படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, July 22, 2004

மேற்குக் கரைச் சுவரும் ஐ.நா. தீர்மானமும்

ஐ.நா.சபை, பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரையில் இஸ்ரேல் கட்டிக்கொண்டிருக்கும் தடுப்புச் சுவரைக் கண்டித்து நேற்றுமுன்தினம் (20.07.2004) ஒரு தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. 150 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 6 நாடுகள் எதிர்த்தும், 10 நாடுகள் வாக்கேதும் அளிக்காமல் ஒதுங்கிவிட்டன. கடந்த காலங்களில் இதுபோன்ற எத்தனையோ தீர்மானங்களை மதிக்காமல் ஒதுக்கித் தள்ளிய இஸ்ரேலுக்கு இத்தீர்மானத்தால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை (காப்பாற்றுவதற்கு இருக்கவே இருக்கிறான் பெரியண்ணன்!). கட்டுமான வேலைகள் நடந்துகொண்டுதான் உள்ளன; தொடரத்தான் போகிறது. சபையில் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும், அதற்கு கட்டுப்படுத்தும் அதிகாரம் ஏதும் இல்லை. ஆனால் நிறைவேறிய தீர்மானம், அதிகாரம் பொருந்திய ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஒருக்கால் இத்தீர்மானம் அங்கு கொண்டுவரப்படுமாயின், அமெரிக்கா 'வீட்டோ' எனப்படும் சிறப்பதிகாரத்தால் அதை நிராகரித்து இஸ்ரேலை வழக்கம்போலக் காப்பாற்றிவிடும்.

ஐ.நா. சபை கேட்டுக் கொண்டதற்கினங்க, கடந்த 9 ஜூலை 2004 அன்று பன்னாட்டு நீதிமன்றம் இஸ்ரேல் கட்டிக் கொண்டிருக்கும் தடுப்புச் சுவர் பன்னாட்டு விதிகளுக்குப் புறம்பானது என்று ஏகமனதாகத் தீர்ப்புக் கூறியிருந்தது (அங்கும் அமெரிக்கா மட்டும் தன் எதிர்ப்பைக் காட்டியிருந்தது). அத்தீர்ப்பிற்குப் பிறகு வரையப்பட்டதுதான் நேற்றைய தீர்மானம்.

சுவற்றைப் பற்றி சில வரிகள். மேற்குக் கரையில் 700 கி.மீ. தொலைவிற்கு இச்சுவர் பாலஸ்தீனப் பகுதிக்குள் எழுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. தன் நாட்டு மக்களை தற்கொலைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்கே இச்சுவர் கட்டப்படுவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. பாலஸ்தீனர்களோ, இது தங்கள் நிலத்தை அபகரிக்கும் மற்றும் புதிய எல்லையை வரையறுக்கும் செயல் என்று அஞ்சுகின்றனர். பி.பி.சி. இணைய தளத்தில் காணக்கிடைத்த சில படங்களை இங்கே பார்வைக்கு வைக்கப்படுகிறது.



பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லிக் கொண்டு கட்டப்படும் இச்சுவரை இஸ்ரேல் ஏன் தன் எல்லைக்குள் கட்டாமல் பாலஸ்தீனப் பகுதிக்குள் வந்து கட்டுகிறது என்ற கேள்விக்கு மூன்றாவது படத்தை உற்றுப் பார்த்தபோது பதில் கிடைத்தது, அங்கும் சில 'குடியிருப்புகளை' ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற அக்கிரமம் எங்கும் நடைபெறாது!

பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்

ஐ.நா. சபை தீர்மானம் GA/10248

இதுதொடர்பான மற்ற சில எண்ணங்கள்:

தற்கொலைத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் அங்கு நடக்கும் இச்செயல்களின் வேர் என்ன? இஸ்ரேல் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும்தானே? தங்கள் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்திப் பேசும் இவர்கள் பாலஸ்தீனியர்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கிறார்களா, இல்லை இனிமேல் ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம், செய்த இடங்களிலிருந்து வெளியேறுகிறோம் என்று சொல்கிறார்களா? அந்த எண்ணமே அங்கிருப்பதாகத் தெரியவில்லை. உலகம் முழுதும் உள்ள தங்கள் இன மக்களை வந்து இங்கு குடியேறச் சொல்லிக்கொண்டுள்ளனர், அப்படிச் சிலர் வந்து கொண்டுமுள்ளனர். அவர்களுக்குத்தான் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்ட/கொண்டிருக்கும் இடம் இருக்கிறதே?!

பாலஸ்தீனர்கள் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு அறிவுப் பூர்வமாக செயல்படுவது குறைவென்றே தோன்றுகிறது. அவர்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, மலிந்திருக்கும் ஊழல் போன்றவை அவர்களை மேலும் பலவீனமடையச் செய்கிறது. அரபு நாடுகள் வெற்றுக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை.

தங்கள் அடக்குமுறைகளுக்கும், தாக்குதல்களுக்கும் நியாயம் கற்பிக்க பல அரசாங்கங்களுக்கு 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' மிகவும் வசதியான ஒன்றாகிவிட்டது. தீவிரவாதிகளைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு எத்தனை வீடுகள் பாலஸ்தீனத்தில் தரைமட்டமாக்கப்பட்டுக் கொண்டுள்ளன! பெருங்கொடுமையிது.

யூத சமுதாயத்தின் பலம் (பணம், அரசியல், அதிகாரம்) அமெரிக்காவில் அதிகம் என்று படுகிறது. அரசியல் சுயநலங்களுக்கு வேண்டி அனைத்து அமெரிக்க அரசாங்கங்களும் என்றும் இஸ்ரேலை ஒருதலைப்பட்சமாக ஆதரித்தே வருகின்றன. அவர்கள் நினைத்திருந்தால், நினைத்தால் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனையை எப்பொழுது வேண்டுமானாலும் முடித்து வைக்கலாம், ஆனால் அவ்வாறு நினைக்கமாட்டார்கள் என்றே அஞ்சவேண்டியுள்ளது.

ஐ.நா பாதுகாப்புக் குழுவில் உள்ள 'வீட்டோ' அதிகாரம் அதன் உண்மையான நோக்கத்தை (என்னவாயிருப்பினும்) தக்கவைத்துக்கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

No comments: