படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, April 29, 2004

ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம்

நாளை மறுநாள் (01.05.2004) ஐரோப்பிய ஒன்றியத்தில் புதியதாகப் பத்து நாடுகள் இணையப்போகின்றன. இம்முறை இணையும் நாடுகளின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விடக் கூடுதலாகும். 1951-ல் இத்தாலி, ஃபிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், ஜெர்மனி ஆகிய ஆறுநாடுகளுடன் தொடங்கிய இவ்வொன்றியம் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது.

1973 - அயர்லாந்து, இங்கிலாந்து (யு.கி), டென்மார்க்
1981 - கிரேக்கம் (க்ரீஸ்)
1986 - போர்ச்சுகல், ஸ்பெயின்
1995 - ஆஸ்திரியா, ஃபின்லாந்து, ஸ்வீடன்

இன்று வரை உள்ள பதினைந்து நாடுகளுடன் இணையும் நாடுகள்: எஸ்த்தோனியா, செக் குடியரசு, சைப்ரஸ், மால்டா, போலந்து, லாத்வியா, லித்துவேனியா, ஹங்கேரி, ஸ்லொவாக் குடியரசு, ஸ்லொவீனியா. இவற்றில் பல நாடுகள் சமீப காலம் வரை கம்யூனிஸ ஆதிக்கத்தின் கீழிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பல்கேரியா மற்றும் ருமேனியா 2007-ல் சேரும்போலத் தெரிகிறது. துருக்கியின் நிலைமை அதற்குத்தான் தெரியும்.

ஓர் ஐரோப்பிய நாடு இவ்வொன்றியத்தில் சேரவேண்டுமானால், அங்கு

* நிலையான ஜனநாயக நாடாக விளங்க வேண்டும்.
* மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
* சட்டப்படி ஆட்சி நடக்க வேண்டும் (rule of law).
* சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பிருக்க வேண்டும்.
* சந்தைப் பொருளாதாரம் நடைமுறையில் இருக்க வேண்டும்.
* இன்னும் பல...

(படத்தில் 25 நாடுகளின் கொடிகள்)

Tuesday, April 27, 2004

கோடைவிடுமுறை விளையாட்டுகள்

ஒரு வழியாக முழுப்பரிட்சை எழுதி முடித்து "அப்பாடா முடிந்தது!" என்று பிள்ளைகள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் வரவேற்க ஆரம்பித்திருப்பர். தற்காலத்தில் பெரும்பாலும் கிரிக்கெட், தொலைக்காட்சி என்று விடுமுறையைக் களி(ழி)ப்பதாகத் தெரிகிறது. தொ.கா. வந்திராத அந்நாட்களில் ஊரில் நடந்த, பங்கேற்ற சில விளையாட்டுகளை நினைத்துப் பார்த்தால் இப்போதும் உள்ளம் பூரிக்கிறது. அவற்றில் ஒன்றிரண்டு:

கில்லி

குறைந்தது இரண்டு பேரைக் கொண்டு விளையாடப்படும் இதற்குத் தேவைப்பட்டவை ஒரு கில்லியும் (கிட்டத்தட்ட 10-15 செ.மீ உள்ள இரு முனைகளும் சுமாராக் கூராக்கப்பட்ட குண்டான ஒரு குச்சி), ஒரு தாண்டலும் (சுமார் ஒரு அடி நீளமுள்ள ஒரு முனை கூராக்கப்பட்ட குச்சி) மட்டுமே. பெரும்பாலும் இவை இரண்டும் சொந்தத் தயாரிப்புகளாகவே இருக்கும். கொய்யா மரக்குச்சிகளில் செய்தவை தரமானவை என்பது அந்தக்கால அனுபவம்!

விளையாடுவதற்கு எப்போதும் குறைந்தது நான்கைந்து பேர்கள் சேர்வோம். சேர்ந்தவர்கள் பிறகு இரண்டு அணியாகப் பிரிய வேண்டும். இதில் யார் முதலில் கில்லியை அடிப்பது? அதற்குமுண்டே ஒரு வழி. சுண்டுவதற்குக் காசு கிடைப்பதெல்லாம் கொஞ்சம் கடினமாதலால், தட்டையான சிறு கல்லொன்றை எடுத்து அதன் ஒருபக்கத்தை எச்சிலால் ஈரமாக்கி ஒரு அணித்தலைவன் மேலே வீச, மற்றவன் தனக்கு வேண்டிய பக்கத்தைச் சொல்வான். பூவா தலையாவில் வெல்லும் அணி கில்லியை அடிக்கத் துவங்கும், எதிரணி களத்தில் நிற்கும். (கிரிக்கெட்டில் உள்ள மட்டையாளன், பந்து வீச்சாளர்களைப் போல).

திறந்த வெளி நிலத்தின் ஒரு பகுதியில் நெடுவாக்கில் கோடொன்றைக் (கில்லியின் அளவை விடக் கொஞ்சம் பெரிதாக இருக்கும்) கீறி, கோட்டின் மையப்பகுதிக்கு இரண்டு பக்கங்களிலும் தாண்டலால் குத்தி சிறு ஓட்டைகளையும் போட்டுவிட்டால் ஆடுகளம் தயார். ஆட வருபவன், கீறப்பட்ட குழியின்மேல் கில்லியைக் குறுக்காக வைத்துத் தாண்டலின் கூர்புறத்தைக் குழியிலே கில்லியியைத் தொடுமாறு வைத்து, அதன் மேற்புறத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையால் தாண்டலின் கீழ்ப்பகுதியில் ஓங்கி அடிக்க, அடித்தவனின் திறமைக்கேற்ப புழுதி எழும்பி கில்லி பறந்து வீறென்று செல்லும். எதிர்முனையில் நிற்பவன் பறந்துவரும் கில்லியைப் பிடித்தால் அடித்தவன் 'அவுட்'. இல்லையென்றால், விழுந்த இடத்திலிருந்து கில்லியை அடித்த இடம் நோக்கி எதிரணியினர் எறிய வேண்டும். அது சரியாக அடித்த இடத்திலோ அல்லது ஆடுகளத்தின் ஒரு தாண்டல் சுற்றளவுக்குள்ளோ விழுந்தாலும் அடித்தவன் 'அவுட்'.

திருப்பி எறியும்போது கில்லி வந்து குழிக்கு அருகில் விழாமல் போனால், அது தற்போது விழுந்த இடத்திலிருந்து அடிப்பவனால் முன்னோக்கி அடித்துச் செல்லப்படும். மூன்று முறைக்குள் எவ்வளவு தூரம் அடித்துக் கொண்டு செல்கிறானோ அந்த அளவிற்கு புள்ளிகளைச் சேகரிக்கலாம். தரையில் விழுந்துகிடக்கும் கில்லியின் கூரிய பகுதியைத் தாண்டலில் அடித்தால் அது அந்தரத்தில் மேலெழும், அப்போது அதைத் தரையில் விடாமல் எத்தனை முறை திரும்ப அடிக்கிறானோ ('டபுள்', 'ட்ரிபிள்',....) அந்த அளவுக்கு அளக்கும் அளவுகோலானது மாறுபடும். ஒரு அடியிலேயே விட்டுவிட்டால் தாண்டலில் அளக்க வேண்டும். 'டபுளு'க்கு கில்லி; 'ட்ரிபிளு'க்கு அரை கில்லி, கால் கில்லி, பின்னூசி ('பின்'னே ஊசிதானே அப்புறம் என்ன பின்னூசி!)..... கடுகு, மண் என்று பல அளவுகோல்கள்! கால்கில்லிக்குப் போவதே பெரும்பாடாகிவிடும். வழக்கம்போல அதிக புள்ளிகளை எடுக்கும் அணி வென்று ஆட்டம் போடும்.

விளையாட யாரும் கிடைக்காத சமயங்களில் 'டபுள்', 'ட்ரிபிள்' அடித்துப் பழகி பயிற்சி வேறு! இதை ஆபத்தான விளையாட்டு என்று சொல்வார்கள். ஆனால், நல்லவேளையாக எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொண்டதோ, நேரில் கண்டதோ இல்லை. ஒருவேளை, நாங்கள் விளையாடியது (என்ன காரணத்தாலோ) ஆட்கள் நடமாடும் பகுதியைவிட்டுத் தள்ளி இருந்தது காரணமாயிருந்திருக்கலாம்.

நுங்கு வண்டி

ஊரிலிருக்கும் நூற்பாலைக்கு முன்புறமுள்ள பெரிய புளிய மரங்களை ஒட்டியுள்ள பகுதிகளை எங்கிருந்தோ வரும் பல்வேறு வியாபாரிகள் அவ்வப்போது இலவசமாக ஆக்கிரமித்து கடைபரப்பிவிடுவார்கள். கோடைகாலத்தில் அப்படி வரும் கடையொன்றிற்கு முக்கியமாகக் கொண்டுவரப்படும் பொருட்களுள் நுங்கும் ஒன்று. மரத்திலிருந்து வெட்டப்பட்ட குலைகளை அப்படியே எடுத்து வந்து குவித்திருப்பார்கள். பதமான அரிவாளால் குலையிலிருந்து அவற்றை வெட்டிப் பிரித்தெடுத்து மட்டையை அழகாக மேல்புறத்தில் சீவிக் கொடுப்பார்கள். சீவப்பட்ட மட்டையோடு நுங்கை வாங்குவோரும் உண்டு, முழுதாகச் சீவிய மட்டையிலிருந்து எடுத்த நுங்கைப் பச்சையான பெரிய இலைகளில் சுருட்டி (பிளாஸ்டிக் பைகள் எல்லாம் பிற்காலத்தில் வந்தவை) வாங்கிச் செல்வோரும் உண்டு.

சீவப்பட்ட மட்டையிலிருந்து நுங்கை நோண்டி, அதில் வரும் நீரை உறிஞ்சிக் கொண்டே தின்னக் கொஞ்சம் பழகவேண்டும். ஃ போல இருக்கும் மூன்று நுங்குகளும் நோண்டி எடுக்கப்பட்டபின் அழகான குழிகளுடன் கூடிய மட்டையொன்று மிஞ்சும். இவ்வாறு கிடைக்கும் இரண்டு மட்டைகளை, அவற்றின் ஃ பகுதிக்கு நடுவில் கெட்டியான சிறு குச்சியொன்றைச் செருகி இணைத்தால் உருண்டோடும் வண்டியொன்று தயார்! அதை உருட்ட நீளமாக கவட்டைக் குச்சி (ஒரு முனை 'Y' போல இருக்கும்) எங்கிருந்தாவது கிடைக்கும். ஒரு சில நாட்களுக்கு இந்த வண்டி நன்றாக ஓடும். அப்புறம் என்ன, சலிக்கும் வரை மீண்டும் மீண்டும் புதிய வண்டிகளைச் செய்து ஓட்டவேண்டியதுதான்.

இன்னும் பம்பரம் விடுதல், 'டயர்' ஓட்டுதல், கோலி குண்டு விளையாடுதல், காத்தாடி சுற்றுதல், மரக்குரங்கு, நொண்டி, 'ஐஸ் நம்பர்', துணி பந்தில் கிரிக்கெட் என்று எத்தனையோ விளையாட்டுகள்! இப்போதைய சிறுவர்கள் இவற்றையெல்லாம் இழக்கிறார்களா என்று தெரியவில்லை. இன்றைக்குக் கிராமப்புறங்களின் வீதிகளில் விளையாடும் சிறுவர்களைப் பார்ப்பது சற்றே அரிதாகிவிட்டது. நகர்ப்புறங்களிலோ கணினி வகுப்புகள், அடுத்த வருடப் பாடங்களுக்கான 'ட்யூஷன்' (இதைப்போலக் கொடுமை வேறெங்கும் உண்டோ), நீச்சல், நாட்டியம், நுண்கலைகள், கராத்தே, இத்யாதிகள் என்று மாணவ மாணவியரின் வாழ்க்கை வேறு ஒரு திசையில் பயணித்துக்கொண்டுள்ளது.

Monday, April 26, 2004

வளைக்கப்படும் விதிமுறைகள்

இன்றைய தமிழ் நாளிதழ்கள் பெரும்பாலானவற்றில் வந்த 'பரபரப்பான' செய்தியொன்று ஞாயிறன்று சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றியது. மிக முக்கியமான நபர்களின் வாகனங்கள் ஓடுபாதையில் செல்ல அனுமதி வழங்கப்படுமாம்! விமானக்கட்டுப்பாட்டு அறையின் அனுமதியின்றியே, அதுவும் விமானமொன்று தரையிறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், ஓரிரு வாகனங்களை ஓடுபாதையில் செல்லவிட்டுள்ளனர். பல பயணிகளுக்குப் பொறுப்பான அவ்விமானியின் நிலைமை எப்படி இருந்திருக்கும்! அவசரத் தடைகளை (breaks) உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார், பாவம்.

விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் என்ன ஓர் அலட்சியம்! எல்லா இடத்திலும்தான் அது இல்லையென்றாகிவிட்டது, முக்கியமான இடங்களில் கூடவா இப்படி நடக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் இப்படி நிகழ்வது இது மூன்றாவது முறையாம்!? (காண்க, தினமணி 26.04.2004). விசாரணை, அது இது என்கிறார்கள், உருப்படியாக ஏதேனும் விளைந்தால் மகிழ்ச்சியே. நம் நாட்டு விமான நிலையங்களைச் சிலாகித்துப் "பரவாயில்லையே!" என்று சொல்லிக்கொள்ளும் நாள் எந்நாளோ?

Sunday, April 25, 2004

வரலாற்றுத் தீர்ப்பு

நியூயார்க்கிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றமொன்று, போபால் விபத்து சம்பந்தமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை மற்றொரு நீதிமன்றம் இன்னும் கவனிக்க வேண்டியிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. தீர்ப்பின் ஒரு பகுதியாக, யூனியன் கார்பைடு நிறுவனம் (அதன் தற்போதைய உரிமையாளர்கள் - டெளவ் கெமிக்கல்ஸ்), போபாலிலுள்ள கைவிடப்பட்ட பூச்சி மருந்து தயாரிப்பு நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்திருக்கும் மாசுகளை அகற்ற வேண்டும்.

நீதிமன்ற வரலாற்றில், ஒரு நாட்டிலுள்ள நீதிமன்றமொன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றை மற்றொரு நாட்டிற்குப்போய் அவை செய்த சூழமைக் கேடுகளைச் சரிசெய்ய வேண்டுமென்று இதற்குமுன் தீர்ப்பளித்ததில்லையாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தீர்ப்பின் பயன் கிடைக்கவேண்டுமானால், மத்தியப்பிரதேச மற்றும் மத்திய அரசுகள் அமெரிக்க நீதிமன்றத்திடம் அதன் தீர்ப்பை ஏற்றுப் பெறுவதாக ஒப்புதல் அளிக்க வேண்டுமாம். நம் அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

[போபால் குறித்த பழைய பதிவு]

Saturday, April 24, 2004

பேசும் மென்கலன்

இணைய நுட்பத்தில் இயங்கும் மென்கலன் ஒன்று சுவாரசியமாக இருக்கிறது. பயனர் பயிற்சி, விளம்பரங்கள் போன்றவற்றிற்கு இதுபோன்ற தொழில்நுட்பம் வசதியாக இருக்கும். இந்தப்பக்கத்திற்குச் சென்று ஏதேனும் ஒரு சொல் அல்லது வாக்கியத்தை உள்ளீடு செய்து, பக்கத்திலுள்ள பொத்தானைச் சொடுக்கினால், தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில், குரலொன்று அதை ஒலிக்கிறது.

Friday, April 23, 2004

பொட்டலத்தில் சூழமை

சில நாட்களுக்கு முன்பு வாங்கிய பொருளொன்றின் பொட்டலத்தின் பின்புறம் அச்சடிக்கப்பட்டிருந்த சூழமை (Environment-ற்கு இணையான தமிழ்ச் சொல்லாக இராம.கி அவர்கள் திண்ணையில் குறித்திருந்ததை இன்று தற்செயலாகக் கண்டேன்; நன்றாகப்பட்டதால் உபயோகித்துப் பார்க்கிறேன். இதுகாறும் தெரிந்த வார்த்தைகள் - சூழல், சூழியல், சுற்றுப்புறச் சூழல் போன்ற சிலவைதான்) குறித்த சில தகவல்கள் கவனத்தை ஈர்த்தன.

முதலாவது, இப்பொட்டலத்தில் பிவிசி (பாலி வினைல் குளோரைடு) இல்லை. தற்காலத்தில், பிவிசி நம்மூரில் சகட்டு மேனிக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பிளாஸ்டிக் ஆயிற்றே, இதைப்போய் இல்லை என்று சொல்கிறார்களே என்று பார்க்க, பிறகு புரிந்தது இதன் மகத்துவம். பிளாஸ்டிக்குகளிலேயே அதிக அளவில் சூழமையைக் கெடுப்பது பிவிசி-தான் என்கிறார்கள். கிட்டத்தட்ட மறுசுழற்சியே செய்ய இயலாத பிவிசியின் வாழ்க்கைச் சுழற்சியின் எல்லா கட்டங்களிலும் - ஆக்கம், பயன்பாடு, அழிவு - குளோரினை அடிப்படையாகக் கொண்ட நச்சு வேதிப்பொருட்கள் வெளியிடப்படுகின்றன. இதன் விளைவாக, புற்றுநோய் முதலான கடும் உடல்நலக்குறைவுகள் ஏற்படுகின்றன. முடிந்தவரையில் மாற்றுக்களை உபயோகிக்கப் பரிந்துரைக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் பலவுடன், சில அரசாங்கங்களும் (வளர்ந்த நாடுகளில்தான்!) பிவிசி உபயோகத்தை விட்டொழிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளனவாம். நம்மூரில் பரவலாக பிவிசி உபயோகப்படுத்தப்படுவதற்கு அதன் நீடித்த உழைப்புத்தன்மை மற்றும் குறைந்த விலை காரணம் என்று நினைக்கிறேன். கூடவே உடல் நலத்தையும், சூழமையையும் கருத்தில் கொண்டால் சரி.

இரண்டாவது, இக்காகித அட்டை தயாரிக்கும் பொருளில், கரும்புச் சக்கையிலிருந்து எடுக்கப்பட்ட மரமற்ற கூழும் கலந்துள்ளது. அட!

கடைசியாக, ஆவியாகும் கரிம வேதிப் பொருட்களற்ற (VOC-Volatile Organic Compound), தாவர எண்ணையால் தயாரிக்கப்பட்ட மையால் அச்சடிக்கப்பட்டது. பரவாயில்லையே! ஆ.க.வே.பொ [இடையில் புள்ளிகள் இல்லாமல் எழுதினால் 'ஆகவேபொ' :-) ] பற்றி நல்ல பல தகவல்களை இங்கே காணலாம். வேதியியல் வாத்தியார்கள் இவற்றைப் பற்றியெல்லாம் இணையத்தில், தமிழில் எழுதி வைப்பார்களாக!

Wednesday, April 21, 2004

தமிழ் ஒருங்குறி - விளக்கம், விவாதங்கள்

சென்ற வாரத்திலிருந்து தமிழ் ஒருங்குறி (யுனிகோடு) பற்றி காசி, பலருக்கும் பயனளிக்கும் வகையில் எளிமையாக விளக்கி எழுதிவருகிறார்.

தமிழ்-உலகம் மடற் குழுவிலும் கடந்த சில நாட்களாக ஒருங்குறி பற்றிய சூடான விவாதம் நடந்துகொண்டுள்ளது.

Tuesday, April 20, 2004

குளிரே போ...கோடையே வா...

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் (பொதுவாக) மூன்றாவது திங்கட்கிழமையன்று ஜூரிக்கில் (சூரிச் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்) குளிர்காலத்திற்கு விடைகொடுக்கும் விழா ஒன்று நடத்தப்படுகிறது. ஸெஹ்ஸலொய்ட்டன் (ஆறு மணிக்கு எழுப்பப்படும் மணியோசை) என்றழைக்கப்படும் இவ்வண்ணமயமான நிகழ்ச்சி இங்கு நூற்றாண்டுகளாக நடந்துகொண்டுள்ளது.

அக்காலத்தில் மக்கள் சூரிய உதயத்திலிருந்து, அஸ்தமிக்கும் வரை வேலை செய்தனர். பகலும் இரவும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் வசந்த காலத்தில், மாலை ஆறு மணிக்கு தேவாலயங்களில் ஒலிக்கும் மணியோசை அந்நாளைய வேலை நிறைவை அறிவிப்பனவாக இருந்தன. இச்சமயத்தில், மங்கிய குளிர் காலத்திலிருந்து ஒளியான கோடை காலத்தை வரவேற்று உள்ளூர் தொழிற்குழுக்கள் ஒன்றுகூடி உண்டு, குடித்து, பேசிக் களித்தனர்.

அந்தக் காலத்தில் ஐரோப்பிய நகரங்களில் ஒரே மற்றும் ஒத்த தொழில் புரியும் மக்கள் ஒன்று சேர்ந்து குழுக்களை (ஆங்கிலத்தில் Guild) அமைத்தனர். கல்வி, அரசியல், பொருளாதார, இத்யாதிகளைக் கட்டுப்படுத்துமளவிற்கு இக்குழுக்கள் செல்வாக்கு பெற்றிருந்தன. அவ்வழியில் ஜூரிக்கில் ஆரம்பத்தில் 13 குழுக்கள் தோன்றின (படைவீரர், பொற்கொல்லர், வணிகர்கள், திராட்சை ரசம் தயாரிப்போர், ரொட்டி தயாரிப்போர், நெசவாளர்..... என்று சகல தொழில்புரிவோர்). பிற்காலத்தில் தொழிலை அல்லாது வசிப்பிடத்தை மையமாகக் கொண்ட வட்டாரக் குழுக்களும் தோன்றின.

தற்காலத்தில் இக்குழுக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு தங்களைப் பறைசாற்றும்வண்ணம் வீதிகளில் அணிவகுத்து வந்து ஒரு திறந்த வெளி மைதானத்தில்கூடுகின்றனர். இம்மைதானத்தின் நடுவே ஒரு 'பனி மனிதனை' நிறுத்தி வைத்துள்ளனர். பருத்தி மற்றும் எளிதில் எரியக் கூடிய பொருட்களாலான வெண்ணிற பொம்மைக்குச் சரியான ஆறுமணிக்குத் தீவைக்கப்படுகிறது. எவ்வளவு சீக்கிரம் இப்பனிமனிதனுக்குத் தீப்பற்றி எரித்து வெடிக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் கோடையும் வந்து நீண்ட நாளைக்கு இருக்குமென்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை (சும்மாநாச்சுக்கேனும்!).

பின்பு இக்குழுக்கள் தங்களுக்கென உள்ள விடுதிகளுக்குச் சென்று உண்டு களிக்கின்றனர்.

நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள்:

பனிமனிதன்


அணிவகுப்பு


வெடிக்கப்போகும் பனிமனிதன்
லத்தி சுத்தும் கையில் மலர்க் கொத்து... நாட்டுப்புற இசை வெள்ளம் (எந்த நாடு என்று தெரியவில்லை).

Sunday, April 18, 2004

தேர்தல்-வாகனங்கள்-பாட்டு

"தொலைந்து போய்விட்டனர்
தேசபக்தர்கள்
மறைந்து போய்விட்டனர்
மக்கள் நேசர்கள்
கொள்ளை அடிக்கவே உள்ளே புகும்
வேட்பாளர்கள்
சில்லரைக் காசுக்கு சொல்லை விற்கும்
வாக்காளர்கள்?!"

[பூரணி கவிதைகள், பக்.93, காலச்சுவடு பதிப்பகம், ISBN 81-87477-65-2]
-----------------

வாகனங்கள் தொடர்பான சில தமிழ்ச்சொற்கள்: இராம.கி, யாகூ தமிழ்-உலகம் மடற்குழு

Vehicle - வண்டி
Bicycle - மிதிவண்டி
Two wheeler - இருவளை
Motorcycle - உந்துவளை
Scooter - துள்ளுந்து
Car - சீருந்து
Van - சாரையுந்து
Sedan - கூட்டுவண்டி
Mini bus - சின்னப் பேருந்து
Lorry (Truck) - சரக்குந்து
Traffic - துரவுகை/துரப்பு
Acceleration - முடுக்குதல்
Driver - துரவர்
Safety - சேமம்
-----------------

சிறிது நேரத் தேடலுக்குப் பின்னர், பின்வரும் பாடல் இணையத்தில் அகப்பட்டது. இங்கு அது தமிழ் யுனிகோடு (ஒருங்குறி-இராம.கி.) வடிவில்:

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேண்டுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
அப்போ கலகலன்னு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

கோவம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யாப்பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

Saturday, April 17, 2004

மற்றுமொரு படுகொலை

'பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடரும் போர்' என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் மற்றொரு படுகொலையை இன்று காஸாவில் நிகழ்த்தியுள்ளது. கொல்லப்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான அப்துல் அஜீஸ் ரான்டீசி (சென்ற மாதம்தான் ஷேக் யாசின் கொல்லப்பட்டார்). கேள்விக்குரிய தற்கொலைத் தாக்குதல்களை முன்னின்று நடத்தும் இவ்வமைப்பின் கொள்கைகள் சில (இஸ்ரேல் என்ற நாட்டையே அங்கீகரிக்க முடியாது போன்றவை) நடைமுறைக்கு ஒத்துவராதவை. இருப்பினும், இன்றைய படுகொலை ஹமாஸின் பலத்தைக் குறைக்க இஸ்ரேலுக்கு உதவுவது போலிருக்கலாம், ஆனால் மேலும் பிரச்சனைகள் வளரவே இது வழிசெய்யும். வருங்காலத்தில் யாசர் அராபத்தை இவர்கள் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'வல்லானி'ன் துணை இருக்கும்வரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

தற்கொலைத் தாக்குதல்களையும், வன்முறைகளை மட்டுமே எதிர்த்துப் பேசுவோர், பேசும் நாடுகள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளையும், அடக்குமுறைகளையும் கண்டித்தும், அமைதி முயற்சிகளை முழுவீச்சிலும் நடத்தியிருந்தால் இப்பிரச்சனை என்றோ தீர்க்கப்பட்டிருக்கக்கூடும்; பாவப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு விடிவும் பிறந்திருக்கும். இன்னும் அது நடக்காததால் உண்மையிலேயே இவர்கள் அமைதியை விரும்புகிறார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இப்பகுதியில் அமைதியைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ!

Friday, April 16, 2004

திருட்டுகள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

தானியங்கிப் பணவழங்கிக்குச் (ATM) சென்று பணமெடுக்கும்போது சாதாரணமாக அருகில் யாரேனும் உள்ளனரா என்று கவனித்துவிட்டு பிற்பாடு 'பின்'னை அடிப்போம். யாருமே இல்லாமலிருந்தால்கூட திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. பணமல்லவா!

பார்ப்பதற்கு எப்போதும் போலுள்ள ஒரு பணவழங்கி.

அட்டையைச் சொருகும் பகுதிக்கு மேல், போலியான ஒன்று. இதின் வலதுபுறத்தில் உள்ள பகுதியில் அட்டையைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளும் அமைப்பு உள்ளதுபோல் தெரிகிறது (பிற்பாடு போலி அட்டை தயாரிப்பதற்காயிருக்குமோ?)

பணமெடுக்க கட்டளைகளை இட உதவும் திரை, அருகில் ஒரு விளம்பரத் தாங்கி.

மெய்யாலுமே இது விளம்பரத் தாங்கியா? இங்குதான் வைத்திருக்கிறார்கள் ஒரு சிறிய காமிராவை! இதன் மூலம் திரை மற்றும் விசைப்பலகையில் என்ன உள்ளீடு செய்யப்படுகிறது என்பதை அறியமுடியும்.

இப்படி! இதிலுள்ள ஆன்டெனா மூலம் படங்களை சுமார் 200 மீட்டர் தொலைவுவரை அனுப்ப முடியுமாம்!

ஒவ்வொரு முறையும் தானியங்கி பணவழங்கிக்குப் போகும்போது கவனமாயிருத்தல் சேமம்.

Tuesday, April 13, 2004

காணப் பொறுக்கவில்லை

கையில் குறுந்தடியை வைத்துக்கொண்டு 'பேஸ் பால்' விளையாடலாம். ஆனால் அதைப் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு உயிர்களைத் தாக்கிக் கொன்றால் எப்படியிருக்கும்! அப்பா, நினைத்துப்பார்க்கவே கொடுமையாக உள்ளது. மனிதனால் மட்டுமே இத்தகைய காரியங்களைச் செய்ய முடிகிறது.

கனடாவிற்கும் நியூஃபெளண்ட்லாந்திற்கும் இடையிலமைந்திருக்கும் செயின்ட் லாரன்ஸ் குடாவிலுள்ள சிறு பனித்தீவுகளில் தீவுகளில் வாழும் சீல்களுக்கு உண்மையிலேயே இது போதாத காலம். அதுவும் உலகிற்கு வந்து ஒரு சில மாதங்களேயான சின்னஞ்சிறியன, மாக்களிடமிருந்து தப்ப முடியாமல் எளிதில் சிக்குண்டு உயிரிழக்கின்றன.

தொ.கா. செய்தியொன்றில் ஒரு சில விநாடிகள் கண்ட (அவற்றைத் துரத்தித் துரத்தி அடித்துக் கொல்லும்) அக்காட்சி மனதை என்னவோ செய்தது. இவற்றை ஏன் கொல்கிறார்கள்? பெருகும் தோல் சந்தை. கூறப்படும் மற்றொரு சாக்கு, பல்கி வரும் சீல்களின் எண்ணிக்கையால் அப்பகுதியிலுள்ள மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்க்கை மற்றும் உள்ளூர்ப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்!

20 ஆண்டுகளுக்குமுன் இவ்வாறு நடந்த கொடுமையான வதைகளை விலங்கின ஆர்வலர்கள் மக்களிடம் எடுத்துச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், அமெரிக்கா மற்றும் மே.ஐரோப்பிய நாடுகளில் சீல் சம்பந்தப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதாலும், வேறுவழியின்றி கனடா அரசாங்கம் ஒரு சில தடையுத்தரவுகளைப் பிறப்பித்ததையடுத்து சீல்களின் இறப்பு பெருமளவிற்கு குறைந்ததாகத் தெரிகிறது. இப்பொழுது ரஷ்யா, போலந்து உட்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் சீலின் தோலுக்கு கிராக்கி கூடுவதால், கனடா அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, மீண்டும் 'வேட்டை' விஸ்வரூபமெடுத்துள்ளது.

கோழி, ஆடு, மாடு, பன்றி, மீன், சீல்.........மனிதா, பாவம் விலங்குகள்.

Sunday, April 11, 2004

இப்படியாக ஈஸ்டர் விடுமுறை

கடந்த சிலநாட்களாக மப்பும் மந்தாரமாகவும் உள்ள வானம், வெளியில் செல்லாதே வீட்டிலேயே இரு என்று தடுத்து, சென்ற வருட ஈஸ்டர் விடுமுறையை நினைவுகூற வைத்தது. அச்சமயத்தில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அருங்காட்சியகத்திற்கு சென்று வந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். திரும்பும் சமயத்தில் அவ்வளாகத்திலிருந்த கடையை நோட்டம்விட்டபோது, நம் ஊர் சமாச்சாரத்தைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்று உடனே வாங்கத்தூண்டியது.

1984ல் கிராமத்தில் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த டீக்கடை 'பெஞ்சில்' மக்கள் அமர்ந்துகொண்டு நாளேட்டை (தினமலர் என்று நினைக்கிறேன்) வாசித்துக்கொண்டிருந்தபோது, அருகில் நின்று அதன் முன்பக்கத்தில் வெளியாகியிருந்த வெள்ளைத்துணிகள் போர்த்திக் கிடத்தப்பட்ட சடலங்களின் படங்களைக் கண்டது இன்னும் லேசாக நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் அடிக்கடி காதில் விழுந்தது 'விஷவாயுக் கசிவால் பல்லாயிரக்கணக்கான மரணம்' என்பதுதான். அதற்குமேல் விரிவாக அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பே அமையவில்லை (சொல்வாரும் இல்லை, கேட்பாரும் இல்லை), இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை.

டொமினிக் லாப்பியர் (ஃப்ரான்ஸ்), சேவியர் மோரா (ஸ்பெயின்) ஆகிய இருவரின் பலமாத உழைப்பில் வெளியாகிய 'Five Past Midnight In Bhopal' (Scribner UK, ISBN 0-7432-2035 8) என்ற புத்தகம் அது (இதழியல் புலனாய்வுப் புத்தகம் என்றுகூடச் சொல்லலாம்). போபாலில் நடந்த அக்கோரச் சம்பவத்தை பல்வேறு தகவல்களுடன் மூன்று அத்தியாயங்களில் நயமாக விவரித்துள்ளனர்.

முதல் அத்தியாயம், ஒரிசாவின் கிராமம் ஒன்றில் வாழ்ந்த இரத்தின நாடார் என்பவரது குடும்பத்திலிருந்து தொடங்குகிறது. ரயில் தண்டவாளங்களையொட்டி வாழும் சேரிகள் (அதன்பின்னுள்ள பல தகவல்கள் முதன்முதலாகத் தெரியவந்தது), போபால் நகரின் பழமை, அதன் கலாச்சாரம், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்கச் செயல்பாடுகள் மற்றும் அதன் இந்தியத் திட்டம் என்று எழுதப்பட்டுள்ள பல சம்பவங்கள் புத்தகத்தைக் இலேசில் கீழே வைக்கவிடுவதில்லை.

இரண்டாவது அத்தியாயத்தில் சம்பவம் நடந்ததற்கு அடிப்போடும் முக்கிய காரணங்கள் அலசப்பட்டுள்ளன. மீத்தைல் ஐஸோசயனேட்(MIC) என்ற வாயுதான் 16,000 முதல் 30,000 மக்களை மாளச்செய்தது.

கடைசி அத்தியாயம், நடந்திருக்கக் கூடாத அப்பேரழிவு எப்படி நடந்தது என்பது பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அச்சம்பவத்தை போபால் மருத்துவர்கள் எதிர்கொண்ட விதம், எரிகிற வீட்டில் பிடுங்க முயன்ற அரசியல்வாதிகள் மற்றும் அமெரிக்க வழக்கறிஞர்கள், கார்பைடு நிறுவனத்தின் நிலைப்பாடு என்று விரிகிறது.

விஷவாயுவால் தாக்குண்டவர்கள் பலருக்கு இன்னும்கூட சரியான நிவாரணமோ, விமோசனமோ கிடைத்ததுள்ளதாகத் தெரியவில்லை. விரிவாக எழுதப்பட்ட நேர்த்தியான ஆவணமிது.

இன்று வாசிக்கத் துவங்கியிருக்கும் மற்றொரு புத்தகத்தைப்பற்றிப் பிறகு எழுதிவைக்கிறேன்.

Tuesday, April 06, 2004

கண்புரை

வயதானால் உடலுக்கு வரும் தொந்தரவுகளில் ஒன்று கண்புரை (cataract). சென்ற வாரம் கோவையில் அம்மாவிற்கு கண்புரையை அகற்ற வேண்டி சிகிச்சை செய்தனர். இத்துறையில் உபயோகப்படுத்தப்படும் நவீனத்தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே எளிதாக்குகின்றன. இச்சிகிச்சையை சாக்காக வைத்து, அதனைப்பற்றிய விவரங்களை வலையில் தெரிந்துகொள்ள முடிந்தது (இல்லாவிட்டால் வெறுமனேபோய் யார் பார்க்கப்போகிறார்கள்!).

கண்ணில் இருக்கும் ஆடி (lens) பெரும்பாலும் நீர் மற்றும் புரதங்களால் ஆனது. ஒளியை ரெட்டினாவிற்கு (ஒளித் தகவல்களை மூளைக்கு அனுப்பும் பாகம்) குவித்து வழங்கும்வண்ணம் இப்புரதங்கள் அமையப்பெற்றுள்ளன. சிலசமயங்களில் இப்புரதங்கள் ஒன்று சேர்ந்து ஆடியின் மேல் ஒரு படலத்தை உருவாக்குகிறது. இதையே கண்புரை (சாலேசரம்) என்கிறார்கள். இதனால் பார்வை மங்கலாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ போகிறது. எந்த வயதிலும் வரலாமாயினும் பொதுவாக அறுபது வயதிற்குப் பிற்பாடே இக்குறைபாடு கண்ணிற்கு வருகிறது.

கண்புரையை அகற்ற பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அம்மாவிற்கு Pachoemulsification என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர். இதன்படி கண்ணின் தெளிவான பகுதியான கோர்னியாவை 3.2மி.மீ அளவிற்கு வெட்டி, ஆடியை உயர் ஒலியதிர்வின் மூலம் இளகச் செய்து உறுஞ்சி வெளியிலெடுக்கிறார்கள். பின்னர் எளிதில் வளையக்கூடிய செயற்கையான ஆடி (flexible Intra-Ocular Lens), முன்பு ஏற்படுத்திய வெட்டின் வழியாக உரிய இடத்தில் புகுத்திவிடப்படுகிறது. (சிகிச்சைக்கு முன்னதாகவே சில சோதனைகள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு தேவையான ஆடி தேர்ந்தெடுக்கப்படுகிறது).கண்ணில் ஏற்படுத்திய வெட்டு தானாகவே ஆறிவிடும், வலியும் குறைவு. சிகிச்சை முடிந்த அதே நாளே வீட்டிற்குச் சென்றுவிடலாம். வருங்காலத்தில் இச்சிகிச்சைச் செலவு குறைந்தால் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(ஆப்தமாலஜி - கண்மருத்துவம், ஆப்தமாலஜிஸ்ட் - கண் அறுவை சிகிச்சை நிபுணர்)

இதுதொடர்பாகக் காணுற்ற சில இணையதளங்களில் டெல்லியைச் சார்ந்த கண் மருத்துவர் ஒருவர் நிர்வகித்துவரும் இத்தளம் நல்ல பல தகவல்களைக் கொண்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கும் என்று நம்புகிறேன்.

Monday, April 05, 2004

குவியும் செல்வம்

வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் 2003ம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பிய தொகையின் அளவு $18.2 பில்லியன்கள் (!!) என்று 'ரிசர்வ்' வங்கியின் அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி இணையத்தில் ஒரு இன்றொரு செய்தி. அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30% அதிகமான தொகை இந்தியாவிற்கு வந்துள்ளது. இன்றைய மதிப்புப்படி ($1=ரூ.43.67) இந்திய ரூபாயில் இது 794 ஆயிரத்துச் சொச்சம் கோடிகள். (ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி.... அப்புறம்? பேசாமல் இல்லியன்களுக்கு மாறிவிட்டால் கொஞ்ச நாளைக்கு எண்ணிக்கைப் பிரச்சனையைத் தள்ளிப்போடலாம் என்று தோன்றுகிறது). இதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரித்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

அந்நியச் செலாவணி (அ.செ) என்றால் என்ன?
அதை யார், எப்படிப் பாதுகாத்துப் பராமரிக்கிறார்கள்?
அ.செ. எவ்வளவு இருக்க வேண்டும்?
எந்த சதவீதத்தில் ஒவ்வோர் ஆண்டும் அது வளர வேண்டும்?
அ.செ. கையிருப்பு அதிகரித்தாலோ, குறைந்தாலோ ஏற்படும் நன்மை, தீமைகள் யாவை?
..... முதலான பலவற்றை விளக்கும்வண்ணம் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர்கள் கட்டுரைகளை (தமிழில்) எழுதினால் தமிழ் மக்கள் படித்துச் சுபிட்சம் அடைவார்கள்.

Saturday, April 03, 2004

எல்லைகளற்ற செய்தியாளர்கள்

Reporters without Borders (எல்லைகளற்ற செய்தியாளர்கள் எனலாமா?) என்றவோர் அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எந்த அளவில் மதிப்பு-மரியாதை உள்ளது என்பதை அந்நாட்டிலுள்ள நிருபர்கள், ஆராய்ச்சியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோரிடம் கேள்விப் பட்டியல் ஒன்றின் மூலமாக கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வரிசைப்படுத்தியுள்ளது. பெரும்பாலான ஸ்கேன்டிநேவிய நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் நன்றாக இருப்பதாக 166 நாடுகளின் முடிவுகளைக் கொண்ட 2003ம் ஆண்டின் பட்டியல் தெரிவிக்கிறது. இந்தியா 128-வது இடத்தில் (2002 விட பின்தங்கியநிலையில்)! இவ்வமைப்பின் நோக்கம், எந்த அடிப்படையில் மேற்சொன்ன தரப்பட்டியல் வெளியிடப்படுகிறது போன்ற விவரங்கள் அவர்களது இணைய தளத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், சென்ற வருடம் பாக்தாத்திலுள்ள பாலஸ்தீன் விடுதியில் நிருபர் ஒருவர் கொல்லப்பட்டதன் புலன் விசாரணை அறிக்கை, 'ஆன்லைன்' அடக்குமுறை விருதுகள் போன்ற (பத்திரிக்கையாளர்களால் கவனிக்கப்படவேண்டிய) பல விஷயங்கள் இத்தளத்தில் காணக்கிடைக்கின்றன.

Thursday, April 01, 2004

வாழ்த்துகள்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான நாள். மாபெரும் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

சூரிய ஒளி விமானம்

வருடந்தோறும் ஜெனிவாவில் உலகளாவிய புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நடைபெறும். இதில் உலகெங்கிலுமுள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள் முதலானோர் பங்குகொண்டு தங்களது கண்டுபிடிப்புகளைக் காட்சிக்கு வைப்பர். இவ்வருடம் மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் (செல்ல முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!) பேசப்படும் முக்கியமானவற்றுள் ஒன்று Bertrand Piccard என்பவர் முன்வைக்கும் சூரிய ஒளி விமானம். வேறு எந்த எரிபொருளையும் உபயோகிக்காமல் சூரிய ஒளி மூலமாக மட்டுமே வெகுநேரம் தொடர்ந்து செல்லக்கூடிய விமானத்தை உருவாக்குவது மாபெரும் சவாலே.

1999-ல் உலகில் முதன்முறையாக பலூனிலேயே உலகை "நிற்காமல்" வலம்வந்த இவரது புதிய திட்டம் சூரிய ஒளியில் இயங்கக் கூடிய விமானத்தில் உலகை வலம்வருவது. சென்ற நவம்பரில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் - மீண்டும் பயன்படுத்தத்தக்க இயற்கை ஆற்றலைப் பற்றிப் பறைசாற்றுதல் மற்றும் மக்களிடையே இது குறித்த ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தகவல் தளமாகச் செயல்படுவது. விமானத்தின் வெள்ளோட்டம் 2006ல் எதிர்பார்க்கப்படுகிறது.