படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, November 10, 2006

பாலை

குழந்தைகள் அட்சய பாத்திரம்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருந்துகொண்டே இருக்கிறது. தாத்தா-பாட்டி வாங்கிக் கொடுத்த குட்டி பொம்மை விலங்குகளை ஒரு சிறிய பைக்குள் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து விளையாடுவாள் மகள். கூட ஆடுவதற்கு என்னையும் அழைப்பாள். நான் முதலில் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும், பிறகு ஒவ்வொரு விலங்காக பையிலிருந்து எடுத்து அவள் மறைத்துக் காட்டும் போது அதை என்னவென்று சொல்ல வேண்டும். சமயத்தில் கூடவே ஏதேனும் ஓர் உரையாடல்.

"இது யானை?" (நான்)
"ம் இல்லை இது பனிக்கரடி"
"இது எங்கே இருக்கும்?"
"பனியில் இருக்கும்"
"சரி அடுத்தது..(கண்ணை மூடித்திறந்த பின்பு) வரிக்குதிரையா?"
"ஆமாம்"
"இது?"
"காட்டில் வாழும்"
"ஒட்டகச்சிவிங்கி?" (ஒட்டைச் சிவிங்கி, ஒட்டகச் சிவிங்கி இதில் எது சரி?)
"இல்லை, இது ஒட்டகம்"
"எங்கே வாழும்?"
"பாலையில்"
!!
இப்படியாகத் தொடர்ந்த ஆட்டத்தில் பாலை என்ற சொல்லையே அவள் ஒன்றிரண்டு முறை கையாண்டது சிந்திக்க வைத்தது. பாலைவனம் என்று நீட்டிச் சொல்வதைக் காட்டிலும் பாலை என்று சொல்லே அழகாய் இருக்கிறது. ஐவகை நிலங்களின் பெயர்களைப் பள்ளியில் படிக்கும்போதும் பாலை என்றுதானே வருகிறது. பாலையுடன் இந்த 'வனம்' எப்படிச் சேர்ந்தது என்பது வியப்பாயுள்ளது. வனம் என்றால் நமக்குத் தெரிந்தவரை அதற்குப் பொருள் காடு. காடென்றால் பொதுவாக நிறைய மரம், செடி, கொடிகள், விலங்குகள் என்றிருக்கும். பாலையில் எங்கு வந்தது வனம்? இது பொருளற்ற கேள்வியாகக்கூட இருக்கலாம். ஆனால் விளையாடிய நேரத்தில் அப்படியொரு சொல்லைக் கையாண்டு நம்மையும் சிந்திக்க வைத்தவளுக்கு நன்றி! இனிமேல் நானும் பாலையென்றே சொல்லிக்கொள்வேன்.