படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, February 20, 2005

வனப் பராபத்திய அவை

மரம் மற்றும் சில வனப்பொருட்கள், அவற்றின் விளம்பரங்கள் FSC என்ற குறியைத் தாங்கிவருவதைக் காணலாம் (குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகளில்). Forest Stewardship Council (FSC) என்பது வனங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு சாரா, பன்னாட்டு அமைப்பு. மரங்கள் விடாமல் வெட்டப்பட்டு உண்டான வனங்களின் அழிவுக்கு ஒருவகையான எதிர்வினை என்று இதைக் கூறலாம். சூழமைக்குத் தகுந்த, சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்குத் தோதான வகையில் வனங்களை நிர்வகிக்கும் பொருட்டு 1993-ல் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வனத்திலிருந்து மரம் மற்றும் பிற பொருட்களை எடுக்கும்போது அதன் பல்லுயிர்த் தன்மைக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பதும், வன வளத்தைத் தொடர்ந்து பெருக்குவதும், சூழமைச் செயல்பாடுகளைத் தொடரச் செய்வதும் முக்கியமானதாகும். அதே சமயத்தில் வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், அவர்களின் சமுதாயமும் தொடர்ந்து வருமானம் பெறும் வகையிலும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையைக் கொள்ளையடித்து வெறும் இலாபம் மட்டும் பார்க்காமல் அதைத் தொடர்ந்து பேணிப் பராமரித்தலும், அப்பகுதிவாழ் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வன வளங்களை நிர்வகிப்பதாகும்.

இவ்வமைப்பு உருவாக்கியுள்ள வனச் சான்றிதழ் மற்றும் பொருட் குறியீட்டு முறைமைகள், சரியாக நிர்வகிக்கப்படும் காடுகளிலிருந்து கிடைக்கும் மரம் மற்றும் அவை சார்ந்த பொருட்களைச் சாதாரண நுகர்வோர் நம்பிக்கையுடனும், எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதத்திலும் உள்ளன. வனங்கள் கடுமையான தரக்கட்டுப்பாடுகளால் (இதற்கான பத்து கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்) சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வனத்திலிருந்து நுகர்வோரைச் சேரும் வரையில் ஒரு பொருளானது ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிக்கப்படுவதால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. மேலும், WWF, Friends of the Earth, Greenpeace மற்றும் Woodland Trust போன்ற பெரும் சூழமை சார்ந்த அமைப்புகள் FSCயை ஆதரிக்கின்றன.

இவ்வமைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களை http://www.fsc.org/en/ என்ற முகவரியில் அறியலாம்.

(Stewardship என்பதற்கு கொலோன் பல்கலை அகராதி 'பராபத்தியம்' என்ற சொல்லை வழங்குகிறது; வேறு நல்ல சொற்கள் இருப்பின் தெரியப்படுத்தவும்; நன்றி!)

1 comment:

Anonymous said...

தமிழ் இணையப் பல்கலையின் அகராதியில் (http://www.tamilvu.org/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=&OptSearch=Full&id=All&text2=&text1=&link=http://www.tamilvu.org/library/o33/html/o3300001.htm)
steward என்பதற்கு மேலாளர், பொறுப்பாளர், காப்பாளர் என்பதாகக் காணக்கிடைக்கிறது. பராபத்தியத்தை விட பொறுப்பு என்பது சுலபமாய்ப் படுகிறது எனக்கு. தகவலுக்கு நன்றி.