையத்தில் அகப்பட்டது. இங்கு அது தமிழ் யுனிகோடு (ஒருங்குறி-இராம.கி.) வடிவில்:

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேண்டுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
அப்போ கலகலன்னு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

கோவம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யாப்பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

Saturday, April 17, 2004

மற்றுமொரு படுகொலை

'பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடரும் போர்' என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் மற்றொரு படுகொலையை இன்று காஸாவில் நிகழ்த்தியுள்ளது. கொல்லப்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான அப்துல் அஜீஸ் ரான்டீசி (சென்ற மாதம்தான் ஷேக் யாசின் கொல்லப்பட்டார்). கேள்விக்குரிய தற்கொலைத் தாக்குதல்களை முன்னின்று நடத்தும் இவ்வமைப்பின் கொள்கைகள் சில (இஸ்ரேல் என்ற நாட்டையே அங்கீகரிக்க முடியாது போன்றவை) நடைமுறைக்கு ஒத்துவராதவை. இருப்பினும், இன்றைய படுகொலை ஹமாஸின் பலத்தைக் குறைக்க இஸ்ரேலுக்கு உதவுவது போலிருக்கலாம், ஆனால் மேலும் பிரச்சனைகள் வளரவே இது வழிசெய்யும். வருங்காலத்தில் யாசர் அராபத்தை இவர்கள் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'வல்லானி'ன் துணை இருக்கும்வரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

தற்கொலைத் தாக்குதல்களையும், வன்முறைகளை மட்டுமே எதிர்த்துப் பேசுவோர், பேசும் நாடுகள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளையும், அடக்குமுறைகளையும் கண்டித்தும், அமைதி முயற்சிகளை முழுவீச்சிலும் நடத்தியிருந்தால் இப்பிரச்சனை என்றோ தீர்க்கப்பட்டிருக்கக்கூடும்; பாவப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு விடிவும் பிறந்திருக்கும். இன்னும் அது நடக்காததால் உண்மையிலேயே இவர்கள் அமைதியை விரும்புகிறார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இப்பகுதியில் அமைதியைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ!

Friday, April 16, 2004

திருட்டுகள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

தானியங்கிப் பணவழங்கிக்குச் (ATM) சென்று பணமெடுக்கும்போது சாதாரணமாக அருகில் யாரேனும் உள்ளனரா என்று கவனித்துவிட்டு பிற்பாடு 'பின்'னை அடிப்போம். யாருமே இல்லாமலிருந்தால்கூட திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. பணமல்லவா!

பார்ப்பதற்கு எப்போதும் போலுள்ள ஒரு பணவழங்கி.

அட்டையைச் சொருகும் பகுதிக்கு மேல், போலியான ஒன்று. இதின் வலதுபுறத்தில் உள்ள பகுதியில் அட்டையைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளும் அமைப்பு உள்ளதுபோல் தெரிகிறது (பிற்பாடு போலி அட்டை தயாரிப்பதற்காயிருக்குமோ?)

பணமெடுக்க கட்டளைகளை இட உதவும் திரை, அருகில் ஒரு விளம்பரத் தாங்கி.

மெய்யாலுமே இது விளம்பரத் தாங்கியா? இங்குதான் வைத்திருக்கிறார்கள் ஒரு சிறிய காமிராவை! இதன் மூலம் திரை மற்றும் விசைப்பலகையில் என்ன உள்ளீடு செய்யப்படுகிறது என்பதை அறியமுடியும்.

இப்படி! இதிலுள்ள ஆன்டெனா மூலம் படங்களை சுமார் 200 மீட்டர் தொலைவுவரை அனுப்ப முடியுமாம்!

ஒவ்வொரு முறையும் தானியங்கி பணவழங்கிக்குப் போகும்போது கவனமாயிருத்தல் சேமம்.

Tuesday, April 13, 2004

காணப் பொறுக்கவில்லை

கையில் குறுந்தடியை வைத்துக்கொண்டு 'பேஸ் பால்' விளையாடலாம். ஆனால் அதைப் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு உயிர்களைத் தாக்கிக் கொன்றால் எப்படியிருக்கும்! அப்பா, நினைத்துப்பார்க்கவே கொடுமையாக உள்ளது. மனிதனால் மட்டுமே இத்தகைய காரியங்களைச் செய்ய முடிகிறது.

கனடாவிற்கும் நியூஃபெளண்ட்லாந்திற்கும் இடையிலமைந்திருக்கும் செயின்ட் லாரன்ஸ் குடாவிலுள்ள சிறு பனித்தீவுகளில் தீவுகளில் வாழும் சீல்களுக்கு உண்மையிலேயே இது போதாத காலம். அதுவும் உலகிற்கு வந்து ஒரு சில மாதங்களேயான சின்னஞ்சிறியன, மாக்களிடமிருந்து தப்ப முடியாமல் எளிதில் சிக்குண்டு உயிரிழக்கின்றன.

தொ.கா. செய்தியொன்றில் ஒரு சில விநாடிகள் கண்ட (அவற்றைத் துரத்தித் துரத்தி அடித்துக் கொல்லும்) அக்காட்சி மனதை என்னவோ செய்தது. இவற்றை ஏன் கொல்கிறார்கள்? பெருகும் தோல் சந்தை. கூறப்படும் மற்றொரு சாக்கு, பல்கி வரும் சீல்களின் எண்ணிக்கையால் அப்பகுதியிலுள்ள மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்க்கை மற்றும் உள்ளூர்ப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்!

20 ஆண்டுகளுக்குமுன் இவ்வாறு நடந்த கொடுமையான வதைகளை விலங்கின ஆர்வலர்கள் மக்களிடம் எடுத்துச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், அமெரிக்கா மற்றும் மே.ஐரோப்பிய நாடுகளில் சீல் சம்பந்தப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதாலும், வேறுவழியின்றி கனடா அரசாங்கம் ஒரு சில தடையுத்தரவுகளைப் பிறப்பித்ததையடுத்து சீல்களின் இறப்பு பெருமளவிற்கு குறைந்ததாகத் தெரிகிறது. இப்பொழுது ரஷ்யா, போலந்து உட்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் சீலின் தோலுக்கு கிராக்கி கூடுவதால், கனடா அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, மீண்டும் 'வேட்டை' விஸ்வரூபமெடுத்துள்ளது.

கோழி, ஆடு, மாடு, பன்றி, மீன், சீல்.........மனிதா, பாவம் விலங்குகள்.

Sunday, April 11, 2004

இப்படியாக ஈஸ்டர் விடுமுறை

கடந்த சிலநாட்களாக மப்பும் மந்தாரமாகவும் உள்ள வானம், வெளியில் செல்லாதே வீட்டிலேயே இரு என்று தடுத்து, சென்ற வருட ஈஸ்டர் விடுமுறையை நினைவுகூற வைத்தது. அச்சமயத்தில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அருங்காட்சியகத்திற்கு சென்று வந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். திரும்பும் சமயத்தில் அவ்வளாகத்திலிருந்த கடையை நோட்டம்விட்டபோது, நம் ஊர் சமாச்சாரத்தைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்று உடனே வாங்கத்தூண்டியது.

1984ல் கிராமத்தில் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த டீக்கடை 'பெஞ்சில்' மக்கள் அமர்ந்துகொண்டு நாளேட்டை (தினமலர் என்று நினைக்கிறேன்) வாசித்துக்கொண்டிருந்தபோது, அருகில் நின்று அதன் முன்பக்கத்தில் வெளியாகியிருந்த வெள்ளைத்துணிகள் போர்த்திக் கிடத்தப்பட்ட சடலங்களின் படங்களைக் கண்டது இன்னும் லேசாக நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் அடிக்கடி காதில் விழுந்தது 'விஷவாயுக் கசிவால் பல்லாயிரக்கணக்கான மரணம்' என்பதுதான். அதற்குமேல் விரிவாக அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பே அமையவில்லை (சொல்வாரும் இல்லை, கேட்பாரும் இல்லை), இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை.

டொமினிக் லாப்பியர் (ஃப்ரான்ஸ்), சேவியர் மோரா (ஸ்பெயின்) ஆகிய இருவரின் பலமாத உழைப்பில் வெளியாகிய 'Five Past Midnight In Bhopal' (Scribner UK, ISBN 0-7432-2035 8) என்ற புத்தகம் அது (இதழியல் புலனாய்வுப் புத்தகம் என்றுகூடச் சொல்லலாம்). போபாலில் நடந்த அக்கோரச் சம்பவத்தை பல்வேறு தகவல்களுடன் மூன்று அத்தியாயங்களில் நயமாக விவரித்துள்ளனர்.

முதல் அத்தியாயம், ஒரிசாவின் கிராமம் ஒன்றில் வாழ்ந்த இரத்தின நாடார் என்பவரது குடும்பத்திலிருந்து தொடங்குகிறது. ரயில் தண்டவாளங்களையொட்டி வாழும் சேரிகள் (அதன்பின்னுள்ள பல தகவல்கள் முதன்முதலாகத் தெரியவந்தது), போபால் நகரின் பழமை, அதன் கலாச்சாரம், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்கச் செயல்பாடுகள் மற்றும் அதன் இந்தியத் திட்டம் என்று எழுதப்பட்டுள்ள பல சம்பவங்கள் புத்தகத்தைக் இலேசில் கீழே வைக்கவிடுவதில்லை.

இரண்டாவது அத்தியாயத்தில் சம்பவம் நடந்ததற்கு அடிப்போடும் முக்கிய காரணங்கள் அலசப்பட்டுள்ளன. மீத்தைல் ஐஸோசயனேட்(MIC) என்ற வாயுதான் 16,000 முதல் 30,000 மக்களை மாளச்செய்தது.

கடைசி அத்தியாயம், நடந்திருக்கக் கூடாத அப்பேரழிவு எப்படி நடந்தது என்பது பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அச்சம்பவத்தை போபால் மருத்துவர்கள் எதிர்கொண்ட விதம், எரிகிற வீட்டில் பிடுங்க முயன்ற அரசியல்வாதிகள் மற்றும் அமெரிக்க வழக்கறிஞர்கள், கார்பைடு நிறுவனத்தின் நிலைப்பாடு என்று விரிகிறது.

விஷவாயுவால் தாக்குண்டவர்கள் பலருக்கு இன்னும்கூட சரியான நிவாரணமோ, விமோசனமோ கிடைத்ததுள்ளதாகத் தெரியவில்லை. விரிவாக எழுதப்பட்ட நேர்த்தியான ஆவணமிது.

இன்று வாசிக்கத் துவங்கியிருக்கும் மற்றொரு புத்தகத்தைப்பற்றிப் பிறகு எழுதிவைக்கிறேன்.

Tuesday, April 06, 2004

கண்புரை

வயதானால் உடலுக்கு வரும் தொந்தரவுகளில் ஒன்று கண்புரை (cataract). சென்ற வாரம் கோவையில் அம்மாவிற்கு கண்புரையை அகற்ற வேண்டி சிகிச்சை செய்தனர். இத்துறையில் உபயோகப்படுத்தப்படும் நவீனத்தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே எளிதாக்குகின்றன. இச்சிகிச்சையை சாக்காக வைத்து, அதனைப்பற்றிய விவரங்களை வலையில் தெரிந்துகொள்ள முடிந்தது (இல்லாவிட்டால் வெறுமனேபோய் யார் பார்க்கப்போகிறார்கள்!).

கண்ணில் இருக்கும் ஆடி (lens) பெரும்பாலும் நீர் மற்றும் புரதங்களால் ஆனது. ஒளியை ரெட்டினாவிற்கு (ஒளித் தகவல்களை மூளைக்கு அனுப்பும் பாகம்) குவித்து வழங்கும்வண்ணம் இப்புரதங்கள் அமையப்பெற்றுள்ளன. சிலசமயங்களில் இப்புரதங்கள் ஒன்று சேர்ந்து ஆடியின் மேல் ஒரு படலத்தை உருவாக்குகிறது. இதையே கண்புரை (சாலேசரம்) என்கிறார்கள். இதனால் பார்வை மங்கலாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ போகிறது. எந்த வயதிலும் வரலாமாயினும் பொதுவாக அறுபது வயதிற்குப் பிற்பாடே இக்குறைபாடு கண்ணிற்கு வருகிறது.

கண்புரையை அகற்ற பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அம்மாவிற்கு Pachoemulsification என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர். இதன்படி கண்ணின் தெளிவான பகுதியான கோர்னியாவை 3.2மி.மீ அளவிற்கு வெட்டி, ஆடியை உயர் ஒலியதிர்வின் மூலம் இளகச் செய்து உறுஞ்சி வெளியிலெடுக்கிறார்கள். பின்னர் எளிதில் வளையக்கூடிய செயற்கையான ஆடி (flexible Intra-Ocular Lens), முன்பு ஏற்படுத்திய வெட்டின் வழியாக உரிய இடத்தில் புகுத்திவிடப்படுகிறது. (சிகிச்சைக்கு முன்னதாகவே சில சோதனைகள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு தேவையான ஆடி தேர்ந்தெடுக்கப்படுகிறது).



கண்ணில் ஏற்படுத்திய வெட்டு தானாகவே ஆறிவிடும், வலியும் குறைவு. சிகிச்சை முடிந்த அதே நாளே வீட்டிற்குச் சென்றுவிடலாம். வருங்காலத்தில் இச்சிகிச்சைச் செலவு குறைந்தால் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(ஆப்தமாலஜி - கண்மருத்துவம், ஆப்தமாலஜிஸ்ட் - கண் அறுவை சிகிச்சை நிபுணர்)

இதுதொடர்பாகக் காணுற்ற சில இணையதளங்களில் டெல்லியைச் சார்ந்த கண் மருத்துவர் ஒருவர் நிர்வகித்துவரும் இத்தளம் நல்ல பல தகவல்களைக் கொண்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கும் என்று நம்புகிறேன்.

Monday, April 05, 2004

குவியும் செல்வம்

வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் 2003ம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பிய தொகையின் அளவு $18.2 பில்லியன்கள் (!!) என்று 'ரிசர்வ்' வங்கியின் அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி இணையத்தில் ஒரு இன்றொரு செய்தி. அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30% அதிகமான தொகை இந்தியாவிற்கு வந்துள்ளது. இன்றைய மதிப்புப்படி ($1=ரூ.43.67) இந்திய ரூபாயில் இது 794 ஆயிரத்துச் சொச்சம் கோடிகள். (ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி.... அப்புறம்? பேசாமல் இல்லியன்களுக்கு மாறிவிட்டால் கொஞ்ச நாளைக்கு எண்ணிக்கைப் பிரச்சனையைத் தள்ளிப்போடலாம் என்று தோன்றுகிறது). இதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரித்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

அந்நியச் செலாவணி (அ.செ) என்றால் என்ன?
அதை யார், எப்படிப் பாதுகாத்துப் பராமரிக்கிறார்கள்?
அ.செ. எவ்வளவு இருக்க வேண்டும்?
எந்த சதவீதத்தில் ஒவ்வோர் ஆண்டும் அது வளர வேண்டும்?
அ.செ. கையிருப்பு அதிகரித்தாலோ, குறைந்தாலோ ஏற்படும் நன்மை, தீமைகள் யாவை?
..... முதலான பலவற்றை விளக்கும்வண்ணம் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர்கள் கட்டுரைகளை (தமிழில்) எழுதினால் தமிழ் மக்கள் படித்துச் சுபிட்சம் அடைவார்கள்.

Saturday, April 03, 2004

எல்லைகளற்ற செய்தியாளர்கள்

Reporters without Borders (எல்லைகளற்ற செய்தியாளர்கள் எனலாமா?) என்றவோர் அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எந்த அளவில் மதிப்பு-மரியாதை உள்ளது என்பதை அந்நாட்டிலுள்ள நிருபர்கள், ஆராய்ச்சியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோரிடம் கேள்விப் பட்டியல் ஒன்றின் மூலமாக கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வரிசைப்படுத்தியுள்ளது. பெரும்பாலான ஸ்கேன்டிநேவிய நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் நன்றாக இருப்பதாக 166 நாடுகளின் முடிவுகளைக் கொண்ட 2003ம் ஆண்டின் பட்டியல் தெரிவிக்கிறது. இந்தியா 128-வது இடத்தில் (2002 விட பின்தங்கியநிலையில்)! இவ்வமைப்பின் நோக்கம், எந்த அடிப்படையில் மேற்சொன்ன தரப்பட்டியல் வெளியிடப்படுகிறது போன்ற விவரங்கள் அவர்களது இணைய தளத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், சென்ற வருடம் பாக்தாத்திலுள்ள பாலஸ்தீன் விடுதியில் நிருபர் ஒருவர் கொல்லப்பட்டதன் புலன் விசாரணை அறிக்கை, 'ஆன்லைன்' அடக்குமுறை விருதுகள் போன்ற (பத்திரிக்கையாளர்களால் கவனிக்கப்படவேண்டிய) பல விஷயங்கள் இத்தளத்தில் காணக்கிடைக்கின்றன.

Thursday, April 01, 2004

வாழ்த்துகள்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான நாள். மாபெரும் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

சூரிய ஒளி விமானம்

வருடந்தோறும் ஜெனிவாவில் உலகளாவிய புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நடைபெறும். இதில் உலகெங்கிலுமுள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள் முதலானோர் பங்குகொண்டு தங்களது கண்டுபிடிப்புகளைக் காட்சிக்கு வைப்பர். இவ்வருடம் மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் (செல்ல முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!) பேசப்படும் முக்கியமானவற்றுள் ஒன்று Bertrand Piccard என்பவர் முன்வைக்கும் சூரிய ஒளி விமானம். வேறு எந்த எரிபொருளையும் உபயோகிக்காமல் சூரிய ஒளி மூலமாக மட்டுமே வெகுநேரம் தொடர்ந்து செல்லக்கூடிய விமானத்தை உருவாக்குவது மாபெரும் சவாலே.

1999-ல் உலகில் முதன்முறையாக பலூனிலேயே உலகை "நிற்காமல்" வலம்வந்த இவரது புதிய திட்டம் சூரிய ஒளியில் இயங்கக் கூடிய விமானத்தில் உலகை வலம்வருவது. சென்ற நவம்பரில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் - மீண்டும் பயன்படுத்தத்தக்க இயற்கை ஆற்றலைப் பற்றிப் பறைசாற்றுதல் மற்றும் மக்களிடையே இது குறித்த ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தகவல் தளமாகச் செயல்படுவது. விமானத்தின் வெள்ளோட்டம் 2006ல் எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, March 27, 2004

சிம்ப்யூட்டர்

"இந்தியாவிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட முதல் (கைக்)கணினி" அமிடா என்ற பெயருடன் நேற்று சந்தைக்கு வந்துள்ளது. மகிழ்ச்சியளிக்கும் செய்தி. மூன்று வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ள அமிடா, உலாவி, மின்னஞ்சல், எம்பி3 இசைப்பான் முதலான பல அம்சங்களைக் கொண்டுள்ளது. 'சைகைகளை உணர்ந்து செயல்படக்கூடிய உலகின் முதல் கணினி'யாம் இது. விலை ரூ.10,000-லிருந்து ஆரம்பிக்கிறது.

அமிடாவின் படத்தைப் பார்த்ததும் PDA-வாக இருக்குமோ என்றெண்ணினேன். கேள்வி-பதில் (faq) இல்லை என்கிறது. மேலும் விபரங்களுக்கு...