படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, October 28, 2004

பட்ட காலே படும்!

அது இதுவென்று சொல்லி, ஏற்கனவே பொருளாதாரத் தடைகளால் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்து, நொந்து நூலான நாட்டின் மீது படையெடுத்து, ஆக்கிரமித்து ஒரு வழி செய்து கொண்டுள்ளனர் 'கூட்டணிப்' படையினர். இவர்கள் போதாதென்று தீவிரவாதக் கும்பல்களின் அட்டூழியம் சொல்லி மாளாது. தினம் தினம் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டே உள்ளனர்.

போருக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று இச்செய்தி தெரிவிக்கிறது. இறப்போரில் பெண்களும், குழந்தைகளும் கணிசமானோர். 'ஜனநாயக ஏகாதிபத்திய'மன்றோ! தொடரும் இக்கொடூரச் சூழ்நிலை இன்னும் எத்தனை உயர்களை பலி வாங்கப்போகிறதோ? மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டதாகப் பெருமை வேறு பேசிக்கொள்கிறான்!!

Thursday, October 21, 2004

இப்படியும் நடக்கும் திருட்டு

"...நூலொன்றைப் பழைய புத்தகக்கடையில் வாங்கி அல்லது வாய்ப்புக் கிடைத்த இடத்தில் களவாண்டு கொண்டுவந்து அந்த நூலின் ஆசிரியர் பெயரை நீக்கிவிட்டு, புதிய பெயரொன்றைப்போட்டுப் புதுநூலாக வெளியிட்டால் தமிழர்களால் கண்டுபிடிக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது என்னும் நம்பிக்கை சில பதிப்பகங்களுக்கு இருக்கிறது."

இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என்று சற்றே வியப்பை ஏற்படுத்திய மேலுள்ள வரிகள் இம்மாத காலச்சுவடின் கட்டுரையொன்றில் காணப்பட்டவை. மேலும், தமிழர்களின் சில தனித்தன்மைகளாகப் பின்வருவனவற்றை விவரிக்கிறார் கட்டுரையாசிரியர்:

"தமிழர்கள் வரலாற்று உணர்வு அற்றவர்கள் என்பது பெரும் உண்மை. தங்களிடம் உள்ளவற்றைக்கூடப் பாதுகாத்து வைத்துக்கொள்ளத் தெரியாதவர்கள். இருபதாம் நூற்றாண்டில் வெளியான தமிழ் இதழ்கள், நூல்கள் ஆகியவற்றை ஏதேனும் ஆய்வுக்காகப் பார்க்க வேண்டும் என்றால், அதற்குச் சரியான இடமுண்டா? அவ்வளவு ஏன், 2004 ஜனவரி முதல் வெளியான இதழ்களைப் பார்க்க விரும்பினால், முடியுமா? இத்தகைய ஆவணப்படுத்தும் முயற்சி தமிழர்களின் இரத்தத்திலேயே கிடையாது. அதைவிடப் பெரிய விஷயம், தமிழர்களின் மறதி. எத்தனை பெரிய பாதிப்பையும் மிக எளிதாக மறந்துவிடக்கூடியவர்கள். தமிழர்களை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். கடைசியாக, சிறிய சலுகை ஒன்றைக் கொடுத்துவிட்டால் போதும். பழையவற்றை மறந்துவிட்டுப் பல்லை இளிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழர்களின் மறதிதான் அரசியல், ஆன்மீகம், இலக்கியம் வரைக்கும் பல பேருக்கு மூலதனம்." - என்றேனும் திருந்துவோமா, தெரியவில்லை.

இவ்வாறான திருட்டுகள் பிற்காலத்திலாவது நடவாமல் தடுக்க, பதிப்புரிமை, ISBN முதலானவற்றில் நல்ல பதிப்பகத்தார் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையாதாகும்.

Wednesday, October 20, 2004

Indira Gandhi: The Killing of Mother India

குழந்தைகளுக்கு அம்மாக்கள் நிலாவைக் காட்டிச் சோறூட்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இங்குள்ள மந்தார வானிலையில் நிலாவை எங்கே போய்க் காண்பது? தூறும் மழைக்கு வெளியில் சென்று நின்றால் உடம்பு விறைத்தேவிடும் போலுள்ளது. சாப்பிட வைக்க எதையாவது செய்ய வேண்டுமே! நிலாவின் இடத்தை தொலைக்காட்சிப் பெட்டி எடுத்துக்கொண்டது. ஒளியும் ஒலியுமாக இருக்கிற காட்சிகளுக்குத்தான் குழந்தையிடம் மதிப்பு உண்டு, மற்றவையெல்லாம் கண்டுகொள்ளப்படுவதில்லை! ஏதாவது பாடல் அல்லது விளம்பரத்தைப் பார்த்து மகள் நிற்கும் நேரத்தில் அவள் வாயில் ஊட்டிவிடுவாள் தாய். இன்று தொலை இயக்கியில் ('ரிமோட் கன்ட்ரோலு'க்கு இப்படி ஒரு சொல்லை எப்பொழுதோ படித்ததாக நினைவு; 'ரிமோட் கன்ட்ரோல்', 'ரிமோட்டா'கச் சுருங்கியதைப்போல், தொலை இயக்கிக்குச் சுருக்கமாகத் 'தொயிக்கி' என்றேன் மனைவியிடம், சிரிக்கிறாள்!) காட்சிகளை மாற்றும் வேலை தந்தைக்கு!

அப்படிக் காட்சிகளை மாற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஆங்கிலமல்லாத ஓர் அலைவரிசையில் இந்தியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஓடுவதுபோல் தெரிந்தது. சில விநாடிகள் தொடர்ந்து பார்த்த போது அது இந்திரா காந்தியைப் பற்றிய ஆவணப்படமாக இருந்தது. அவ்வளவாகத் தெரியாத மொழியாகையால் படங்களை மட்டுமே காண வேண்டியதாயிற்று, ஏற்கனவே கொஞ்ச நேரம் ஓடிவிட்டிருந்தது. பிற்பாடு அவ்வலைவரிசையின் தொலையுரைப் (teletext) பக்கங்களைச் சென்று பார்த்தபோது, அது பிபிசி நிகழ்ச்சியின் மொழிபெயர்ப்பு என்று தெரியவந்தது. இந்திய சுதந்திரப் போராட்டக் காட்சிகள், காந்தி, நேரு, காமராஜ், சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி போன்றோரது காட்சிகளுடன், இந்திராவின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்த ஆர்.கே.தவான், ஷீலா தீக்ஷித், குஷ்வந்த சிங், ஐ.கே.குஜ்ரால், பிபிசியின் அந்நாளைய இந்திய செய்தியாளர் முதலானோரின் பேட்டிகளும் இடையிடையே வந்தன.

வரும் 31ம் தேதியுடன் இந்திரா காந்தி இறந்து 20 வருடங்களாகின்றன. அதைக்குறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படமாம். நிக் ரீட் என்பவர் பிபிசிக்காக இந்நிகழச்சியை உருவாக்கியுள்ளார். ஒரு மணி நேரம் சற்று கூடுதலாக இருக்கும் இந்த ஆவணப்படத்தின் தலைப்பு "Indira Gandhi: The Killing of Mother India". இப்படத்தைப் பற்றிய விரிவான அறிமுகம் ஒன்றை இங்கே காணலாம்.

இக்காலத் தலைமுறைக்கு இந்திரா காந்தியைப் பற்றி அறிந்து கொள்ள இச்சிறு படம் ஒரு நல்ல வாய்ப்பு. ஆங்கிலத்தில் கிடைக்கும் போது இதை மற்றொரு முறை பார்க்க வேண்டும். நம்மூர் தொ.கா.க்கள் பிபிசியிடமிருந்து இதை வாங்கி அப்படியே ஆங்கிலத்திலோ அல்லது உள்ளூர் மொழியில் ஆக்கம் செய்தோ ஒளிபரப்பலாம்.

Sunday, October 17, 2004

உறங்கும் ஊடகங்கள்

* ஜெ.ஜெயலலிதாவின் சமீபத்திய பி.பி.சி. பேட்டியைப் பற்றிய உருப்படியான ஓர் அலசல்.
* மு.கருணாநிதி, சென்ற வாரத்தில் தனக்கு விருது வழங்கப்பட்ட விழாவில், ஆட்சிக்கு வந்தால் தமிழை ஆட்சி மொழியாக்குவோம் என்று உறுதியளித்துள்ளார். முந்தைய ஆட்சியின்போது ஏன் அதைச் செய்யவில்லை, ஆட்சி மொழி ஆதல் என்றால் என்ன போன்றவற்றை விளக்கும் விலா வாரியாக ஒரு கட்டுரை.
* ச.ராமதாஸ், தொழில்நுட்ப மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வையே வேண்டாம் என்கிறார். அவர் கூறியவுடன் யாரும் அதை நிறுத்திவிடப்போவதில்லை என்றாலும், அப்படி நிறுத்தினால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி ஒரு பார்வை.
* மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் சீர்குலைவு அல்லது பெருகும் ஒழுக்கக்கேடுகளைப் பற்றிய விமர்சனங்கள்.

இவை போன்றவைகளைப் பற்றியெல்லாம் தமிழக நாளேடுகள் அல்லது/மற்றும் வெகுஜன ஊடகங்களில் எதிர்பார்ப்பதே வீணான ஒன்றோ? எப்போதுதான் அவை விழித்துக்கொள்ளப்போகின்றன?

Saturday, October 09, 2004

"மலைவாழ் பறவைகள்"

பறவைகளைப் பற்றிய செய்திகளில் நாட்டம் உள்ளோர் படிக்க வேண்டிய கட்டுரையொன்று செப்டம்பர்-2004 மாத உயிர்மை இதழில் வந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் மனிதன் இன்னும் முழுமையாக ஊடுருவி நாசம் செய்யாததால் ஓரளவேனும் அதன் வனப்பு தப்பிப் பிழைத்துள்ளது. இல்லையெனில் அவை மொட்டையடித்த மலைகளாகவோ அல்லது பணப்பயிர்கள் இடப்பட்ட தோட்டங்களாகவோ மாறிவிட்டிருக்கும். மனிதனைவிட மோசமான ஜந்து இவ்வுலகிலில்லை என்றே நம்புகிறேன்.

இக்கட்டுரையாளர் சு.தியடோர் பாஸ்கரன் அவர்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. முனைவர் க.ரத்னம் அவர்கள் எழுதி, மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியிட்டுள்ள "தமிழ்நாட்டுப் பறவைகள்" என்ற ஓர் அருமையான நூலிற்கு இவர் எழுதிய அணிந்துரையின் மூலமாகத்தான் முதல் அறிமுகம். அதுவரை பெயரை மட்டும் எங்கோ கேட்ட மாதிரி நினைவு, அவ்வளவே. "மலைவாழ் பறவைகள்" கட்டுரை வாயிலாகத் தன் பறவை பார்க்கும் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுவரை எத்தனையோ அரிய பறவைகளின் காட்சிகளை அவர் கண்டிருக்கக்கூடும். அவ்வாறான காட்சிகளைப் படமாக்கித் தொகுத்து வெளியிட முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தனியாளாக இம்முயற்சியைச் செய்வதென்பது அவ்வளவு சுலபமானதாகத் தோன்றவில்லை. பணம் கொழிக்கும் நம்மூர் தனியார் தொலைக்காட்சிகள் இத்தகையோர்களை மேலும் ஊக்கப்படுத்தி, வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பறவைகளைப் பற்றி பிரத்யேகமான நிகழ்ச்சிகளை உண்டாக்கலாம், மனது வைத்தால்.

மெய்யப்பன் தமிழாய்வகமும் "தமிழ்நாட்டுப் பறவைகள்" நூலின் மூலம் தான் அறிமுகமாயிற்று. சமையல், சோதிடம் மற்றும் ஒன்றுக்குமாகாத சில கதைப் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் பதிப்பகங்களுகிடையில் இதுபோன்று ஆக்கபூர்வமான பணிகளைச் செய்யும் பதிப்பகங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதன் நிறுவனர் திரு.ச.மெய்யப்பன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இயற்கை எய்திய செய்தியைக் கேள்வியுற்றதும் வருத்தமேற்பட்டது. மேற்குறிப்பிட்ட புத்தகமே அவரது ஆர்வத்திற்குச் சான்று. "துறவிகளாலும் துறக்க இயலாத" சாதனையாளராகத் திகழ்ந்தவர் அவர். செப்டம்பர்-2004 காலச்சுவடைத் தவிர வேறு எந்த ஊடகத்திலேனும் இவரது மறைவு குறித்த செய்தி வந்ததா என்று தெரியவில்லை.

Wednesday, October 06, 2004

திசைகள்-அக்டோபர் 2004

அக்டோபர் 2004 திசைகள் இதழில் இராம.கி. அவர்களின் நேர்காணல் வந்துள்ளது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு மடலாற் குழுக்களில் தமிழ் யுனிகோடு பற்றி மிக விரிவாக எழுதியிருந்தார். நம் மக்களுக்குக் கருத்தாடல்கள் என்றாலே ஒவ்வாதா என்ன?

அதோடு, "காணாமல் போகும் வாசகர்கள்" என்ற சில கட்டுரைகளும் கவனிக்கப்பட வேண்டியவை.

சில கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்ற அளவிலேயே திசைகள் உள்ளது. பல்துறை சார்ந்த நல்ல எழுத்தாளர்கள் இதில் எழுத முன்வரவேண்டும். இணையத்திலாவது உருப்படியாக வாசிக்க ஏதேனும் கிடைக்கட்டும்.