படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, July 16, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!!

ஈழமுரசு ஐரோப்பா என்ற வார இதழில் அ.இரவி என்பவர் எழுதிய 'புதியன புகுதல்' என்னும் கட்டுரை நான்கு பாகங்களாக வந்துவிட்டிருக்கிறது. அதன் கடைசி பாகம் மட்டும் இந்த வாரம் வாசிக்கக் கிடைத்தது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் இன்றைய நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்வி இருந்தாலும் புதியவற்றை அறிதலும், எண்ணுதலும் நலமே. அக்கட்டுரையின் நான்காம் பாகம் பின்வருமாறு [பதிப்புரிமை பற்றி அவ்விதழில் எங்கும் காணோம்; அக்கட்டுரையை இங்கு பதிப்பதால் பதிப்புரிமைக்கு ஏதும் பங்கம் ஏற்படாதென்று நம்புகிறேன். அப்படியேதும் உண்டென அறிய வரும்பட்சத்தில் இக்கட்டுரை பதிவிலிருந்து நீக்கப்படும். இங்கு எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருந்தால் அது தட்டச்சின்போதும் நேர்திருக்கலாம்.] :

"தமிழில் முதல் ஒலி வடிவங்கள் அல்லது மூலஒலிவடிவங்கள் முப்பது என்று சொன்னோமே! அவற்றுள் ஸ்,ஷ்,ஹ் ஆகியன வரவில்லை என்றெல்லாம் சொன்னோமே! என்ன சொன்னோமெனில் அவ்வாறான ஒலி வடிவங்களுக்கு தமிழில் வரிவடிவங்கள் கிடையாது என்று சொன்னோம்.

என்னவென்றால் ஊரில் உலகில் இருக்கக்கூடிய எல்லா ஒலிவடிவங்களுக்கும் எல்லா மொழிகளிலும் வரிவடிவங்கள் இல்லை. அதற்கு சாத்தியமும் கிடையாது. தமிழில் ஞ், ழ் என்னும் ஒலிவடிவங்களுக்கு ஆங்கிலத்தில் வரிவடிவங்கள் இல்லை. ஞானம்-Gnanam, அதாவது ஞ் என்பதற்கு Gn என்பதையே பயன்படுத்துகின்றனர். அது முற்றிலும் பொருத்தமானது அல்ல. தமிழ்-Thamizh, இங்கு ழ் என்பதற்கு zh என்னும் ஆங்கில வரிவடிவம் பயன்படுகிறது. இதன் பொருத்தப்பாடும் கேள்விக்குரியது.

அவ்வாறே ஆங்கில F,G,H,X,Z என்று இன்னும் பல ஒலிவடிவங்களுக்கு தமிழில் வரிவடிவம் இல்லை. எப்படியோ திக்குமுக்காடி Father என்பதனை ஃபாதர் என்று எழுதிவிடுகின்றோம். இப்போது ஒன்றுக்கும் உதவாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஆய்த எழுத்துக்கு (ஃ) ஒரு சொல்லில் இடம் பெறும் குதூகலம் வாய்ந்திருக்கிறது, அவ்வளவுதான்.

ஆனால் இவை எவையும் மொழியின் போதாமை அல்ல. எல்லா மொழிகளும், பிறிதான மொழிகளிடமிருந்து இரவல் பெற்றும், கொடுத்தும், இயலுமானளவு தம்மை நிறைவு செய்து கொள்கின்றன. உலகுடன் ஒட்ட ஒழுகலும் உலகின் இன்றைய தேவையை நிறைவு செய்யும் பொருட்டும், நம் தமிழ்மொழியை எவ்வாறு வாலாயப்படுத்தப் போகின்றோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.

தமிழில் முதல் ஒலி வடிவங்கள் முப்பது என்றோமே! அதில் உயிர் எழுத்துகள் 12 உம் மெய்யெழுத்துக்கள் 18 உம் ஆகும் என்பதனை முதலில் குறித்துக் கொள்ளல் சாலும். ஒலிவடிவத்தின் உயிராக நிற்பது உயிர் எழுத்துக்கள் என்றும், உயிர் தங்குவதற்கு ஏதான உடலாக நிற்பது மெய்யெழுத்துக்கள் என்றும் சொல்லலாம். அந்த வகைப்பாடுகள் அற்புதம் என்பேன். ஆனால் வரிவடிவங்களை அளவுக்கதிகமாக இறைத்துவிட்டோமோ என்னும் ஐமிச்சம் தான் என்னிடையே தோன்றுகின்றது. உயிர் எழுத்துக்கள் எவை?

அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ

ஒ-ஓ
ஒள

இவைதாமே! இப்படித் தொகுத்தலுக்கு ஒரு காரணம் உண்டு. உங்கள் பார்வையில் இடப்பக்கம் உள்ள ஐந்து உயிர் எழுத்துக்களும் (அ,இ,உ,எ,ஒ) போதும் என்பேன். ஏனைய ஏழு உயிர்களையும் கழித்து அழுத்துவிடலாம் என்றும் சொல்வேன். ஏன் சொல்கின்றேன்?

அ,ஆ இரண்டையும் எடுங்கள். இரண்டும் ஒரே ஒலிவடிவங்களாலானவை. ஓம்தானே? உச்சரித்துப் பாருங்கள், உணர்வீர்கள். சிறு வித்தியாசம் என்னவெனில், அ என்பது குறுகியும் ஆ என்பது நீண்டும் ஒலிக்கின்றது. ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கின்ற போது இரண்டு வரிவடிவங்களை இதற்கு ஏன் இடவேண்டும்? நீட்சியான ஒலிவடிவம் வேண்டுமென்றால் எங்களிடம் ஏலவே உள்ள (ா) வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம்தானே? எப்படி? இதோ பாருங்கள் இப்படி!

அ-அா
இ-இா
உ-உா
எ-எா
ஒ-ஒா

சரி, ஐ உம் ஒள உம் அப்படியே இருக்கட்டும். பிறகு வருகின்றேன்.

உயிர் எழுத்துக்களுக்கு மேற்கூறிய வரிவடிவங்களைக் கையாண்டோமானால், உயிர் எழுத்துக்களின் வரிவடிவங்களின் அளவைக் குறைத்துக் கொள்வோம் அல்லவா? இது தவறு, மரபை மீறுதல் தகாது என்று சொல்வோருக்கு, நான் என்ன சொல்ல? பவணந்தி முனிவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் சொன்னதைச் சொல்லவா?

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவா, கால வகையினானே

மொழியின் வரிவடிவங்களைக் குறைத்துச் செல்லல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காலத்தில் கணனிப் பயன்பாடு அதிகரித்த நேரத்தில் மொழிக்கு மேலும் வலுவூட்டும். ஆகவே நாங்கள் இனி இப்படி எழுதுவோமா? அல்லது எல்லோரையும் எழுதச் சொல்லிக் கேட்போமா?

அாடு (ஆடு), கிாரி (கீரி), உார் (ஊர்), ஒாடம் (ஓடம்)

உயிர் எழுத்துக்களில் ஐ, ஒள என்னும் ஒலி, வரிவடிவங்கள் இரண்டு உள்ளன. இவற்றை எப்படி மாற்றமுறச் செய்யலாம்? ஐ என்பது அ உம் இ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் ஒள என்பது அ உம் உ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் தமிழ் இலக்கணம் சொல்கின்றது. அது சொல்லட்டும். தமிழில் ஏலவே ஐ ஒலிவடிவத்திற்கும் வரிவடிவங்கள் உள்ளன.

ஐ - அய்
ஒள - அவ்

இவை மெத்தப் பொருந்திப் போகிறதல்லவா?

ஐயர் - அய்யர்
ஒளவை - அவ்வை

மேற்கூறிய உதாரணத்தில் ஒலிவடிவத்தைப் பார்த்தீர்களா? அவை அச்சொட்டாகப் பொருந்திப்போகிறது. சங்ககாலப்பாடல் ஒன்றினை மேலும் நான் உதாரணத்திற்குத் தருவேன்.

கையது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

(போரிலிருந்து வெற்றி பெற்று திரும்பிய தொண்டைமானைப் பார்த்து அவ்வை பாடியது. கையில் வேல், காலில் புனையப்பட்ட கழல் என்னும் ஆபரணம், உடல் முழுவதும் வியர்வை, தொண்டையில் புண்)

இங்கு கையது, மெய்யது என்ற சொற்கள் வருகின்றபோது யாப்பிற்கும் அது மனைவதைக் காண்க. அதாவது முதலாவது வரியில் வரும் முதலெழுத்து கை என்பது நெடிலாகவும், இரண்டாவது வரியில் வரும், முதலெழுத்து மெ என்பது குறிலாகவும் அமைகிறது. இது யாப்புக்கு முரண். இரண்டும் நெடிலாக அமைய வேண்டும். ஆகவே இப்படி எழுதிப் பார்ப்போமா?

கய்யது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

இப்பொழுது இரண்டு வரிகளினதும் முதலெழுத்துக்கள் (க, மெ) குறிலாக அமைந்து, யாப்பிலக்கணத்தை நிறைவு செய்கின்றதல்லவா?"

(மீதி அடுத்த பதிவில்)

No comments: