படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, March 27, 2004

சிம்ப்யூட்டர்

"இந்தியாவிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட முதல் (கைக்)கணினி" அமிடா என்ற பெயருடன் நேற்று சந்தைக்கு வந்துள்ளது. மகிழ்ச்சியளிக்கும் செய்தி. மூன்று வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ள அமிடா, உலாவி, மின்னஞ்சல், எம்பி3 இசைப்பான் முதலான பல அம்சங்களைக் கொண்டுள்ளது. 'சைகைகளை உணர்ந்து செயல்படக்கூடிய உலகின் முதல் கணினி'யாம் இது. விலை ரூ.10,000-லிருந்து ஆரம்பிக்கிறது.

அமிடாவின் படத்தைப் பார்த்ததும் PDA-வாக இருக்குமோ என்றெண்ணினேன். கேள்வி-பதில் (faq) இல்லை என்கிறது. மேலும் விபரங்களுக்கு...

Friday, March 26, 2004

என்னவென்று சொல்ல...

சாந்திநிகேதன் அருங்காட்சியகத்திலிருந்து இரவீந்திரநாத் தாகூர் பெற்ற நோபல் பரிசு களவுபோயுள்ளது பற்றி நாளிதழ்கள் அனைத்திலும் நேற்று செய்தி வந்திருந்தது. சாதாரணத் திருட்டுகள் சர்வசாதாரணமாக நடப்பதால் (ஆளை வெட்டி நடக்கும் கொள்ளைகள் கூட) அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இத்திருட்டு மகாக் கேவலமான ஒன்று. நம் நாட்டிற்குக் கிடைத்த அற்புதமான மனிதர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு சர்வதேச அங்கீகாரத்தைக் களவாடித் தங்களை அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.

யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள் இப்படியொரு திருட்டு நடந்திருக்குமென்று! அம்மாநிலக் காவல்துறை விரைவில் களவாளர்களைக் கண்டுபிடித்து இழந்த பொருளை மீட்பார்கள் என எதிர்பார்ப்போம்.

Monday, March 22, 2004

ஷேக் யாசின் படுகொலை

பாலஸ்தீனத்தில் இன்று ஒரு படுகொலை நடந்துள்ளது. ஹமாஸ் என்ற அமைப்பை நிறுவியவரும், மதத் தலைவருமான ஷேக் யாசின் (67) காஸாவில் இஸ்ரேலியர்களின் ஹெலிகாப்டர் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். யாசர் அராஃபாத்திற்கு அடுத்த படியாக பாலஸ்தீனர்களிடையே பிரபலமடைந்தவர் இவர் உடலால் ஊனமுற்றவரும்கூட. சென்ற ஆண்டில் ஒருமுறை நடந்த தாக்குதலில் தப்பியவர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தேர்ந்தெடுத்த பாதை வன்முறை - பெரும்பாலான தற்கொலைத் தாக்குதல்களுக்கு இது பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலியர்களின் மீதான தாக்குதல்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் யாசின் தூண்டுகோலாக இருப்பதால், அவரை முடித்துவிட்டனர். இப்படுகொலை நடந்த காலகட்டம் மிக முக்கியமானது. ஷரோன் (இஸ்ரேலியப் பிரதமர்), காஸா பகுதியிலுள்ள சில ஆக்கிரமிப்புகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார். "இஸ்ரேல் இங்கிருந்து கொஞ்சம் விலகிக் கொள்ள பாலஸ்தீனர்கள் கொடுக்க வேண்டிய விலை தான் இன்றைய படுகொலையோ" என்று ஒரு பத்திரிக்கையில் விமர்சித்துள்ளனர்.

எது எப்படியிருப்பினும் இப்படுகொலை மேலும் வன்முறையையே ஊக்குவிக்கப்போகிறது. வரும் நாட்களை நினைத்துப் பார்க்க அச்சமாயுள்ளது.

ஐநா, ஐரோப்பியக் கூட்டமைப்பு, ரஷ்யா ஆகியவை இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன. 'இஸ்ரேலுக்கு தனது நாட்டைக் காத்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளது' - இது அமெரிக்கா. ஏனெனில் "நாளை பின்-லாடனை இப்படி தீர்த்துக் கட்ட வேண்டியிருப்பதால், இன்று ஷரோனைக் கண்டிப்பது முரணாக இருக்காதா பின்னே!".

எல்லா இடங்களிலும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று சொல்லிக்கொண்டு ஆள்வோர் எதிரிகளைத் தீர்த்துக்கொண்டுள்ளனர். படைபலமும், அதிகாரமும் இருந்தால் போதும் இதற்கு. என்றுதான் விடிவுகாலமோ! :(

Saturday, March 20, 2004

பேரழிவு தவிர்க்கமுடியாதது!

SharpReader-வுடன் வந்த சில RSS ஓடைகளில் Wired News-ம் ஒன்று. இன்று அதில் வந்த ஒரு செய்தி: பிரிட்டனில் நடந்த ஒரு கணிப்பில், கடந்த 40 ஆண்டுகளில் 54 சதவீதப் பறவைகளும், 28 சதவீதத் தாவரங்களும், அதிர்ச்சியளிக்கும் வகையில் 71 சதவீத வண்ணத்துப்பூச்சிகளும் அழிந்து விட்டன என்று தெரியவந்துள்ளது. இதுபோன்ற செய்திகள் தற்காலங்களில் கேட்பதற்குப் புதிதல்லவெனினும் வருத்தமளிக்கக்கூடியது. இப்பரந்துபட்ட உலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ அவரவர் தம்மால் ஆனதைச் செய்துகொண்டேயிருக்க வேண்டியதுதான்.

முதல் எதிர்வினை

மைக்ரோசாஃப்ட்டின் தமிழ்க் கலைச்சொல் திட்டம் குறித்த தனது கருத்தைத் திண்ணையில் ஆசாரகீனன் எழுதியுள்ளார்.

Wednesday, March 17, 2004

ஹாலிவுட்டின் புது வரவும் சர்ச்சைகளும்

சொந்தப்பணமாக கிட்டத்தட்ட $30 மில்லியன்களைப் போட்டு சுமார் $350 மில்லியன்களை வழித்திருக்கிறார் என்று ஒரு கூட்டம்; இரத்தக் கறை வடியும் கிராஃபிக் குப்பை என்று ஒரு கூட்டம்; தங்களது இனம்தான் அவரது மரணத்திற்கு காரணமென்று தவறான தகவல்களைச் சொல்வதாக ஒரு கூட்டம்; அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இருந்ததைத்தான் பிரமாதமாகக் காட்டியுள்ளனர் என்று ஒரு கூட்டமும் இப்படத்தைப் பற்றிப் புலம்பியும், சிலாகித்தும், திட்டிக் கொண்டும் உள்ளனர். இது தற்போதைக்கு வெளியாகியுள்ள அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே! ஐரோப்பாவிற்கு இந்த மாத இறுதியிலும், அடுத்த மாதத்துவக்கத்திலும் வரவுள்ளது. ஆனாலும் கூட்டங்களின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.

Tuesday, March 16, 2004

ஸ்பானியத் தேர்தல் முடிவுகள்

சென்ற வாரத்தில் ஸ்பெயினில் நடந்த குண்டு வெடிப்புகளின் தாக்கம் கடந்த ஞாயிறு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் எதிரொலித்துள்ளது. ஆளும் 'பாப்புலர் பார்ட்டி'யிடமிருந்து சோஷலிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஈராக் போருக்கு பலியான முதல் ஆட்சி. பிரதம மந்திரியாக வரவிருப்பவர் Jose Luis Rodriguez Zapatero.

சனிக்கிழமை இரவு மாட்ரிட்டில் உள்ள 'பாப்புலர் பார்ட்டி'யின் தலைமை அலுவலகத்திற்கு முன்பு மக்கள் இக்கட்சி சுயநலத்திற்காக குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மறைப்பதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்றிரவுதான் உள்துறை அமைச்சர் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக அறிவித்தார் (3 மொராக்கியர்கள், 2 இந்தியர்கள்).

வெற்றி பெற்றதும் Zapatero, ஜூன் 30ற்குள் ஈராக்கின் நிலைமையில் மாற்றம் ஏதும் ஏற்படாவிடில் (ஐநாவிடம்/ஈராக்கியர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தல்) அங்குள்ள தனது நாட்டுத் துருப்புகளைத் திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளார். (ஈராக் போரையும், அரசாங்கம் அச்சமயத்தில் எடுத்த நிலைப்பாட்டையும், போருக்குப் பின்பு அங்கு படைகளை அனுப்பியதையும் பெரும்பாலான ஸ்பானிய மக்கள் விரும்பவில்லை.)

படைகளைத் திரும்பப் பெறும் இம்முடிவை பல சாதகபாதகங்களைக் கொண்டது.

ஆதரிப்போர் :
1. இப்போருக்கு அரசு ஆதரவளித்ததனால்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, ஆகவே படைகளைத் திரும்ப வரவழைத்தலே நல்லது.
2. மேலும் தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.

விமர்சிப்போர்:
1. படைகளைத் திரும்ப அழைத்தால் பயங்கரவாதிகளது செயலுக்கு 'வெற்றி' கிடைத்ததாக ஆகிவிடும். இதுபோல் மேலும் மேலும் தாக்குதல் நடத்த முயற்சிப்பார்கள்.
2. மற்ற நாடுகளும் வருங்காலத்தில் தமது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தங்களது படைகளை திரும்ப அழைக்கலாம்.
3. கூட்டணிப்படைகள் வெளியேறுவதால் ஈராக்கிலுள்ள நிலைமை மோசமைடயக் கூடும்.

மேற்கண்ட நிலையை அமெரிக்கா நிச்சயம் விரும்பாது. பார்ப்போம்.

Monday, March 15, 2004

ஸ்விஸ் பட்டாளக் கத்தி

USB ஸ்விஸ் நிறுவனமான VICTORINOX-ன் பைக்கத்திகள், குறிப்பாக "Swiss Army Knives", மிகவும் பிரசித்தமானவை. இவற்றில் கத்தி, திருப்புளி, ரம்பம், கத்தரிக்கோல், அரம், பல்குத்தி, கடிகாரம், பேனா, முட்கரண்டி, திசைகாட்டி, டப்பா திறப்பான், சிறு விளக்கு, அது இதுவென்று என்னென்னவெல்லாமோ சேர்த்து பல வடிவங்களில் விற்பனைக்குவிட்டுள்ளனர். இந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ள வஸ்து USB நினைவகமாகும்.

ஹான்னோவரில் (ஜெர்மனி) இம்மாதம் 18-23ல் நடக்கும் CeBIT இப்புதுச்சரக்கு அரங்கேறுகிறது. தொடக்கத்தில் 64MB மற்றும் 128MB அளவுகளுடன் உள்ளூரில் சுற்றுவதற்கு கத்தி கபடாக்களுடன் (கபடா என்றால் என்ன?) ஒரு மாடலும் (மாடலுக்கு தமிழில்... வடிவம்? ம்ஹும்..), விமானத்தில் பயணம் செய்ய அவை இல்லாமல் ஒரு மாடலும் சந்தைக்கு வருகின்றனவாம். USB நினைவகம் ஏற்கனவே இல்லாதவர்கள் ஒன்று வாங்க முயற்சிக்கலாம். விலை? 64MB அளவுள்ளது, €55 என்று ஒரு வலைப்பக்கத்தில் கண்டேன். இதன் தரவுத்தாளை (datasheet) இங்கே சென்று காணுங்கள்.

Friday, March 12, 2004

மாட்ரிட் ரயில் குண்டுவெடிப்புகள்

மாட்ரிட் நகர ரயில்களில் நேற்று காலை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் கிட்டத்தட்ட இருநூறு பேர் பலியாகியுள்ளனர், இன்னும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. காயம்பட்டோர் ஆயிரக்கணக்கில்! என்ன பாவம் செய்தார்கள் அப்பாவிப் பொதுமக்கள்? தங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்குமென்று கனவில்கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அவரவர்பாட்டுக்கு காலையில் தங்கள் அலுவல்களுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் ரத்தமும் சதையுமாக ஓடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எத்தனையோ குடும்பங்கள் துயரத்தில் தத்தளித்துக்கொண்டுள்ளன.

ஸ்பெயின் நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில் (குறிப்பாக சுற்றுலா மற்றும் விமான நிறுவனங்களின் பங்குகள்) சரிவு (இன்று ஓரளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாம்!). இன்றைக்கு ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் இப்பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்து மாபெரும் பேரணிகள் நடந்து கொண்டுள்ளன (தொ.காவில் அவ்வப்பொழுது சிலநிமிடங்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றனர்).

இப்பாதகச் செயலைச் செய்தது யார்? அங்குள்ள மக்கள், அரசியல்வாதிகளால் உடனடியாகச் சுட்டப்படுவது ETA எனப்படும் உள்நாட்டுப் பிரிவினைவாத அமைப்பாகும். அதன் வரலாறு இரத்தக் கரைகளால் நிரம்பியது. இவ்வமைப்போ தாங்கள் செய்யவில்லையென்று மறுத்துள்ளது. ஆனாலும் அந்நாட்டு அரசு இவ்வமைப்பை பலமாகவே சந்தேகிக்கிறது. இத்தாக்குதல்களை உலகலாவிய பயங்கரவாத அமைப்பான அல்-கயிதா நடத்தியிருக்கக்கூடுமென்ற கருத்தும் நிலவுகிறது. விரைவில் உண்மை தெரியவருமென்று நம்புகிறேன்.

இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று என்ன சாதிக்கப்போகின்றன இவ்வமைப்புகள்? எந்தக் காரணத்தைக் கூறியும் இதை நியாயப்படுத்தவே முடியாது. இவ்வலைப்பதிவு பலியானவர்களின் அஞ்சலிக்காக கனத்த மனதுடன் வைக்கப்படும் ஒரு சிறு மலர்க்கொத்து.

Wednesday, March 10, 2004

யாழ்தமிழறிந்த அனைவருக்கும் பரிச்சயப்பட்ட வார்த்தையிது. யாழ் என்ற ஓர் இசைக்கருவி தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு காலத்தில் கோலோச்சியிருக்க வேண்டும். இல்லையெனில் பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ் ....(என்று 7 அல்லது 8ம் வகுப்பில் உருப்போட்டதாக ஞாபகம், மற்றவை மறந்துவிட்டது) என்று பலவகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. யாழர்கள், யாழினிகள் என்று ஒரு கூட்டமும் இருந்திருக்கலாம்.

தமிழ் கூறும் நல்லுலகில் இருந்த இந்த யாழ் எப்படி வழக்கொழிந்து போனது?
இது அயலிலிருந்து இறக்குமதியான கருவியா இல்லை தமிழர்களே உருவாக்கிய ஒன்றா?
ஆங்கிலத்தில் Harp எனப்படும் கருவிக்கும் யாழுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? [இந்த Harp, உலகின் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருக்கும் கருவியாம். (உபயம்:கூகிள் தேடியந்திரம்)]

விபுலானந்த அடிகள் என்பவர் கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் உழைத்து 1947-ல் யாழ் நூல் என்ற புத்தகத்தை வெளியிட்டதாக இந்த இணையப்பக்கம் தெரிவிக்கிறது. ஒருவேளை மேற்கண்ட கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கலாம். இப்புத்தகம் ஏதாவது நூலகத்தில் தூசியைத் தாங்கிக் கொண்டிருக்கும். தற்போது விற்பனையில் எங்காவது உள்ளதா என்று பார்க்கவேண்டும்.

பாரதிதாசன் காலத்தில் இக்கருவி இருந்திருக்கிறதா? "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா?" என்று அவ்விசையைக் கேட்காமல் எப்படி எழுதியிருப்பார்? (வீணையே யாழின் ஒருவடிவம் என்கிறார்கள், ஒருவேளை அதைச் சொல்லியிருப்பரோ?)

Tuesday, March 09, 2004

மைக்ரோசாஃப்ட் தமிழ்க் கலைச்சொல் அகராதித் திட்டம்

தமிழா! மடலாற்குழுவிற்கு திரு.மாலன் அவர்களிடமிருந்து இன்று வந்த ஒரு மின்னஞ்சல் பின்வருமாறு:
"மென்பொருட்களில் பயன்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது, அந்தக் கலைச்சொற்களைக் கொண்டு ஓர் அகராதி உருவாக்குவது, பின்னர் அவற்றைக் கொண்டு விண்டோஸ், MS ஆபீஸ் ஆகியவற்றைத் தமிழ்ப்படுத்துவது என்ற ஒரு திட்டத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அது குறித்த அறிவிப்பை இந்த முகவரியில் நீங்கள் காணலாம். http://www.bhashaindia.com/CGW/TA/Tamil.aspx

இந்தத் திட்டத்தில் பங்கேற்க வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்".

இவ்வளவு பெரிய நிறுவனம் எதற்கு தன்னார்வலர்களை எதிர்நோக்குகின்றதென்று புரியவில்லை! விஷயம் தெரிந்தவர்கள் இதுபற்றி விவாதிப்பார்களென எதிர்நோக்குகிறேன்.Sunday, March 07, 2004

பந்தயம்

மின்னஞ்சலாக வந்த வழங்கல் காட்சி ஒன்றின் உரை, ஒரு தமாஷுக்கு (நிசத்திலும் இப்படி இருக்கலாம், சில இடங்களில்):

Once upon a time there was an Indian rowing team.

India and Japan agreed to do an annual rowing race. Each team should contain 8 men.

Both teams worked really hard to get in the best shape. The day the race started both teams were in similar condition. ...the Japanese won by 1 mile.

The mood in the Indian team was really close to the freeze point. The top management decided to win the race next year. So they established a team of analysts to observer the situation and recommend an appropirate solution.

After several detailed analysis the team found out that Japanese had 7 rowers and only one captain.

Ofcourse the Indian team had 7 captains but only one rower.

Facing such critical scenario the management showed an unexpected wisdom: they hired a consulting company to restructure the Indian team.

After several months the consultants came up with the conclusion that there were too many captains and too few rowers in the Indian team. A solution was proposed based on this analysis: the structure of the Indian team has to be changed!

As of today there will be only 4 captains in the team led by 2 managers, one top-manager and one rower. Besides that, they suggested to improve the rower's working environment and to give him higher competencies.

Next year the Japanese won by 2 miles.

The Indian team immediately displaced the rower from the team based on his unsatisfactory performance.

But the bonus award was paid to the management for the strong motivation to the team showed during the preparation phase.

The consulting company prepared a new analysis, which showed that the strategy was good, the motivation was OK, but the used tool has to be improved.

Currently the Indian team is designing a new boat.