படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, May 14, 2005

கள்ளிக்காட்டு இதிகாசம்

சிறுகதை, புதினம் போன்றவற்றை ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியொன்று எப்போதாவது வருவதுண்டு - பொழுதுபோக்கிற்கா, நானும் இலக்கியம் படிக்கிறேன் என்று பறைசாற்றிக் கொள்வதற்கா, அதிலிருந்து ஏதேனும் 'கற்றுக்' கொள்வதற்கா, எதையாவது வாசிக்க வேண்டுமென்பதற்காகவே வாசிப்பதா, இல்லை வேறெதெற்காவதா? கேள்வி மட்டுந்தானுண்டு, இப்போதைக்கு பதிலில்லை, இருக்கட்டும்.

புத்தகக் கண்காட்சியொன்றின் முன்வரிசையில் புதிதாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் கவர்ச்சியா, வைரமுத்து என்ற பிரபலமான திரைப்பாடலாசிரியரின் புதினம் என்பதாலா, காசு சேர்த்து வைத்து புத்தகத்தை வாங்க வேண்டிய காலம் போயாச்சு என்பதாலா தெரியாது, வாங்கியாயிற்று. எல்லா அவசரமும் வாங்கும் வரைதான். இருக்கும் புத்தகங்களுக்கு துணையாக, வாங்கியதும் பக்கத்தில்போய் நின்றுகொள்ள வேண்டியதுதான். எப்படியா, வாங்கி வைத்து ரொம்ப நாட்களாக அலமாரியில் நின்று கொண்டிருந்த இந்த 'இதிகாச'த்திற்கு சென்ற வாரம் விமோசனம் கிடைத்தது. நீளமான வாரவிடுமுறை வந்ததால் இப்பொழுதேனும் படிக்க முயற்சிப்போம் என்றவோர் எத்தனிப்பைத் தொடர, சில நாட்களில் வாசிப்பு முடிந்தது. தொடர்ந்தும், வேகமாகவும் வாசிக்க முடிபவர்களுக்கு அரைநாள் கூட எடுக்காது.

1950களிலும் (அதற்கு முன்னரும்?) "வெவ்வேறு குடும்பங்களுக்கு - வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்து முடிந்த நிஜங்களை..ஒரு குடும்பத்திற்கு நேர்ந்ததாகச் செய்தது மட்டுமே" தனது "கற்பனை அல்லது உத்தி" என்கிறார் வைரமுத்து. அப்படிச் சொல்லப்பட்ட குடும்பம் பேயத்தேவர் என்பவருடையது. குடியானவர்களைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ, கேட்கும்போதே ஒருவிதப் பரிவும் ஒட்டுதலும் உண்டாகிறது. துன்பத்தையே வாழ்க்கையாகக் கொண்டுவிட்ட பேயத்தேவருக்கு அடுத்தடுத்து நிகழும் இடர்ப்பாடுகள் அப்பாத்திரத்தின் மீது பரிவை ஏற்படுத்துகிறது. கிராம வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் (தேவையோ இல்லையோ) சுவாரசியமாகவே விவரிக்கப்பட்டுள்ளன - மாட்டுப் பிரசவம், சவரத் தொழில், சாராயம் காச்சுதல், கிணறு வெட்டுவதல், மார்க்க கல்யாணம், இத்யாதி இத்யாதி. கிராம வாழ்வையே கேட்டறியாதோருக்கு புதிதாகத் தெரிந்துகொள்ள பல செய்திகள் கிடைக்கும்.

உள்ள துன்பம் தாங்காது வாழும் குடும்பங்கள், கிராமங்கள், அரசாங்கம் கொண்டுவந்த வைகை அணைக்கட்டுத் திட்டத்தால் சிலதலைமுறைகளாகப் பிழைத்து வந்த வீடு, நிலங்களை விட்டுத் துரத்தப்படும் நிலைக்கு ஆளாகின்றன. வழக்கம்போல அரசாங்கத்திற்கு இம்மக்கள் கிள்ளுக்கீரைகள்தான் (மக்களுக்கு ஒரு திட்டத்தைக் குறித்த சரியான தகவல்களைச் சரியான நேரத்தில் தெளிவாகச் சொல்லாத நடைமுறை இன்றைக்கும் தொடர்கிறது). அணைகட்டி முடிக்கப்பட்டு நீர்தேங்க, ஊர்கள் மூழ்க, கள்ளிப்பட்டியில் பேயத்தேவர் இறக்க, கதை முடிக்கப்படுகிறது. கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது பேயத்தேவர் தற்கொலைக்கு ஒப்பான காரியத்தால்தான் இறந்துபோனார் என்ற எண்ணம் வந்துவிடவே 'கனத்த மனது' ஏற்படவில்லை. ஊர்களெல்லாம் துரத்தப்பட்டு இவருக்கும் இந்நிலையாகிவிட்டதே என்ற வருத்தம் வேறு.

ஆரம்பத்தில் உரைநடை பாணியில் கதை சொல்லத் தொடங்கும் ஆசிரியர், அத்தியாயங்கள் செல்லச் செல்ல வட்டார வாசனையுடன் கூடிய பேச்சு வழக்கிற்கு மாறிவிடுகிறார். உணர்ச்சிவயப்படல், மிகைப்படுத்திச் சொல்லப்படும் சிறுசிறு நிகழ்வுகள் வைரமுத்துவின் படைப்புகளில் இல்லாதிருந்தால்தான் ஆச்சரியம். இருந்தாலும், கதையும் சொல்லப்பட்ட விதமும் வாசிப்பின் விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. வாசிக்கலாம்.

Thursday, May 12, 2005

அழிக்கப்படும் புலிகள்

நேற்று யாமத்தில் ப்ளாக்கர் வெகு நேரம் தொங்கிக் கொண்டிருக்கவே, இப்பதிவு மேலேறவேயில்லை (அதனால ஒரு நஷ்டமும் இல்லை!).

புலியின் எலும்பு, தோல் முதலானவற்றைப் பயன்படுத்தினால் இன்னது கிடைக்கும் என்று எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவில்லை (முட்டாள்தனமாகத்தான் இருக்கிறது). அப்படியே ஏதாவது கிடைத்தாலும், ஒன்றிரண்டு பேருக்கென்றால் பரவாயில்லை, எங்காவது இயற்கையாகச் செத்த புலி அதற்குதவும். புலி சாகும் வரை உட்கார்ந்திருக்க அவ்வளவு இளித்தவாயர்களா நம்மக்கள்? பணம் வரும் என்றால் உடனே போட்டுத் தள்ளிவிடமாட்டார்களா?

சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் ஒரு சில மருந்துகளைத் தயாரிக்கப் புலியின் எலும்பைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் (எலும்பு மட்டுமில்லாமல் ஏறுமுகமாக அதன் பல்வேறு உறுப்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவாம்); நம்மூர் சாமியார்களோ ஏதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு புலித் தோலைப் போட்டு அமர்ந்து கிடக்கிறார்கள்.

இப்படித்தான் வட இந்தியாவில் இருக்கும் பல தேசீயப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் அதிக அளவில் காணாமல் போவதாகத் தெரியவருகிறது. தேவை அதிகரிக்க வேட்டையாடலும் அதிகரிக்கிறது. எதை முதலில் நிறுத்த வேண்டும் என்பது கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா கதைதான். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதென்று புலிகளுக்குத்தான் தெரியும். தற்போது மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலுள்ள ரத்தாம்பூர் தேசியப் பூங்காக்களில் புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் படலம் ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

புலிகளைக் கொல்பவர்களுக்கு மரணதண்டனை அதிகமா? (பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை என்று கேட்டால் எனக்குச் சொல்லத்தெரியாது).

தொடர்புடைய சில செய்திச் சுட்டிகள்:
The threat to India's main tiger centre
Tiger census underway in Ranthambore

Thursday, May 05, 2005

கிராமத்து இசைக்கருவிகளும் இசைஞர்களும்

பத்ரியின் பதிவிலிடப்பட்டிருந்த பம்பை வாத்தியத்தைக் கண்டதும் நினைவு எங்கோ ஓடியது. கிராமங்களில் நடக்கும் திருவிழா, திருமணம், இழவு போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் நடக்கும் இசைகளில் (கொஞ்ச காலத்திற்கு முன்பேனும்) ஏதோ ஒருவகையில் இடம்பிடிக்கும் இசைக் கருவிகள் தப்பட்டை, மத்தளம், நாதசுரம் (பீப்பீ-ன்னுதான் சொல்லுவோம்), பம்பை போன்றவை. தோல் கருவிகளை அவற்றை வாசிக்கும் மக்களே (அல்லது அவர்களைச் சார்ந்தவர்களே) செய்து கொள்ளவார்கள் எனச் சொல்லக் கேட்டுள்ளேன். தப்பட்டையை ஒருசில சுற்றுகள் அடித்து ஓய்ந்தபின் தீ மூட்டி அச்சூட்டில் காயவைத்து சரிசெய்வதைப் பார்க்க நன்றாக இருக்கும். தூண் அல்லது சுவற்றோரத்தில் சாய்த்துப் போர்த்தி வைக்கப்பட்டிருக்கும் மத்தளம், பம்பையை யாருக்கும் தெரியாமல் (?!) ஒன்றிரண்டு முறை கொட்டிவிட்டு ஓடுவதில் அப்போது ஒருவகை மகிழ்ச்சி.

இவ்விசைஞர்கள் பெரும்பாலும் கேள்வி ஞானம் மற்றும் தன்முயற்சியால் தாங்களாகவே கற்றுக் கொண்ட வித்துவான்கள். ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்து அழைத்துவரப்பட்ட இக்கலைஞர்கள் யாராக இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கிராமத்தார்கள் இவர்களை கவனித்துக் கொண்ட விதம் எப்போதுமே கவலையளிக்கச் செய்துள்ளது. "அவனுகளுக்கு ஒரு பட்டைய வாங்கிக் கொடுங்கடா போதும்" என்பதுதான் அவ்வரிய கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை. அவர்களும் அதற்குப் பழகியே போனார்களோ என்னவோ? இழவு வீடென்றால் பம்பைக்காரர் அதை இசைத்துக் கொண்டே இறந்தவரைப் பற்றி ஏதோ பாட, விசாரிக்க வந்தவர்கள் போடும் ஒன்றிரண்டு உரூபாய்களும், அரிசி போன்றவைகளும்தான் அவர்களுக்குக் கிடைத்த சன்மானம்! என்ன உலகமிது! :-(