படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, February 23, 2005

ஒள

"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்; அகராதிதான் கைகொடுத்தது. ஒள வரிசையில் வரும் வார்த்தைகள் கொஞ்சம்தான் எனினும் சில சுவையாக உள்ளன.

ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்லு.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமைமகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்.

நன்றி: கழகத் தமிழ் அகராதி

மேற்கண்ட சில வார்த்தைகளை வாசித்தும் வந்த எதிர்வினை:
ஐ!
ஓ!
ம்.

Monday, February 21, 2005

படிக்காட்டியும் பரவாயில்லை, வாங்குங்க!

அறிவு, திறமை, ஆர்வம் அனைத்தும் இருந்தும் பொருள் வளம் இல்லாதிருப்பது துரதிஷ்டமான ஒன்று. நல்ல நோக்கத்திற்குப் பொருளுதவி கிடைப்பதும் அரிதான காரியமாகவே இருக்கிறது. வரலாறு மின்னிதழின் பிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 பதிப்பில் வந்துள்ள செய்தியொன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புத்தகம் எழுதுவதென்பது, அதுவும் ஆய்வுக் கட்டுரைகளுடன், அனைவராலும் செய்துவிடக்கூடிய சாதாரண காரியமல்ல. அப்படி எழுதியும் அதை எளிதில் வெளியிடச் செய்யமுடியாத நிலை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஒரு புத்தகத்தை வெளிக்கொண்டுவர எவ்வளவு சிரமப்படவேண்டியுள்ளது! "பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் இரா.கலைக்கோவனின் வார்த்தைகள்:

"...ஏராளமான ஆய்வுகள் செய்து வைத்திருக்கிறோம். வெளியிடுவதற்கு வாய்ப்பில்லை.......
ஆளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால் ஐந்து பேர்கள் என்றாலும் ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேர்ந்துவிடும். ஒரு புத்தகம் கொண்டுவர முடியும். ஆண்டுக்கு இரண்டு நூல்கள் கொண்டு வரலாம். இரண்டாண்டுகளுக்கு அப்படிக் கொண்டு வந்தால் பிறகு நூலகங்கள் வாங்குகின்ற அந்த பதிப்பகத் தொகை கொண்டே தொடர்ந்து நூல்கள் வெளியிட வாய்ப்பாக இருக்குமென்று சொன்னேன்.

உடனே ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்த நண்பர்கள் இராமசந்திரன், கோகுல், கமலக்கண்ணன், செல்வி இலாவண்யா. இந்த ஐந்துபேரும் சென்ற ஜூன் மாதத்திலிருந்து மாதந்தோறும் அவர்கள் வாங்குகின்ற ஊதியத்திலிருந்து தலைக்கு ஆயிரம் ரூபாய் சேமித்து மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேமித்து மேற்கொண்டு ஒரு ஐந்தாயிரமும் கொடுத்து இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே நான் பூரித்துப்போய்ச் சொல்கிறேன் - தமிழ்நாட்டு வரலாற்றுக்கு இப்படி ஒரு குழு அமையுமானால் சரியான வரலாற்றை சரியான தரவுகளோடு எழுதிவிடலாம்.

அறியாத தமிழ்நாட்டு வரலாற்றை எழுத இங்கு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். வெளியிடுவதற்குத்தான் சரியான ஆட்களில்லை."

பொருளிருப்போர் வாசிக்காவிடினும் புத்தகமொன்றை வாங்கி வைத்தும், ஆர்வமிருப்போர் புத்தகத்தை வாங்கிப் படித்தும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கலாம்.

Sunday, February 20, 2005

வனப் பராபத்திய அவை

மரம் மற்றும் சில வனப்பொருட்கள், அவற்றின் விளம்பரங்கள் FSC என்ற குறியைத் தாங்கிவருவதைக் காணலாம் (குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகளில்). Forest Stewardship Council (FSC) என்பது வனங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு சாரா, பன்னாட்டு அமைப்பு. மரங்கள் விடாமல் வெட்டப்பட்டு உண்டான வனங்களின் அழிவுக்கு ஒருவகையான எதிர்வினை என்று இதைக் கூறலாம். சூழமைக்குத் தகுந்த, சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்குத் தோதான வகையில் வனங்களை நிர்வகிக்கும் பொருட்டு 1993-ல் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வனத்திலிருந்து மரம் மற்றும் பிற பொருட்களை எடுக்கும்போது அதன் பல்லுயிர்த் தன்மைக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பதும், வன வளத்தைத் தொடர்ந்து பெருக்குவதும், சூழமைச் செயல்பாடுகளைத் தொடரச் செய்வதும் முக்கியமானதாகும். அதே சமயத்தில் வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், அவர்களின் சமுதாயமும் தொடர்ந்து வருமானம் பெறும் வகையிலும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையைக் கொள்ளையடித்து வெறும் இலாபம் மட்டும் பார்க்காமல் அதைத் தொடர்ந்து பேணிப் பராமரித்தலும், அப்பகுதிவாழ் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வன வளங்களை நிர்வகிப்பதாகும்.

இவ்வமைப்பு உருவாக்கியுள்ள வனச் சான்றிதழ் மற்றும் பொருட் குறியீட்டு முறைமைகள், சரியாக நிர்வகிக்கப்படும் காடுகளிலிருந்து கிடைக்கும் மரம் மற்றும் அவை சார்ந்த பொருட்களைச் சாதாரண நுகர்வோர் நம்பிக்கையுடனும், எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதத்திலும் உள்ளன. வனங்கள் கடுமையான தரக்கட்டுப்பாடுகளால் (இதற்கான பத்து கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்) சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வனத்திலிருந்து நுகர்வோரைச் சேரும் வரையில் ஒரு பொருளானது ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிக்கப்படுவதால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. மேலும், WWF, Friends of the Earth, Greenpeace மற்றும் Woodland Trust போன்ற பெரும் சூழமை சார்ந்த அமைப்புகள் FSCயை ஆதரிக்கின்றன.

இவ்வமைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களை http://www.fsc.org/en/ என்ற முகவரியில் அறியலாம்.

(Stewardship என்பதற்கு கொலோன் பல்கலை அகராதி 'பராபத்தியம்' என்ற சொல்லை வழங்குகிறது; வேறு நல்ல சொற்கள் இருப்பின் தெரியப்படுத்தவும்; நன்றி!)

Sunday, February 06, 2005

ஆகாயத் தாமரை

"பல நூறு தலைமுறைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு (தாமிரபரணி) இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது. இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்."

மேற்கண்டதை வாசித்தபின்பு அச்செடியைப் எண்ணம் மனதில் சற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆகாயத் தாமரையை (வெங்காயத் தாமரை, ஆம்பல் என்பவையும் அதே செடியைக் குறிப்பனவா என்பதை அறிந்தவர்கள் சொல்லவும்) அதிக அளவில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்குப் பின்புறமுள்ள எஞ்சி நிற்கும் குளத்திலும், திருச்சி சாலையிலிருக்கும் சிங்காநல்லூர் குளத்திலும் கண்டிருக்கிறேன். நீரின் மீது பச்சைக் கம்பளம் விரித்தாற்போல பார்பதற்குப் அழகாக இருக்கும் இத்தாவரம் தானிருக்கும் பகுதி பசுமையால் பூத்துக் குலுங்குவதுபோலத் தோன்றச் செய்யும். அழகான இத்தாமரை அழிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அது எவ்வாறு ஆறு, குளம் முதலான நீர்நிலைகளை அழிக்கிறது என்று தெரிந்துகொள்ளத் தலைப்பட்டு கூகிளில் தேடியபோது பல தகவல்கள் கிடைத்தன.


ஆகாயத் தாமரையின் அழகில் மயங்கி அதை சென்ற நூற்றாண்டுகளில் அமேசான் படுகையிலிருந்து இறக்குமதி செய்து மக்கள் தம் வாழுமிடத்தைச் சுற்றி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இருக்க இடங்கொடுத்தால் படுக்கப் பாய் கேட்கிறதைப் போல், தனது அசுர வளர் திறனால் அங்கிங்கெனாதபடி உலகெங்கும் பரவிவிட்டது இச்செடி. மனிதன் எதையுமே தனக்குப் பாதகம் என்று வந்தால் தானே அதைப்பற்றி கவலைப்படுவான்!

ஆங்கிலத்தில் Water hyacinth என்றழைக்கப்படும் ஆகாயத் தாமரையின் தாவரவியல் பெயர் Eichhornia crassipes. இதை ஒரு மிதக்கும் நீர்க்களை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் சில பின்வருமாறு:

குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
சாகாவரம் பெற்ற கொசுக்களுக்கு இது ஒரு சொர்க்க பூமிதான்.
வெள்ள காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன்பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.

இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன. தமிழகத்திலும் அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் போன்ற அமைப்புகளும், தன்னார்வலர்களும் இது குறித்து ஆய்வுகள் செய்திருக்கக்கூடும். ஆனால் எந்த அளவிற்கு அவை நடைமுறையில் இருக்கிறதென்று தெரியவில்லை. சாதாரண மக்களுக்கு இச்செடிகள் தினமும் வழியில் பார்த்துச் செல்லும் மற்றொரு காட்சியே.



பல்கிப் பெருகிவிட்டன இச்செடிகளை அழிப்பதோ, கட்டுப்படுத்துவதோ சாதாரண காரியங்களாகத் தெரியவில்லை. வேதியல் மற்றும் உயிரியல் வழிமுறைகள் சில இருந்தாலும் நம்மூரில் அதிக அளவில் கிடைக்கும் மனித வளத்தைக் கொண்டு (நிபுணர்களின் வழிகாட்டல், அரசு மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன்) கையால் அழிப்பது பல்வேறு வழிகளில் பயனளிக்கும் என்று நினைக்கிறேன். மாவட்ட நிர்வாகங்கள் இதை ஒரு தற்காலிக வேலைவாய்ப்பாகக் கூட வேலையற்ற இளைஞர்களுக்கு அளிக்கலாம். அல்லது உணவிற்கு வேலை என்று ஏதோ ஒரு திட்டம் இருக்கிறதென்று சொன்னார்களே அதன் மூலமாகக்கூட முயற்சிக்கலாம்.

இச்செடியால் ஏதேனும் பயனுள்ளதா என்றுகூட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயு, காகிதம் தயாரித்தல், கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுவதாகத் தெரிகிறது.

சென்ற டிசம்பர் (9-13.12.2004) புவனேஸ்வரில் நடந்த 'Lake 2004' என்ற கருத்தரங்கிலும் ஆகாயத்தாமரை பற்றி விவாதித்துள்ளனர்.

இணையத்தில் ஆகாயத்தாமரையைக் குறித்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, அச்செடியைப் போலவே.

செடியைப் பற்றிய பொதுவான தகவல்கள் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் சிலவற்றிற்கான சுட்டிகள்:
http://www.invasivespecies.gov/profiles/waterhyacinth.shtml
http://www.water-hyacinth.com/
http://www.nrm.qld.gov.au/factsheets/pdf/pest/PP6.pdf
http://www.pbs.org/wgbh/nova/algae/impact.html
http://www.worldfishcenter.org/naga/naga-ntafp%20news.pdf
http://www.issg.org/database/species/ecology.asp?si=70&fr=1&sts=sss

Tuesday, February 01, 2005

சிற்றிதழ்களின் களஞ்சியம்

சுபமங்களா - எனக்கு வாசிக்க கிடைத்த ஆரம்பகால சிற்றிதழ். கோமல் சுவாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த அருமையான அவ்விதழ் அவரது மறைவுடன் நின்றுவிட்டது. பிற்பாடு, காலாண்டு இதழாக வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அறிமுகம். இதே காலகட்டத்தில் கோவையிலிருந்து வெளியாகும் கலைக்கதிர் என்ற அறிவியல் சிற்றிதழும் வாசிக்கக் கிடைக்கும். இவற்றின் வாயிலாக சமகாலத்தைய இலக்கியச் சிற்றிதழ்கள் சிலவற்றின் பெயர்கள் தெரிந்திருந்தாலும், வாசிக்கக் கிடைத்ததில்லை. கல்லூரி நூலகத்தில் சில இதழ்கள் புத்தாடை கலையாது மேசையின் மேல் மின்விசிறியின் காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்கும்.

இலக்கியம் மட்டுமல்லாது, பல்வேறு தளங்களில் எத்தனை சிற்றிதழ்கள் தமிழில் வந்துகொண்டும், வந்து நின்றுபோயும் இருக்கும்! ஒவ்வொரு ஊரிலும் எல்லாக் காலத்திலும் இதுபோன்று ஏதாவது இதழ்கள் (அது பத்து பேர் மட்டுமே படிக்கும் கையெழுத்துப் பிரதியானாலும் சரி, இல்லை பல நூறு படிகளாக வரும் அச்சுப் பிரதியானலும் சரி) தயாராகிக் கொண்டிருக்கும். கொஞ்ச காலத்திற்கு வெகு அமர்க்களமாக வரும் இவ்விதழ்கள் ஒரு காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் காணாமல் போய்விடுவதுடன், அப்படியொன்று வந்ததற்கான சுவடே இல்லாமல் ஆகிவிடும். எதையும் ஆவணப்படுத்தியோ, சேகரித்துப் பாதுகாத்தோ வைத்துவிட்டால் தன் சுயத்தை இழந்து விடமாட்டானா தமிழன்!!

நிலைமை இப்படியிருக்க, "உலக அளவில் கருத்துச் செறிவோடு தொடங்கப்பட்டுத் தொடரப்படுகிற இதழ்கள், அனைவரது பார்வைக்கும் படாமலேயே நின்றுவிடுகின்றன. இவ்வகை இதழ்கள் அந்த இதழாளர் வாழும் வரை அவரோடு வாழ்ந்து அவரது மறைவிற்குப் பிறகு அவரது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்குத் தூக்கி எறியப்படுகின்றன.

தமிழகத்துலும், வெளிநாட்டிலும் இவ்வாறு வெளியிடப்படும் இதழ்களைத் திரட்டுவதும், பாதுகாப்பதும் முதன்மையாகும். இந்த நோக்கில் நமது நூலகத்தில் இன்றுவரை 2,533 வகையான தமிழ்ச் சிற்றிதழ்கள் திரட்டப்பட்டுள்ளன.

இவற்றில் வானம்பாடி, தேனீ, சரஸ்வதி, டமாரம் இதழ்களைக் குறுந்தகடு ஆக்கியுள்ளேன். இந்த முறையில் இதழ்களின் தோற்றத்தை அப்படியே, அதே வண்ணத்தில் பாதுகாக்க முடியும். இதழ்களை அடுத்த தலைமுறைக்குக் காட்சிப்படுத்துகிற இந்த அரிய முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ள வருமாறு அன்போடு அழைக்கிறேன்" என்று பதினைந்து ஆண்டுகளாக இதழ்களைச் சேகரித்து வருவதுடன், அவற்றை குறுவட்டு வழிப்பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ள ஒரு தமிழ் ஆர்வலரைப் பற்றி அறிய வந்தால் மனதில் ஒரு வித மகிழ்ச்சி தோன்றாதா?

1983-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம் நல்லாசிரியர் விருது பெற்ற, பொள்ளாச்சி நசன் என்று அழைக்கப்படுகிற ம.நடேசன் அவர்கள் இவ்வரிய பணியில் ஈடுபட்டுள்ளார். கூடவே "எளிய முறையில் தமிழ் கற்பித்தல்", "கற்பித்தலுக்கான எளிய கருவிகளை ஆக்குதல்", "தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி நடத்துதல்" போன்றவற்றையும் செய்து வருகிறார்.

ஒவ்வொரு காலகட்டத்தின் வரலாறு, குமுகாயத்தின் போக்குகள் முதலானவற்றை அறிந்து கொள்ள இவரது நூலகத்திலுள்ள இதழ்கள் உதவும். இதழியல் துறையில் ஆய்வு செய்வோருக்கும் இது ஒரு களஞ்சியம்.

இதுபோன்று அரிய பணியில் ஈடுபட்டிருப்போரை உலகிற்குக் காட்டும் உருப்படியான பணியை வெகுசன ஊடகங்கள் செய்தால் நன்றாயிருக்கும்.

மேலதிகத் தகவல்களுக்கு...

Thursday, January 27, 2005

மாலன் அவர்களுக்கு...

தங்களது 'வாசகன்' வலைப்பதிவில் பின்னூட்டமிட முனைந்தபோது, 'Comments are for team members only.' என்ற செய்தி வந்ததால் அப்பின்னூட்டத்தை இங்கேயே இடுகிறேன். இது உங்களைச் சென்றடைந்தால் மகிழ்வடைவேன்.

புத்தகங்கள் சிலவற்றைப் பற்றி அருமையாகச் சொல்ல ஆரம்பித்துள்ளீர்கள்; ஆவலுடன் வாசித்துக்கொண்டுள்ளேன். எனது வேண்டுகோள் என்னவெனில், ஒவ்வொரு புத்தக அறிமுகத்தின்போதும் அதன் முழு விவரங்களையும் (பெயர், ஆசிரியர், பதிப்பகம், ISBN [இருந்தால்], விலை முதலானவை) தெரிவித்தீர்களேயானால், அவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு பின்னாளில் வாங்கி வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

அன்பும், நன்றியும்.

Wednesday, January 26, 2005

எப்படி சுகம்? - பரோபகாரி - சைவம்

அதுவோர் ஈரடுக்கு ரயில் வண்டி ('புகைவண்டி', 'புகையிரதம்[ஈழத்தில்]', 'தொடர்வண்டி', 'ரயில்', 'ட்ரெயின்' - ஒரு வண்டியைக் குறிக்கத்தான் எத்தனை சொற்கள்!!; இதற்கு 'இருவுள்' என்ற நல்லதொரு தமிழ்ச் சொல்லை இராம.கி. கையாள்கிறார்). சென்றவாரக் கடைசியில், வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது குழந்தை-வண்டியை ரயில் பெட்டியின் வாயிலுக்கு அருகில் நிறுத்திவிட்டு, செல்லும் தொலைவு ஒரு சில நிமிடங்களே என்பதால் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம். மேலடுக்கிலிருந்து பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து எங்களிடம் சோதனையை முடித்துவிட்டு கீழ்த்தளத்திலிருக்கும் சக பரிசோதகர் வருவதற்காக காத்திருந்தார். கீழ்தளத்தில் சோதனையை முடித்துக்கொண்டு சர்ரெனப் படிக்கட்டில் ஏறி வேகமாக வந்தவர் எங்களைப் பார்த்தும்,

"வணக்கம்!"
"எப்படி சுகம்?"
"நன்றி!"

என்று வரிசையாகச் சொல்லி ஆச்சரியப்படுத்திவிட்டு, எங்களின் பதிலைக் காதில் வாங்கியவாறே புன்முறுவலுடன் அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார். தமிழ், தமிழர் என்று அயல்நாடுகளில் இன்று பரவலாக அறியப்படுகிறதென்றால் அதற்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே முக்கியமான காரணம் என நம்புகிறேன்.
----------

philanthropist = பரோபகாரி என்கிறது கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி.
பரோபகாரி = one who is willing to help others, தயங்காமல் தாராளமாக உதவி செய்பவர் (க்ரியாவின் தற்காலத் தமிழகராதி)
பரோபகாரம் = பிறர்க்குதவி (கழகத் தமிழகராதி)

ஆங்கில விக்கிபீடியாவின் விளக்கம்: "A philanthropist is someone who devotes her or his time, money, or effort towards helping others. The label is most often applied to someone who gives large amounts to charity."

ஒன்னுமில்லீங்க, நம்ம பில்கேட்ஸ் உலகத்தின் முன்வரிசைப் பரோபகாரிங்களாம். சரி, இதுக்கு நம்ம அகராதிகள்ளாம் என்ன சொல்லுதுன்னு பாத்தப்பக் கெடச்சதுதாங்க மேல இருக்கறதெல்லாம்.
----------

மாமிசம் அல்லாத உணவிற்கு 'சைவம்' என்ற சொல்லை எப்படிப் புழக்கத்திற்குக் கொண்டுவந்தார்களென்பது வியப்பாக உள்ளது. இதைக்கொண்டு புலால் உணவை 'அசைவம்' என்று சுலபமாகச் சொல்லிவிட்டார்கள். சமயத்தின் (சைவம், வைணவம் போன்ற) பெயரிலிருந்து வந்ததா இது? அப்படியானால் சைவ சமயத்தைப் பின்பற்றியோர் புலால் உணவை மறுத்தவர்களா? "இந்தக் குழம்பில் கறி சேர்க்கப்பட்டுள்ளதா?" எனக் கேட்டால் "இல்லை, இது மரக்கறி" என்றே சொல்வார் எங்கள் அலுவலகத்திலுள்ள உணவகத்தின் ஊழியர், ஈழத்துக்காரர். இதை நினைக்கத் தூண்டிய தகவல்.

Sunday, January 16, 2005

அவியல்

கடந்த வெள்ளிக்கிழமை (14.01.2005) சென்னையில் அகலப்பட்டைச் சேவையைத் தொடங்கிவைத்த மையத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ஜூன் மாதத்திற்குள் ரூ.10 ஆயிரம் விலையில் கணினி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ("அகண்ட அலைவரிசைச் சேவை தொடக்கம்: ஜூன் மாதத்துக்குள் ரூ.10 ஆயிரத்துக்குக் கணினி" - தினமணி, ஞாயிறு 16.01.2005 மின்பதிப்பு). மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், திரையின் விலையே ஏறக்குறைய ரூ.5000 இருக்கும் சமயத்தில் இக்கணியில் என்னென்ன வசதிகள் இருக்குமென்று தெரியவில்லை. அதுபோல மாதத்திற்கு ரூ.500-ஐ சாதாரண வீடுகளில் அகலப்பட்டை இணைப்பிற்காகச் செலவழிப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. வணிகப் போட்டிகள் பெருகும்போது இத்தொகை மேலும் குறையக்கூடும்.

மைக்ரோசாஃப்ட்டின் தமிழ் மென்பொருள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறதாம்-'ஆபீஸ்' தொகுப்பாக இருக்குமோ? வரட்டும் வரட்டும்!

இந்தியாவில் கணிப்பொருட்களுக்கான இறக்குமதி வரி (35% ?) மிக அதிகம் என்று தெரிகிறது. இந்த அளவிற்கு அதிகமாக வரிவிதிக்க வேண்டிய அவசியம் என்னவோ - உள்ளூர் தயாரிப்புகளைக் காப்பாற்றுதலா?

-----

சென்ற ஆண்டு ஈராக்கின் சிறைச்சாலையில் (அபு க்ராயிப்) நடந்த அக்கிரமங்களுக்காக அமெரிக்கச் சிப்பாய், சார்லஸ் க்ரானெர் (36), பத்தாண்டுகள் சிறைவாசம் பெற்றுள்ளார் (செய்தி). தொ.காவில் பார்த்தபோது இத்தீர்ப்பால் அவர் ஒன்றும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 'மேலிடத்து உத்தரவுகளை'யே அமல்படுத்தியதாகவும், 'போர் நடந்துகொண்டுள்ளது, அங்கு கெட்ட செயல்களும் நடக்கும்' என்ற வியாக்கியானம் வேறு. இந்த 'மேலிடங்களுக்கெல்லாம்' விசாரணை என்றே ஒன்று இருக்குமா என்பது சந்தேகம்தான். இத்தீர்ப்புகள் வெறும் கண்துடைப்பாக இல்லாமலிருந்தால் சரி.

-----

மனிதன் உருவாக்கிய வேறொரு சுனாமி
[அவுட்லுக் இந்தியா, ஜன.11 2005, The Other, Man-Made Tsunami]

-----

'இந்த வார நட்சத்திரம்'-ஆக அழைத்து, எழுதத் தூண்டிய தமிழ்மணம் குழுவிற்கு மிக்க நன்றிகள்! சுமாராக எழுதப்பட்டதாக இருந்தாலும் அவைகளையும் வாசித்து, பின்னூட்டம் அளித்து வந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஒரு வாரத்தில் நான் கவனித்த வரைக்கும் ரோஸாவசந்த் தான்-படித்த வலைப்பதிவுகளில் பெரும்பாலானவற்றிற்குப் பின்னூட்டமிட்டுள்ளார் என்றே சொல்வேன். இது அந்தந்த வலைப்பதிவாளர்களை நிச்சயம் உற்சாகம் அளிக்கும். அதற்காக அவருக்கு மேலும் ஒரு நன்றி! எல்லாப் பதிவுகளுக்கும் எல்லோராலும் எல்லா சமயத்திலும் பின்னூட்டம் அளிக்க இயலாது. இருப்பினும், முக்கியமான பதிவுகளுக்கு (குறிப்பாகத் துறை சார்ந்து எழுதுவோருக்கு) பின்னூட்டம் இடுவது, அதை எழுதுவோர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். இல்லையெனில், இவ்வளவு சிரமமெடுத்து எதற்கு எழுதினோம் என்ற சலிப்பே ஏற்படும். அதேபோல வலைப்பதிவாளரும், பின்னூட்டமளிப்போரை ஊக்குவிக்கும் வண்ணம் பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் அளித்தல் நலம் (குறைந்தபட்சம் கேள்விகள் எழுப்பப்படும் போதாவது).

அடுத்த வார நட்சத்திரத்தை வரவேற்று விடைபெறுகிறேன். நன்றி!

Saturday, January 15, 2005

நடை

நடைப் பிரியர்களுக்கு சுவிஸ் ஒரு சொர்க்க பூமி என்று சொன்னாலது மிகையாகாது. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்துவைத்துள்ளனர். துவங்கும் இடத்தையும், அங்கிருந்து சென்று சேர வேண்டிய இடத்தை மட்டும் நிர்ணயித்துக் கொண்டால் போதும், யாரிடமும் வழிகூடக் கேட்காமல் நடந்து கொண்டேயிருக்கலாம்.

பெரும்பாலும் வெயில் இருக்கும் சமயங்களிலெல்லாம் மக்கள் நடப்பதைக் காணமுடியும், குளிர்காலத்தில்கூட (என்ன, இச்சமயங்களில் நடப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்). ஊர்கள் வழியாக, மேய்ச்சல் நிலங்களில், ஏரிகளைச் சுற்றி, மரங்கள் நிறைந்த காடுகளின் ஊடே, மலைகளின் மேலே என்று சகல இடங்களிலும் நடைபாதைகள் இருப்பதைக் காணலாம். அந்தந்த இடத்தைச் சார்ந்த அமைப்புகள் (ஊராட்சி போன்றவை) இப்பாதைகளைப் பராமரித்து வருவதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் தங்கள் விருப்பம், நேரத்திற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாகவோ, ஜோடியாகவோ, குடும்பமாகவோ நடந்து செல்வர். நடப்பதற்கென்றே இருக்கும் கைத்தடிகளுடன் கரடுமுரடான மலைப்பாதைகளில் அறுபது, எழுபது வயதைத் தாண்டியவர்களைக் கண்டு ஆச்சரியப்படத் தேவையில்லை.

நடைபாதைகளுக்கான வரைபடங்களும் தனியாகக் கிடைக்கின்றன. சில இடங்களுக்கு வழியில் பார்க்க வேண்டியவைகளுக்கான குறிப்புகளுடன் சிறு புத்தங்கள்கூட இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று நடக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான வரைபடத்தை எடுத்துக் கொண்டு போனால் போதுமானது, சில சமயங்களில் அதுவும் தேவையில்லை. இங்குள்ள பொதுப் போக்குவரத்து அமைப்பு ரயிலை மையமாகக் கொண்டது (இம்முறைமையைப்பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதவேண்டும், முறைமை=system). பெரும்பாலும் எல்லா நடைப்பாதைகளும் ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையில் இருப்பதால் (இடையில் உள்ள பாதை மேற்சொன்னபடி எங்கு வேண்டுமாலும் இருக்கும்), வசிப்பிடத்திலிருந்து அவ்வூருக்கு ரயில், தேவைப்பட்டால் அங்கிருந்து பேருந்தில் சென்று நடையைத் துவங்கவேண்டும். சென்று சேருமிடமும் ரயில் நிலையமாகவோ அல்லது பேருந்து நிறுத்தமாகவோ இருக்கும்.

நடக்கத் தோதான ஒவ்வோர் இடத்தின் ரயில் நிலையங்களின் முன்பாகவும் மஞ்சள் நிறத்தில் திசைகாட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் அவ்விடத்தின் பெயர், அது கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மீட்டர் உயரத்தில் உள்ளது, அங்கிருந்து எங்கெல்லாம் செல்ல முடியும் (ஊர்கள்/இடங்களின் பெயர்கள்), நடந்து சென்று அடைவதற்கான நேரம் (பெரும்பாலும் இது சரியாகவே இருக்கும்) போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வழியில் விளக்குக் கம்பங்கள், மரங்கள், சுவர்கள், பெருங்கற்கள் போன்றவற்றில் குறிகளைப் போட்டுவைத்துள்ளனர். இது வழியைத் தொடர்ந்து காண்பிக்கும். இக்குறிகள் பாதைகளுக்கேற்றவாறு வேறுபடும். உதாரணமாக, மலைப்பாதையென்றால் சிவப்பு-வெள்ளைக்குறி, சாதாரண பாதையென்றால் வைரவடிவில் மஞ்சள் குறி என்றிருக்கும். முக்கியமான சந்திப்புகளில் மீண்டும் திசைகாட்டிகள் இருப்பதைக் காணமுடியும்.


ரயில் நிலையம் ஒன்றினருகே, நடையைத் துவங்க...

இடத்திற்கேற்ற நல்ல காலணிகளும் அவசியம். பனியில் நடப்போருக்கு மேலும் சில உபகரணங்கள் தேவைப்படும். உண்பதற்கு பெரும்பாலும் பழங்கள், உலர் பழங்கள், தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்லவேண்டும். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்றால் வழியில் முக்கியமான இடங்களில் உணவுவிடுதிகளும் இருக்கும்.

வழியில் இயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. பனிபடர்ந்த மலைகள், பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்களால் இருட்டான காடுகள், சலசலக்கும் நீரோடைகள், மேய்ச்சலில் மேயும் பசுக்கள், அவற்றின் கழுத்தில் தொங்கும் பெரிய மணிகளின் ஓசை (இம்மணிகளை கடைகளில் சுற்றுப்பயணிகளுக்கு பரிசுப்பொருட்களாக விற்பர்) நடையின் அலுப்புத் தெரியாத வண்ணம் விரிந்து செல்லும். பள்ளத்தாக்குகளிலுள்ள கிராமங்களின் வழியாக நடக்கும் போது அருகிலுள்ள மலைகளைப் மேலெடுத்துப் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டம் பிரமிக்கச் செய்யும்.


கிராமம் ஒன்றை நோக்கி...


கிராமமொன்றிலிருந்து மரங்கள் செறிந்த காடொன்றிற்கு...

எல்லாப் பாதைகளும் நடப்பதற்கு சுலபமாக இருந்துவிடுவதில்லை. அதுவும் வெயில்காலத்தில் மலைகளில் ஏற்றம் மிகுந்த பாதையில் நடப்பதற்குக் கேட்கவே வேண்டாம். முகட்டை ஏறி அடைந்துவிட்டு வந்த பாதையைத் திரும்பிப் பார்த்ததால், களைப்பெல்லாம் காணாமல் போய்விடும்.


இதுவும் ஒரு பாதை...


அதோ அந்த மலையுச்சியிலிருந்து இங்கு வர மூன்றரை மணிநேரங்கள் ஆகும்.

கோடைகாலத்திற்குக் காத்திருக்கிறேன்.

Friday, January 14, 2005

ஒருத்தன் போனாலென்ன?

சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பற்றி வலைப்பதிவுகளில் வந்து கொண்டிருக்கும் தகவல்களை அவ்வப்போது படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சில விஷயங்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன.

பல மாதங்களாக இங்கே வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அச்சுப்பிரதி ஒரு நாள் நின்றுவிட்டது. எப்பொழுது சந்தா முடிகிறதென்று பார்க்க நானும், சந்தா முடியப்போகுமுன் சந்தாதாரருக்கு நினைவூட்ட அவர்களும் மறந்துவிட்ட சமயத்தில் (விற்பவர்கள் இப்படியா இருப்பது?!), காலச்சுவடு இணையத்திலேயே படிக்கக் கிடைப்பது தெரியவர, அதிலேயே எப்போதாவது படிக்கிறேன். சமீப காலத்தில் காலச்சுவட்டைப் பற்றிக் கேட்கும் சில செய்திகளும் சந்தாவைப் புதிப்பிப்பதற்கு உள்ள ஆர்வத்தைத் தள்ளிப்போடுகிறது, பார்க்கலாம்.

டாலர் தேசம் என்கிற புத்தகம் வருவதற்குமுன் பா.ராகவன் தனது வலைப்பதிவில் இந்தத் தேதிக்கு முன்னால் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு 30% தள்ளுபடி தரப்படும் என்று அறிவித்திருந்தார். மலிவாகக் கிடைக்கிறதே, அப்படியாவது ஊரில் இருப்போர் படிக்கட்டுமேயென அதை இந்தியாவிலிருக்கும் உறவினர் பெற்றுக்கொள்ளும் வகையில், கடைசி நாளன்று குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு மின்னஞ்சலொன்று அனுப்பினேன். அது கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதென்று நினைக்கிறேன். அவ்வஞ்சலிலேயே, ஒருவேளை தள்ளுபடிக்கான தேதி முடிவடைந்திருந்தாலும் சாதாரண விலையிலேயே அங்கு அனுப்பி வைக்கும்படியும் எழுதியதாக நினைவு. அனுப்பும்போதே ஒருவிதத் தயக்கத்துடன் இருந்த எனக்கு, பதிலொன்றும் வராமையைக் கண்டு ஏன் அனுப்பினோம் என்றாகிவிட்டது. ஒரு பிரதியை நான் வாங்காததாலோ அல்லது அதை எனக்கு விற்காததாலோ இருவருக்கும் ஒன்றும் நஷ்டம் வந்துவிடப்போவதில்லை.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களை வைத்துப்பார்த்து, கணிசமாக விற்க ஆரம்பித்துவிட்ட நிலையில் பதிப்பாளர்களுக்கு ஒரு-வாசகன் என்ன பெரிய பொருட்டாகிவிடப்போகிறான் என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.

கிடக்கட்டும் விடுங்கள், நல்ல இசையொன்றைக் கேட்போம்.

யொஹான் ஸெபாஸ்டியான் பாஹ் (Johann Sebastian Bach, 1685-1750)-ன் Air. இந்த Air-லேயே பல வடிவங்கள் (D-Dur, G,...)இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த இசை பல்வேறு கருவிகளால் இசைத்துப் பார்க்கப்பட்டுள்ளது. நான் கேட்டதில் (குழல், வயலின், ஆர்கன்), வயலினைக் கொண்டு வாசிக்கப்பட்ட D-Durதான் அருமையாக இருந்தது. இணையத்தில் தேடிப்பார்த்ததில் சுமாரான இந்த சுட்டி கிடைத்தது.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

Thursday, January 13, 2005

பொங்கலுக்கு முந்துன நாள்

நம்மூர்ல இன்னிக்கு போகீங்களா, ஒன்னுந் தெரியமாட்டேங்குதுங்க இங்க! இந்நேரம் எல்லா வூட்லயும் பூசி மொழிகி கோலம்போட்டு காப்புக் கட்டீருப்பாங்க. அத்தோட அத முடிச்சுக்கிட்டாப் பத்தாதுங்களா?

வெநாயகர் சதுர்த்தியன்னைக்கு எங்கூர் புள்ளயார் கோயிலுக்கு கொழுக்கட்டகளக் கொண்டுக்கிட்டுப்போயி வேண்டிக்குவாங்க. அதுக்கப்புறம் அதயே அங்க பெரசாதம்ன்னு திருப்பித் தருவாங்க. கோயில்ல அன்னைக்குக் கொஞ்ச நேரம் சீர்காழி, டி.எம்.எஸ் பாட்டுக பாடிக்கிட்டு இருக்கும். அந்தளவுக்குத்தான் வெநாயகர் சதுர்த்திங்கறது நடந்துக்கிட்டிருந்தது. இன்னிக்கென்னடான்னா வண்ண வண்ணமா அந்த வெநாயகர், இந்த வெநாயகர்ன்னு பல தினுசுல, அளவுல கண்ட ரசாயனச் சாமாங்களப் போட்டுச் செய்யறதோட நிக்காம, அதுகளத் தண்ணீல கரைக்கெறேம் பேர்வழின்னு சொல்லிக்கிட்டு கூட்டங்கூட்டமா சத்தம் போட்டுக்கிட்டுப் போய் கடல்ல கொட்டி நாறடிக்கறாங்க. அதப்பாத்துட்டு மித்த ஊரு சனம் சும்மா இருக்குங்களா, தம் பங்குக்கு ஆறு, கொளம் குட்டைகள ஒரு வழி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

அதமாதிரியே போகியக் கொண்டாடரேன்னுட்டு கண்டதப் போட்டு எரிச்சு கூத்தடிச்சிட்டிருக்காங்க. இப்படி குப்ப கூளத்த வழில போட்டு எரிக்கற சமாச்சாரத்த எங்கயும் பாத்ததில்லீங்க. எதெதுலயோ முன்னேறறோங்கறோம், இதுகள்ல மட்டும் ஏம்பின்னுக்குப் போறோம்னு தெரீலீங்க!

Wednesday, January 12, 2005

ரயிலை மறந்தோம்!

தமிழகத்தில் பிரயாணம் என்பது பேருந்தை மையமாகக் கொண்டே இருப்பது என்னளவில் கேள்விக்குரியது. கோவையிலிருந்து நாற்பது கி.மீக்குள் இருக்கும் பொள்ளாச்சியானாலும் சரி, சுமார் ஐந்நூறு கி.மீ தொலைவில் இருக்கும் சென்னையானாலும் சரி, பேருந்தில் சென்று நொந்து நூலாக யாரும் தயங்குவதில்லை. குளிரூட்டப்பட்ட சொகுசு வண்டியானாலும் சரி, குறிப்பிட்ட தொலைவிற்குமேல் பேருந்துப் பயணம் விரும்பத்தக்கதாகத் தோன்றவில்லை. பேருந்துகளிலேயே பெரும்பாலானோர் பயணிப்பது பின்வரும் காரணங்களினால் இருக்கலாம்:

பேருந்துக் கட்டணங்கள் குறைவு (ரயில் கட்டணங்களுடன் ஒப்பிடும்பொழுது).
நினைத்த நேரத்தில் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிச் சென்றுவிடுமளவில் அவை மலிந்துள்ளன.
செல்ல வேண்டிய இடங்கள் (கோவை போன்ற நகரங்களில்) பேருந்து நிலையங்களைச் சுற்றியே அமைந்துவிட்டன.
ரயில் இணைப்புகளின் போதாமை.
சரியான இணைப்புகள் இருப்பினும் எப்போதாவது ஒரு(அல்லது சில) முறை வரும் ரயில்கள்.
...
...

ரயில் நிர்வாகம் பயணிகளைத் தன்பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை விட்டுவிட்டு இருப்போர்களையும் இழந்து கொண்டிருக்கிறது (http://news.bbc.co.uk/1/hi/business/4152575.stm). இலாபமீட்டும் குறிக்கோளைக் கொண்டிருந்தார்களேயானால் சேவை, நேர்த்தித்திறன் முதலானவற்றில் முன்னேற்றம் தென்படும். இல்லையெனில் ஹைதரலி காலத்துச் சாமான்களையும் (அழுக்குப்படிந்த பெட்டிகள், ஐம்பதாண்டுகளுக்கு முன் வடிவமைத்த அதேபெட்டிகள், மோசமாகக் கையாளப்படும் ரயில்நிலையங்கள்...), முறைமைகளையும் வைத்துக் காலம் தள்ளிக் கொண்டிருக்கமாட்டார்கள். இங்கு குற்றம் சொல்வது என் நோக்கமல்ல; வளர மறுக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம்தான்.

அடிக்கடி ஒன்றை நினைத்துப்பார்ப்பேன். கோவை-மதுரைக்கிடையில் பரிதாபமான ஒற்றையடிப்பாதை போல ஒரு ரயில் பாதை செல்கிறது. இப்பாதையில் ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறையே ரயில்கள் செல்கின்றன என நினைக்கிறேன். இப்பாதையை மின்சார ரயில்கள் இயங்கும்வண்ணம் இருவழிப்பாதைகளாக மாற்றி, குறைந்தபட்சம் மணிக்கொரு முறையாவது ரயில்களை இயக்கினால் எவ்வளவு பேர் பயணடைவர்! உதாரணமாக, கோவை-பொள்ளாச்சிக்கு இடையில் மட்டும் கிட்டத்தட்ட தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நொடிக்கொருமுறை செல்லும் பேருந்துகளில் சென்று கொண்டுள்ளனர். இக்கூட்டத்தினர் கணிசமான அளவில் ரயில்களைப் பயன்படுத்தத் துவங்கினால் அச்சாலையில் பெருமளவிற்குப் போக்குவரத்துக் குறைவதுடன், எரிபொருளும் எவ்வளவோ மிச்சமாகும். ரயில்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துமாறு செய்தால் பயணச்செலவு தானாகக் குறையப்போகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற நிலையே இருக்கலாம். ம்...நாம் மட்டும் கனவு கண்டு என்ன பயன்?

-----------------

படம்:


சுவிஸில் உள்ள பிலாட்டுஸ் என்ற மலைமீது எடுத்த படம்.

இசை:

நான் வாங்கிய முதல் குறுந்தகட்டில் இருந்த பாடலென்று நினைக்கிறேன். பேத்தோவனின் [Ludwig van Beethoven (1770-1827)] Moonlight Sonata, 1st movement. அத்தகட்டில், பியானோ இசையுடன் பின்புலத்தில் வேறு சில வாத்தியங்களையும் இசைத்திருந்தனர். தூங்குமுன் கேட்டுப்பாருங்கள், இரவின் அமைதியைக் கூட்டும். mp3-ல் இப்பாடலுக்கான சுட்டி ஒன்று.

Tuesday, January 11, 2005

Pictures at an Exhibition

வரும் நாட்களில் நான் ரசித்த மேற்கத்திய செவ்வியல் (Classical, நன்றி: வெங்கட்) இசைகள் சிலவற்றைப் பற்றி தற்போக்காகச் (random) சொல்லலாமென்றுள்ளேன். எனவே, முதலில் சொல்லப்போகும் இசைக்கும் பின்னால் சொல்லப்போவதற்கும் ஏற்ற தாழ்வுகள் ஏதும் கிடையாது. இசையின் நுணுக்கங்களைப் பற்றியெல்லாம் அலசி ஆராயும் திறனில்லா நிலையில் நம்மால் முடிந்தது கேட்க மட்டுமே. பள்ளிகளில் இசை ஒரு பாடமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் (உருப்போடற இடத்துல உசுருள்ள சமாச்சாரத்துக்கு என்ன வேலன்னு கேக்கறீங்களா?).

இசை தொடர்பான சில சாதாரண சொற்களுக்குக்கூட ஓரளவு துல்லியமான தமிழ்ப்பதங்களைச் சொல்லச் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது; இது வருத்தமளிக்கும் நிலை. காட்டாக எதற்கெடுத்தாலும் இசையமைப்பாளர் என்றே பழகிவிட்ட பிறகு Musician, Composer-க்கு இடையிலுள்ள வித்தியாசத்தைச் சொல்வது எளிதாக இல்லை. அதேபோல Orchestra, Orchestration என்பவற்றிற்கெல்லாம் தட்டுத்தடுமாற வேண்டியுள்ளது; 'சேர்ந்திசை' என்பதெல்லாம் இதற்கு இணையான சொல்லாகத் தெரியவில்லை. தமிழில் ஒரு சொல்லைச் சொல்லும்போது நுட்பமாக இல்லாமல் பொதுப்படையாகவோ அல்லது சுற்றி வளைத்துச் சொல்லும் நிலையே உள்ளது. 'வாத்திய இசைக் கலைஞர்' என்று நீட்டி முழக்காமல் 'வாத்தியக்காரர்' என்று சொல்லிவிட்டுப் போகலாமே! சரி, அவ்வாராய்ச்சியை விட்டுவிட்டு எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்ல வருகிறேன்.

இன்றைக்கு முஸ்ஸோர்க்ஸ்க்கியின் Pictures at an Exhibition பற்றிக் காண்போம். மோடஸ்ட் முஸ்ஸோர்க்ஸ்க்கி (Modest Mussorgsky, 1839-1881) ரஷ்ய இசையமைப்பாளர். அவரது புகழ்பெற்ற உருவாக்கங்களில் ஒன்றுதான் மேற்சொன்னது.

இளவயதிலேயே இறந்துவிட்ட கட்டிடக் கலைஞரும் (architect), ஓவியருமான தன் நண்பர் விக்டோர் ஹார்ட்மானின் (Viktor Hartmann) நினைவாக பியானோவில் இசைப்பதற்காக எழுதிய இசையது. குறுந்தகட்டில் பல்வேறு வாத்தியங்களைக் கொண்டு இசைக்கப்பட்ட பதிவைக் (இப்போதைக்கு இதையே நான் பரிந்துரைப்பேன்) கேட்டுப் பழகிவிட்டு, இணையத்தில் கொஞ்சம் தேடிக் கண்டுபிடித்து பியானோவில் மட்டும் இசைக்கப்பட்டதைக் கேட்க (அதுவும் 'சாம்பிள்'கள்தான்) என்னவோ போல்தானிருந்தது. குறுந்தகட்டில் பதினான்கு துண்டுகளை(pieces)/பாடல்களை அடக்கிய இவ்விசை சுமார் 33.5 நிமிடங்களுக்குள் முடிகிறது.

Pictures at an Exhibition, ஹார்ட்மானின் ஓவியக் கண்காட்சியில் சுற்றி நடப்பதை விவரிக்கும் வண்ணமாக எழுதப்பட்டது.

Promenade - பார்வையாளர் (முஸ்ஸோர்க்ஸ்க்கி?) கண்காட்சியில் நுழைந்நது ஒரு படத்திலிருந்து மற்றொன்றிருக்கு செல்வதைக் குறிப்பதுடன், அப்படங்கள் ஏற்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தும்விதமாகவும் உள்ளன. இவை நான்கைந்து முறை திரும்ப வருகின்றன.
Gnom - இது க்னோம் போல இருக்கும் ஹார்ட்மானின் பாக்குவெட்டி போன்ற பொம்மையின் வடிவமைப்பு ஓவியத்தைப் பார்க்கும்போது வெளிப்படும் உணர்வு. க்னோம் என்பது லத்தீன் சொல், அர்த்தம் தேடிப்பார்க்கவேண்டும்.
Promenade 2 - இது இத்தாலியின் பழைய கோட்டையின் படத்திற்கு இட்டுச் செல்கிறது.
Il vecchio castello - அக்கோட்டையின் முன்பு நின்று பாடும் ஒருவரின் ஓவியத்திற்கான இசை.
Promenade 3 - இப்பாடல் பாரீஸில் இருக்கும் தோட்டமொன்றிற்கான படத்திற்கு அழைத்துச் செல்கிறது.
Tuileries - அத்தோட்டத்தில் குழந்தைகள் சத்தமிட்டு விளையாடிக்கொண்டிருக்கும் படத்திற்கான உணர்வு.
Bydlo - போலந்து நாட்டின் மாட்டுவண்டியின் படத்தைப் பார்த்து.
Promenade 4
Ballet des Poussins dans leurs coques - பாலே நடமொன்றிற்காக ஹார்ட்மான் வரைந்த உடைகளின் வடிவமைப்பு.
Samuel Goldenberg et Schmulye - நான் மிகவும் ரசித்த இசையிது. இங்கு முஸ்ஸோர்க்ஸ்க்கி பணக்கார, ஏழை யூதர்களிருவரின் படங்களைக் கண்டு வெளிப்படுத்தும் உணர்வு.
Le Marche de Limoges - சந்தை ஒன்றின் ஓவியம், இசையில்.
Catacombae (Sepulcrum Romanum) - சுடுகாட்டு ஓவியமொன்றிற்கான இசை.
Die Huette d.Baba Yaga-La Cabane - பாபா யாகா ரஷ்ய கதைகளில் வரும் ஒரு சூனியக்காரி. பாபா யாகாவின் குடிசையைப் போன்றதொரு கடிகாரமொன்றிற்கான வடிவமைப்பு ஓவியத்தைப் பார்த்து எழுந்த இசை.
La Porte de Kiev - கடைசியாக, ஹார்ட்மானின் ஓவியமான கியேவ் (சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த உக்ரைன் நாட்டின் தலைநகரம்) நகரத்திற்கான மாபெரும் கதவிற்கான அற்புதமான இசை.

முஸ்ஸோர்க்கியைப் பற்றியோ அவரது இசைகளைப் பற்றியோ மேலும் தெரிந்துகொள்ள.....என்ன அதற்குள் கூகிளுக்குப் போய்விட்டீர்களா?

Monday, January 10, 2005

தங்கங்களே!...

புகைப்படங்கள் சிலவற்றை இங்கே இடப்போவது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதற்கு வேண்டிய படமொன்றை மாலையில் தெரிவு செய்துகொள்ளலாமென நினைத்திருந்த வேளையில், சில படங்கள் மின்னஞ்சலில் வந்தன. சரி அவற்றையே இட்டுவிடலாமென்று...இதோ அவை:


ஆமாங்கோ, தங்கக் கட்டிகளேதான்!


இங்கிருந்து எடுத்ததைத்தான் அப்படி அடுக்கீருக்காங்க. இதென்ன பாதாளச் சொரங்கமா?

ம்.ஹும்..

அட, 'டாங்கர்' வண்டி!! இவங்கள எல்லாம் எங்கயோ பாத்த மாதிரி இருக்கே!

ஆமாமாம், அவங்களேதான். குழிக்குள்ளார இருந்து புடிச்சதாச் சொல்லி ஒருத்தரோட பல்லப் புடிச்சு பாத்தாங்களே, நெனவிருக்குங்களா? அவரோடதுங்களாம் இந்தத் தங்கமெல்லாம்!!! என்னமோ போங்க!

நான் ஆணையிட்டால்...

12.01.2005 'ஜூனியர்' விகடனில் வந்திருக்கும் ஒரு கட்டுரை ("வேதனையில் சமூக சேவகி"), சுனாமியால் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற தமிழக அமைச்சர் ஒருவர் பிறப்பித்த சில உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்கிறது. தனிப்பட்ட முறையில் அமைச்சராக இருக்கும் மனிதர் ஒருவர் எப்படிப்பட்டவராகவோ, எக்கட்சியைச் சார்ந்தவராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அமைச்சர் என்று வரும்போது அது மதிக்கப்பட வேண்டிய பொறுப்பு. அந்நிலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, "நீங்கள் சொல்லி, நாங்கள் என்ன கேட்பது" என்று உதாசீனம் செய்தால் என்னவென்பது? அமைச்சர் ஆணையிட்டால் அதிகாரிகள் அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென்ற விதிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அவ்வாறு இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.

அதேபோன்று, சென்ற வெள்ளியன்று (07.01.2005) சென்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்து முடிந்தபின் திமுக துணைப்பொதுச் செயலாளர் அளித்துள்ள பேட்டியில் " 'ஆணையிட்டிருக்கிறேன்' என 25 முறை முதல்வர் கூறினார். அந்த ஆணைகள் எல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, செயல்வடிவம் பெற வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற வேண்டும். இதுவே எங்களது விருப்பம்." என்கிறார் (நன்றி: தினமணி 08.01.2005). ஆணையிட்டாலும் அது நிறைவேறாமல் போகக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட நம்பிக்கையாகவே இது உள்ளது. ஆணைகளுக்கு ஏன் இந்த நிலைமை?

ஆணைகள் தொடர்பான வேறொரு செய்தி.

இந்த வார நட்சத்திரம் - எதிர்பாரா அழைப்பு

மாதத்திற்குச் சில முறை எழுதிக் கொண்டிருந்தேன். இனி ஒரு வாரத்திற்கு தினமும் எழுதியாக வேண்டும். சுதந்திரத்தைப் பறித்த தமிழ்மணம் வாழ்க! :-)

அனைவருக்கும் வணக்கம்!

எதை எழுதுவது? சென்ற வாரம் தமிழ்சசி, அதற்கு முன் வெங்கட் போன்றோர் ஓரு துறையை எடுத்துக்கொண்டு அதில் தூள்கிளப்பினார்கள், அதுபோல் இங்கு நடக்காது. ஆகவே வழக்கம்போல எதையாவது எழுதிச்செல்ல முயல்கிறேன். தினமும் புகைப்படம் ஒன்றை இடலாமென்று ஓர் எண்ணமுள்ளது, முடிந்தால் அதைப்பற்றிய சிறு குறிப்பும். கூடவே, நான்கேட்ட சில மேற்கத்திய செவ்வியல் இசைகளில் பிடித்தவற்றைச் சொல்லலாமென்றுள்ளேன், குறைந்தபட்சம் பெயர்களையாவது.

எழுதப்போகும் பதிவுகள் அளவில் சுமாரானவையாக இருக்கலாம் (சட்டி-அகப்பையை நினைத்துக் கொள்ளவும்), ஒருவாரம் எப்படியேனும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

Thursday, January 06, 2005

டியேகோ கார்சியா (Diego Garcia)

அமெரிக்காவின் இராணுவ தளங்கள் ஜெர்மனி, தென்கொரியா போன்ற நாடுகளில் இருப்பது தெரியும். ஆனால் இந்தியப் பெருங்கடலின் தென்முனையில் உள்ள ஒரு தீவில்கூட இருப்பது இன்றுதான் தெரியவந்தது, சுனாமியின் பாதிப்பு இத்தீவிற்கு வரவில்லை என்ற செய்தியின் வாயிலாக. அத்தீவு மட்டும் எப்படித் தப்பித்தது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

டியேகோ கார்சியா இந்தியப் பெருங்கடலின் தென்முனையிலுள்ள பெரிய தீவு; இந்தியாவிலிருந்து 1000 மைல்களுக்கு அப்பாலுள்ளது. பிரிட்டிஷாருக்குச் சொந்தமான இத்தீவில் இப்பொழுது அமெரிக்க விமான மற்றும் கடற்படைப் பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கிருந்தும் வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான் மீதான விமானத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சி.ஐ.ஏவின் சில வேலைகளுக்கும் இத்தீவு உபயோகப்படுத்தப்படுகிறதாம்.

டியேகோ கார்சியாவைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம். அதன் வரலாறைப் படிப்பதால் ஏற்படுவது வழக்கமான குமுறல்தான், அதனால் ஆகிவிடப்போவது ஒன்றுமில்லை.

தொடர்புடைய சில செய்திகள்:
Diego Garcia Navy base reports no damage from quake, tsunamis
Diego Garcia Escapes Tsunami Damage

Wednesday, January 05, 2005

ஐரோப்பாவின் அஞ்சலி

சுனாமியின் தாக்குதலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஐரோப்பாவின் பெருநகரங்கள் பலவற்றில் இன்று மதியம் 12.00 மணிக்கு மூன்று நிமிட மெளனம் அனுசரிக்கப்பட்டது. தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன; கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. விமான நிலையங்கள், பங்குச் சந்தைகள், பள்ளிகள், நகரின் முக்கிய வளாகங்கள் முதலான பொதுவிடங்களில் மக்கள் அப்படியே நின்று அஞ்சலி செலுத்தியதைச் செய்திகளிலும் காணமுடிந்தது. பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அம்மூன்று நிமிடங்களுக்கு ஒலியை நிறுத்தியிருந்தனவாம்.

நிறுவனங்கள் தங்களது இணைய அகத்தின் (intranet) வாயிலாக அழைப்பு விட்டிருக்கக்கூடும் (எங்களுக்கு அப்படித்தான் செய்திருந்தார்கள்).

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகபட்ச உதவித்தொகையை (500 மில்லியன் யூரோக்கள்) ஜெர்மனி இன்று அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இன்று தேசிய நிதிச் சேகரிப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியப் பொது ஒலி(ளி)பரப்பு ஸ்தாபனத்தின் அங்கமான ஓர் அறக்கட்டளை மூலம் நிதி சேகரிக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் அனுப்பப்படுகிறது. நிதியை இலவசத் தொலைபேசி எண், ஒரு குறிப்பிட்ட அஞ்சல்வங்கிக் கணக்கு மற்றும் இணையத்தின் மூலமாகச் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இத்துடன், பிரதானத் தொ.கா அலைவரிசையொன்றில் 100 நிமிடங்களுக்கான நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்பி அதன் மூலமும் நிதியைச் சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் (கொஞ்ச நேரம் பார்த்ததில்), பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து (இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து) செய்தியாளர்கள் மூலம் நேரடி தகவல்களைப் பெறுதல்; பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்கள் அல்லது அவர்களைச் சார்ந்தோரைப் பற்றிய செய்திகள்; அரங்கத்தில் குழுமியுள்ள பல்வேறு நாட்டைச் சார்ந்த மக்களிடையே உரையாடுதல்; பாடல்/நடனம் போன்ற ஒன்றிரண்டு கலை நிகழ்ச்சிகள் (மூன்று பேர் அடங்கிய குழுவொன்று பரத நாட்டியம் ஆடினர்) போன்றவை இடம் பெற்றிருந்தன.

இதுவரை 50 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் (1 CHF = .857 USD) மேல் குவிந்துள்ளதாகத் தெரிகிறது (ஆன்-லைன் வழியாக மட்டும்). 100 மில்லியன்களைத் தாண்டக்கூடும்.

Tuesday, January 04, 2005

ஒன்னு ரெண்டு மூனு

ஒன்று - யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு - முகத்தில் கண் இரண்டு
மூன்று - முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு - நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து - ஒருகை விரல் ஐந்து
ஆறு - ஈயின் கால் ஆறு
ஏழு - வாரத்தின் நாள் ஏழு
எட்டு - சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது - தானிய வகை ஒன்பது
பத்து - இருகை விரல் பத்து.

மேற்கண்ட பாடல் 'எனது முதல் மழலை மொழி பாடல்கள்' என்ற புத்தகத்தில் (ISBN: 81-7478-233-8) இடம்பெற்றுள்ளது. இதை வாசித்துக் காட்டும் போதெல்லாம் ஏனோ கீழ்க்கண்ட பாடல்தான் நினைவுக்கு வந்து காற்றில் கலக்கிறது:

ஒன்னு - உங்க வீட்டுப் பொண்ணு
ரெண்டு - ராமலிங்கம் கண்ணு
மூனு - முருங்கப் பட்டத் தோலு
நாலு - நாய்க்குட்டி வாலு
அஞ்சு - அவரக்காப் பிஞ்சு
ஆறு - ரோட்டுமேல காரு
ஏழு - எலிக்குட்டி வாலு
எட்டு - டொம் டொம் தட்டு
ஒம்போது - ?
பத்து - ?

ஒம்போது, பத்து? - ம். ஹும்.. ஞாபகத்திற்கு வருவேனா என்கிறது; யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். நன்றி!

நல்லது செய்தல் ஆற்றீராயினும்

Criminals target tsunami victims

மனித குலம் தொடர்ந்து சீரழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறதென்று கவலைப்படுவதா?
மனிதனுக்குப் பணத்தின் மீது மட்டுமே பிடித்த பேராசை என்பதா?
இவர்களையும் சுனாமி கொண்டு சென்றிருக்கலாமே என்று சபிப்பதா?
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! என்று நொந்துகொள்வதா?

'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'-என்று நன்றாகவேதான் சொல்லிவைத்தார்கள், கேட்பார்தான் யாருமில்லை.