படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, January 11, 2005

Pictures at an Exhibition

வரும் நாட்களில் நான் ரசித்த மேற்கத்திய செவ்வியல் (Classical, நன்றி: வெங்கட்) இசைகள் சிலவற்றைப் பற்றி தற்போக்காகச் (random) சொல்லலாமென்றுள்ளேன். எனவே, முதலில் சொல்லப்போகும் இசைக்கும் பின்னால் சொல்லப்போவதற்கும் ஏற்ற தாழ்வுகள் ஏதும் கிடையாது. இசையின் நுணுக்கங்களைப் பற்றியெல்லாம் அலசி ஆராயும் திறனில்லா நிலையில் நம்மால் முடிந்தது கேட்க மட்டுமே. பள்ளிகளில் இசை ஒரு பாடமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் (உருப்போடற இடத்துல உசுருள்ள சமாச்சாரத்துக்கு என்ன வேலன்னு கேக்கறீங்களா?).

இசை தொடர்பான சில சாதாரண சொற்களுக்குக்கூட ஓரளவு துல்லியமான தமிழ்ப்பதங்களைச் சொல்லச் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது; இது வருத்தமளிக்கும் நிலை. காட்டாக எதற்கெடுத்தாலும் இசையமைப்பாளர் என்றே பழகிவிட்ட பிறகு Musician, Composer-க்கு இடையிலுள்ள வித்தியாசத்தைச் சொல்வது எளிதாக இல்லை. அதேபோல Orchestra, Orchestration என்பவற்றிற்கெல்லாம் தட்டுத்தடுமாற வேண்டியுள்ளது; 'சேர்ந்திசை' என்பதெல்லாம் இதற்கு இணையான சொல்லாகத் தெரியவில்லை. தமிழில் ஒரு சொல்லைச் சொல்லும்போது நுட்பமாக இல்லாமல் பொதுப்படையாகவோ அல்லது சுற்றி வளைத்துச் சொல்லும் நிலையே உள்ளது. 'வாத்திய இசைக் கலைஞர்' என்று நீட்டி முழக்காமல் 'வாத்தியக்காரர்' என்று சொல்லிவிட்டுப் போகலாமே! சரி, அவ்வாராய்ச்சியை விட்டுவிட்டு எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்ல வருகிறேன்.

இன்றைக்கு முஸ்ஸோர்க்ஸ்க்கியின் Pictures at an Exhibition பற்றிக் காண்போம். மோடஸ்ட் முஸ்ஸோர்க்ஸ்க்கி (Modest Mussorgsky, 1839-1881) ரஷ்ய இசையமைப்பாளர். அவரது புகழ்பெற்ற உருவாக்கங்களில் ஒன்றுதான் மேற்சொன்னது.

இளவயதிலேயே இறந்துவிட்ட கட்டிடக் கலைஞரும் (architect), ஓவியருமான தன் நண்பர் விக்டோர் ஹார்ட்மானின் (Viktor Hartmann) நினைவாக பியானோவில் இசைப்பதற்காக எழுதிய இசையது. குறுந்தகட்டில் பல்வேறு வாத்தியங்களைக் கொண்டு இசைக்கப்பட்ட பதிவைக் (இப்போதைக்கு இதையே நான் பரிந்துரைப்பேன்) கேட்டுப் பழகிவிட்டு, இணையத்தில் கொஞ்சம் தேடிக் கண்டுபிடித்து பியானோவில் மட்டும் இசைக்கப்பட்டதைக் கேட்க (அதுவும் 'சாம்பிள்'கள்தான்) என்னவோ போல்தானிருந்தது. குறுந்தகட்டில் பதினான்கு துண்டுகளை(pieces)/பாடல்களை அடக்கிய இவ்விசை சுமார் 33.5 நிமிடங்களுக்குள் முடிகிறது.

Pictures at an Exhibition, ஹார்ட்மானின் ஓவியக் கண்காட்சியில் சுற்றி நடப்பதை விவரிக்கும் வண்ணமாக எழுதப்பட்டது.

Promenade - பார்வையாளர் (முஸ்ஸோர்க்ஸ்க்கி?) கண்காட்சியில் நுழைந்நது ஒரு படத்திலிருந்து மற்றொன்றிருக்கு செல்வதைக் குறிப்பதுடன், அப்படங்கள் ஏற்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தும்விதமாகவும் உள்ளன. இவை நான்கைந்து முறை திரும்ப வருகின்றன.
Gnom - இது க்னோம் போல இருக்கும் ஹார்ட்மானின் பாக்குவெட்டி போன்ற பொம்மையின் வடிவமைப்பு ஓவியத்தைப் பார்க்கும்போது வெளிப்படும் உணர்வு. க்னோம் என்பது லத்தீன் சொல், அர்த்தம் தேடிப்பார்க்கவேண்டும்.
Promenade 2 - இது இத்தாலியின் பழைய கோட்டையின் படத்திற்கு இட்டுச் செல்கிறது.
Il vecchio castello - அக்கோட்டையின் முன்பு நின்று பாடும் ஒருவரின் ஓவியத்திற்கான இசை.
Promenade 3 - இப்பாடல் பாரீஸில் இருக்கும் தோட்டமொன்றிற்கான படத்திற்கு அழைத்துச் செல்கிறது.
Tuileries - அத்தோட்டத்தில் குழந்தைகள் சத்தமிட்டு விளையாடிக்கொண்டிருக்கும் படத்திற்கான உணர்வு.
Bydlo - போலந்து நாட்டின் மாட்டுவண்டியின் படத்தைப் பார்த்து.
Promenade 4
Ballet des Poussins dans leurs coques - பாலே நடமொன்றிற்காக ஹார்ட்மான் வரைந்த உடைகளின் வடிவமைப்பு.
Samuel Goldenberg et Schmulye - நான் மிகவும் ரசித்த இசையிது. இங்கு முஸ்ஸோர்க்ஸ்க்கி பணக்கார, ஏழை யூதர்களிருவரின் படங்களைக் கண்டு வெளிப்படுத்தும் உணர்வு.
Le Marche de Limoges - சந்தை ஒன்றின் ஓவியம், இசையில்.
Catacombae (Sepulcrum Romanum) - சுடுகாட்டு ஓவியமொன்றிற்கான இசை.
Die Huette d.Baba Yaga-La Cabane - பாபா யாகா ரஷ்ய கதைகளில் வரும் ஒரு சூனியக்காரி. பாபா யாகாவின் குடிசையைப் போன்றதொரு கடிகாரமொன்றிற்கான வடிவமைப்பு ஓவியத்தைப் பார்த்து எழுந்த இசை.
La Porte de Kiev - கடைசியாக, ஹார்ட்மானின் ஓவியமான கியேவ் (சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த உக்ரைன் நாட்டின் தலைநகரம்) நகரத்திற்கான மாபெரும் கதவிற்கான அற்புதமான இசை.

முஸ்ஸோர்க்கியைப் பற்றியோ அவரது இசைகளைப் பற்றியோ மேலும் தெரிந்துகொள்ள.....என்ன அதற்குள் கூகிளுக்குப் போய்விட்டீர்களா?

3 comments:

இராம.கி said...

musician: இசையர், இசைஞர், இசையாளர்;

music composer: இவரைத்தான் இந்தக் காலத்தில் இசை அமைப்பாளர் என்கிறோம். ஏதோ இது காலம் இந்தச் செயலை நாம் செய்யாதது போல, அருவியை நீர்வீழ்ச்சி என்று புதிதாகச் சொல்ல முற்பட்டது போல இந்தக் கூட்டுச் சொல்லை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்தக் காலத்தில் (குறிப்பாகப் பரிபாடலில்) பா எழுதியவர் ஒருவர், பண்ணமைத்தவர் ஒருவர்; பண்ணுகின்ற செயல் பண்ணமைத்தல்; அப்படிப் பண்ணியவர் பண்ணத்தர்; அவர் செய்தது பண்ணத்தி. அதாவது பாட்டிற்கு இசை கூட்டினால் அது பண்ணத்தி ஆகிவிடுகிறது. பண்ணத்தி என்ற சொல் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. பாட்டையும் பாடி, பண்ணையும் செய்தவர் பாணர்.

பாடகர் = பாட்டுப் பாடுபவர்
பாடினி = பாட்டுப் பாடுபவள்
பண்ணத்தர் = பண் அமைத்தவர் (composer)
பண்ணத்தி = பண் கூடிய பாட்டு
பாணர் = பண்½¨ÁòÐô பாட்டுப் பாடுபவர்

composer:
1475, from O.Fr. composer "put together, arrange" (12c.), from com- "with" + poser "to place," from L.L. pausare "to cease, lay down," ult. from L. ponere "to put, place" (see position). Meaning infl. in O.Fr. by componere (see composite). Musical sense is from 1597. Composed "calm" is from 1621; composure first recorded 1667.

இனி orchestra இது அரங்கில் இயைந்து கருவிகளும் பாடுவோருமாய் இசைப்பது. இது ஒரு இயக்கம் - motion; இதை எளிதாக அரங்கிசை என்று சொல்லலாம்.

கூட்டமாய் இசைப்பதைக் குரவை (chorus) என்று சொல்லுவோம்.

சேர்ந்திசை என்பதும் நீர்வீழ்ச்சி போன்ற கூட்டுச் சொல் தான். 1950-60 களில் இது போன்ற கூட்டுச் சொல்கள் பெரிதும் உருவாக்கப் பட்டன.

orchestra:

1606, "area in an ancient theater," from L. orchestra, from Gk. orkhestra, semicircular space where the chorus of dancers performed, with suffix -tra denoting place + orkheisthai "to dance," intens. of erkhesthai "to go, come," from PIE *ergh- "to set in motion, stir up, raise" (cf. Skt. rghayati "trembles, rages, raves," L. oriri "to rise"), from base *er-/*or- (cf. L. origo "a beginning;" Skt. rnoti "rises, moves," arnah "welling stream;" O.Pers. rasatiy "he comes;" Gk. ornynai "to rouse, start;" Goth. rinnan, O.E. irnan "to flow, run"). In ancient Rome, it referred to the place in the theater reserved for senators and other dignitaries. Meaning "group of musicians performing at a concert, opera, etc." first recorded 1720; "part of theater in front of the stage" is from 1768. Orchestrate "to compose or arrange (music) for an orchestra" is an 1880 back-formation of orchestration, which was borrowed 1864 from Fr. The fig. sense of orchestrate is attested from 1883.

orchestrate = அரங்கிசைத்தல்; (þó¾ Å¢¨É¡ø¨Ä þ¨º ÀüÈ¢ «øÄ¡Áø §ÅÈ¡¸ô ÀÂýÀÎòÐõ þ¼í¸Ç¢ø «Ãí¸¢¨Âò¾ø ±ýÚ Â¸Ãò¨¾ ¨ÅòÐì ¦¸¡ûÙÅÐ º¢ÈôÒ.)
orchestration = அரங்கிசைப்பு

அரங்கிசையைச் சிலகாலம் ஒருங்கிசை என்றும் நான் சொல்லியிருக்கிறேன். அரங்கிசை என்பது இன்னும் சரியான ஆக்கமாய்த் தோன்றுகிறது.

அன்புடன்,
இராம.கி.

ROSAVASANTH said...

//என்ன அதற்குள் கூகிளுக்குப் போய்விட்டீர்களா?//

ஆமாம். நன்றி!

இராதாகிருஷ்ணன் said...

புதிய சொற்களைக் காட்டியமைக்கும், விளக்கங்களுக்கும் நன்றி ஐயா! musician-க்கு இசைஞர் என்று நினைத்துப் பிறகு, எதற்கேனும் இசைந்து கொடுப்பவரை இசைஞர் எனலாமா என்று குழம்பி விட்டுவிட்டேன்.
பாட்டுப் பாடுபவளுக்குப் 'பாடினி' (பள்ளியில் கேட்ட நினைவு வருகிறது) என்றால், தற்காலத்தில் புழங்கும் 'பாடகி' சரியான சொல் இல்லையா?