படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, April 27, 2004

கோடைவிடுமுறை விளையாட்டுகள்

ஒரு வழியாக முழுப்பரிட்சை எழுதி முடித்து "அப்பாடா முடிந்தது!" என்று பிள்ளைகள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் வரவேற்க ஆரம்பித்திருப்பர். தற்காலத்தில் பெரும்பாலும் கிரிக்கெட், தொலைக்காட்சி என்று விடுமுறையைக் களி(ழி)ப்பதாகத் தெரிகிறது. தொ.கா. வந்திராத அந்நாட்களில் ஊரில் நடந்த, பங்கேற்ற சில விளையாட்டுகளை நினைத்துப் பார்த்தால் இப்போதும் உள்ளம் பூரிக்கிறது. அவற்றில் ஒன்றிரண்டு:

கில்லி

குறைந்தது இரண்டு பேரைக் கொண்டு விளையாடப்படும் இதற்குத் தேவைப்பட்டவை ஒரு கில்லியும் (கிட்டத்தட்ட 10-15 செ.மீ உள்ள இரு முனைகளும் சுமாராக் கூராக்கப்பட்ட குண்டான ஒரு குச்சி), ஒரு தாண்டலும் (சுமார் ஒரு அடி நீளமுள்ள ஒரு முனை கூராக்கப்பட்ட குச்சி) மட்டுமே. பெரும்பாலும் இவை இரண்டும் சொந்தத் தயாரிப்புகளாகவே இருக்கும். கொய்யா மரக்குச்சிகளில் செய்தவை தரமானவை என்பது அந்தக்கால அனுபவம்!

விளையாடுவதற்கு எப்போதும் குறைந்தது நான்கைந்து பேர்கள் சேர்வோம். சேர்ந்தவர்கள் பிறகு இரண்டு அணியாகப் பிரிய வேண்டும். இதில் யார் முதலில் கில்லியை அடிப்பது? அதற்குமுண்டே ஒரு வழி. சுண்டுவதற்குக் காசு கிடைப்பதெல்லாம் கொஞ்சம் கடினமாதலால், தட்டையான சிறு கல்லொன்றை எடுத்து அதன் ஒருபக்கத்தை எச்சிலால் ஈரமாக்கி ஒரு அணித்தலைவன் மேலே வீச, மற்றவன் தனக்கு வேண்டிய பக்கத்தைச் சொல்வான். பூவா தலையாவில் வெல்லும் அணி கில்லியை அடிக்கத் துவங்கும், எதிரணி களத்தில் நிற்கும். (கிரிக்கெட்டில் உள்ள மட்டையாளன், பந்து வீச்சாளர்களைப் போல).

திறந்த வெளி நிலத்தின் ஒரு பகுதியில் நெடுவாக்கில் கோடொன்றைக் (கில்லியின் அளவை விடக் கொஞ்சம் பெரிதாக இருக்கும்) கீறி, கோட்டின் மையப்பகுதிக்கு இரண்டு பக்கங்களிலும் தாண்டலால் குத்தி சிறு ஓட்டைகளையும் போட்டுவிட்டால் ஆடுகளம் தயார். ஆட வருபவன், கீறப்பட்ட குழியின்மேல் கில்லியைக் குறுக்காக வைத்துத் தாண்டலின் கூர்புறத்தைக் குழியிலே கில்லியியைத் தொடுமாறு வைத்து, அதன் மேற்புறத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையால் தாண்டலின் கீழ்ப்பகுதியில் ஓங்கி அடிக்க, அடித்தவனின் திறமைக்கேற்ப புழுதி எழும்பி கில்லி பறந்து வீறென்று செல்லும். எதிர்முனையில் நிற்பவன் பறந்துவரும் கில்லியைப் பிடித்தால் அடித்தவன் 'அவுட்'. இல்லையென்றால், விழுந்த இடத்திலிருந்து கில்லியை அடித்த இடம் நோக்கி எதிரணியினர் எறிய வேண்டும். அது சரியாக அடித்த இடத்திலோ அல்லது ஆடுகளத்தின் ஒரு தாண்டல் சுற்றளவுக்குள்ளோ விழுந்தாலும் அடித்தவன் 'அவுட்'.

திருப்பி எறியும்போது கில்லி வந்து குழிக்கு அருகில் விழாமல் போனால், அது தற்போது விழுந்த இடத்திலிருந்து அடிப்பவனால் முன்னோக்கி அடித்துச் செல்லப்படும். மூன்று முறைக்குள் எவ்வளவு தூரம் அடித்துக் கொண்டு செல்கிறானோ அந்த அளவிற்கு புள்ளிகளைச் சேகரிக்கலாம். தரையில் விழுந்துகிடக்கும் கில்லியின் கூரிய பகுதியைத் தாண்டலில் அடித்தால் அது அந்தரத்தில் மேலெழும், அப்போது அதைத் தரையில் விடாமல் எத்தனை முறை திரும்ப அடிக்கிறானோ ('டபுள்', 'ட்ரிபிள்',....) அந்த அளவுக்கு அளக்கும் அளவுகோலானது மாறுபடும். ஒரு அடியிலேயே விட்டுவிட்டால் தாண்டலில் அளக்க வேண்டும். 'டபுளு'க்கு கில்லி; 'ட்ரிபிளு'க்கு அரை கில்லி, கால் கில்லி, பின்னூசி ('பின்'னே ஊசிதானே அப்புறம் என்ன பின்னூசி!)..... கடுகு, மண் என்று பல அளவுகோல்கள்! கால்கில்லிக்குப் போவதே பெரும்பாடாகிவிடும். வழக்கம்போல அதிக புள்ளிகளை எடுக்கும் அணி வென்று ஆட்டம் போடும்.

விளையாட யாரும் கிடைக்காத சமயங்களில் 'டபுள்', 'ட்ரிபிள்' அடித்துப் பழகி பயிற்சி வேறு! இதை ஆபத்தான விளையாட்டு என்று சொல்வார்கள். ஆனால், நல்லவேளையாக எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொண்டதோ, நேரில் கண்டதோ இல்லை. ஒருவேளை, நாங்கள் விளையாடியது (என்ன காரணத்தாலோ) ஆட்கள் நடமாடும் பகுதியைவிட்டுத் தள்ளி இருந்தது காரணமாயிருந்திருக்கலாம்.

நுங்கு வண்டி

ஊரிலிருக்கும் நூற்பாலைக்கு முன்புறமுள்ள பெரிய புளிய மரங்களை ஒட்டியுள்ள பகுதிகளை எங்கிருந்தோ வரும் பல்வேறு வியாபாரிகள் அவ்வப்போது இலவசமாக ஆக்கிரமித்து கடைபரப்பிவிடுவார்கள். கோடைகாலத்தில் அப்படி வரும் கடையொன்றிற்கு முக்கியமாகக் கொண்டுவரப்படும் பொருட்களுள் நுங்கும் ஒன்று. மரத்திலிருந்து வெட்டப்பட்ட குலைகளை அப்படியே எடுத்து வந்து குவித்திருப்பார்கள். பதமான அரிவாளால் குலையிலிருந்து அவற்றை வெட்டிப் பிரித்தெடுத்து மட்டையை அழகாக மேல்புறத்தில் சீவிக் கொடுப்பார்கள். சீவப்பட்ட மட்டையோடு நுங்கை வாங்குவோரும் உண்டு, முழுதாகச் சீவிய மட்டையிலிருந்து எடுத்த நுங்கைப் பச்சையான பெரிய இலைகளில் சுருட்டி (பிளாஸ்டிக் பைகள் எல்லாம் பிற்காலத்தில் வந்தவை) வாங்கிச் செல்வோரும் உண்டு.

சீவப்பட்ட மட்டையிலிருந்து நுங்கை நோண்டி, அதில் வரும் நீரை உறிஞ்சிக் கொண்டே தின்னக் கொஞ்சம் பழகவேண்டும். ஃ போல இருக்கும் மூன்று நுங்குகளும் நோண்டி எடுக்கப்பட்டபின் அழகான குழிகளுடன் கூடிய மட்டையொன்று மிஞ்சும். இவ்வாறு கிடைக்கும் இரண்டு மட்டைகளை, அவற்றின் ஃ பகுதிக்கு நடுவில் கெட்டியான சிறு குச்சியொன்றைச் செருகி இணைத்தால் உருண்டோடும் வண்டியொன்று தயார்! அதை உருட்ட நீளமாக கவட்டைக் குச்சி (ஒரு முனை 'Y' போல இருக்கும்) எங்கிருந்தாவது கிடைக்கும். ஒரு சில நாட்களுக்கு இந்த வண்டி நன்றாக ஓடும். அப்புறம் என்ன, சலிக்கும் வரை மீண்டும் மீண்டும் புதிய வண்டிகளைச் செய்து ஓட்டவேண்டியதுதான்.

இன்னும் பம்பரம் விடுதல், 'டயர்' ஓட்டுதல், கோலி குண்டு விளையாடுதல், காத்தாடி சுற்றுதல், மரக்குரங்கு, நொண்டி, 'ஐஸ் நம்பர்', துணி பந்தில் கிரிக்கெட் என்று எத்தனையோ விளையாட்டுகள்! இப்போதைய சிறுவர்கள் இவற்றையெல்லாம் இழக்கிறார்களா என்று தெரியவில்லை. இன்றைக்குக் கிராமப்புறங்களின் வீதிகளில் விளையாடும் சிறுவர்களைப் பார்ப்பது சற்றே அரிதாகிவிட்டது. நகர்ப்புறங்களிலோ கணினி வகுப்புகள், அடுத்த வருடப் பாடங்களுக்கான 'ட்யூஷன்' (இதைப்போலக் கொடுமை வேறெங்கும் உண்டோ), நீச்சல், நாட்டியம், நுண்கலைகள், கராத்தே, இத்யாதிகள் என்று மாணவ மாணவியரின் வாழ்க்கை வேறு ஒரு திசையில் பயணித்துக்கொண்டுள்ளது.

No comments: