படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, July 30, 2004

சூடானில் நடக்கும் கொடுமை

கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் (நம்மூர் செய்தித்தாள்களில் இதைப்பற்றி ஒன்றும் கண்டதாக நினைவில்லை) தவறாது இடம் பெறும் செய்தி சூடான் பிரச்சனை. ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று சகலரும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்று கொண்டுள்ளனர். சூடான் பிரச்சனையை "உலகின் மிக மோசமான மாந்த குல நெருக்கடி" என்று வேதனையோடு ஐ.நா. சொல்கிறது.

அப்படி என்னதான் பிரச்சனை அங்கு? சூடானின் வறுமை நிலவும் மேற்குப் பகுதியான டார்ஃபுரில் சென்ற ஆண்டிலிருந்து (2003) இதுவரை கிட்டத்தட்ட 50,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் (இன்னும் நடந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது), ஒரு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவந்து அகதிகளாக உள்ளனர். அகதி மையங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தற்சமயம் பல உயிர்கள் (குறிப்பாக குழந்தைகள்) போனவண்ணம் உள்ளன.

சூடான் அரசாங்கம் டார்ஃபுர் பகுதியைக் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்வதாகச் சொல்லி 'சூடான் விடுதலைப் படை', 'நீதி மற்றும் சமத்துவ இயக்கம்' என்ற இரு குழுக்கள் அரசுக்கு எதிராக 2003ன் துவக்கத்தில் கலகத்தில் இறங்கின. இக்கலகப் படைகளில் பெரும்பாலும் அப்பகுதியின் சில ஆப்பிரிக்கக் கருப்பினங்களின் மக்கள் இடம்பெற்றிருந்தனர். இப்பகுதியில் பல காலமாகவே உள்ளூர் கருப்பினக் குழுக்களுக்கும், அராபியக்குழுக்களும் (இவர்களை 'ஜன்ஜாவீட்' என்று அழைக்கிறார்கள்) இடையே பூசல்கள் இருந்து வந்துள்ளன. அரசாங்கம், மேற்சொன்ன கலகப் படைகளை ஒடுக்க, அரபுக் குழுக்களைச் சகல வழிகளிலும் ஆதரித்து உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஜன்ஜாவீட், மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, அராபியரால்லாத பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தும், கொடூரமாகப் பெண்களைச் சூறையாடியும், வீடுகள், கிராமங்களைத் தீக்கிறையாக்கியும், உடைமைகளைத் திருடியும் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக இடம் பெயரச் செய்துவிட்டனர். உலகம் இதனை ஓர் 'இன அழிப்பாகவே' பார்க்கிறது. ஆனால், சூடான் அரசாங்கமோ ஜன்ஜாவீடின் மேல் நடவடிக்கை எடுப்பதாக சொல்லிக்கொள்கிறது.

இந்நிலையில் உலக நாடுகள் சூடான் அரசாங்கத்தை, ஜன்ஜாவீடின் ஆயுதங்களைக் களைந்து நடக்கும் வன்முறை நிறுத்தும் பொருட்டு, ராஜீய முறைகளில் நெருக்குதலுக்குள்ளாக்க முயற்சித்துக் கொண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஐ.நா.பாதுகாப்பு சபை, முப்பது நாட்களுக்குள் அரபு வன்முறையாளர்களை அடக்கி ஒடுக்க சூடானுக்கு நிபந்தனை விதித்து தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. ஆனால், சூடான் இத்தீர்மானத்தை நிராகரித்துள்ளது. என்ன நடக்கப் போகிறதோ? அதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? கொடுமையான உலகமிது!

Monday, July 26, 2004

இது நன்மை பயக்குமா?

"உலகளாவிய தமிழ் இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகள், எழுத்துருக்களைக் கண்டறிந்து தேடும் வகையில் தேடுபொறி மென்பொருள் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று சட்டப்பேரவையில் தமிழக அமைச்சர் இன்று அறிவித்துள்ளார். (காண்க - தினமணி செய்தி)

இம்முயற்சி எந்த அளவிற்கு அவசியமானது என்று தெரியவில்லை. மாறாக, அனைவரும் சீரான ஒரு குறியீடு/எழுத்துருவை (உம்.யுனிகோடு) பயன்படுத்துவதற்கு அரசு வழிவகை செய்யலாம்.

Thursday, July 22, 2004

மேற்குக் கரைச் சுவரும் ஐ.நா. தீர்மானமும்

ஐ.நா.சபை, பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரையில் இஸ்ரேல் கட்டிக்கொண்டிருக்கும் தடுப்புச் சுவரைக் கண்டித்து நேற்றுமுன்தினம் (20.07.2004) ஒரு தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. 150 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 6 நாடுகள் எதிர்த்தும், 10 நாடுகள் வாக்கேதும் அளிக்காமல் ஒதுங்கிவிட்டன. கடந்த காலங்களில் இதுபோன்ற எத்தனையோ தீர்மானங்களை மதிக்காமல் ஒதுக்கித் தள்ளிய இஸ்ரேலுக்கு இத்தீர்மானத்தால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை (காப்பாற்றுவதற்கு இருக்கவே இருக்கிறான் பெரியண்ணன்!). கட்டுமான வேலைகள் நடந்துகொண்டுதான் உள்ளன; தொடரத்தான் போகிறது. சபையில் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும், அதற்கு கட்டுப்படுத்தும் அதிகாரம் ஏதும் இல்லை. ஆனால் நிறைவேறிய தீர்மானம், அதிகாரம் பொருந்திய ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஒருக்கால் இத்தீர்மானம் அங்கு கொண்டுவரப்படுமாயின், அமெரிக்கா 'வீட்டோ' எனப்படும் சிறப்பதிகாரத்தால் அதை நிராகரித்து இஸ்ரேலை வழக்கம்போலக் காப்பாற்றிவிடும்.

ஐ.நா. சபை கேட்டுக் கொண்டதற்கினங்க, கடந்த 9 ஜூலை 2004 அன்று பன்னாட்டு நீதிமன்றம் இஸ்ரேல் கட்டிக் கொண்டிருக்கும் தடுப்புச் சுவர் பன்னாட்டு விதிகளுக்குப் புறம்பானது என்று ஏகமனதாகத் தீர்ப்புக் கூறியிருந்தது (அங்கும் அமெரிக்கா மட்டும் தன் எதிர்ப்பைக் காட்டியிருந்தது). அத்தீர்ப்பிற்குப் பிறகு வரையப்பட்டதுதான் நேற்றைய தீர்மானம்.

சுவற்றைப் பற்றி சில வரிகள். மேற்குக் கரையில் 700 கி.மீ. தொலைவிற்கு இச்சுவர் பாலஸ்தீனப் பகுதிக்குள் எழுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. தன் நாட்டு மக்களை தற்கொலைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்கே இச்சுவர் கட்டப்படுவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. பாலஸ்தீனர்களோ, இது தங்கள் நிலத்தை அபகரிக்கும் மற்றும் புதிய எல்லையை வரையறுக்கும் செயல் என்று அஞ்சுகின்றனர். பி.பி.சி. இணைய தளத்தில் காணக்கிடைத்த சில படங்களை இங்கே பார்வைக்கு வைக்கப்படுகிறது.பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லிக் கொண்டு கட்டப்படும் இச்சுவரை இஸ்ரேல் ஏன் தன் எல்லைக்குள் கட்டாமல் பாலஸ்தீனப் பகுதிக்குள் வந்து கட்டுகிறது என்ற கேள்விக்கு மூன்றாவது படத்தை உற்றுப் பார்த்தபோது பதில் கிடைத்தது, அங்கும் சில 'குடியிருப்புகளை' ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற அக்கிரமம் எங்கும் நடைபெறாது!

பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்

ஐ.நா. சபை தீர்மானம் GA/10248

இதுதொடர்பான மற்ற சில எண்ணங்கள்:

தற்கொலைத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் அங்கு நடக்கும் இச்செயல்களின் வேர் என்ன? இஸ்ரேல் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும்தானே? தங்கள் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்திப் பேசும் இவர்கள் பாலஸ்தீனியர்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கிறார்களா, இல்லை இனிமேல் ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம், செய்த இடங்களிலிருந்து வெளியேறுகிறோம் என்று சொல்கிறார்களா? அந்த எண்ணமே அங்கிருப்பதாகத் தெரியவில்லை. உலகம் முழுதும் உள்ள தங்கள் இன மக்களை வந்து இங்கு குடியேறச் சொல்லிக்கொண்டுள்ளனர், அப்படிச் சிலர் வந்து கொண்டுமுள்ளனர். அவர்களுக்குத்தான் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்ட/கொண்டிருக்கும் இடம் இருக்கிறதே?!

பாலஸ்தீனர்கள் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு அறிவுப் பூர்வமாக செயல்படுவது குறைவென்றே தோன்றுகிறது. அவர்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, மலிந்திருக்கும் ஊழல் போன்றவை அவர்களை மேலும் பலவீனமடையச் செய்கிறது. அரபு நாடுகள் வெற்றுக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை.

தங்கள் அடக்குமுறைகளுக்கும், தாக்குதல்களுக்கும் நியாயம் கற்பிக்க பல அரசாங்கங்களுக்கு 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' மிகவும் வசதியான ஒன்றாகிவிட்டது. தீவிரவாதிகளைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு எத்தனை வீடுகள் பாலஸ்தீனத்தில் தரைமட்டமாக்கப்பட்டுக் கொண்டுள்ளன! பெருங்கொடுமையிது.

யூத சமுதாயத்தின் பலம் (பணம், அரசியல், அதிகாரம்) அமெரிக்காவில் அதிகம் என்று படுகிறது. அரசியல் சுயநலங்களுக்கு வேண்டி அனைத்து அமெரிக்க அரசாங்கங்களும் என்றும் இஸ்ரேலை ஒருதலைப்பட்சமாக ஆதரித்தே வருகின்றன. அவர்கள் நினைத்திருந்தால், நினைத்தால் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனையை எப்பொழுது வேண்டுமானாலும் முடித்து வைக்கலாம், ஆனால் அவ்வாறு நினைக்கமாட்டார்கள் என்றே அஞ்சவேண்டியுள்ளது.

ஐ.நா பாதுகாப்புக் குழுவில் உள்ள 'வீட்டோ' அதிகாரம் அதன் உண்மையான நோக்கத்தை (என்னவாயிருப்பினும்) தக்கவைத்துக்கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

Monday, July 19, 2004

"புத்தர் தேசம்"

'சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தியாகனூரில் உள்ள புத்தர் சிலை' என்றால் வியப்பும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ள மேலும் ஆர்வம் பீறிடுவதும் இயல்புதானே? ஜூலை-2004 மாத 'காலச்சுவடு' இதழில் 'புத்தர் தேசம்' என்றொரு கட்டுரையில்தான் [பக்.46] இவ்வரிய செய்தியைக் கண்டேன். புத்தகத்தின் அச்சுப் பதிப்பில் காணக் கிடைக்கும் சில படங்களை நோக்கினால் 'வயல்வெளி நடுவில் மரத்தடியில் புதர் மண்டிய இடத்தில்' இருக்கும் 'இன்னொரு புத்தர் சிலை' தெரியும். காற்று, மழை, வெயிலுக்கு தாக்குண்டு பல்லாண்டுகளாக வெட்ட வெளியில் இச்சிலைகள் கிடப்பதுபோல் தோன்றுகிறது. கண்டதும், வரலாற்றின் அரிய பொக்கிஷங்களை பாதுகாக்கத் தெரியாதவர்களாக உள்ளோமோ என்ற ஆதங்கமே ஏற்படுகிறது. ("தமிழ்ச் சமூகத்திற்குத் தொன்மையான வராலாறு இருந்தும் அதற்கான ஆதாரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் பண்பு தமிழர்களிடம் மிகவும் குறைவு." என்று அதே புத்தகத்தின் வேறொரு கட்டுரையில் [பக்.22] குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகம் இங்கும் பொருந்துகிறது).

"இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் பெளத்தம் வெகுகாலம் ஆற்றலோடு இருந்தது எனப் பல்வேறு வரலாற்று அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள"தாகக் குறிப்பிடும் கட்டுரையாளர் (விவேகானந்தர், நேதாஜி ஆகியோருடன் தமிழகம் கொண்டிருந்த தொடர்பு ஏனோ இச்சமயத்தில் சட்டென நினைவுக்கு வருகிறது.), "ஆனால் அது பற்றிய ஆய்வுகள்தாம் செய்யப்படவே இல்லை. அவை செய்யப்பட்டால் இப்போதுள்ள பல இந்துக் கோவில்கள் பெளத்தக் கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவைதாம் என்பது தெரியவரும். தஞ்சைப் பெரிய கோவிலேகூட அப்படி இடித்துக் கட்டப்பட்டதுதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கோவிலில் உள்ள புத்தர் சிற்பங்கள் அதற்கு ஆதாரங்களாக உள்ளன"வென்று இதுவரை அறிந்திராத தகவலைத் தருகிறார். [பக்.48]

"தமிழ்நாட்டில்.....பணம், புகழ் ஈட்டும் குறுக்கு வழியாக இப்போது புத்தரின் பெயர் மாற்றப்படுகிறது" [பக்.48] எனச் சுட்டிக்காட்டி, "தமிழ்நாடெங்கும் சிதறிக் கிடக்கும் புத்தர் சிலைகள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்தும்" ஆய்வை மேற்கொள்ள வலியுறுத்துகிறார்.

இதுபோன்று இன்னும் எத்தனை அரிய பொக்கிஷங்கள் கிராமங்களில் மறைந்துள்ளனவோ!

[முழுக் கட்டுரையை இணையத்தில் வாசிக்க...]


Thursday, July 15, 2004

இலங்கையில் மீண்டும் போர் வருமா?

வரவே வேண்டாம் என்றுதான் மனது விரும்புகிறது. ஆனால், கள நிலவரம் அவ்வாறு இல்லையென்று ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக்கொண்டுள்ளன. இணையத் தமிழ் ஊடகமொன்றில் இன்று வந்த செய்தியொன்று இவ்வாறு செல்கிறது:

"இதற்கிடையே, இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கலாம் என 'Stratfor' (strategic forecasting) என்ற சர்வதேச புலனாய்வு மையம் எச்சரித்துள்ளது.

கருணாவைப் பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்து போன்ற செயல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டுள்ளதாகக், போரை நோக்கியே இலங்கை அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.

புலிகளை முறியடிப்பதாற்கான தந்திர உபாயங்களை இலங்கை ராணுவத்தினருக்கு அமெரிக்க நிபுணர்கள் அளித்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது."


[இவர்கள் குறிப்பிட்டுள்ள STRATFOR இணைய தளத்தில் விரிவான செய்திகளைப் படிக்க காசு கொடுக்க வேண்டும் போலுள்ளது.]

வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கதையாகத்தான் கருணா போன்றோரின் சுயநல நடவடிக்கைகள் அமைந்துள்ளன. கடந்த காலப் போரினால் தமிழர்கள் அடைந்த கஷ்டமும், நஷ்டமும் போதும்; அமைதி வரட்டும், அனைவரின் வாழ்வும் செழிக்கட்டும். சுயநலக்காரர்களே! நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்யாதிருங்கள், ஏதாவது புண்ணியம் கிட்டும்.

முடிச்சுகள்

கோடைகாலம் என்றுதான் பெயர், இந்த வருடம் சதா மழை பெய்த வண்ணமே உள்ளது. இவ்வாறு அலுத்துக் கொண்டாலும் மக்கள் ஏதாவது வெளி வேலைகளைச் செய்து கொண்டுதான் உள்ளனர். உடன் பணிபுரியும் ஒருவருக்கு, மரங்களுக்கு இடையில் வலையைக் கட்டித் தொங்கவிட்டுப் படுத்துக்கொள்ள ஆசைபோலுள்ளது; மற்றொரு நண்பரிடம் விசேட முடிச்சு ஒன்றைப்பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பாய்மரக் கலங்களைச் செலுத்துவதில் பயிற்சியுள்ளவர் என்று கேள்வி. [Sailor-க்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?] இவ்வாறு கலங்களைச் செலுத்துவோருக்கு விசேட முடிச்சுகள் போடத்தெரியுமாம்!

இதைக் கண்டுகொண்டிருந்தபோது, நமக்கு எத்தனை வகையான முடிச்சுகள் போடத்தெரியும் என்ற வினா எழுந்தது. ஒரு கை விரல்விட்டு எண்ணுமளவுக்கு இருக்குமா என்பதே சந்தேகந்தான்! அன்றாட வாழ்விலே எங்கேயாவது முடிச்சுகளைப் போட்டுக்கொண்டுதான் உள்ளோம் (ஷு, கொண்டை, கோணிப்பை, பந்தல், மாடு, டை, தாலி,...), ஆனால் அதைப்பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. இந்த இணைய தளத்தைப் பார்த்த போது, இப்படியெல்லாம் முடிச்சுகள் உண்டா என்று ஆச்சரியம் மேலிட்டது.

முடிச்சு என்றதும் ஆரம்பப் பள்ளிக்கூட நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது, தலைமையாசிரியருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளில் ஒன்று, அவர் கொடுக்கும் தாள்களில் துளையிட்டு அவற்றைக் கோப்புகளில் கட்டி வைப்பது (அது கூடச் செய்யாமல் அவருக்கு வேறென்ன வேலையென்று தெரியவில்லை). துளையிடுவதற்கு ஒரு சிறிய இயந்திரம் இருந்ததால் கவலையில்லை, ஆனால் முடிச்சுப் போடவேண்டுமே! போடவும் தெரியாது, போடத்தெரியாதென்று அவரிடம் சொல்லவும் பயம்/தயக்கம். அவர் இருக்கும்போது துளையிட்ட தாளினுள் வேகமாக கயிற்றைச் செருகி முடியிடுவதுபோல் பாவனை செய்து கோப்பை மூடிவிட்டு, ஆள் நகர்ந்தபின் வேறொரு பையனை அழைத்து முடிபோடச் செய்த தமாஷ் கொஞ்ச நாள் நடந்தது. பிறகு எப்படியோ ஒருவழியாகப் பழகிக்கொண்டேன். இப்போது அவற்றை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

Monday, July 12, 2004

"தென்னாட்டு இசையில் மேற்கத்தியக் கருவிகள்"

இனிய தமிழில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் பி.பி.சி.யின் தமிழ் வலைத்தளத்தில் "தென்னாட்டு இசையில் மேற்கத்தியக் கருவிகள்" என்றொரு ஒலித்தொகுப்பில் வயலின் பற்றிய பதிவுகளை சென்ற வார இறுதியில் கேட்டுப்பார்த்தேன். சில கர்நாடக இசை விற்பன்னர்களின் விளக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வயலின், கர்நாடக இசையில் நுழைந்த விதம், அவற்றை வாசிக்கும் விதங்கள், பக்கவாத்தியத்திலிருந்து அது தனி வாத்தியமாக ஆனதெப்படி போன்ற பல தகவல்கள் தெரியவருகின்றன.

உரையாடல்களைக் கேட்கும் சமயத்தில் சற்றே ஏமாற்றம் அடைந்தேன் - நிகழ்ச்சித் தொகுப்பாளர் மட்டும்தான் தமிழில் பேசினார்.

"தமிழ் திரையிசையில் வயலின்" என்று யாரேனும் ஓர் ஆய்வு செய்தால் அதில் இளையராஜாவிற்கு அதிமுக்கிய இடமிருக்குமென்பதில் சந்தேகமில்லை.

Tuesday, July 06, 2004

'பெரிய மனிதர்' கைதுகள் - ஒரு கேள்வி

'பெரிய மனிதர்'களின் 'உள்ளே-வெளியே'யின்போது, அவர்கள் காட்டும் 'சிரித்த' முகத்தைப்பற்றி இன்று அருண் வைத்தியநாதன் எழுதியிருந்ததைக் கண்டதும் அடிக்கடி மனதில் எழும் கேள்வியொன்று மீண்டும் வந்தது.

மேலை நாடுகளில் முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது, அவர்களுக்கு குண்டு துளைக்காத உடையை அணிவித்துச் செல்வதை தொலைக்காட்சியில் பலமுறை கண்டதுண்டு. (சில சமயங்களில் காவலர்களேகூட முகமூடி அணிந்துகொண்டு, குண்டு துளைக்காத உடையுடன் சென்று கைது செய்வதும் உண்டு). இவ்வாறு செய்யப்படுவதற்கான காரணங்கள் பின்வருவனவாக இருக்கலாம் என்று சிலவற்றை யூகிக்கிறேன்:
1) கைதுசெய்யப்பட்டவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று அதன்மூலம் உண்மை தெரியாமல் போகக்கூடும்.
2) மேற்கண்ட நபருக்கு ஒன்று நடக்கும்பட்சத்தில், அக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட வேறு யாரேனும் தப்பித்துச்செல்ல வாய்ப்பு ஏற்படக்கூடும்.
3) குற்றவாளியாகவே இருப்பினும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கும்வரை அந்நபரைப் பாதுகாக்கவேண்டும்.
4) கைதுசெய்யப்பட்டவர் ஒருவேளை குற்றமற்றவராகவும் இருக்கலாம், அதனால் அவரைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

முத்திரைத்தாள் மோசடியில் பல 'முக்கியமான' நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தினம் ஒரு செய்தி வருகிறது, கைதுகளும் நடந்து கொண்டுள்ளது. 'பெரிய மனிதர்'களும் சிரித்துக் கொண்டேதான் உள்ளே போகின்றனர். போகும் மனிதன் நம்மைக் காட்டிக்கொடுத்துவிடுவான் என்ற அச்சத்தில் தொடர்புடைய மற்றொருவரால் இந்நபருக்கு ஊறுவிளைய பெரும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற முக்கிய வழக்குகளில் கைதாபவர்களுக்கு நம்நாட்டில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பதுதான் கேள்வி. வெறுமனே லத்தி அல்லது கத்தித் துப்பாக்கியுடன் சில காவலர்கள் சூழ்ந்து நிற்பது மட்டும் போதாதென்று தோன்றுகிறது, ஏனென்றால் குற்றத்தின் வீச்சு அப்படி - பல ஆயிரம் கோடிகள், பல்வேறு 'முக்கிய' மனிதர்கள் என்று...

Sunday, July 04, 2004

யூரோ 2004 - கிரீடம் சூடியது கிரேக்கம்

யூரோ 2004 தொடரின் இறுதியாட்டத்தை எதிர்நோக்கி போர்ச்சுகல், கிரேக்க நாடுகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. வீதிகளில் தோரணங்கள், அங்கத்தில் வண்ணப் பூச்சுகள், அலங்காரங்கள், கொடிகள், விதவிதமான உடைகள் என்று குதூகலித்துக்கொண்டிருந்தனர். ஐரோப்பா முழுவதும் ஒரு வகையில் இன்று விசேடமான நாளாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

முதல் ஆட்டத்தில் மோதிய அணிகளே இறுதி ஆட்டத்திலும் மோதுவது ஓர் ஆச்சரியமான நிகழ்வு. சுமார் 62,000க்கும் மேற்பட்டோர் நிரம்பிய விளையாட்டரங்கில் போர்ச்சுகல், கிரேக்க அணிகள் களமிறங்கிப் போராடத் துவங்கின. போர்ச்சுகலின் ஜனாதிபதி, பிரதமர், கிரேக்க நாட்டுப் பிரதமர் என்று சகலரும் ஆவலுடன் ஆட்டத்தை காண அமர்ந்திருந்தனர். போர்ச்சுகல் அணி பந்தை அதிக நேரம் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டிருந்தது. வந்த சில வாய்ப்புகளை இரு அணிகளும் நழுவவிட்டன. முதல் பாதியில் இருவரும் ஓரளவு சரி சமமாக மோதியிருந்தும் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று.

ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பில், கிரேக்க வீரர் Angelos Charisteas மூலையில் இருந்து பறந்து வந்த பந்தை கோலுக்குள் தலையால் தள்ளி தங்கள் அணியின் கனவு நனவாவதற்கு அடித்தளமிட்டார். அதற்குப்பிறகு போர்ச்சுகல் அரும்பாடுபட்டதென்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் அவர்களால் கோலெதுவும் போடமுடியாமலேயே போயிற்று. கடைசியில் 0-1 என்ற கணக்கில் போர்ச்சுகலை வென்று கிரேக்க நாடு வாகை சூடியது. [வாகை சூடுதல் என்றால் என்னவென சட்டென ஒரு கேள்வி எழுகிறது. கழகத்தமிழகராதியை வேகமாகப் புரட்ட, ஒரு மரம், அகத்தி முதலான பொருள்கள் தெரியவருகிறது. ஏதேனும் ஒரு பந்தயத்தில் (அ) போரில் வென்றவர்கள், (அகத்தி)மரத்தின் மலர்களைச் (சிவப்பாக பிறை போல இருக்கும்) சூடுவதைத்தான் "வாகை சூடுதல்" என்று சொல்லியிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறிருப்பின், அம்மலர்களைக் கொண்ட மாலையைச் சூடும் வழக்கம் நம் நாட்டில் எப்பொழுது தோன்றியது, அதற்கான குறிப்பான காரணங்கள் ஏதேனும் இருந்திருக்குமா, இன்னும் அவ்வழக்கம் எங்காவது நடைமுறையில் உள்ளதா போன்றவற்றை அறிந்து கொள்ள ஆவலாயுள்ளது.] ஐரோப்பியப் பட்டத்தை (2004) முதன் முறையாக வென்று கிரேக்க வீரர்கள் தங்கள் நாட்டு கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர்.

தங்கள் நாடே நடத்தும் போட்டியில், தங்கள் அணியே இறுதியாட்டத்திற்கு வந்தும் வெல்லாத வருத்தத்தில் உள்நாட்டு ரசிகர்கள் கனத்த மனதுடன் வெளியேறினர். எதிர்ப்பக்கம், ரசிகர்களுடன் கிரேக்கப் பிரதமரும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார். கிரேக்க நாடும் இந்நேரம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒலிம்பிக் பந்தயத்தை நடத்தப்போகும் அவர்களுக்கு இவ்வெற்றி ஓர் உந்துகோலாக இருக்க வாழ்த்துகள்! யூரோ 2008, ஆஸ்திரியா மற்றும் ஸ்விட்சர்லாந்தில் நடக்கவுள்ளன.

Friday, July 02, 2004

கடலில் நதி நீர் வீணாகவா கலக்கிறது?

"கேரளத்திலிருந்து வீணாக கடலை நோக்கிப் பாயும் ஆற்று நீரைத் தமிழகத்திற்கு திருப்பிவிடலாம்", "மழை வெள்ளத்தால் பெருக்கெடுத்து வீணாக கடலில் கலக்கும் நதியின் தண்ணீரை...." போன்ற செய்திகளை அவ்வப்போது ஊடகங்களில் காணும்போது எழும் கேள்வி - "கடலில் நதி நீர் வீணாகவா கலக்கிறது?". தனக்கு பயன்படவில்லையென்றால் ஒன்றை வீண் என்று சொல்லிவிடுவது மனிதனின் வாடிக்கை. எங்கோ ஒரு மலை அல்லது சுனையில் பிறந்து, காடு, மேடு தாண்டி, நாட்டில் உருண்டு கடலில் சென்று சேரும் வண்ணம் இயற்கை ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைப்பு வீணாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணம்.

நம் நாட்டில் சமீப காலங்களில் பேசப்பட்டுவரும் நதி நீர் இணைப்புத் திட்டத்திலும் இவ்வாதம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது எவ்வளவு அபத்தமானது என்பதை ஜூன் மாத காலச்சுவடில் வந்துள்ள கட்டுரை ஒன்று பறைசாற்றுகிறது.

Thursday, July 01, 2004

யூரோ 2004 - 'செக்'கின் கனவு தகர்ந்தது

இன்றைய கடைசி அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வெல்லும் என்ற "பரவலான எதிர்பார்ப்பை" ஒலிம்பிக் நாட்டினர் முறியடித்து செக்கின் கனவைத் தகர்த்தனர். முழு ஆட்ட நேர முடிவில் 0-0 என்ற நிலை ஏற்படவே கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அச்சமயத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பில் கோலைப் போட்டு இறுதிக்கு முன்னேறியுள்ளனர் கிரீஸ். போர்ச்சுகலைப் போலவே இறுதிச் சுற்றுக்குச் செல்வது இவர்களுக்கும் இதுவே முதல் முறை.

ஆரம்பத்திலிருந்து எல்லாப் போட்டிகளிலும் வென்று வந்த செக் அணிக்கு (அந்நாட்டு ரசிகர்களுக்கும்) இன்றைய தோல்வி மிகப்பெரிய ஏமாற்றம். கனத்த மனதுடன் மைதானத்திலிருந்து அவர்கள் வெளியேறிக் கொண்டுள்ளனர். அதேசமயத்தில், ஏதென்ஸ் நகரம் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டுள்ளதாம்.

வரும் ஞாயிறன்று தெரிந்துவிடும் யார் கையில் கோப்பையென்று.