படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, August 22, 2006

இசை ஆர்வலர்களுக்கு...

"இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனியை அளித்த சாந்தோம் தமிழ் மையம், Mozart Meets India என்னும் 60 நிமிட ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்கள். கர்னாடக சங்கீதத்தின் சங்கராபரணம், சிந்துபைரவி, காபி, பிலஹரி, பந்துவராளி, ஹம்ஸாநந்தி போன்ற ராகங்களை மேற்கத்திய இசையுடன் இழையூடவைத்து, பாம்பே ஜெயஸ்ரீ, ஓ.எஸ்.அருண், கத்ரி கோபால்நாத், எம்பார் கண்ணன், ஏ.கே.தேவி, எல்.கிஷோர்குமார் போன்றவர்களுடன், 75க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை ஃபாதர் ஜகத் காஸ்பர்ராஜ் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு இசையமைத்த நெல்லை ஜேசுராஜின் பெயரை இனி அடிக்கடி கேட்கப்போகிறோம். இது கர்னாடக சங்கீதத்தின் குவி மையமான மியூஸிக் அகாடமியில் ஒலிக்கவிருக்கிறது. ஒரு மியூஸிக் வீடியோவும், ஓப்பெராவும் அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்." என்று எழுத்தாளர் சுஜாதா தனது 'கற்றதும்... பெற்றதும்...' பகுதியில் (ஆனந்த விகடன்-20.08.2006) எழுதியுள்ளார். இசை நிகழ்ச்சி நடக்கப்போகும் மற்றும் 'ஆல்பம்' கிடைக்கப்போகும் தேதிகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை.

Thursday, August 10, 2006

தமிழ் மண்ணே வணக்கம்! (21)

13.08.2006 ஆனந்த விகடனின் "தமிழ் மண்ணே வணக்கம்!" பகுதியில் வந்துள்ள பத்திரிக்கையாளர் ஞாநியின் கட்டுரை பின்வருமாறு (ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருப்பின் அது நகலெடுத்து ஒட்டும்போது வந்ததாக இருக்கும்):

பாரிமுனைப் பகுதி. பள்ளி முடிந்து, சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சட்டக் கல்லூரி சந்திப்பின் அருகே ஒரு பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுகின்றன. பைக் ஓட்டி வந்த இளைஞர், பைக்கிலிருந்து சில அடிகள் உயரே தூக்கி எறியப்பட்டு விழுகிறார். இதைக் கண்ணெதிரே காணும் பள்ளிச் சிறுவர் கூட்டத்தில் ஒரு சிறுவன் உற்சாகமாக எம்பிக் குதித்து “ஹை... சூப்பர் ஆக்ஸிடென்ட்!” என்று கூவுகிறான்.

ராஜபாளையம் அருகே மம்சாபுரம் என்ற கிராமம். தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் குழந்தைகள் (அவர்களைத் தொழிலாளர் என்று சொல்வதே தவறு.) அந்திமயங்கும் வேளையில் கிராமத்துக்கு பஸ்ஸில் திரும்புகிறார்கள். உடனே வீட்டுக்கு ஓடாமல், குழந்தைகள் நலச் சங்கம் நடத்தும் மாலைப் பள்ளிக்கு ஆர்வத்துடன் ஓடுகிறார்கள். வகுப்பறைச் சுவரில், ஓர் அட்டை நிறைய காலிப் பெட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. எது... என்ன... எதற்காக என்று குழந்தைகள் பதில் சொல்கிறார்கள்.

‘இது டூத் பேஸ்ட்.. இது எதற்கு?’

‘பல் தேய்க்க.’

‘ஏன் பல் தேய்க்க வேண்டும்?’

‘பல் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.’

‘இது என்ன பெட்டி?’

‘சிவப்பழகு கிரீம்!’

திடுக்கிட்டு அந்தக் கறுப்பு நிலாக்களிடம் கேட்கிறேன். ‘இது எதற்கு?’ சிவப்பாவதற்குத்தானாம். ‘விலை என்ன தெரியுமா?’ பைசா சுத்தமாக சரியாகச் சொல்கிறார்கள். ‘யாரெல்லாம் வாங்குகிறீர்கள்?’ உயரும் கைகளெல்லாம் வளையல்கள் அணிந்த கறுப்புக் கரங்கள். நாளெல்லாம் தீக்குச்சி அடுக்கிய கைகள்.

‘பையன்கள் உபயோகிப்பதில்லையா?’

‘பொண்ணுங்கதான் சார் செவப்பா இருக்கணும்’ என்று பத்து வயசுப் பையன்கள் சொல்கிறார்கள்.

தஞ்சாவூரில் ஒரு உயர் நடுத்தர வகுப்பு வீட்டுக்கூடம். உயிர்ப்புள்ள டெலிவிஷன் முன்னால் சிலைகள் போல அம்மா, மகள், அண்ணன், பாட்டி. காம இச்சையின் உச்சத்தில் ‘தீப் பிடிக்க தீப் பிடிக்க...’ நிகழும் உடலிணைவின் அடையாள அசைவுகளுடன் ஆண், பெண் பிம்பங்கள் ஆடுவதை, உயிருள்ள சிலைகள் கண்கொட்டாமல் பார்க்கின்றன. திடீரென உடல் உபாதையில் தங்கை குரலெழுப்புகிறாள். ‘அண்ணா, நேப்கின் வாங்கிட்டு வந்து தர்றீங்களா?’அம்மாவும் பாட்டியும் அண்ணனும் இப்போது திடுக்கிடுகிறார்கள். அண்ணன் முகத்தில் தர்மசங்கடம். அம்மா முகத்தில் அருவருப்பு. பாட்டி, பேத்தியைக் கண்டிக்கிறாள். ‘யார்கிட்ட எதைக் கேட்கறதுன்னு இல்ல? பக்கத்துலதானே கடை. நீயே போ!’ மறு நொடி, டி.வி&யில் மூழ்குகின்றன மூன்று தலைகள். அங்கே தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

இதுதான் இன்றைய தமிழ்ச் சமூகம். ரத்தமும் வலியும் புரியாத பள்ளிச் சிறுவன்; படிக்க வேண்டிய வயதில் கூலி வேலை பார்த்துக் கிடைத்த கூலியில் வீட்டுக்குக் கொடுத்தது போக மிஞ்சிய சில்லறையைச் சேமித்து அழகு கிரீம் வாங்கச் செலவழித்து, எப்படியும் சிவப்பாகிவிட விரும்பும் ஏழைச் சிறுமிகள்; ஆபாச நடனத்துக்கு நடு வீட்டில் இடம் தருவோம், ஆனால், ஆரோக்கியம் பற்றிய பேச்சை ஒழுக்கக் கேடாகத்தான் நினைப்போம் என்று குழம்பிய மனதுடன் முழுக் குடும்பம்.

எப்படி நேர்ந்தது இது? யார் இதற்குப் பொறுப்பு? குடும்பம் முதல் அரசியல் வரை அதிகாரத்தில் உள்ள எல்லாரும் பொறுப்புதான் என்றாலும், அத்தனை பேருடைய சிந்தனையையும் சிந்திக்கும் முறையையும் வடிவமைக்கும் சக்தி எது?

மீடியா!

குறிப்பாகப் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும்தான். இன்று இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பத்திரிகைகள் விற்கும் மிகச் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொலைக்காட்சிப் பெட்டிகள், கேபிள் இணைப்புகள் மிக அதிகமாகப் பரவியிருக்கும் ஒரு சில மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது.

ஆனால், தமிழர்களுக்குப் படிக்கக் கிடைப்பது என்ன? பார்க்கக் கிடைப்பது என்ன? ஒரு சில விதிவிலக்குகளை விட்டுவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் குப்பைதான்.

டெலிவிஷனின் வருகையும், வீச்சும் தமிழ்ப் பத்திரிகை உலகத்தை நிலைகுலையச் செய்தன. டெலிவிஷனுடன் போட்டி போடுவது எப்படி என்ற மலைப்பில், பொழுதுபோக்கு அம்சங்களை அதிகமாக, பிரமாண்டமாக நாமும் தர வேண்டும் என்று திசை மாறிப்போயின. பத்திரிகைகளின் பலமே அகல உழுவதைவிட, ஆழமாக உழுவதற்கான சாதனம் அது என்பதுதான். இந்த பலத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தடுமாறத் தொடங்கின பத்திரிகைகள்.

டெலிவிஷனோ, தான் தனியே ஒரு சக்தி வாய்ந்த சாதனம் என்பதை மறந்து, சினிமாவின் குளோனிங் ஆட்டுக் குட்டியாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் இடம் பெறும் அளவுக்கு சினிமா ஆக்கிரமிப்பதில்லை. சினிமாவுக்கு என்று தனி சேனல்கள் உண்டே தவிர, எல்லா சேனலும் சினிமா கொட்டகையாக மாறும் அவலம் இங்கு மட்டும்தான்.

டெலிவிஷன் சொந்தமாகத் தயாரிப்பது தொடர்கள். பத்திரிகை சாதனத்திலிருந்து இரவல் வாங்கிய தொடர்கதை வடிவத்தில் டெலிவிஷன் அளிப்பது என்ன? சமூகத்தில் இருக்கும் அத்தனை கசடுகளையும் ரசிக்கத்தகுந்த விஷயங்களாகப் பார்வையாளர்களுக்கு முன்வைக்கின்றன. துரோகம், பொறாமை, கள்ளக் காதல், பெண்ணடிமைத்தனம் என்று சமூக மனித பலவீனங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டும் நமது மூளைக்குள் பதிவு செய்யப்படுகின்றன. கலையும் பொழுதுபோக்கும் மனிதரை இன்னும் உற்சாகப்படுத்தி, மனதை லேசாக்கி, கசடுகள் நீக்கி இன்னும் மேன்மையானவராக மாற்றுவதுதான்.

ஊடகங்களின் திசை தவறிய தடுமாற்றங்கள் எல்லாமே ஒரே ஒரு காரணம் காட்டி மட்டுமே நியாயப்படுத்தப்படுகின்றன. தொழில் நடத்த வேறு வழியில்லை. இப்படிச் செய்யாவிட்டால் விளம்பரம் கிடைக்காது. எது செய்தால் லாபமோ அதில் ஈடுபடலாம் என்பது சுயநலம். எது சரியோ அதைச் செய்வோம்; அதை லாபகரமாக எப்படிச் செய்வது என்று வழிகள் கண்டுபிடிப்போம் என்ற முனைப்பே பொதுநலம், சுயநலம் இரண்டையும் ஒன்றுக்கொன்று முரண் இல்லாமல் சாதிக்கும் வழியாகும்.

ஆனால், பத்திரிகைகளிடம் சில தர்மங்களை எதிர்பார்க்கிறார்கள் வாசகர்கள். சமூகத்தில் எதெதுவோ கெட்டுப்போய்விட்டது; அவை எப்படியோ போகட்டும்... ஆனால், பத்திரிகைகள் கெட்டுப்போய்விடக் கூடாது என்ற எதிர்பார்ப்பு இன்னமும்கூட வாசகர் மனங்களில் பொதிந்திருக்கிறது.

வேறு எந்தத் தொழிலையும்விட, பத்திரிகைத் தொழில்தான் மக்கள் நலன்களுக்குக் கேடயமாக விளங்கும் தொழில் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திர உரிமைக்கே அடித்தளமாக இருக்கிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முதல் செய்தித்தாளைத் தொடங்கிய ஹிக்கி, அதை ஆங்கிலேய அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தத்தான் தொடங்கினார் என்ற சரித்திர உண்மையே இந்த நம்பிக்கைக்கும் ஆரம்பம்.

ஆனால், நடைமுறையில் இன்று பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிலையங்களும் முற்றிலும் நுகர்வோருக்கான பண்டங்களைத் தயாரிக்கும் தொழில்களாக ஆக்கப்பட்டுவிட்டன. சோப், ஷாம்பு, சமையல் எண்ணெய் போல பத்திரிகையும், டெலிவிஷனும் ஒரு சரக்கு என்றாகிவிட்டது.

சமூகத்தின் தர்மங்கள், அறநெறிகளுக்கெல்லாம் மனசாட்சியாக இருந்த, இருக்க வேண்டிய பத்திரிகைத் தொழிலும், டெலிவிஷனும் சரக்காகும்போது, வாசகரும் பார்வையாளரும் நுகர்வோராக மாற்றப்பட்ட பின்னர், அந்த நுகர்வோர் எப்படிப்பட்ட நுகர்வோராகச் செயல்படுகிறார்கள்?

தெருமுனை மளிகைக் கடையில் ஒரு கிலோ சர்க்கரை வாங்கினால், அதில் 200 கிராம் ரவை கலந்திருந்தால், நுகர்வோராக என்ன செய்வோம்? கொதித்தெழுந்து கடைக்காரரிடம் போர் நடத்தி, நீதி கேட்போம். ஆனால், நமது பத்திரிகைகளும், டெலிவிஷன்களும் இதே போன்ற கலப்படச் சரக்குகளை அளிக்கும்போது என்ன செய்கிறோம்? கண்டுகொள்வதே இல்லை.

அதுவும் முழு உண்மையல்ல. கண்டுகொள்வதும் தப்புத் தப்பாகக் கண்டுகொள்கிறோம். ஒரு பத்திரிகையில், ஒரு பிரபல நடிகரின் அடுத்த காதலி கேரளத்தி-லிருந்து இறக்குமதியாகும் புது நடிகை என்று ‘துப்பறிந்து’ செய்தி வெளியிட்டால் பத்திரிகை அலுவலகத்துக்கு 200 வாசகர் கடிதங்கள் வந்து குவிகின்றன. அதே இதழில் இன்னொரு பக்கத்தில், தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், இன்னும் மூன்று ஆண்டுகளில் இங்கொரு தார் பாலைவனம் உருவாகப்போகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்ட கட்டுரைக்கு, வாசகரிடமிருந்து வரும் கடிதங்கள் இருபதுகூட இல்லை.

சராசரி நடுத்தர தமிழ்க் குடும்பத்தின் இன்றைய நிலை என்ன? கடன் வாங்கிக் கஷ்டப்பட்டுக் கட்டும் வீட்டில் ஃப்ரிஜ் வைக்க ஒரு அறை, வாஷிங் மெஷினுக்கு இன்னொரு அறை, டி.வி. வைக்க மர கேபினெட். ஆனால், வீட்டில் படித்தவர்கள் நான்கு பேர் இருந்தாலும், எல்லாருக்குமாகச் சேர்த்து புத்தகங்கள் வைக்க முன்று அல்லது நான்கு தட்டு உள்ள அலமாரி தான். அதிலும் ஒரு தட்டை, கலைப் பொருட்கள் என்ற பெயரில் தூசி படிந்த கிளிஞ்சல் குவியல்கள் ஆக்கிரமித்திருக்கும். மாதம் நூறு ரூபாய்க்குப் பத்திரிகைகள் வாங்குவதும், இன்னொரு நூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குவதும் குடும்ப வருமானம் 20 முதல் 25 ஆயிரம் வரை உள்ள நடுத்தரக் குடும்பங்களுக்கு நிச்சயம் சுமையல்ல. ஆனால், வீட்டில் பொருளாதாரத் தட்டுப்பாடு வருவது போல் தோன்றினதுமே, முதலில் வெட்டு பத்திரிகைக்குத்தான். காபிக்கோ, டீக்கோ அல்ல! நூறு ருபாய்க்கு பத்திரிகை வாங்குவதற்கு பதில் கேபிள் இணைப்பு கொடுத்துவிட்டால் போதும் ஐம்பது சேனல் கிடைக்கும் என்று சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், அந்த ஐம்பது சேனலில் அறிவியல், சரித்திரம், சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கென்றே இருக்கும் சேனல்களைப் பார்ப்பது பாவச் செயல் என்று கருதுகிறது தமிழ்ச் சமூகம். சினிமா, தொடர் இரண்டைத் தவிர, தமிழ்ச் சமூகம் விரும்பும் ஒரே டி.வி. நிகழ்ச்சி, ஓயாமல் யாராவது பேசிக்கொண்டே இருக்கக்கூடிய அரட்டை, பட்டிமன்ற பாணி நிகழ்ச்சிகள்தான். தமிழர்களைப் போல ஓயாத பேச்சின் ஒலியிலேயே தன்னை அழித்துக்கொண்டு அறிவுத் தற்கொலை செய்யும் சமூகம் உலகில் வேறெங்கும் இல்லை.

கடந்த தலைமுறைகளில், தமிழ் மீடியாவுக்கு ஆழம் இருந்தது. சமூக அக்கறை இருந்தது. ஆனால், அதனிடம் நவீனத் தொழில்நுட்பமும், தேர்ச்சியும் இருக்கவில்லை. அடுத்த தலைமுறையிடம் தொழில்நுட்பமும் தேர்ச்சியும் வந்த வேளையில், அது சமூக அக்கறையையும், ஆழமான தேடலையும் தொலைத்துவிட்டது.

இன்று தமிழில் பிழையில்லாமல் எளிய வாக்கியங்களை எழுதும் ஆற்றல் உடைய இளைஞர்களைத் தேடிக் கண்டுபிடிக்கப் பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. கற்பனையும் படைப்புத் திறனும் உடைய இளைஞர்கள் பலரும், மசாலா சினிமா தயாரிக்கும் மெஷினுக்கு நரபலியாக நிவேதனம்செய்யப்படுகிறார்கள். மசாலா சினிமாவில் ‘ஜெயிக்கும்’ ஒவ்வொரு இளைஞரின் காலடிக்குக் கீழேயும் நூறு அறிவாளி இளைஞர்களின் பிணங்கள் மிதிபடுகின்றன. இதை மாற்றாவிட்டால், தமிழ்ச் சமூகம் தாய்ப் பாலே குடிக்காமல் பவுடர் பாலிலேயே வளர்ந்த சவலைக் குழந்தையாக இன்னும் இளைத்துப்போகும்.

எட்டாம் வகுப்பிலிருந்தே ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தினசரி பத்திரிகைகள் படிக்கவும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து பார்க்கவும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கான மதிப்பெண் தேர்வு முறையில் சேர்க்கப்பட வேண்டும். மீடியாவைப் புரிந்து கொள்ளவும், நுகரவும், ரசிக்கவும், அலசவும், கண்டிக்கவும், போற்றவும் தமிழ்க் குழந்தைகள் கற்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் பெரியவர்களாகும்போது, பத்திரிகை படிப்பதற்கும் டி.வி. பார்ப்பதற்கும் மாற்றாக தினம் மூன்று வேளை ஒரு கேப்ஸ்யூல் விழுங்கினால் உலக அறிவும், பொது அறிவும் கிட்டிவிடுமா என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்த விமர்சனமும் இல்லாமல், கிடைப்பதை நுகர்ந்து வாழும் சமூகம் பிணங்களின் சமூகமாகிவிடும். மோசமான மீடியா ஆக்கிரமிக்கும் சமூகத்தில் அரசியலும், அறிவியலும், கலைகளும், மனித உறவுகளும் சகலமும் மோசமானதாகவே இருக்க முடியும்.

உயிர்ப்பும் மனிதமும் நிறைந்த தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டுமெனில், மீடியா பற்றிய நமது தேடல் இன்றே, இந்த நிமிடமே, இந்த நொடியே தொடங்க வேண்டும். ஆழ்கடலில் மூழ்கித் தேடினால் மட்டுமே முத்துக்கள் கிடைக்கும். சிரமப்படாமல் கரையில் நடந்தால் கிட்டுவது கிளிஞ்சல்கள் மட்டும்தான்.

தமிழா, தமிழா, உனக்கு எது வேண்டும்... முத்தா, கிளிஞ்சலா?