நினைவோடை

படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, March 21, 2010

ஆல் இண்டியா ரேடியோ-1

இன்றுள்ளதைப் போல் நினைத்தவுடன் ஒரு பொருள் கிடைத்தோ, வாங்கியோவிடக்கூடிய காலமல்ல அது. காலணி, மிதிவண்டி, வானொலிப்பெட்டி என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அதனாலேயோ என்னவோ ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பும், சொல்லக்கூடிய வாழ்நாள் காலமும் இருந்தது. விளைவாக அப்பொருளும், அது சார்ந்த நிகழ்வுகளும் ஏதோவொரு வகையில் நினைவுகளாகத் தொடர்ந்து கொண்டுள்ளன.

80களின் துவக்கத்தில் வீட்டிற்கு முதல் வானொலி அண்ணன் வாயிலாக வந்தது. அதற்கு முன்பு ஒன்று இருந்ததாவென்று கேட்டுக் கொண்டதில்லை, எனக்கு அதுதான் முதலாகத் தெரிந்தது. அளவான வடிவத்திலிருந்த ஃபிலிப்ஸ் நிறுவனத் தயாரிப்பு. எப்பொருள்களுக்கும் அதன் ஆரம்ப காலத்தில் கிடைக்கும் அளவுக்கு மீறிய கவனிப்பு இதற்கும் கிடைத்தது. வேகமாகத் திருப்பாதே, மெதுவாக 'பேன்டை' மாற்று, நிறுத்தியதும் மின்சாரத்தைத் துண்டி......என இன்று நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை அதட்டல் அறிவுரைகளை அன்றைக்கு நமக்கும் கிடைத்தது.

நான் பிறப்பதற்கு முன்பு ஆகாசவானி என்று சொல்லிக்கொண்டிருந்தார்களாம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக அது ஆல் இண்டியா ரேடியோவாகிவிட்டது. கேட்டதில் நிறைய கோவை வானொலிதான். கரகரவில்லாமல் நன்றாகக் கேட்டதன் காரணமாயிருந்திருக்காலாம். ஆல் இண்டியா ரேடியோ, கோயமுத்தூர் வானொலி நிலையம், 300.3m, 999khz அலைவரிசையில் இன்றைய நிகழ்ச்சிகளைக் கேட்கலாம் என்று அதிகாலையில் ஒரு குரலுடன் நாள் துவங்கும்.

குறளோ, பக்தி சிந்தனையொன்றோ சொல்வார்கள். அதற்குப் பிறகு பாமாலை வரும். இதைப் பலகாலம் பாலாமை எனச் சொல்லிக்கொண்டு திரிந்தேன். இரண்டு பாட்டுகள் இந்துக்களுக்கு, ஒன்று முஸ்லிம்களுக்கும், ஒன்று கிறிஸ்தவர்களுக்குமென நன்றாகவே இட ஒதுக்கீட்டைச் செய்திருந்தனர். 6.30க்கு விவசாயிகளுக்கான சில தகவல்கள் 10-15 நிமிடங்களுக்கு வரும். தொடர்ந்து மாநிலச் செய்திகளுக்கு சென்னை அஞ்சல் என்று சொல்லிவிடுவார்கள்.

நிகழ்ச்சி நிரல் சொல்லிவிட்டு 7.15 வரை நிலைய வித்துவான்களை வைத்து ஏதேனும் கச்சேரி செய்வார்கள். பாடிக் கொண்டிருக்கும் போதே 'ஆகாசவானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி' அதற்கப்புறம் செய்திகளைவிட அக்குரலே 10 நிமிடங்களுக்கு கேட்போரைக் கட்டிப் போட்டுவிடும். ராஜாராமும் நன்றாகப் படிப்பார்.

செய்தி முடிந்ததும், வட்ட முகம், நீண்ட கழுத்து, பூப்போட்ட சட்டையுடன் காணாமல் போனவரைக் கண்டுபிடித்துத் தெரிந்தால் வேறெங்கோ சொல்லிவிடச் சொல்வார்கள். அடுத்த அரைமணி நேரத்திற்கு இளையபாரதம் போன்று ஒரு நிகழ்ச்சி. இச்சமயத்தில் பெரும்பாலான நேரம் திருச்சி நிலையத்திற்குத் திரும்பியிருப்போம், நாளின் முதல் திரைப்பாடல் அங்கு ஒலிக்கும். அரிதான சமயங்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவை.

8 மணி முதல் 8.20 வரை இந்தி, ஆங்கில செய்திகளை டெல்லியிலிருந்து வாசிக்கச் செய்து வானொலிக்கு ஓய்வு கொடுப்பார்கள். மீண்டும் கோவை நிலையத்தில் திரைப்பாடல்களுடன் குதூகலமாக 40 நிமிடங்கள் செல்லும். பிற்காலத்தில் வந்த விளம்பரங்கள் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தன. காலை முடிந்தது.

Friday, February 19, 2010

ரயில்வே பராமரிப்புப் பணி தகவலறிவிப்பு

அஞ்சல் பெட்டியில் ரயில்வேயிலிருந்து வந்த தகவல் அறிவிப்பு தாளொன்று கிடந்தது.

மதிப்பிற்குரிய பகுதிவாழ் குடிமக்களே,

வரும் 28ந் தேதி முதல் மார்ச் 19 வரை தண்டவாளப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்கிறது. இதன்போது கம்பிவடங்கள் புதிதாக இடப்படும்.

ரயில் போக்குவரத்துக் காரணங்களையொட்டி இப்பணிகளை இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும். திட்டமிடப்பட்டுள்ள இவ்விரவுப் பணியின் எப்பகுதிகள் அதிக ஒலி,இரைச்சல் கொண்டதாயிருக்கும் என்பதைப் பின்பக்கத்திலுள்ள அட்டவணையில் காணமுடியும். ஏதேனும் எதிர்பாராத பணியைக் குறைந்த அவகாசத்தில் செய்ய வேண்டி நேரிட்டால் மேற்குறிப்பிட்ட காலத்திட்டத்தில் சிறிய மாறுதல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்க.

இப்பணிகளின் போது ஏற்படும் சத்தத்தை முடிந்த அளவு குறைக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதனால் தங்களுக்கு ஏற்படும் இடையூறுக்கு வருந்துகிறோம்.

மேற்கொண்டு எழும் கேள்விகளுக்கு பணியிடக் கட்டுமானத்தலைவரைப் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இங்ஙனம்,
கம்பிவடப் பிரிவுத்தலைவர் மற்றும்
பணியிட கம்பிவட அணித்தலைவர்

Friday, January 01, 2010

சுவிஸ் நாட்டு நடப்பு-குழந்தைக் கடத்தல் 'அலர்ட்'

குழந்தைகள் கடத்தப்பட்டால் நாடு முழுவதும் அறியப்படும் வகையிலான 'அலர்ட்' முறை இன்றிலிருந்து (01.01.2010) சுவிஸில் நடைமுறைக்கு வருகிறது.

இம்முறைப்படி, கடத்தல் பற்றிய அறிக்கையைக் கிடைக்கப் பெற்றவுடன் மாநில காவல்துறையினர் தலைநகர் பெர்னிலுள்ள மத்திய காவல் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவர். அங்கிருந்து செய்தியானது கார் வானொலி அறிவிப்புகள், நெடுஞ்சாலை மின்தட்டிகள், ரயில் மற்றும் விமான நிலைய ஒலிபெருக்கி போன்றவற்றில் பரப்பப்படும்.

கடத்தல் நிகழ்ந்த ஆரம்ப மணிகளில் கடத்தியோர் நகர்விலே இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாலும், இதுபோன்ற அறிவிப்புகளால் பொதுமக்கள் யாரேனும் அவர்களைப் பார்த்து தகவல் சொல்லும் வாய்ப்பிருப்பதாலும் இந்த முறை பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே சில ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள இம்முறையானது அங்கு நல்ல பயனளிப்பதால் இங்கும், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான கடத்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, நடைமுறைப்படுத்தப் பெற வேண்டி அழுத்தங்கள் எழுந்தன.

Monday, December 21, 2009

பிரச்சனைகள் பலவிதம்

இல்லாதவனுக்குத் தேடல் பிரச்சனை, இருப்பவனுக்குக் காப்பது பிரச்சனை. ஓன்று பிரச்சனைகளை தேடிக் கொள்கிறோம் இல்லை அவை வந்து சேர்கின்றன.

சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்ட நாடு என்பதை அறிவோம். அதன் எல்லைகளின் திக்குக்கேற்ப மொழிகளும் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு மற்றும் மையப்பகுதிகளில் ஜெர்மனும், மேற்கில் ஃபிரெஞ்சும், தெற்கில் இத்தாலியனும், கிழக்கில் வெகு சொற்ப அளவில் ரொமான்ட்சும் பேச்சு வழக்கிலுள்ளன. பெரும்பான்மை மொழியாக இருப்பது ஜெர்மன். ஜெர்மனை டாயிட்ச் (Deutsch) என்றே சொல்வார்கள். டாயிட்சும், டச்சும் (Dutch) வெவ்வேறு மொழிகள். முன்னது ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா முதலான நாடுகளிலும், பின்னது ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் வழக்கிலுள்ளன.

சுவிஸிலும் வட்டார வழக்குகள் உண்டு (வட்டார வழக்கில்லா மொழி இருக்குமாவென்று தெரியவில்லை). ஜூரிக் மாநிலத்தில் (மாநிலம் இங்கு கான்டோன் என்று சொல்லப்படுகிறது) பேசப்படுவது ஜூரி டாயிட்ச் என்றும், தலைநகர் உள்ள பெர்ன் (Bern) மாநிலத்தில் வழங்குவது பெர்ன் டாயிட்ச், இத்யாதி என வட்டாரத்திற்கு ஏற்றவாறு பேசப்படுகிறது. ஒன்றுக்கொன்று பலுக்கலில் வேறுபடுவதால் சில சமயங்களில் ஓரு வட்டாரத்தினரது சில சொற்களும், சொலவடைகளும் மற்றவருக்கு எளிதில் விளங்கிவிடுவதில்லை. இந்நிலையில் வேற்று நாட்டவரின் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஜெர்மன் நாட்டவரும் இதில் விதிவிலக்கல்ல. துவக்கத்தில் சற்றே தடுமாறினாலும் காலப் போக்கில் சமாளித்துக் கொள்கின்றனர். நல்ல வாழ்க்கைத் தரம், பணி, குறைந்த வரி (அவர்கள் நாட்டைக் காட்டிலும்) முதலான காரணங்களுக்காக ஜெர்மனியிலிருந்து சுவிஸிற்கு இடம் பெயர்பவர்கள் நிறைய. மருத்துவம், வங்கி, போக்குவரத்து, ஊடகம், மார்கெட்டிங், விற்பனை, பொறியியல் என சகல துறையைச் சார்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். அயல்நாடுகளிலிருந்து வந்து சுவிஸில் குடியேறுபவர்களில் ஜெர்மானியர் அதிக அளவில் இருப்பதாக ஓரு கணக்கு.

இவர்களின் மொழி, டாயிட்சாக இருப்பினும் (அதை உயர் டாயிட்ச் என்பார்கள்), உள்ளூர் மொழியிலிருந்து தெளிவாக வேறுபடுவது கண்கூடு. மொழியைப் பயன்படுத்துவதில் உள்ள வேறுபாட்டாலோ அல்லது நிறைய வேலைகளை வந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றனர் என்ற ஓரு பொதுப்புத்தியாலோ ஜெர்மானியர்கள் மேல் சிவிஸில் ஓரு சாராரிடம் ஓரு வகையான வெறுப்புணர்வுண்டு, அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளப்படுவதில்லையாயினும். முன்பு பழைய யுகோஸ்லாவியர்களின்பால் இவ்வகையான வெறுப்பிருந்ததாகச் சொல்வார்கள்.

சமீப காலத்தில் இவ்வெறுப்பு சிலருக்கு நேரடியாக மிரட்டல் கடிதங்கள் வந்து சேருமளவிற்கு வளர்ந்துவிட்டதாகச் செய்தி. அசம்பாவிதங்கள் ஓன்றுமில்லையென்றாலும் சிலர் அஞ்சி வாழவேண்டியுள்ளது. இப்பிரச்சனையால் நாட்டிற்குத் திரும்பியோரும் உளராம்.

பிரச்சனைகள் இல்லாத மனிதனோ, இடமோ உண்டா?

Sunday, April 19, 2009

நல்லது செய்தல் ஆற்றீராயினும்...

தமிழகத்து அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடத்திக் கொண்டிருக்கும் கூத்துகள் இலங்கையில் நிகழும் படுகொலைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது.

சுயலாபத்தையே முதன்மையாகக் கருதி போட்டிக் குழுக்களை அமைத்துக்கொண்டு அடுத்தவரை ஏசியும் தூற்றியுமே இனப்பற்றைக் காப்பதாகச் சொல்லி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கோ நூற்றுக்கணக்கான உயிர்கள் தினமும் பலியாகின்றன. இங்கு வெற்றுக் கூச்சல்களுக்குக் குறைவில்லை; அதனால் இதுவரை சாதித்ததும் ஒன்றும் இல்லை. போதாக்குறைக்குத் தேர்தல் வேறு வந்து இனப்பற்றை இன்னும் வளர்த்துவிட்டுவிட்டது.

கொடுமைகள் என்று நிற்கும்?

Sunday, March 15, 2009

நகர பரிபாலனம்

சில வாரங்களுக்கு முன்பு ஜூரிக் நகர நிர்வாகத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதில், வரிசைமுறையேதுமின்றி ஓர் அளவீடு/ஆய்வுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரின் சில ஆயிரம் குடியிருப்போர்களில் நானும் ஒருவனென்றும், வரும் நாட்களில் ஓர் அமைப்பு/நிறுவனமொன்றின் வாயிலாக கேட்கப்படும் வினாத்தொகுப்பிற்கு முடிந்தால் விடையளித்து உதவும்படி குறிப்பிட்டிருந்தனர். வெள்ளி (13.03.09) மாலை பெண்மணியொருவர் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொண்டு பல்வேறு வினாக்களைக் கேட்டிருந்தார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்த அக்கேள்வியாடலில் நினைவிலுள்ள சில:

-நகரில் நீங்கள் முக்கியமாக விரும்புவதை எவற்றை?
-நகரில் நீங்கள் முக்கியமாக விரும்பாதவை எவை?

-நகரின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது?
-இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அதன் நிலைமை எவ்வாறு இருக்கும்?
-அதையொட்டி உங்களது பொருளாதார நிலையின் தாக்கத்தின் மதிப்பீடு என்ன?
-நகரானது போதிய அளவு வேலைவாய்ப்புகளை வழங்குகிறதா?
-கல்வி மற்றும் மேற்படிப்பிற்கான வசதிகள் எவ்விதத்தில் உள்ளன?

-நகர நிர்வாகம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?
-உங்கள் பகுதி நகர மன்ற உறுப்பினர்கள் உங்களைச் சரியாகப் பிரதிநிதிப்படுத்துகிறார்களா?

-நகரத் தூய்மை பற்றிய மதிப்பீடு?
-துப்புரவு சரியாக நடக்கிறதாகக் கருதுகிறீர்களா?

-நகரில் போதிய பசுமை உள்ளதாகக் கருதுகிறீர்களா?

-நகரின் பொதுப் போக்குவரத்து வசதிகள் குறித்த மதிப்பீடு என்ன?
-பேருந்து, ட்ராம் போன்றவைகள் இடநெரிசலைக் கொண்டுள்ளனவா?
-நீங்கள் அடைய வேண்டிய இடத்தை ஒரே வண்டியில் சென்றடைய முடிகின்றதா/இல்லை இடையில் எத்தனை மாற்றல்கள் தேவைப்படுகின்றன?
-போக்குவரத்து நிறுத்தங்கள் உங்களது இடத்தின் அருகிலேயே உள்ளனவா?
-பெயர்ப்பலகைகள் சரியான தகவல்களைக் கொண்டுள்ளனவா?
-போக்குவரத்து சரியான கால அட்டவணைப்படி இயங்குகின்றதா?

-பாதசாரிகள் இலகுவாகச் செல்ல முடிகிறதா?
-மிதிவண்டி ஓட்டிகளால் ஏதேனும் இடைஞ்சல் ஏற்படுகிறதா?
-சாலையைக் கடக்கும்போது ஏதேனும் பயம் இருக்கிறதா?

-எத்தனை நாட்களுக்கொருமுறை மிதிவண்டியை பயன்படுத்துகிறீர்கள்?
-மிதிவண்டிகள் செல்வதற்குப் போதுமான சிறப்பு வழித்தடங்கள் உள்ளனவா/போதுமா?
-மிதிவண்டிகள் நிறுத்தப் போதுமான இடங்கள் உள்ளனவா?

-தனியார் போக்குவரத்து (கார் முதலானவை) நிலை மற்றும் வசதிகள் குறித்தான மதிப்பீடு என்ன?
-வாகன நிறுத்த வசதிகள் போதுமான அளவு உள்ளதா?
-வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளைச் சரியாக மதிக்கிறார்களா?

-குழந்தைகளுக்கான வசதிகளை எங்ஙனம் மதிப்பீடு செய்வீர்கள்?
-பள்ளி, நர்சரி போன்றவைகளைக் குறித்தான மதிப்பீடு என்ன?
-குழந்தைகள் விளையாட போதுமான இடங்கள், பூங்காக்கள் உள்ளனவா?
-நகரின் விளையாட்டு வசதிகள், நீச்சல்குளங்கள் குறித்தான மதிப்பீடு என்ன?

-நீங்கள் வசிக்கும் இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கான வசதிகள் பற்றிய மதிப்பீடு?

-நகரின் கலை, கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய மதிப்பீடு?
-நகரில் சுற்றிப் பார்க்கப் போதுமான இடங்கள் உள்ளனவா?

-இரவில் தனியாக நடந்து செல்லக் கூடிய நிலையைப் பற்றிய மதிப்பீடு
-இரவில் தனியாகச் செல்லும் போது நகரின் ஏதேனும் இடங்களைத் தவிர்க்கின்றீர்களா?
-அவ்வாறாயின், எத்தகைய இடங்களைத் தவிர்க்கிறீர்கள்?
-கடந்த சில வருடங்களில் நீங்கள் ஏதேனும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறீர்களா?
-காவல்துறை குறித்தான கருத்தென்ன?

-உங்கள் வாழிடம் வசதியாக உள்ளதா?
-எவ்வளவு காலமாக அவ்விடத்திலேயே வசிக்கிறீர்கள்?
-வாழிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மனதிற்கு மகிழ்வழிக்கிறதா?
-வாழிடத்தைச் சுற்றியுள்ள ஒலியின் அளவு உங்களைப் பாதிக்கிறதா?
-வாடகை குறித்த மதிப்பீடு யாது?

-சூழியல் சீர்கேட்டைக் குறைக்க பின்வருவன போன்ற நடவடிக்கைகளை வரவேற்பீர்களா இல்லை எதிர்ப்பீர்களா:
-கூடுதல் பெட்ரோல் கட்டணம்
-கூடுதல் வாகன நிறுத்தக் கட்டணம்
-நிலத்தடிப் போக்குவரத்து விரிவு
...
...
-இதுகுறித்து உங்களது பரிந்துரைகள் யாவை?

-இதுபோன்ற அளவீடு செய்யும் நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்குமெனக் கருதுகிறீர்களா?


இங்ஙனம் மக்களுக்காக இயங்கும் நிர்வாகங்கள் அவ்வப்போது தங்கள் செயல்பாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும் ஆரோக்கியப் போக்கு மிகவும் வரவேற்பிற்குரியவை.

Sunday, January 28, 2007

திருப்பூரிலிருந்து நாகைக்கு?

நொய்யலின் தடுப்பணையொன்றில் பல காலம் சாயப்பட்டறைக் கழிவுநீர் நிரம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர்வளம் பாழ்பட்டது நாடறிந்த அவலம். உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி சாயப்பட்டறைகள் கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியில் விடவேண்டும். அவ்வாறு செய்யமுடியாத பட்டறைகள் சில மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு வேறொரு 'தீர்வை'க் கண்டுபிடித்துள்ளார்கள். சாயக் கழிவு நீரை (சுத்திகரித்து?) கடலில் கலக்கப் போகிறார்களாம்.

ஊரை கெடுத்தாயிற்று; உலகத்தைக் கெடுக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். இத்திட்டத்திற்குத் தேவைப்படும்
ரூ.700 கோடியில் நாற்பது விழுக்காட்டை அரசே (மத்திய, மாநில) ஏற்றுக் கொள்ளுமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு அப்பகுதியிலேயே நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க முடியாதா என்பது ஆச்சரியமாக உள்ளது.

ஒருவேளை இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒப்புக்குச் சப்பானியாக சில நாட்களுக்குச் சுத்திகரிப்பு என்று போக்குக் காட்டிவிட்டு நிச்சயமாகக் கழிவுநீரை அப்படியே அனுப்பிவிடுவார்கள். அவ்வாறு செலுத்தப்படும் நீரின் அளவும் பலமடங்கு அதிகரிக்கும். கழிவுநீர்க் கலப்பால் கடல் வளம் சீரழியத்துவங்கும் போது உள் மற்றும் பன்னாட்டு அளவில் எதிர்ப்புக்குரல்கள் வரும் (அதற்கு முன்னமேயே கூட வரலாம்) சமயத்தில் வேறொரு தீர்வை நோக்கி ஓடுவார்கள்.

இன்றைய 'தொழில் நலனிற்காக' என்றும் இருக்க வேண்டிய இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே உள்ளது.