படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, July 31, 2005

சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு

இந்தியாவில் சில்லரை விற்பனையில் (retail business) பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதிக்கும் யோசனை அரசின் பரிசீலனையில் உள்ளதை செய்திகளில் அடிக்கடி காண்கிறோம். ஆரம்ப கட்டத்தில் பல கட்டுப்பாடுகளுடன் (10,000 சதுர அடித் தளம், ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு கடை போன்றவை) மாறுகடையை (market) இவர்களுக்குத் திறந்து விடப்பட்டாலும், காலப்போக்கில் இவ்விதிமுறைகள் தளர்த்தப்படும் அல்லது காற்றில் விடப்படும். இப்படியொரு மசோதா நாடாளுமன்றத்திற்கு வந்தால் வழக்கம்போல நமது 'மாண்புமிகு' உறுப்பினர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு நிறைவேற்றி விடுவார்கள். அப்புறம் நடைமுறைக்கு வந்தபின்தான் அதிலுள்ள சிக்கல்கள் தெரிந்து 'போராட' ஆரம்பிப்பார்கள் ('போட்டா' சட்டம் ஓர் உதாரணம்).

சில்லரைப் பெரு வியாபாரத்தில் ஈடுபடுள்ள உள்நாட்டு ஜாம்பவான்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த யோசனையை எதிர்க்கிறார்கள். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறதென்பதைப் பார்க்கவேண்டும். மாறுகடையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்படும் பட்சத்தில் ஏதோ சில நன்மைகள் இருந்தாலும், பலதரப்பு மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது எனது பொத்தாம்பொதுவான எண்ணம்.

Thursday, July 21, 2005

BMW-ம் வந்துவிட்டது!

செங்கற்பட்டில் BMW கார் தொழிற்சாலையை நிறுவவுள்ளதாகச் செய்தி. புதிய மாறுகடைகளைத் தேடிப்போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெருநிறுவனங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கின்றன. கேட்க நன்றாக இருந்தாலும், சாலை வசதி மேம்பாட்டிலும், சாலை விதிகளை மதித்துப் பின்பற்றுவதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படாத வரை எந்த புதுக் கார் வந்து என்னவாகிவிடப் போகிறது என்ற ஆதங்கமும் எழுகிறது.

வரும் நாட்களில் "BMW இங்கு வர நான்/நாங்கள் தான் காரணம்" என்று சில குரல்களைக் கேட்கலாம்! எங்கோ அடுத்த சாலையில் வரும் மளிகைக் கடைக்கும் நான் தான் காரணம் என்று சொல்லாத வரைக்கும் சரி!

Wednesday, July 20, 2005

குடமுழா

இந்த வாரத்தில் சிலமுறை தவில் இசைத் துண்டுகளை இணையத்தில் ஆங்காங்கும், இருக்கின்ற ஒலிப்பேழையொன்றிலிருந்தும் காரணமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தவில் ஓர் அருமையான இசைக்கருவி. சிறு வயதில், ஊர்விழாக்களின் போது ஒரு நபர் இதைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு அடி பின்னியெடுப்பதைக் கண்டு ஆட்டமும் போட்டுள்ளோம். திருமணம் போன்ற வீட்டு விழாக்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த தவிலுக்கு இப்பொழுதெல்லாம் சரியான மரியாதை கிடைக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. படப்பாடல் நிகழ்ச்சிகளையும், 'பேண்டு' வாத்தியங்களையும் புகுத்தி உள்ளதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்புறம், குடமுழா என்றொரு இசைக்கருவி. இதைப் பஞ்சமுக வாத்தியம் என்றும் சொல்வார்களாம். குடமுழாவைப் பற்றிய அரிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. நூல் அறிமுகக் கட்டுரைக்கான சுட்டி: http://varalaaru.com/Default.asp?articleid=162. அக்கட்டுரையில் இருக்கும் ஆடவல்லாரின் சிற்பப் படம் ஏதோ பரவசத்தை ஏற்படுத்தியது.

Sunday, July 17, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!! - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி...

"இனி கூட்டிக் கழித்துப் பார்த்தால், இப்பொழுது உயிர் எழுத்துக்கள் அ,இ,உ,எ,ஒ என்று ஐந்தாகிவிட்டதல்லவா? ஆங்கிலத்தில் aeiou எனும் ஐந்து உயிரெழுத்துக்கள் ஆனதைப்போல. இவ்வாறான மாற்றங்களால் நம்மொழி அடைந்த நன்மை என்ன?

1. மொழியின் வரிவடிவம் அமைப்பின் சுருக்கம்.
2. மொழியின் வரிவடிவில் தெளிவு.
3. கற்போருக்கு (சிறுவர், பிறமொழியாளர்) இலகு.
4. நவீனத்துக்கு ஈடு.
5. பிறமொழிகளுடன் ஒப்பிட ஏது.

இவ்வாறே மெய்யெழுத்துக்களில், ண்,ந்,ன் ஆகியனவற்றையும் ல்,ழ்,ள் ஆகியனவற்றையும் ஒரே வரிவடிவில் குறிக்க முடிவது பற்றி உத்தேசித்தால் என்ன?

இவைகுறித்தெல்லாம் நான் சொல்வதிலும் பார்க்க பேரா.எம்.ஏ.நுஃமான் என்ன சொல்கின்றார் என்று அறியவைப்பது கருத்தை உங்களுக்குள் செலுத்த இலகு அல்லவா?

இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழு உலகையும் தழுவி விரிந்து நிற்கின்றது. மறு வகையில் முழு உலகமும் சுருங்கி தமிழ் கூறும் நல் உலகக்குடிமகன் ஒருவனின் தனி அறைக்குள் இன்று internet ஊடாக நுழைந்துவிட்டது. அதற்கேற்ப தமிழ்மொழியும் தன்னை விசாலப்படுத்தி தன் ஆற்றலை அகலித்துக் கொள்ள முனைகின்றது. இன்று தமிழ் பல்தேசிய மோழி என்பதனையும் பல்லினப்பண்பாட்டு மொழி என்பதனையும் நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். மொழி மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழின் ஒலி மரபும் மொழிமரபும் நெகிழ்ச்சியடைந்து புதிய தேவைகளுக்கு ஏற்ப புதிய மரபுகள் தோன்றிவிட்டன.... (பேரா எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு 19)

காலத்திற்கேற்ற கோலம் நம் தமிழ்மொழி கொள்ளாவிடில், அழிவதைத்தவிர வேறு வழிஇல்லை. ஆகும் வழியையே நாம் பார்க்க வேண்டும்.

ஆங்கிலத்தில் அத்தகைய மாற்றத்தை அது பெறுவதனை நாம் காண்கின்றோம். ph என்னும் வரிவடிவங்கள் f என்னும் ஒலிவடிவத்தை தந்து நிற்பதால் இப்போதெல்லாம் ph இதற்குப் பதிலாக f பயன்படுத்துகிறார்கள். இரண்டு வரிவடிவங்களுக்குப் பதிலாக ஒரு வடிவம்.

Photo - Foto

அவ்வாறே ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கக் கண்டபோது தேவையற்ற வரிவடிவங்கைள நீக்குகின்றார்கள்.

Night - Nite
Colour - Color

மேலும் ஒலி வடிவம் கருதி வரிவடிவம் சுருங்கிக் கொண்டு போவதும் ஆங்கிலத்தில் நிகழ்கின்றது. 1982 வாக்கில் தெல்லிப்பழைச் சந்தி வெள்ளவாய்க்கால் மதகில் ஒரு சுவரொட்டியைக் கண்டேன். மதில் ஆங்கிலத்தில் இவ்வாறு வாசகம் இருந்தது.

JR, UR a facist
VR not foolish
go back.
(ஜே.ஆர். என்னும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வந்தபோது இச்சுவரொட்டி காணப்பட்டது).

UR (you are), VR (we are) என்று வந்தவிதம் தமிழிலும் சாத்தியப்படுமெனில், நன்று, மிகநன்று.

உலக மொழிகள் யாவும் இவ்வாறு மாற்றத்தை அவாவி நிற்கின்றது. அதுவே வளர்ச்சிக்கு அறிகுறி. புதியன புகுத்தி தமிழை நாம் வாழவைப்போம், வளர வைப்போம். செய்வோமா?"

Saturday, July 16, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!!

ஈழமுரசு ஐரோப்பா என்ற வார இதழில் அ.இரவி என்பவர் எழுதிய 'புதியன புகுதல்' என்னும் கட்டுரை நான்கு பாகங்களாக வந்துவிட்டிருக்கிறது. அதன் கடைசி பாகம் மட்டும் இந்த வாரம் வாசிக்கக் கிடைத்தது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் இன்றைய நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்வி இருந்தாலும் புதியவற்றை அறிதலும், எண்ணுதலும் நலமே. அக்கட்டுரையின் நான்காம் பாகம் பின்வருமாறு [பதிப்புரிமை பற்றி அவ்விதழில் எங்கும் காணோம்; அக்கட்டுரையை இங்கு பதிப்பதால் பதிப்புரிமைக்கு ஏதும் பங்கம் ஏற்படாதென்று நம்புகிறேன். அப்படியேதும் உண்டென அறிய வரும்பட்சத்தில் இக்கட்டுரை பதிவிலிருந்து நீக்கப்படும். இங்கு எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருந்தால் அது தட்டச்சின்போதும் நேர்திருக்கலாம்.] :

"தமிழில் முதல் ஒலி வடிவங்கள் அல்லது மூலஒலிவடிவங்கள் முப்பது என்று சொன்னோமே! அவற்றுள் ஸ்,ஷ்,ஹ் ஆகியன வரவில்லை என்றெல்லாம் சொன்னோமே! என்ன சொன்னோமெனில் அவ்வாறான ஒலி வடிவங்களுக்கு தமிழில் வரிவடிவங்கள் கிடையாது என்று சொன்னோம்.

என்னவென்றால் ஊரில் உலகில் இருக்கக்கூடிய எல்லா ஒலிவடிவங்களுக்கும் எல்லா மொழிகளிலும் வரிவடிவங்கள் இல்லை. அதற்கு சாத்தியமும் கிடையாது. தமிழில் ஞ், ழ் என்னும் ஒலிவடிவங்களுக்கு ஆங்கிலத்தில் வரிவடிவங்கள் இல்லை. ஞானம்-Gnanam, அதாவது ஞ் என்பதற்கு Gn என்பதையே பயன்படுத்துகின்றனர். அது முற்றிலும் பொருத்தமானது அல்ல. தமிழ்-Thamizh, இங்கு ழ் என்பதற்கு zh என்னும் ஆங்கில வரிவடிவம் பயன்படுகிறது. இதன் பொருத்தப்பாடும் கேள்விக்குரியது.

அவ்வாறே ஆங்கில F,G,H,X,Z என்று இன்னும் பல ஒலிவடிவங்களுக்கு தமிழில் வரிவடிவம் இல்லை. எப்படியோ திக்குமுக்காடி Father என்பதனை ஃபாதர் என்று எழுதிவிடுகின்றோம். இப்போது ஒன்றுக்கும் உதவாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஆய்த எழுத்துக்கு (ஃ) ஒரு சொல்லில் இடம் பெறும் குதூகலம் வாய்ந்திருக்கிறது, அவ்வளவுதான்.

ஆனால் இவை எவையும் மொழியின் போதாமை அல்ல. எல்லா மொழிகளும், பிறிதான மொழிகளிடமிருந்து இரவல் பெற்றும், கொடுத்தும், இயலுமானளவு தம்மை நிறைவு செய்து கொள்கின்றன. உலகுடன் ஒட்ட ஒழுகலும் உலகின் இன்றைய தேவையை நிறைவு செய்யும் பொருட்டும், நம் தமிழ்மொழியை எவ்வாறு வாலாயப்படுத்தப் போகின்றோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.

தமிழில் முதல் ஒலி வடிவங்கள் முப்பது என்றோமே! அதில் உயிர் எழுத்துகள் 12 உம் மெய்யெழுத்துக்கள் 18 உம் ஆகும் என்பதனை முதலில் குறித்துக் கொள்ளல் சாலும். ஒலிவடிவத்தின் உயிராக நிற்பது உயிர் எழுத்துக்கள் என்றும், உயிர் தங்குவதற்கு ஏதான உடலாக நிற்பது மெய்யெழுத்துக்கள் என்றும் சொல்லலாம். அந்த வகைப்பாடுகள் அற்புதம் என்பேன். ஆனால் வரிவடிவங்களை அளவுக்கதிகமாக இறைத்துவிட்டோமோ என்னும் ஐமிச்சம் தான் என்னிடையே தோன்றுகின்றது. உயிர் எழுத்துக்கள் எவை?

அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ
ஐ
ஒ-ஓ
ஒள

இவைதாமே! இப்படித் தொகுத்தலுக்கு ஒரு காரணம் உண்டு. உங்கள் பார்வையில் இடப்பக்கம் உள்ள ஐந்து உயிர் எழுத்துக்களும் (அ,இ,உ,எ,ஒ) போதும் என்பேன். ஏனைய ஏழு உயிர்களையும் கழித்து அழுத்துவிடலாம் என்றும் சொல்வேன். ஏன் சொல்கின்றேன்?

அ,ஆ இரண்டையும் எடுங்கள். இரண்டும் ஒரே ஒலிவடிவங்களாலானவை. ஓம்தானே? உச்சரித்துப் பாருங்கள், உணர்வீர்கள். சிறு வித்தியாசம் என்னவெனில், அ என்பது குறுகியும் ஆ என்பது நீண்டும் ஒலிக்கின்றது. ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கின்ற போது இரண்டு வரிவடிவங்களை இதற்கு ஏன் இடவேண்டும்? நீட்சியான ஒலிவடிவம் வேண்டுமென்றால் எங்களிடம் ஏலவே உள்ள (ா) வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம்தானே? எப்படி? இதோ பாருங்கள் இப்படி!

அ-அா
இ-இா
உ-உா
எ-எா
ஒ-ஒா

சரி, ஐ உம் ஒள உம் அப்படியே இருக்கட்டும். பிறகு வருகின்றேன்.

உயிர் எழுத்துக்களுக்கு மேற்கூறிய வரிவடிவங்களைக் கையாண்டோமானால், உயிர் எழுத்துக்களின் வரிவடிவங்களின் அளவைக் குறைத்துக் கொள்வோம் அல்லவா? இது தவறு, மரபை மீறுதல் தகாது என்று சொல்வோருக்கு, நான் என்ன சொல்ல? பவணந்தி முனிவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் சொன்னதைச் சொல்லவா?

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவா, கால வகையினானே

மொழியின் வரிவடிவங்களைக் குறைத்துச் செல்லல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காலத்தில் கணனிப் பயன்பாடு அதிகரித்த நேரத்தில் மொழிக்கு மேலும் வலுவூட்டும். ஆகவே நாங்கள் இனி இப்படி எழுதுவோமா? அல்லது எல்லோரையும் எழுதச் சொல்லிக் கேட்போமா?

அாடு (ஆடு), கிாரி (கீரி), உார் (ஊர்), ஒாடம் (ஓடம்)

உயிர் எழுத்துக்களில் ஐ, ஒள என்னும் ஒலி, வரிவடிவங்கள் இரண்டு உள்ளன. இவற்றை எப்படி மாற்றமுறச் செய்யலாம்? ஐ என்பது அ உம் இ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் ஒள என்பது அ உம் உ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் தமிழ் இலக்கணம் சொல்கின்றது. அது சொல்லட்டும். தமிழில் ஏலவே ஐ ஒலிவடிவத்திற்கும் வரிவடிவங்கள் உள்ளன.

ஐ - அய்
ஒள - அவ்

இவை மெத்தப் பொருந்திப் போகிறதல்லவா?

ஐயர் - அய்யர்
ஒளவை - அவ்வை

மேற்கூறிய உதாரணத்தில் ஒலிவடிவத்தைப் பார்த்தீர்களா? அவை அச்சொட்டாகப் பொருந்திப்போகிறது. சங்ககாலப்பாடல் ஒன்றினை மேலும் நான் உதாரணத்திற்குத் தருவேன்.

கையது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

(போரிலிருந்து வெற்றி பெற்று திரும்பிய தொண்டைமானைப் பார்த்து அவ்வை பாடியது. கையில் வேல், காலில் புனையப்பட்ட கழல் என்னும் ஆபரணம், உடல் முழுவதும் வியர்வை, தொண்டையில் புண்)

இங்கு கையது, மெய்யது என்ற சொற்கள் வருகின்றபோது யாப்பிற்கும் அது மனைவதைக் காண்க. அதாவது முதலாவது வரியில் வரும் முதலெழுத்து கை என்பது நெடிலாகவும், இரண்டாவது வரியில் வரும், முதலெழுத்து மெ என்பது குறிலாகவும் அமைகிறது. இது யாப்புக்கு முரண். இரண்டும் நெடிலாக அமைய வேண்டும். ஆகவே இப்படி எழுதிப் பார்ப்போமா?

கய்யது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

இப்பொழுது இரண்டு வரிகளினதும் முதலெழுத்துக்கள் (க, மெ) குறிலாக அமைந்து, யாப்பிலக்கணத்தை நிறைவு செய்கின்றதல்லவா?"

(மீதி அடுத்த பதிவில்)

Thursday, July 14, 2005

பிரிவென்பது...

யாருக்கும் மன வருத்தமளிக்கும் நிகழ்வு. மகள் செல்லும் குழந்தைகள் காப்பகத்தில் (creche) பணிபுரிந்த இரண்டு பேருக்கும், கோடைவிடுமுறை முடிந்த பின்னால் பள்ளிக்குச் செல்லும் வயதெய்திய சில குழந்தைகளுக்கும் இன்று வழியனுப்பு விழா நடந்தது. வழக்கத்திற்கு மாறாக, மாலை 6 மணிக்கு மேல் அங்கு வந்து தங்களுடைய நண்பன்/நண்பிகளை அவர்களது பெற்றோருடன் இருக்கக்கண்டு, அவர்களுடன் விளையாடி, செல்லுமுன் அன்பளிப்புகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டு, உண்டு களித்துச் சென்றது அக்குழந்தைகளுக்கு நல்ல பொழுதாக அமைந்திருக்கும். பிரிவென்பது அவர்களுக்குப் புதிதா என்ன? இச்சிறு வயதில் பெற்றோரின் பிரிவைத்தான் தினமும் காலையில் சந்திப்பவர்களாயிற்றே!

சில வருடங்கள் அங்கு பணியாற்றிவிட்டு விடைபெறும் நண்பர்கள் இருவருக்கும் இந்நாள் கடினமானதொன்று. வெயில் மின்னும் மாலையில், பெற்றோர், குழந்தைகள் அனைவரும் வட்டமாக நிற்க, சக பணியாளர் ஒருவர் நன்றி தெரிவித்து உரை வாசித்து முடித்த போது விடைபெற்றுச் செல்வோரின் கண்களில் நீர் கசிகிறது. சுற்றி நிற்போருக்கும் கனத்த பொழுது அது. நெகிழ்வுணர்வுக்கு இடமேது நாடேது! அவர்களுடனான எங்களுடைய பழக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடம்தான் என்றாலும், மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது. மனதார வரும் துயரம், மகிழ்ச்சி முதலான உணர்வுகள் ஒருசில நிமிடங்கள்தான் இருக்கிறதென்றாலும் அவற்றின் அனுபவத்தை நினைத்தே மற்ற காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

Monday, July 11, 2005

இது எப்படி இருக்கு?

இன்று வந்த மின்னஞ்சல் ஒன்றில்...

Image hosted by Photobucket.com

" வடோதரா, குஜராத்தில் சமீபத்தைய மழை வெள்ளத்தின் போது நிகழ்ந்த காட்சி! இணை ஆணையர் (கே.குமாரசுவாமி?), தன் கால்களும், கால்சட்டையும் நனையாமல் இருக்க காவலர் ஒருவரின் தோளில் அமர்ந்து செல்கிறார்!!

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 2"

Friday, July 01, 2005

தமிழ்ப்புத்தகத் தகவல் மையம்

இந்த வார வலைப்பதிவுகளில் தமிழ்ப் புத்தகத் தகவல் மையம் அமைப்பது பற்றிய எண்ணங்களையும், முயற்சிகளையும் பற்றி வாசித்திருப்பீர்கள். அதற்காக வெங்கட், விக்கி ஒன்றைத் துவக்கியதைப் பற்றியும் அறிவீர்கள் (அவ்விக்கியின் முகவரி: http://abbe.optics.utoronto.ca/tamilbooks/).

ஆர்வமிருப்போர் தேவையான தகவல்களை அதில் இடத் துவங்கினால் நன்றாக இருக்கும். என் சார்பில், முதல் கட்டமாக என்னிடமிருக்கும் தமிழகப் பதிப்பாளர்களின் முகவரிகளை இடலாமென்றுள்ளேன். தற்சமயம், பதிப்பாளர்களின் பெயர்களை மட்டும் மேற்குறிப்பிட்ட விக்கியின் இணையப்பக்கத்தில் "பதிப்பாளர்கள்" என்ற சுட்டியின்கீழ் காணமுடியும்.

ஒவ்வொரு பதிப்பாளரின் முகவரி விவரங்களை வேறொரு பக்கத்தில் இடவேண்டும். ஏற்கனவே இடப்பட்டிருந்த ஒரு முகவரிப் பக்கத்தின் தகவல்களைச் சற்று மேம்படுத்திப் பின்வரும் வடிவத்தை யோசித்து வைத்துள்ளேன்:


அன்பு பதிப்பகம்

தொடர்பு கொள்ள

பழைய எண் 63அ, புது எண் 4அ
டாக்டர் அரங்காச்சாரி சாலை
சென்னை-600018

தொலைபேசி:
தொலைநகல்:
மின்னஞ்சல்:
இணைய தளம்:

வெளியீடுகள்


மேலதிகத் தகவல்கள்



இதில் 'வெளியீடுகள்' சுட்டியைச் சொடுக்கினால் அப்பதிப்பகத்தின் புத்தகப் பட்டியலைக் காணும்பொருட்டு வேறொரு பக்கத்தில் அவற்றை உள்ளிடலாம் (தகவல், ஆர்வம் உள்ளோர் அனைவரும்). பிறகு அங்குள்ள ஒவ்வொரு புத்தகத் தலைப்பின் சுட்டிக்கும் வேறொரு பக்கத்திலுள்ள அப்புத்தகத்தின் விவரங்களுக்கான இணைப்பை ஏற்படுத்தலாம்.

இப்போதைக்கு மேற்கண்ட உதாரண முகவரிப் பக்கத்தின் வடிவைக் குறித்த உங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கக் கோருகிறேன். (பதிப்பாளர்களின் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், இணையதளம் போன்ற விவரங்கள் என்னிடமில்லை; இருப்பினும் வருங்காலத்தில் தெரியவரும்போது சேர்த்துக் கொள்ளலாம்).

தமிழ்ப் புத்தகத் தகவல் மையத்திற்கான விக்கி 'குடிசை'யைக் கட்ட ஒரு சிறு குச்சியை எடுத்துப் போடுகிறேன். நீங்களும் வாருங்கள், கட்டுவோம்.

தொடர்புடைய சில சுட்டிகள்:
தமிழ்ப்புத்தகத் தகவல் மையம் - விக்கியும் மேலும்
தமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்
புத்தகப் பட்டியல் தரவுதளம்
இணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்
நேற்று, இன்று , நாளை

Friday, June 24, 2005

தலைவர்களின் எழுத்தும் பேச்சும்

அனாமிகாவின் பசித்திரு! விழித்திரு!! பதிவைப் படித்ததும் அண்மையில் பத்ரி எழுதியிருந்த சத்யம் ஏவ ஜயதே பதிவு நினைவிற்கு வந்தது. அதில், இந்நாளைய அரசியல் தலைவர்கள் யாரும் அவ்வளவாக எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது எழுத முடியாத பின்னூட்டத்தை இங்கு இட்டுவைக்கிறேன்.

அறிவுசார் விவாதங்கள், கருத்துகளை இக்கணவான்கள் யாரும் நினைக்கிறார்களா என்றே தெரியவில்லை; பிறகுதானே பேச்சும் எழுத்தும். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் தலைவர்களின் பேச்சுகள் கருத்து செறிவானவையாகவும், மக்களுக்குப் பயனுள்ளவையாகவும் இருப்பதாகக் கேட்டுள்ளேன். சுருக்கெழுத்து கற்றுக் கொள்ளச் சென்ற காலங்களில், அங்குள்ள ஆசிரியர் மூத்த மாணவர்களுக்கு நேரு முதலான தலைவர்களின் நாடாளுமன்றப் பேச்சைப் புத்தகங்களிலிருந்து பயிற்சிக்கு வழங்குவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வப்போது அப்பேச்சுகளைப் பற்றியும் சிலாகித்துச் சொல்வார். இப்போதுள்ள பல நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி யாவரும் அறிந்ததே! இவர்களிடமிருந்து எந்தப் பேச்சை, எழுத்தை எதிர்பார்ப்பது?

அதேபோல நம்நாட்டு நிறுவனத் தலைவர்களின் நிலைமை எப்படியோ?!

Wednesday, June 22, 2005

ஸ்விஸ் ரயில் வலை ஸ்தம்பிப்பு

அலுவலகத்திலிருந்து இன்று மாலை வீடு வர கொஞ்சம் தாமதமானது. பேருந்திலிருந்து இறங்கியதும் பார்த்தால் அருகாமையிலிருந்த பேருந்து மற்றும் ட்ராம் நிறுத்தங்களில் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருந்தது. சில சமயங்களில், ட்ராமின் தடத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பிரச்சனை சரியாகும் வரை (ஒரு சில மணி நேரங்கள்) அதன் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, ட்ராமிற்கு பதிலாக பேருந்துகளை இயக்குவார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் விபத்து நடந்திருக்குமோ (அப்படியொரு விபத்தும் அப்பாதையில் நடந்ததாக இதை எழுதுவதற்குச் சற்று முன்னர் நண்பரொருவர் தொலைபேசியில் தெரிவித்தார்) என்று நினைத்துக் கொண்டே சாலையைக் கடந்து கொண்டிருக்க இரயில் நிலையத்தின் ஒலிபெருக்கியில் ஏதோ சொல்லி முடித்திருந்தார்கள்.

வீடு வந்த சேர்ந்த சில மணி நேரங்கள் கழித்து இணையத்தில் செய்திகளைப் பார்த்தபோதுதான் விதயமே தெரிந்தது. மாலை 6 மணிக்கு சற்று முன்னதாக நாட்டின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறின் காரணமாக முழு ஸ்விஸ் ரயில் வலையும் ஸ்தம்பித்து விட்டது. இங்கு மின்தடை கேட்டறிந்திராத ஒன்றால், இச்செய்தி ஆச்சரியமளித்தது. மின்கோளாறிற்கான காரணங்களை வரும் நாட்களில் அலசிக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிடுவார்களென்றாலும், இன்றைய பிரச்சனையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருங்கே பாதிக்கப்பட்டுவிட்டனர்-அதுவும் வேலை முடிந்து வீடு செல்லும் நேரத்தில்! 20:00 மணி வாக்கில் முதல் இரயில் ஓடத் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இப்பிரச்சனையின் பாதிப்பு நாளை (காலை) வரை இருக்கக்கூடும்.

இந்நாட்டுப் போக்குவரத்தில் இரயில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. இங்குள்ள இரயில் அமைப்பானது நம்பகத்தன்மை, காலந்தவறாமை, நேர்த்தித்திறன் முதலானவைகளுக்குப் பெயர்பெற்றது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே!

Tuesday, June 21, 2005

பூங்காவில் நேற்று

ஜூரிக் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் நேற்று எற்பாடு (14:00-18:00 வரை உள்ள நேரம்) எடுத்த படங்களில் சில:

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Sunday, June 19, 2005

தமிழகத்தில் புலிகளின் இரண்டாவது சரணாலயம்

இன்று காலையில் மகிழ்ச்சியானதொரு செய்தி கண்ணில்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலைப் பகுதியில் இருக்கும் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தைத் தமிழ்நாடு மாநில வனத்துறை புலிகளின் சரணாலயமாகவும (ஏற்கனவே இது யானைகளின் சரணலாயமாக உள்ளது) அறிவிக்கச் செய்த பரிந்துரையைப் புறத்திட்டு-புலி வழிநடத்துக் குழு (Project Tiger Steering Committee) ஏற்றுக்கொண்டு, அதை மையத் திட்டக்குழுவின் ஒப்புதலுக்கு முன்வரித்துள்ளது (forward). இந்த ஒப்புதல் கிடைத்துவிட்டால் இவ்விடம் தமிழகத்தில் அமையப்போகும் இரண்டாவது புலிகளின் சரணாலயமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 88 (2001 கணக்கெடுப்பின்படி) என்றும், அவற்றில் 29 திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் காலக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ளன என்பது புதிதாகத் தெரிந்துகொண்ட செய்தி; ஏதோ இத்தனை எண்ணிக்கையிலாவது அவை பிழைத்திருக்கிறதே என்று ஆறுதல் அடையவேண்டியதுதான்.

செய்திக்கான சுட்டி.
தனது அண்மைய டாப்சிலிப் அனுபவத்தை அழகாக வடித்திருக்கும் நாராயணனின் வலைப்பதிவிற்கான சுட்டி.

Friday, June 17, 2005

கமலம் பாதக் கமலம்

இன்று மாலை திடீரென ஏனோ இந்தப் பாடலைக் கேட்கத் தோன்றியது.

Monday, June 13, 2005

படிக்காத புத்தகங்கள்

வலைப்பதிவில் எழுதி வாரங்கள் பலவாகிவிட்டன. அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டும், கொஞ்சம் கிடைக்கும் சந்தில் எப்போதாவது பின்னூட்டங்கள் இட்டுவந்தாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. நேரத்தை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று தெரிகிறது, இருந்தும்.... எப்படியோ இப்புத்தக விளையாட்டின் மூலம் உள்ளே வந்தாயிற்று. அதற்காக செல்வராஜிற்கு மிக்க நன்றி, தாமதத்திற்கு வருத்தம் சொல்லிக்கொள்கிறேன்.

என்னுடைய வாசிப்பனுபவம் இதுவரை சொல்லப்பட்டவைகளிலிருந்து எந்த விதத்திலும் பெரிதும் வேறுபடாததால் அதைக் கூறத் தவிர்க்கிறேன். வாசித்தவை சில காலம் நினைவில் இருந்துவிட்டு பின்னால் ஏதோ 'கனவு' போலாகிவிடுகிறது (ஞாபக மறதிக்கு இப்படியொரு பூச்சு, கண்டுக்காதீங்க ;-) ). அவற்றிலுள்ள பெயர்கள், இடங்கள், நிகழ்வுகள் ஏதேனுமொரு நொடிப்பொழுதில் மின்னல் போல வந்து செல்லக்கூடும். இருந்தாலும் வாசிப்பென்பதே அச்சமயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அனுபவம், தெரிதல் என்று கொள்ளலாம்.

அப்படிக் கனவாக நிற்கும் மற்றும் சமீபத்தில் வாசித்த சில படைப்புகள் (தற்போக்கான வரிசை):

ஞானரதம் - சுப்ரமண்ய பாரதியார்
காதுகள் - எம்.வீ.வெங்கட்ராம்
சம்ஸ்காரா - யூ.ஆர்.அனந்தமூர்த்தி
தமிழகத்தில் கல்வி - வே.வசந்தி தேவியுடன் சுந்தர ராமசாமியின் உரையாடல்
குவாண்டம் கணினி - வெங்கடரமணன்
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
பூரணி கவிதைகள் - பூரணி
கொங்கு வட்டாரச் சொல்லகராதி - பெருமாள் முருகன் (உசாத்துணை நூலென்றாலும் வாங்கிய காலத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தது)
Education and significance of life - J.Krishnamurthy
Resurrection - L.Tolstoy
Life of birds - David Attenborough
O Jerusalem - Larry Collins, Dominique Lappiere
Five Past Midnight in Bhopal - Dominique Lappiere, Javier Moro
Nineteen Eighty-Four - George Orwell
New rulers of the world - John Pilger
போதும்..போதும்..

நிறைய நாட்களாக வாசித்துக் கொண்டிருப்பவை:

தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர் க.ரத்னம்
Savaging the civilized - Ramachandra Guha

படிக்க, வாங்க வேண்டியவை என ஒரு பெருஞ்சரம் உள்ளது, எப்போது என்றுதான் தெரியாது.

Saturday, May 14, 2005

கள்ளிக்காட்டு இதிகாசம்

சிறுகதை, புதினம் போன்றவற்றை ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியொன்று எப்போதாவது வருவதுண்டு - பொழுதுபோக்கிற்கா, நானும் இலக்கியம் படிக்கிறேன் என்று பறைசாற்றிக் கொள்வதற்கா, அதிலிருந்து ஏதேனும் 'கற்றுக்' கொள்வதற்கா, எதையாவது வாசிக்க வேண்டுமென்பதற்காகவே வாசிப்பதா, இல்லை வேறெதெற்காவதா? கேள்வி மட்டுந்தானுண்டு, இப்போதைக்கு பதிலில்லை, இருக்கட்டும்.

புத்தகக் கண்காட்சியொன்றின் முன்வரிசையில் புதிதாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் கவர்ச்சியா, வைரமுத்து என்ற பிரபலமான திரைப்பாடலாசிரியரின் புதினம் என்பதாலா, காசு சேர்த்து வைத்து புத்தகத்தை வாங்க வேண்டிய காலம் போயாச்சு என்பதாலா தெரியாது, வாங்கியாயிற்று. எல்லா அவசரமும் வாங்கும் வரைதான். இருக்கும் புத்தகங்களுக்கு துணையாக, வாங்கியதும் பக்கத்தில்போய் நின்றுகொள்ள வேண்டியதுதான். எப்படியா, வாங்கி வைத்து ரொம்ப நாட்களாக அலமாரியில் நின்று கொண்டிருந்த இந்த 'இதிகாச'த்திற்கு சென்ற வாரம் விமோசனம் கிடைத்தது. நீளமான வாரவிடுமுறை வந்ததால் இப்பொழுதேனும் படிக்க முயற்சிப்போம் என்றவோர் எத்தனிப்பைத் தொடர, சில நாட்களில் வாசிப்பு முடிந்தது. தொடர்ந்தும், வேகமாகவும் வாசிக்க முடிபவர்களுக்கு அரைநாள் கூட எடுக்காது.

1950களிலும் (அதற்கு முன்னரும்?) "வெவ்வேறு குடும்பங்களுக்கு - வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்து முடிந்த நிஜங்களை..ஒரு குடும்பத்திற்கு நேர்ந்ததாகச் செய்தது மட்டுமே" தனது "கற்பனை அல்லது உத்தி" என்கிறார் வைரமுத்து. அப்படிச் சொல்லப்பட்ட குடும்பம் பேயத்தேவர் என்பவருடையது. குடியானவர்களைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ, கேட்கும்போதே ஒருவிதப் பரிவும் ஒட்டுதலும் உண்டாகிறது. துன்பத்தையே வாழ்க்கையாகக் கொண்டுவிட்ட பேயத்தேவருக்கு அடுத்தடுத்து நிகழும் இடர்ப்பாடுகள் அப்பாத்திரத்தின் மீது பரிவை ஏற்படுத்துகிறது. கிராம வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் (தேவையோ இல்லையோ) சுவாரசியமாகவே விவரிக்கப்பட்டுள்ளன - மாட்டுப் பிரசவம், சவரத் தொழில், சாராயம் காச்சுதல், கிணறு வெட்டுவதல், மார்க்க கல்யாணம், இத்யாதி இத்யாதி. கிராம வாழ்வையே கேட்டறியாதோருக்கு புதிதாகத் தெரிந்துகொள்ள பல செய்திகள் கிடைக்கும்.

உள்ள துன்பம் தாங்காது வாழும் குடும்பங்கள், கிராமங்கள், அரசாங்கம் கொண்டுவந்த வைகை அணைக்கட்டுத் திட்டத்தால் சிலதலைமுறைகளாகப் பிழைத்து வந்த வீடு, நிலங்களை விட்டுத் துரத்தப்படும் நிலைக்கு ஆளாகின்றன. வழக்கம்போல அரசாங்கத்திற்கு இம்மக்கள் கிள்ளுக்கீரைகள்தான் (மக்களுக்கு ஒரு திட்டத்தைக் குறித்த சரியான தகவல்களைச் சரியான நேரத்தில் தெளிவாகச் சொல்லாத நடைமுறை இன்றைக்கும் தொடர்கிறது). அணைகட்டி முடிக்கப்பட்டு நீர்தேங்க, ஊர்கள் மூழ்க, கள்ளிப்பட்டியில் பேயத்தேவர் இறக்க, கதை முடிக்கப்படுகிறது. கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது பேயத்தேவர் தற்கொலைக்கு ஒப்பான காரியத்தால்தான் இறந்துபோனார் என்ற எண்ணம் வந்துவிடவே 'கனத்த மனது' ஏற்படவில்லை. ஊர்களெல்லாம் துரத்தப்பட்டு இவருக்கும் இந்நிலையாகிவிட்டதே என்ற வருத்தம் வேறு.

ஆரம்பத்தில் உரைநடை பாணியில் கதை சொல்லத் தொடங்கும் ஆசிரியர், அத்தியாயங்கள் செல்லச் செல்ல வட்டார வாசனையுடன் கூடிய பேச்சு வழக்கிற்கு மாறிவிடுகிறார். உணர்ச்சிவயப்படல், மிகைப்படுத்திச் சொல்லப்படும் சிறுசிறு நிகழ்வுகள் வைரமுத்துவின் படைப்புகளில் இல்லாதிருந்தால்தான் ஆச்சரியம். இருந்தாலும், கதையும் சொல்லப்பட்ட விதமும் வாசிப்பின் விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. வாசிக்கலாம்.

Thursday, May 12, 2005

அழிக்கப்படும் புலிகள்

நேற்று யாமத்தில் ப்ளாக்கர் வெகு நேரம் தொங்கிக் கொண்டிருக்கவே, இப்பதிவு மேலேறவேயில்லை (அதனால ஒரு நஷ்டமும் இல்லை!).

புலியின் எலும்பு, தோல் முதலானவற்றைப் பயன்படுத்தினால் இன்னது கிடைக்கும் என்று எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவில்லை (முட்டாள்தனமாகத்தான் இருக்கிறது). அப்படியே ஏதாவது கிடைத்தாலும், ஒன்றிரண்டு பேருக்கென்றால் பரவாயில்லை, எங்காவது இயற்கையாகச் செத்த புலி அதற்குதவும். புலி சாகும் வரை உட்கார்ந்திருக்க அவ்வளவு இளித்தவாயர்களா நம்மக்கள்? பணம் வரும் என்றால் உடனே போட்டுத் தள்ளிவிடமாட்டார்களா?

சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் ஒரு சில மருந்துகளைத் தயாரிக்கப் புலியின் எலும்பைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் (எலும்பு மட்டுமில்லாமல் ஏறுமுகமாக அதன் பல்வேறு உறுப்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவாம்); நம்மூர் சாமியார்களோ ஏதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு புலித் தோலைப் போட்டு அமர்ந்து கிடக்கிறார்கள்.

இப்படித்தான் வட இந்தியாவில் இருக்கும் பல தேசீயப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் அதிக அளவில் காணாமல் போவதாகத் தெரியவருகிறது. தேவை அதிகரிக்க வேட்டையாடலும் அதிகரிக்கிறது. எதை முதலில் நிறுத்த வேண்டும் என்பது கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா கதைதான். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதென்று புலிகளுக்குத்தான் தெரியும். தற்போது மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலுள்ள ரத்தாம்பூர் தேசியப் பூங்காக்களில் புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் படலம் ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

புலிகளைக் கொல்பவர்களுக்கு மரணதண்டனை அதிகமா? (பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை என்று கேட்டால் எனக்குச் சொல்லத்தெரியாது).

தொடர்புடைய சில செய்திச் சுட்டிகள்:
The threat to India's main tiger centre
Tiger census underway in Ranthambore

Thursday, May 05, 2005

கிராமத்து இசைக்கருவிகளும் இசைஞர்களும்

பத்ரியின் பதிவிலிடப்பட்டிருந்த பம்பை வாத்தியத்தைக் கண்டதும் நினைவு எங்கோ ஓடியது. கிராமங்களில் நடக்கும் திருவிழா, திருமணம், இழவு போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் நடக்கும் இசைகளில் (கொஞ்ச காலத்திற்கு முன்பேனும்) ஏதோ ஒருவகையில் இடம்பிடிக்கும் இசைக் கருவிகள் தப்பட்டை, மத்தளம், நாதசுரம் (பீப்பீ-ன்னுதான் சொல்லுவோம்), பம்பை போன்றவை. தோல் கருவிகளை அவற்றை வாசிக்கும் மக்களே (அல்லது அவர்களைச் சார்ந்தவர்களே) செய்து கொள்ளவார்கள் எனச் சொல்லக் கேட்டுள்ளேன். தப்பட்டையை ஒருசில சுற்றுகள் அடித்து ஓய்ந்தபின் தீ மூட்டி அச்சூட்டில் காயவைத்து சரிசெய்வதைப் பார்க்க நன்றாக இருக்கும். தூண் அல்லது சுவற்றோரத்தில் சாய்த்துப் போர்த்தி வைக்கப்பட்டிருக்கும் மத்தளம், பம்பையை யாருக்கும் தெரியாமல் (?!) ஒன்றிரண்டு முறை கொட்டிவிட்டு ஓடுவதில் அப்போது ஒருவகை மகிழ்ச்சி.

இவ்விசைஞர்கள் பெரும்பாலும் கேள்வி ஞானம் மற்றும் தன்முயற்சியால் தாங்களாகவே கற்றுக் கொண்ட வித்துவான்கள். ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்து அழைத்துவரப்பட்ட இக்கலைஞர்கள் யாராக இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கிராமத்தார்கள் இவர்களை கவனித்துக் கொண்ட விதம் எப்போதுமே கவலையளிக்கச் செய்துள்ளது. "அவனுகளுக்கு ஒரு பட்டைய வாங்கிக் கொடுங்கடா போதும்" என்பதுதான் அவ்வரிய கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை. அவர்களும் அதற்குப் பழகியே போனார்களோ என்னவோ? இழவு வீடென்றால் பம்பைக்காரர் அதை இசைத்துக் கொண்டே இறந்தவரைப் பற்றி ஏதோ பாட, விசாரிக்க வந்தவர்கள் போடும் ஒன்றிரண்டு உரூபாய்களும், அரிசி போன்றவைகளும்தான் அவர்களுக்குக் கிடைத்த சன்மானம்! என்ன உலகமிது! :-(

Friday, April 29, 2005

புதுதில்லியிலிருந்து வரப்போகும் தமிழ் இதழ்

ஜூலை அல்லது ஆகஸ்டு வாக்கில் புதுதில்லியிலிருந்து புதிய தமிழ் மாத இதழ் ஒன்றைக் கொண்டுவர ஒருவர் திட்டமிருப்பதாக மடற்குழுவில் வந்த மின்னஞ்சலொன்று தெரிவிக்கிறது. 'சுபமங்களாவைப் போல வர முயற்சிக்கும்' இவ்விதழுக்குப் படைப்பார்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளலாம் என்கிறது.

மேலும் விவரங்கள் அறிய பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்: http://groups.yahoo.com/group/pmadurai/message/2631

Monday, April 25, 2005

கோட்டைப் போடுங்கள்!

தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்காமலேயே பள்ளிக் கல்வியை முடிக்கும் நிலைமை உள்ளது என்பது பொதுவில் இருக்கும் ஓர் ஆதங்கம்/குற்றச்சாட்டு. இரண்டாம், மூன்றாம் மொழி எனத் தெரிவு செய்யும்போதுகூட அங்கு ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்சு அல்லது வேறேனும் ஒரு மொழி வந்துவிடுகிறது. தமிழைப் படித்து என்ன இலாபம் என்றதொரு மனநிலையோடு, பிறமொழிகளை எடுத்துப் படித்தால் அவற்றில் நிறைய மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. படிப்பென்பதே உருப்போடுவதற்கும், மதிப்பெண்களுக்கும் என்றாகிவிட்ட நிலையில் சுளுவாக எதில் வேலை முடியுமோ அத்திசையில் மாணாக்கர்கள் செல்வதில் வியப்பேது!

பெரும்பாலானோர் தமிழ் மொழிப் பாடத்தை உதறிவிட்டுப் போவதற்கு அப்பாடத் திட்டத்திலுள்ள (கவனிக்க, மொழியிலன்று) கடினத்தன்மையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதில் முக்கியமானது செய்யுள் பகுதி.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழம்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதே - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

[நினைவில் இருந்த செய்யுள் ஒன்றை உதாரணத்திற்காக அப்படியே போட்டுள்ளேன், பிழை இருந்தால் மன்னிக்கவும். எழுதியவர்-ஒளவையார். இப்பாடலின் கடைசி வரிகளை வைரமுத்து தனது படப்பாடல்கள் சிலவற்றில் கொஞ்சம் மாற்றி உபயோகித்திருப்பார்.] அருமையான செய்யுளாக இருந்தாலும் துவக்கப்பள்ளி (அப்படித்தான் நினைவு) அளவிற்கு இப்பாடல் அதிகம் என்றே நினைக்கிறேன். முதலில் கடினமான, வழக்கத்தில் குறைந்து வழங்கும் பொருள் விளங்காச் சொற்கள், பிறகு பொழிப்புரை, விரிவுரை ஆகியவற்றின் தேவை; அவற்றைச் சொல்லி விளக்கும் நபர்/விளக்கவுரைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்றால்கூட ஒப்பேற்றிவிடுவார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கஷ்டம்.

சங்க இலக்கியம் என்ற ஒன்று இல்லாதிருந்திருப்பின் தமிழ் பாடத் திட்டம் எவ்வாறு இருந்திருக்கும்? பிற நாடுகள்/மொழிகளில் உள்ள மொழிப் பாடத்தில் இப்படித்தான் கடினமான பழம் இலக்கியப் பாடல்களை ஆரம்பம் முதல், இறுதி வரை நீக்கமறப் புகுத்திக் கற்பிக்கிறார்களா?

அதற்காக சங்க இலக்கியமே வேண்டாம் என்று சொல்லவில்லை; பாடல்களுக்கு பதிலாக எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க அவற்றின் உரை, சுலபமான செய்யுள்களை மனனம் செய்யும் பயிற்சி, இத்யாதிகள் இருக்க வேண்டும். அவற்றைப் பற்றி அறிஞர்கள் சிந்திக்கட்டும்.

மொழிப் பாடத்தை எளிமைப்படுத்தி தமிழிலும் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ளாமல் நிறைய மதிப்பெண்கள் எடுக்கும் நிலை வந்தால் ஒருவேளை அது நிறையப் பேரை யோசிக்க வைக்கும். அச்சூழ்நிலையில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயப்படுத்து என்னும் சிந்தனையே மறுபரிசீலனைக்கு உரியதாகலாம்.

இக்காலத்து மாணவர்கள் படுசுட்டியானவர்கள், கோடு போட்டுக் காண்பித்தால் 'ரோடே' போட்டுவிடுவார்கள். அவ்ளோதாங்கறேன்!

Monday, April 18, 2005

ஸெஹ்ஸலொய்ட்டன்-2005

அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டிருக்கிறது! நேற்றுத்தான் இவ்விழாவினைக் கண்டதுபோல இருக்கிறது. இன்று எற்பாடு மூன்று மணிக்குத் தொடங்கி இவ்வாண்டிற்கான பனிமனிதனை எரிக்கும் விழா சில மணி நேரங்கள் ஜூரிக் நகரில் நடைபெற்றது.

சென்ற வருடத்தைய பதிவு.

குளிர்காலம் போய்விட்டாலும், தற்போது இருந்து கொண்டிருக்கும் மேகமூட்டமும் மழைத் தூறலும் முந்தைய ஓரிரு வாரங்களின் இளவெயிலின் போது பூத்து மலர்ந்த மலர்களின் பொலிவை (தற்காலிகமாக) இழக்கச் செய்துவிட்டதோடு, இலேசான குளிரையும் தந்துகொண்டுள்ளது.

[எற்பாடு - "...பகல் என்பது 10 மணியில் இருந்து 14 மணிவரை, எற்பாடு என்பது 14ல் இருந்து 18 வரை, மாலை என்பது 18ல் இருந்து 22 வரை..." - http://valavu.blogspot.com/2005/04/blog-post_111354261723461104.html]