படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, January 15, 2005

நடை

நடைப் பிரியர்களுக்கு சுவிஸ் ஒரு சொர்க்க பூமி என்று சொன்னாலது மிகையாகாது. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்துவைத்துள்ளனர். துவங்கும் இடத்தையும், அங்கிருந்து சென்று சேர வேண்டிய இடத்தை மட்டும் நிர்ணயித்துக் கொண்டால் போதும், யாரிடமும் வழிகூடக் கேட்காமல் நடந்து கொண்டேயிருக்கலாம்.

பெரும்பாலும் வெயில் இருக்கும் சமயங்களிலெல்லாம் மக்கள் நடப்பதைக் காணமுடியும், குளிர்காலத்தில்கூட (என்ன, இச்சமயங்களில் நடப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்). ஊர்கள் வழியாக, மேய்ச்சல் நிலங்களில், ஏரிகளைச் சுற்றி, மரங்கள் நிறைந்த காடுகளின் ஊடே, மலைகளின் மேலே என்று சகல இடங்களிலும் நடைபாதைகள் இருப்பதைக் காணலாம். அந்தந்த இடத்தைச் சார்ந்த அமைப்புகள் (ஊராட்சி போன்றவை) இப்பாதைகளைப் பராமரித்து வருவதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் தங்கள் விருப்பம், நேரத்திற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாகவோ, ஜோடியாகவோ, குடும்பமாகவோ நடந்து செல்வர். நடப்பதற்கென்றே இருக்கும் கைத்தடிகளுடன் கரடுமுரடான மலைப்பாதைகளில் அறுபது, எழுபது வயதைத் தாண்டியவர்களைக் கண்டு ஆச்சரியப்படத் தேவையில்லை.

நடைபாதைகளுக்கான வரைபடங்களும் தனியாகக் கிடைக்கின்றன. சில இடங்களுக்கு வழியில் பார்க்க வேண்டியவைகளுக்கான குறிப்புகளுடன் சிறு புத்தங்கள்கூட இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று நடக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான வரைபடத்தை எடுத்துக் கொண்டு போனால் போதுமானது, சில சமயங்களில் அதுவும் தேவையில்லை. இங்குள்ள பொதுப் போக்குவரத்து அமைப்பு ரயிலை மையமாகக் கொண்டது (இம்முறைமையைப்பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதவேண்டும், முறைமை=system). பெரும்பாலும் எல்லா நடைப்பாதைகளும் ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையில் இருப்பதால் (இடையில் உள்ள பாதை மேற்சொன்னபடி எங்கு வேண்டுமாலும் இருக்கும்), வசிப்பிடத்திலிருந்து அவ்வூருக்கு ரயில், தேவைப்பட்டால் அங்கிருந்து பேருந்தில் சென்று நடையைத் துவங்கவேண்டும். சென்று சேருமிடமும் ரயில் நிலையமாகவோ அல்லது பேருந்து நிறுத்தமாகவோ இருக்கும்.

நடக்கத் தோதான ஒவ்வோர் இடத்தின் ரயில் நிலையங்களின் முன்பாகவும் மஞ்சள் நிறத்தில் திசைகாட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் அவ்விடத்தின் பெயர், அது கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மீட்டர் உயரத்தில் உள்ளது, அங்கிருந்து எங்கெல்லாம் செல்ல முடியும் (ஊர்கள்/இடங்களின் பெயர்கள்), நடந்து சென்று அடைவதற்கான நேரம் (பெரும்பாலும் இது சரியாகவே இருக்கும்) போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வழியில் விளக்குக் கம்பங்கள், மரங்கள், சுவர்கள், பெருங்கற்கள் போன்றவற்றில் குறிகளைப் போட்டுவைத்துள்ளனர். இது வழியைத் தொடர்ந்து காண்பிக்கும். இக்குறிகள் பாதைகளுக்கேற்றவாறு வேறுபடும். உதாரணமாக, மலைப்பாதையென்றால் சிவப்பு-வெள்ளைக்குறி, சாதாரண பாதையென்றால் வைரவடிவில் மஞ்சள் குறி என்றிருக்கும். முக்கியமான சந்திப்புகளில் மீண்டும் திசைகாட்டிகள் இருப்பதைக் காணமுடியும்.


ரயில் நிலையம் ஒன்றினருகே, நடையைத் துவங்க...

இடத்திற்கேற்ற நல்ல காலணிகளும் அவசியம். பனியில் நடப்போருக்கு மேலும் சில உபகரணங்கள் தேவைப்படும். உண்பதற்கு பெரும்பாலும் பழங்கள், உலர் பழங்கள், தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்லவேண்டும். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்றால் வழியில் முக்கியமான இடங்களில் உணவுவிடுதிகளும் இருக்கும்.

வழியில் இயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. பனிபடர்ந்த மலைகள், பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்களால் இருட்டான காடுகள், சலசலக்கும் நீரோடைகள், மேய்ச்சலில் மேயும் பசுக்கள், அவற்றின் கழுத்தில் தொங்கும் பெரிய மணிகளின் ஓசை (இம்மணிகளை கடைகளில் சுற்றுப்பயணிகளுக்கு பரிசுப்பொருட்களாக விற்பர்) நடையின் அலுப்புத் தெரியாத வண்ணம் விரிந்து செல்லும். பள்ளத்தாக்குகளிலுள்ள கிராமங்களின் வழியாக நடக்கும் போது அருகிலுள்ள மலைகளைப் மேலெடுத்துப் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டம் பிரமிக்கச் செய்யும்.


கிராமம் ஒன்றை நோக்கி...


கிராமமொன்றிலிருந்து மரங்கள் செறிந்த காடொன்றிற்கு...

எல்லாப் பாதைகளும் நடப்பதற்கு சுலபமாக இருந்துவிடுவதில்லை. அதுவும் வெயில்காலத்தில் மலைகளில் ஏற்றம் மிகுந்த பாதையில் நடப்பதற்குக் கேட்கவே வேண்டாம். முகட்டை ஏறி அடைந்துவிட்டு வந்த பாதையைத் திரும்பிப் பார்த்ததால், களைப்பெல்லாம் காணாமல் போய்விடும்.


இதுவும் ஒரு பாதை...


அதோ அந்த மலையுச்சியிலிருந்து இங்கு வர மூன்றரை மணிநேரங்கள் ஆகும்.

கோடைகாலத்திற்குக் காத்திருக்கிறேன்.

2 comments:

Chandravathanaa said...

இராதாகிருஷ்ணன்

நான் ஒரு முறை(2000இல்) சுவிசுக்கு வந்தேன்.
இரண்டாவது படத்திலுள்ளது போன்ற பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது. அப்போது அவசரமாக வந்ததால் அங்குள்ள அழகுகளை ஆற அமர இருந்து ரசிக்க முடியாமல் திரும்பி விட்டேன்.
மீண்டும் ஒரு முறை போய் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்ற அப்போதைய ஆசை நீங்கள் இங்கு பதிதத படங்களைப் பார்க்கும் போது மீண்டும் துளிர்க்கிறது.

நட்புடன்
சந்திரவதனா

இராதாகிருஷ்ணன் said...

சந்திரவதனா, கிட்டத்தட்ட 5 வருடங்களாயிற்றே! மீண்டுமொருமுறை வந்து ரசித்துச் செல்லுங்கள்!