படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, February 29, 2004

"தன்-சா-வூர்"

மகாமகச் செய்திகளால் கும்பகோணம் அடிக்கடி கண்ணில் தென்படுகிறது. கும்பகோணம் என்றதும் மகாமகம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ ஸ்ரீனிவாச ராமானுஜன் வருகிறார். இந்தியா, உலகிற்கு அளித்த பொக்கிஷங்களில் ஒருவரான அவரது வரலாற்றை Robert Kanigel என்பவர் The Man Who Knew Infinity - A life of the genius Ramanujan எழுதிய புத்தகத்தில் முன்பு படித்தது. கும்பகோணத்தில் தொடங்கி, சென்னை, கேம்பிரிட்ஜ் என்று ராமானுஜன் வாழ்வில் வரும் பல ஊர்களையும், பல மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் விவரிக்கும் நேர்த்தியான ஒரு புத்தகம் இது.

"கொடிது கொடிது இளமையில் வறுமை" எவ்வளவு உண்மையானது ராமானுஜன் வாழ்வில்! நல்ல மனிதர்கள் சிலரால் உலகிற்கு அறியப்பட்டார். கடும் உழைப்பும், திறமையும் மட்டும் போதாது, அங்கீகாரம், சிபாரிசுகள், அதிர்ஷ்டம் எல்லாமும் வெற்றிபெறத் தேவைப்படுகின்றன. அன்றிருந்த சூழ்நிலைகளின் காரணமாக இளமையிலேயே உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு அற்ப ஆயுளில் உயிர் துறந்திருக்கிறார். கணித உலகம் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் முயன்று கொண்டுள்ளது.

(நோய்வாய்ப்பட்ட தன் வாழ்நாளின் கடைசி காலத்தில்கூட ஒருகட்டத்தில் அம்மேதை தஞ்சாவூரை நகையாக விளித்த வண்ணம்தான் மேலுள்ளது.)

Wednesday, February 25, 2004

வம்புக்கு வேட்டு

மதுரை சட்டக் கல்லூரியில் இளம் வகுப்பு மாணவர்களை வம்பு [Rag-ற்கு சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை :( - சீண்டல், கேலி, வம்பு?] செய்து துன்புறுத்தியது தொடர்பாக பதினெட்டு மாணவர்களை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கல்லூரியிலிருந்தே நீக்க உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவையென்றேபடுகிறது. மாணவர்கள் பெரும்பாலும் குழுவாகச் சேரும்போதுதான் தங்களது 'வீர'த்தைக் காண்பிக்கின்றனர். தங்களது சிந்தனைகளைப் படிப்பிலும் எதிர்காலத்தை நோக்கியும் செலுத்துவதை விட்டுவிட்டு இம்மாதிரி வம்புதும்புகள் செய்வது அவர்களுக்கு நன்மை பயக்காது. மாணவர்கள் தங்களுக்குள் கேலி செய்ய வேண்டியதுதான், ஒரு வரைமுறை என்று உண்டல்லவா!

வன்முறையால் மதுரைப் பகுதி பொருளாதார ரீதியில் மற்ற நகரங்களைவிட பின்தங்கியுள்ளதைப் பற்றி யாரும் கவலை கொள்வாரில்லை. இவ்விமரிசனக் கட்டுரையில் மதுரை பின் தங்க ஆரம்பித்தமைக்கான குறிப்பு காணப்படுகிறது.

Monday, February 23, 2004

இந்திய ஊழல் சாதனை

இந்த ஊழல் முன் நடந்தவற்றையெல்லாம் எடுத்து விழுங்கிவிட்டது. இத்தனை கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று யாராலும் சரியாகச் சொல்லிவிட முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் தொகை ஏறிக்கொண்டேபோகிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களும் புதிதாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டே உள்ளன. இவ்வரலாற்று ஊழல் தொடர்பான விஷயங்களை இங்கே தொகுத்து வருகின்றனர்.

வேலிகளே ஒவ்வொரு மாநிலத்தின் 'பயிர்'களையும் மேய ஆட்டுக்காரனுக்கு உதவியுள்ளன. என்னே ஒரு ஒற்றுமை இதில், அட அட! போடுங்க ஒரு பெரிய சல்யூட். காசைக் கொடுத்தால் தான் காக்கும் நகரங்களையேகூட விற்றுவிடுவார்கள் போலுள்ளது. அந்த அளவிற்கு ஊழல் தொகைகளெல்லாம் கோடிகளில் புழங்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது; ரூபாய்க்கு மதிப்பே இல்லையோ! ம்... அப்புறம், தமிழகத்தின் பங்கு மாத்திரம் இல்லாமல் இருந்தால் எப்படி, இங்குள்ளவர்கள் மட்டும் அவ்வளவு சளைத்தவர்களா என்ன!

இவ்வளவு பெரிய ஊழலையும் பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டு மறுநாள் வேலையைப் பார்க்க நம்மால் மட்டுமே முடியும். "இந்தியா ஒளிர" வேண்டாமா!

Friday, February 20, 2004

விமான விபத்துகள்

இந்திய விமானப்படை விமானங்கள் பயிற்சியின்போது விபத்தில் சிக்கி நொறுங்குவது அடிக்கடி நிகழ ஆரம்பித்துவிட்டது. அதுவும் குறிப்பாக மிக் ரக விமானங்கள். இன்றும் ஒன்று. விமானங்களின் கோளாறா இல்லை பயிற்சிக் குறைபாடா என்று தெரியவில்லை. பெரும் பொருட் சேதமடைவதுடன், உயிரிழப்புகளும் தேவையின்றி நிகழ்கின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே "இந்திய விமானப்படை விமானங்களை நாம் தாக்க வேண்டியதில்லை, அவர்களாகவே விழுந்துவிடுவார்கள்" என்று பக்கத்து நாட்டு நண்பர்கள் கிண்டலடித்துக் கொண்டுள்ளதாக சமீபத்தில் எங்கோ படித்த ஞாபகம்.

--------------------------------------------------
இன்று வந்த ஒரு மின்னஞ்சலிலிருந்து ஒரு பகுதி:

> Special People......And they call some of these people "retarded"
>
> ..A few years ago, at the Seattle Special Olympics, nine
> Contestants, all physically or mentally disabled, assembled at the
> starting line for the 100-yard dash.
>
> At the gun, they all started out, not exactly in a dash, but with a
> relish to run the race to the finish and win. All, that is, except
> one little boy who stumbled on the asphalt, tumbled over a couple of
> times, and began to cry. The other eight heard the boy cry. They
> slowed down and looked back. Then they all turned around and went
> back......every one of them.
>
> One girl with Down's Syndrome bent down and kissed him and said,
> "This will make it better." Then all nine linked arms and walked
> together to the finish line. Everyone in the stadium stood, and the
> cheering went on for several minutes. People who were there are still
> telling the story.
>
> Why?
>
> Because deep down we know this one thing: What matters in this life
> is more than winning for ourselves. What matters in this life is
> helping others win, even if it means slowing down and changing our
> course.

Thursday, February 19, 2004

"தமிழ்நாட்டுப் பறவைகள்"

டேவிட் ஆட்டன்பரோவின் 'The Life of Birds'-ஐ வாசித்த சமயத்தில், தமிழிலும் இப்படி ஒரு புத்தகம் இருந்தால்....என்று ஏங்கியதுண்டு. இந்த அளவிற்கு நேர்த்தியான, அரிய புகைப்படங்கள், ஆழமான செய்திகளுடன் ஒரு புத்தகத்தைத் தரமாகப் பதிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்று தோன்றுகிறது. நமக்குள்ள திறமை குறைவு காரணமல்ல, வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாததுமே முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். ஆர்வமும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இன்றைய வாழ்க்கையில் பறவைகளைப் பார்க்கவேறு நேரம் இருக்கிறதா நம் மக்களுக்கு! இருப்பினும் ஹிந்து பத்திரிக்கையின் புத்தக மதிப்புரைப் பகுதியில் தமிழ்நாட்டுப் பறவைகள் என்ற தலைப்புடன் ஒரு மதிப்புரையைக் கண்டவுடன் மகிழ்வேற்பட்டது. தமிழில் இம்மாதிரியான பல்துறைப் புத்தகங்கள் அடிக்கடி வந்தால் நன்றாயிருக்கும். ஊருக்குச் செல்லும்போது வாங்கிப் படிக்கத் திட்டம்.

பறவைகளைக் காண்பது சுகமான அனுபவம். ஆளரவமற்ற குளத்தில் மீனைப் பார்த்துக் காத்திருக்கும் ஒற்றைக் கொக்கு, மாலை நேரத்தில் கூட்டமாய்ப் பறந்து பறந்து வட்டமடித்து மரத்தில் அமரும் ஒரு வகையான குருவிகள் (இவற்றின் பெயர் தெரியாத அளவிற்கு நம் புலமை உள்ளது! ம்..), புழுதியில் குளித்துச் சிலிர்த்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள், குழாயில் ஒழுகும் நீரைப் பருக எத்தனிக்கும் காகம் என பறவைகளைக் கண்ட காட்சிகள் மனதில் விரிகின்றன.

கிராமத்தில் வீட்டின் முன்புறம் உள்ள நூற்பாலையில் நிறைந்து கிடக்கும் மரங்களில் [தற்போது பெரும்பான்மையானவை வெட்டப்பட்டு கட்டிடங்களாக மாறிவிட்டன :( ] காலை ஐந்து மணிவாக்கில் பறவைகள் எழுந்து சத்தமிட்டுவிட்டு, மெல்ல மெல்ல உணவு தேடி அவை பல திசைகளில் பறந்துவிடும். ஊரை விட்டு வந்தபின்னும் பலகாலம் இப்பறவையொலிகள் காதில் விழும் பிரமை ஏற்பட்டுள்ளது. சொல்லி வைத்தாற்போல் மாலை அனைத்து பறவைகளும் இம்மரங்களுக்குத் திரும்பிவிடுகின்றன. மீண்டும் சிறிது நேரம் ஒலிமயம் (தங்களது அன்றைய அனுபவங்களைப் பேசிக்கொள்ளுமோ என்னவோ!). இவற்றில் பெரும்பான்மையானவை காகங்கள், மைனாக்கள், குருவிகள். கிளி, புறாக்களைப் பார்ப்பது எப்போதாவது நடக்கும். கூட்டமாக நெருங்கிப் பறக்கும் குருவிகளின் ஒருங்கிணைந்த வானவேடிக்கைக் காட்சிகள் ஒவ்வொரு முறையும் பிரமிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாய் வந்து ஒரு மரத்தை ஆக்கிரமிக்கும், பின்பு சில நிமிடங்களில் சர்ரென ஒன்றாய் மேலெழுந்து பறக்கும் இவற்றின் அழகினைச் சொல்வது அவ்வளவு சுலபமல்ல. இவை எதற்காக இவ்வாறு செய்கின்றன என்பது ஒரு புதிராகவே உள்ளது. இன்னும் பறவைகளைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

Sunday, February 15, 2004

பேசும் படங்கள்

World Press Photo அமைப்பு 2003-ம் ஆண்டிற்கான சிறந்த புகைப்படங்களைத் தெரிவு செய்துள்ளது. 2003-ன் தலைசிறந்த படத்தில் இடம் பெற்றிருப்பவர் ஓர் ஈராக் போர்க்கைதி, படம் பிடித்தவர் ஃபிரான்ஸ் நாட்டின் Jean-Marc Bouju. களச்செய்தி, பொதுச்செய்தி, செய்திகளில் மாந்தர்கள், விளையாட்டு, கலை, சமகாலத்திய பிரச்சனைகள், அன்றாட வாழ்க்கை, இயற்கை முதலான பத்து பிரிவுகளில் படங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பரிசு பெற்ற பெரும்பாலான படங்கள் துயரமான சம்பவங்களின்போதே எடுக்கப்பட்டவையாக உள்ளன. மனதில் பல்வேறு அலைகளைத் தோற்றுவிக்கும் இப்படங்களுக்கு விளக்கங்கள் தேவைப்படாது. இந்தியா சம்பந்தப்பட்ட இருபடங்கள் சுவாரசியமானவை. நடுவர் குழுவில் ஸ்வபன் பரேக் என்ற இந்தியர் ஒருவரும் இருந்திருப்பது கூடுதல் செய்தி.