யாருக்கும் மன வருத்தமளிக்கும் நிகழ்வு. மகள் செல்லும் குழந்தைகள் காப்பகத்தில் (creche) பணிபுரிந்த இரண்டு பேருக்கும், கோடைவிடுமுறை முடிந்த பின்னால் பள்ளிக்குச் செல்லும் வயதெய்திய சில குழந்தைகளுக்கும் இன்று வழியனுப்பு விழா நடந்தது. வழக்கத்திற்கு மாறாக, மாலை 6 மணிக்கு மேல் அங்கு வந்து தங்களுடைய நண்பன்/நண்பிகளை அவர்களது பெற்றோருடன் இருக்கக்கண்டு, அவர்களுடன் விளையாடி, செல்லுமுன் அன்பளிப்புகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டு, உண்டு களித்துச் சென்றது அக்குழந்தைகளுக்கு நல்ல பொழுதாக அமைந்திருக்கும். பிரிவென்பது அவர்களுக்குப் புதிதா என்ன? இச்சிறு வயதில் பெற்றோரின் பிரிவைத்தான் தினமும் காலையில் சந்திப்பவர்களாயிற்றே!
சில வருடங்கள் அங்கு பணியாற்றிவிட்டு விடைபெறும் நண்பர்கள் இருவருக்கும் இந்நாள் கடினமானதொன்று. வெயில் மின்னும் மாலையில், பெற்றோர், குழந்தைகள் அனைவரும் வட்டமாக நிற்க, சக பணியாளர் ஒருவர் நன்றி தெரிவித்து உரை வாசித்து முடித்த போது விடைபெற்றுச் செல்வோரின் கண்களில் நீர் கசிகிறது. சுற்றி நிற்போருக்கும் கனத்த பொழுது அது. நெகிழ்வுணர்வுக்கு இடமேது நாடேது! அவர்களுடனான எங்களுடைய பழக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடம்தான் என்றாலும், மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது. மனதார வரும் துயரம், மகிழ்ச்சி முதலான உணர்வுகள் ஒருசில நிமிடங்கள்தான் இருக்கிறதென்றாலும் அவற்றின் அனுபவத்தை நினைத்தே மற்ற காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Thursday, July 14, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
>>நெகிழ்வுணர்வுக்கு இடமேது நாடேது!
உண்மை. இது போன்ற அனுபவங்கள் ஒரு நிறைவைத் தருபவை தானே. அந்நேரத்தில் துயராய் இருந்தாலும் நினைத்துப் பார்த்துக் கொள்ளப் பெட்டகத்தில் சேர்த்து வைக்கப்படுபவை.
Post a Comment