படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, July 04, 2004

யூரோ 2004 - கிரீடம் சூடியது கிரேக்கம்

யூரோ 2004 தொடரின் இறுதியாட்டத்தை எதிர்நோக்கி போர்ச்சுகல், கிரேக்க நாடுகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. வீதிகளில் தோரணங்கள், அங்கத்தில் வண்ணப் பூச்சுகள், அலங்காரங்கள், கொடிகள், விதவிதமான உடைகள் என்று குதூகலித்துக்கொண்டிருந்தனர். ஐரோப்பா முழுவதும் ஒரு வகையில் இன்று விசேடமான நாளாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

முதல் ஆட்டத்தில் மோதிய அணிகளே இறுதி ஆட்டத்திலும் மோதுவது ஓர் ஆச்சரியமான நிகழ்வு. சுமார் 62,000க்கும் மேற்பட்டோர் நிரம்பிய விளையாட்டரங்கில் போர்ச்சுகல், கிரேக்க அணிகள் களமிறங்கிப் போராடத் துவங்கின. போர்ச்சுகலின் ஜனாதிபதி, பிரதமர், கிரேக்க நாட்டுப் பிரதமர் என்று சகலரும் ஆவலுடன் ஆட்டத்தை காண அமர்ந்திருந்தனர். போர்ச்சுகல் அணி பந்தை அதிக நேரம் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டிருந்தது. வந்த சில வாய்ப்புகளை இரு அணிகளும் நழுவவிட்டன. முதல் பாதியில் இருவரும் ஓரளவு சரி சமமாக மோதியிருந்தும் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று.

ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பில், கிரேக்க வீரர் Angelos Charisteas மூலையில் இருந்து பறந்து வந்த பந்தை கோலுக்குள் தலையால் தள்ளி தங்கள் அணியின் கனவு நனவாவதற்கு அடித்தளமிட்டார். அதற்குப்பிறகு போர்ச்சுகல் அரும்பாடுபட்டதென்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் அவர்களால் கோலெதுவும் போடமுடியாமலேயே போயிற்று. கடைசியில் 0-1 என்ற கணக்கில் போர்ச்சுகலை வென்று கிரேக்க நாடு வாகை சூடியது. [வாகை சூடுதல் என்றால் என்னவென சட்டென ஒரு கேள்வி எழுகிறது. கழகத்தமிழகராதியை வேகமாகப் புரட்ட, ஒரு மரம், அகத்தி முதலான பொருள்கள் தெரியவருகிறது. ஏதேனும் ஒரு பந்தயத்தில் (அ) போரில் வென்றவர்கள், (அகத்தி)மரத்தின் மலர்களைச் (சிவப்பாக பிறை போல இருக்கும்) சூடுவதைத்தான் "வாகை சூடுதல்" என்று சொல்லியிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறிருப்பின், அம்மலர்களைக் கொண்ட மாலையைச் சூடும் வழக்கம் நம் நாட்டில் எப்பொழுது தோன்றியது, அதற்கான குறிப்பான காரணங்கள் ஏதேனும் இருந்திருக்குமா, இன்னும் அவ்வழக்கம் எங்காவது நடைமுறையில் உள்ளதா போன்றவற்றை அறிந்து கொள்ள ஆவலாயுள்ளது.] ஐரோப்பியப் பட்டத்தை (2004) முதன் முறையாக வென்று கிரேக்க வீரர்கள் தங்கள் நாட்டு கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர்.

தங்கள் நாடே நடத்தும் போட்டியில், தங்கள் அணியே இறுதியாட்டத்திற்கு வந்தும் வெல்லாத வருத்தத்தில் உள்நாட்டு ரசிகர்கள் கனத்த மனதுடன் வெளியேறினர். எதிர்ப்பக்கம், ரசிகர்களுடன் கிரேக்கப் பிரதமரும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார். கிரேக்க நாடும் இந்நேரம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒலிம்பிக் பந்தயத்தை நடத்தப்போகும் அவர்களுக்கு இவ்வெற்றி ஓர் உந்துகோலாக இருக்க வாழ்த்துகள்! யூரோ 2008, ஆஸ்திரியா மற்றும் ஸ்விட்சர்லாந்தில் நடக்கவுள்ளன.

No comments: