படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, March 21, 2010

ஆல் இண்டியா ரேடியோ-1

இன்றுள்ளதைப் போல் நினைத்தவுடன் ஒரு பொருள் கிடைத்தோ, வாங்கியோவிடக்கூடிய காலமல்ல அது. காலணி, மிதிவண்டி, வானொலிப்பெட்டி என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அதனாலேயோ என்னவோ ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பும், சொல்லக்கூடிய வாழ்நாள் காலமும் இருந்தது. விளைவாக அப்பொருளும், அது சார்ந்த நிகழ்வுகளும் ஏதோவொரு வகையில் நினைவுகளாகத் தொடர்ந்து கொண்டுள்ளன.

80களின் துவக்கத்தில் வீட்டிற்கு முதல் வானொலி அண்ணன் வாயிலாக வந்தது. அதற்கு முன்பு ஒன்று இருந்ததாவென்று கேட்டுக் கொண்டதில்லை, எனக்கு அதுதான் முதலாகத் தெரிந்தது. அளவான வடிவத்திலிருந்த ஃபிலிப்ஸ் நிறுவனத் தயாரிப்பு. எப்பொருள்களுக்கும் அதன் ஆரம்ப காலத்தில் கிடைக்கும் அளவுக்கு மீறிய கவனிப்பு இதற்கும் கிடைத்தது. வேகமாகத் திருப்பாதே, மெதுவாக 'பேன்டை' மாற்று, நிறுத்தியதும் மின்சாரத்தைத் துண்டி......என இன்று நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை அதட்டல் அறிவுரைகளை அன்றைக்கு நமக்கும் கிடைத்தது.

நான் பிறப்பதற்கு முன்பு ஆகாசவானி என்று சொல்லிக்கொண்டிருந்தார்களாம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக அது ஆல் இண்டியா ரேடியோவாகிவிட்டது. கேட்டதில் நிறைய கோவை வானொலிதான். கரகரவில்லாமல் நன்றாகக் கேட்டதன் காரணமாயிருந்திருக்காலாம். ஆல் இண்டியா ரேடியோ, கோயமுத்தூர் வானொலி நிலையம், 300.3m, 999khz அலைவரிசையில் இன்றைய நிகழ்ச்சிகளைக் கேட்கலாம் என்று அதிகாலையில் ஒரு குரலுடன் நாள் துவங்கும்.

குறளோ, பக்தி சிந்தனையொன்றோ சொல்வார்கள். அதற்குப் பிறகு பாமாலை வரும். இதைப் பலகாலம் பாலாமை எனச் சொல்லிக்கொண்டு திரிந்தேன். இரண்டு பாட்டுகள் இந்துக்களுக்கு, ஒன்று முஸ்லிம்களுக்கும், ஒன்று கிறிஸ்தவர்களுக்குமென நன்றாகவே இட ஒதுக்கீட்டைச் செய்திருந்தனர். 6.30க்கு விவசாயிகளுக்கான சில தகவல்கள் 10-15 நிமிடங்களுக்கு வரும். தொடர்ந்து மாநிலச் செய்திகளுக்கு சென்னை அஞ்சல் என்று சொல்லிவிடுவார்கள்.

நிகழ்ச்சி நிரல் சொல்லிவிட்டு 7.15 வரை நிலைய வித்துவான்களை வைத்து ஏதேனும் கச்சேரி செய்வார்கள். பாடிக் கொண்டிருக்கும் போதே 'ஆகாசவானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி' அதற்கப்புறம் செய்திகளைவிட அக்குரலே 10 நிமிடங்களுக்கு கேட்போரைக் கட்டிப் போட்டுவிடும். ராஜாராமும் நன்றாகப் படிப்பார்.

செய்தி முடிந்ததும், வட்ட முகம், நீண்ட கழுத்து, பூப்போட்ட சட்டையுடன் காணாமல் போனவரைக் கண்டுபிடித்துத் தெரிந்தால் வேறெங்கோ சொல்லிவிடச் சொல்வார்கள். அடுத்த அரைமணி நேரத்திற்கு இளையபாரதம் போன்று ஒரு நிகழ்ச்சி. இச்சமயத்தில் பெரும்பாலான நேரம் திருச்சி நிலையத்திற்குத் திரும்பியிருப்போம், நாளின் முதல் திரைப்பாடல் அங்கு ஒலிக்கும். அரிதான சமயங்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவை.

8 மணி முதல் 8.20 வரை இந்தி, ஆங்கில செய்திகளை டெல்லியிலிருந்து வாசிக்கச் செய்து வானொலிக்கு ஓய்வு கொடுப்பார்கள். மீண்டும் கோவை நிலையத்தில் திரைப்பாடல்களுடன் குதூகலமாக 40 நிமிடங்கள் செல்லும். பிற்காலத்தில் வந்த விளம்பரங்கள் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தன. காலை முடிந்தது.

Friday, February 19, 2010

ரயில்வே பராமரிப்புப் பணி தகவலறிவிப்பு

அஞ்சல் பெட்டியில் ரயில்வேயிலிருந்து வந்த தகவல் அறிவிப்பு தாளொன்று கிடந்தது.

மதிப்பிற்குரிய பகுதிவாழ் குடிமக்களே,

வரும் 28ந் தேதி முதல் மார்ச் 19 வரை தண்டவாளப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்கிறது. இதன்போது கம்பிவடங்கள் புதிதாக இடப்படும்.

ரயில் போக்குவரத்துக் காரணங்களையொட்டி இப்பணிகளை இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும். திட்டமிடப்பட்டுள்ள இவ்விரவுப் பணியின் எப்பகுதிகள் அதிக ஒலி,இரைச்சல் கொண்டதாயிருக்கும் என்பதைப் பின்பக்கத்திலுள்ள அட்டவணையில் காணமுடியும். ஏதேனும் எதிர்பாராத பணியைக் குறைந்த அவகாசத்தில் செய்ய வேண்டி நேரிட்டால் மேற்குறிப்பிட்ட காலத்திட்டத்தில் சிறிய மாறுதல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்க.

இப்பணிகளின் போது ஏற்படும் சத்தத்தை முடிந்த அளவு குறைக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதனால் தங்களுக்கு ஏற்படும் இடையூறுக்கு வருந்துகிறோம்.

மேற்கொண்டு எழும் கேள்விகளுக்கு பணியிடக் கட்டுமானத்தலைவரைப் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இங்ஙனம்,
கம்பிவடப் பிரிவுத்தலைவர் மற்றும்
பணியிட கம்பிவட அணித்தலைவர்

Friday, January 01, 2010

சுவிஸ் நாட்டு நடப்பு-குழந்தைக் கடத்தல் 'அலர்ட்'

குழந்தைகள் கடத்தப்பட்டால் நாடு முழுவதும் அறியப்படும் வகையிலான 'அலர்ட்' முறை இன்றிலிருந்து (01.01.2010) சுவிஸில் நடைமுறைக்கு வருகிறது.

இம்முறைப்படி, கடத்தல் பற்றிய அறிக்கையைக் கிடைக்கப் பெற்றவுடன் மாநில காவல்துறையினர் தலைநகர் பெர்னிலுள்ள மத்திய காவல் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவர். அங்கிருந்து செய்தியானது கார் வானொலி அறிவிப்புகள், நெடுஞ்சாலை மின்தட்டிகள், ரயில் மற்றும் விமான நிலைய ஒலிபெருக்கி போன்றவற்றில் பரப்பப்படும்.

கடத்தல் நிகழ்ந்த ஆரம்ப மணிகளில் கடத்தியோர் நகர்விலே இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாலும், இதுபோன்ற அறிவிப்புகளால் பொதுமக்கள் யாரேனும் அவர்களைப் பார்த்து தகவல் சொல்லும் வாய்ப்பிருப்பதாலும் இந்த முறை பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே சில ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள இம்முறையானது அங்கு நல்ல பயனளிப்பதால் இங்கும், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான கடத்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, நடைமுறைப்படுத்தப் பெற வேண்டி அழுத்தங்கள் எழுந்தன.