படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, February 27, 2006

பறவையின் மரணம்

தேசாந்திரி என்னும் தொடரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். சென்ற இரண்டு வாரங்கள் வாசித்தேன். இவர் நிறையப் பயணம் செய்துள்ளார் போலுள்ளது. அதன்மூலம் கிடைத்த பல்வேறு அனுபங்களை எழுத்தில் பகிர்ந்து கொள்கிறார். இவர் எழுதும் விதமோ என்னவோ, வாசிக்க நன்றாக உள்ளது.

முன்பொருமுறை எப்போதோ வாசித்த கட்டுரையில் மதுரை அருகே ஒரு மலைக்குகைகளில் கண்ட சமணப் படுக்கைகள் பற்றி எழுதியிருந்தார். ஒரு வேரின் சாறு, கல்லைப் பொடியாக்கச் செய்யும் விந்தையைப் பற்றி சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாரம் பறவைகளைப் பற்றிய தனது அனுபங்கள் சிலவற்றைச் சொல்கிறார். அதில் குக்குறுவான் ஒன்று. "குக்குறுவான் மிக அழகான பறவை. குருவி போன்று இருக்கும். மேல் பாகம் பச்சையாகவும், அடியில் இளமஞ்சளும், கால்கள் லேசான சிவப்பு நிறத்திலும் இருக்கும். இடைவிடாமல் கூவும் இப்பறவை தலையை உதறி அசைப்பதைப் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும்"-என்கிறார்.

குக்குறுவானில் உள்ள மூன்று வகைகளைப் (இன்னும் கூட இருக்கலாம்) பற்றி 'தமிழ்நாட்டுப் பறவைகள்' என்ற புத்தகத்தில் காணலாம். காட்டுப் பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet, Megalaima zeylanica), சின்னக் குக்குறுவான் (White-Checked Barbet, Megalaima viridis) மற்றும் செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith Barbet, Megalaima haemacephala). மேற்குறிப்பிட்டதில் கடைசியில் வரும் குக்குறுவானைப் பற்றித்தான் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். இப்பறவையை நேரில் கண்டதாக நினைவில்லை. நாம் காணும் பறவைகள், தாவரங்களின் பெயர்கள் எல்லாவற்றையும் அறிந்தா வைத்திருக்கிறோம்! ஏதோ ஒரு பறவை, செடி என்று பொதுமைப்படுத்திவிட்டுச் சென்றுவிடுகிறோம்.

நான் பணிபுரியும் அலுவலகம் பெரிய கோபுரத்தையுடைய(tower) கட்டிடத்தில் உள்ளது. அதன் பக்கச் சுவர்களின் பெரும்பாலான பகுதியைக் கண்ணாடிகளே ஆக்கிரமித்திருக்கும். சென்ற வருட இறுதியில் ஒருநாள் காலையில் தொப்பென்று ஏதோ கீழே விழுந்ததைப் போலிருந்தது. கண்ணாடி வழியாக வெளியே பார்க்கையில் அது ஒரு சிறு பறவை (பெயர் தெரியவேண்டுமே!). வேகமாகப் பறந்து வந்து கண்ணாடியில் மோதிக் கீழே விழுந்திருக்க வேண்டும். கண்ணாடி ஜன்னலைத் திறக்கமுடியாத அமைப்பு வேறு. பரிதாபமாகக் கிடந்த அப்பறவையைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. உயிர் இருந்தது; உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். காலோ வேறொரு திசையில் மடங்கியிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தது. பிறகு சிறிது நகர்ந்த மாதிரி தெரிந்தது. சற்று நேரம் கழித்துப் பார்க்கையில் அது இருந்த சுவடு மட்டும் தான் தெரிந்தது. ஒருவேளை நிலைதிரும்பி எழுந்து பறந்திருக்கலாம்.

பறவையின் இயற்கையான மரணத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்! எங்கேயோ போய் எப்படியோ சாகிறது.

Sunday, February 26, 2006

நன்றி!

சன்னாசி, தாணு, தங்கமணி, தேன் துளி ஆகியோருக்கு முதலில் நன்றிகள் - இந்தியா செல்வதற்கு முன் (சென்ற டிசம்பர் கடைசி வாரத்தில்) எழுதியிருந்த பதிவில் (அழிக்கப்பட்டுள்ளது, பிறகு சொல்கிறேன்) வாழ்த்துச் சொன்னமைக்கு. அதை இவ்வளவு தாமதமாகச் சொல்வதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரில் இருந்தபோது மின்னஞ்சல்களைப் பார்க்க மட்டுமே இணையப்பக்கம் ஓரிரு முறை வரமுடிந்தது. திரும்பி வந்து சில வாரங்களாயினும் வேறு வேலைகள், ஆர்வமின்மையே அதிகமான இருந்தது.

சென்ற வார இறுதியில் தமிழ்மணத்தைப் பார்த்தபோது முற்றிலும் மாறியிருந்தது. மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டேன். அவ்வப்போது ஒருசில பதிவுகளை மேலோட்டமாகப் பார்ப்பதோடு சரி. இன்று எப்படியோ மனது வந்து ப்ளாக்கர் அடைப்பலகையில் மாற்றங்களைச் செய்து தமிழ்மணத்தில் இணைந்து கொண்டாயிற்று. தொடர்ந்து எழுத முயல்வேன்.

அழிக்கப்பட்ட அப்பதிவைப் பற்றி: என்னுடைய பதிவை இன்றுதான் ஒழுங்காகத் திறந்து, பின்னூட்டங்களைப் பார்த்தேன். அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'போலி'யின் கைவரிசைதான். பிப்ரவரி 14ந் தேதியன்று படிக்க முடியாத ஒரு பின்னூட்டத்தை இட்டுச் சென்றுள்ளது. காரணம், நான் டோண்டு அவர்களின் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேனாம்!! எப்பொழுது என்று எனக்கே தெரியாது! அப்படியே இட்டிருந்தாலும், அதற்காக இப்படியா?! மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுகள், பாவம்!