சுபமங்களா - எனக்கு வாசிக்க கிடைத்த ஆரம்பகால சிற்றிதழ். கோமல் சுவாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த அருமையான அவ்விதழ் அவரது மறைவுடன் நின்றுவிட்டது. பிற்பாடு, காலாண்டு இதழாக வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அறிமுகம். இதே காலகட்டத்தில் கோவையிலிருந்து வெளியாகும் கலைக்கதிர் என்ற அறிவியல் சிற்றிதழும் வாசிக்கக் கிடைக்கும். இவற்றின் வாயிலாக சமகாலத்தைய இலக்கியச் சிற்றிதழ்கள் சிலவற்றின் பெயர்கள் தெரிந்திருந்தாலும், வாசிக்கக் கிடைத்ததில்லை. கல்லூரி நூலகத்தில் சில இதழ்கள் புத்தாடை கலையாது மேசையின் மேல் மின்விசிறியின் காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்கும்.
இலக்கியம் மட்டுமல்லாது, பல்வேறு தளங்களில் எத்தனை சிற்றிதழ்கள் தமிழில் வந்துகொண்டும், வந்து நின்றுபோயும் இருக்கும்! ஒவ்வொரு ஊரிலும் எல்லாக் காலத்திலும் இதுபோன்று ஏதாவது இதழ்கள் (அது பத்து பேர் மட்டுமே படிக்கும் கையெழுத்துப் பிரதியானாலும் சரி, இல்லை பல நூறு படிகளாக வரும் அச்சுப் பிரதியானலும் சரி) தயாராகிக் கொண்டிருக்கும். கொஞ்ச காலத்திற்கு வெகு அமர்க்களமாக வரும் இவ்விதழ்கள் ஒரு காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் காணாமல் போய்விடுவதுடன், அப்படியொன்று வந்ததற்கான சுவடே இல்லாமல் ஆகிவிடும். எதையும் ஆவணப்படுத்தியோ, சேகரித்துப் பாதுகாத்தோ வைத்துவிட்டால் தன் சுயத்தை இழந்து விடமாட்டானா தமிழன்!!
நிலைமை இப்படியிருக்க, "உலக அளவில் கருத்துச் செறிவோடு தொடங்கப்பட்டுத் தொடரப்படுகிற இதழ்கள், அனைவரது பார்வைக்கும் படாமலேயே நின்றுவிடுகின்றன. இவ்வகை இதழ்கள் அந்த இதழாளர் வாழும் வரை அவரோடு வாழ்ந்து அவரது மறைவிற்குப் பிறகு அவரது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்குத் தூக்கி எறியப்படுகின்றன.
தமிழகத்துலும், வெளிநாட்டிலும் இவ்வாறு வெளியிடப்படும் இதழ்களைத் திரட்டுவதும், பாதுகாப்பதும் முதன்மையாகும். இந்த நோக்கில் நமது நூலகத்தில் இன்றுவரை 2,533 வகையான தமிழ்ச் சிற்றிதழ்கள் திரட்டப்பட்டுள்ளன.
இவற்றில் வானம்பாடி, தேனீ, சரஸ்வதி, டமாரம் இதழ்களைக் குறுந்தகடு ஆக்கியுள்ளேன். இந்த முறையில் இதழ்களின் தோற்றத்தை அப்படியே, அதே வண்ணத்தில் பாதுகாக்க முடியும். இதழ்களை அடுத்த தலைமுறைக்குக் காட்சிப்படுத்துகிற இந்த அரிய முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ள வருமாறு அன்போடு அழைக்கிறேன்" என்று பதினைந்து ஆண்டுகளாக இதழ்களைச் சேகரித்து வருவதுடன், அவற்றை குறுவட்டு வழிப்பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ள ஒரு தமிழ் ஆர்வலரைப் பற்றி அறிய வந்தால் மனதில் ஒரு வித மகிழ்ச்சி தோன்றாதா?
1983-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம் நல்லாசிரியர் விருது பெற்ற, பொள்ளாச்சி நசன் என்று அழைக்கப்படுகிற ம.நடேசன் அவர்கள் இவ்வரிய பணியில் ஈடுபட்டுள்ளார். கூடவே "எளிய முறையில் தமிழ் கற்பித்தல்", "கற்பித்தலுக்கான எளிய கருவிகளை ஆக்குதல்", "தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி நடத்துதல்" போன்றவற்றையும் செய்து வருகிறார்.
ஒவ்வொரு காலகட்டத்தின் வரலாறு, குமுகாயத்தின் போக்குகள் முதலானவற்றை அறிந்து கொள்ள இவரது நூலகத்திலுள்ள இதழ்கள் உதவும். இதழியல் துறையில் ஆய்வு செய்வோருக்கும் இது ஒரு களஞ்சியம்.
இதுபோன்று அரிய பணியில் ஈடுபட்டிருப்போரை உலகிற்குக் காட்டும் உருப்படியான பணியை வெகுசன ஊடகங்கள் செய்தால் நன்றாயிருக்கும்.
மேலதிகத் தகவல்களுக்கு...
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Tuesday, February 01, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ராதா, அவருடைய சேவை அற்புதமானது.
>இவற்றில் வானம்பாடி, தேனீ, சரஸ்வதி, டமாரம் இதழ்களைக் குறுந்தகடு ஆக்கியுள்ளேன்.
நீங்களும் செய்திருக்கிறீர்களா? இல்லை அவரைச் சொல்கிறீர்களா?
By: வெங்கட்
நானில்லை வெங்கட், அவையெல்லாம் அவர் உழைப்பில் வந்தது. டமாரம் என்றவோர் இதழ் இருந்ததே இதைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது அக்குறுந்தகட்டை வாங்க வேண்டும்.
ராதா, நான் சென்னையிலிருப்பவன். அவரின் முகவரி கிடைக்குமா
நாராயண், அவரது இணைய தளத்தில் (http://www.thamizham.net) காணக்கிடைக்கும் முகவரி:
பொள்ளாச்சி நசன்
1 சம்பத் நகர்
சூளேசுவரன்பட்டி 642006
தமிழ்நாடு
pollachinasan@yahoo.com
(04259) 221278
98942 68418
Post a Comment