படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, July 01, 2005

தமிழ்ப்புத்தகத் தகவல் மையம்

இந்த வார வலைப்பதிவுகளில் தமிழ்ப் புத்தகத் தகவல் மையம் அமைப்பது பற்றிய எண்ணங்களையும், முயற்சிகளையும் பற்றி வாசித்திருப்பீர்கள். அதற்காக வெங்கட், விக்கி ஒன்றைத் துவக்கியதைப் பற்றியும் அறிவீர்கள் (அவ்விக்கியின் முகவரி: http://abbe.optics.utoronto.ca/tamilbooks/).

ஆர்வமிருப்போர் தேவையான தகவல்களை அதில் இடத் துவங்கினால் நன்றாக இருக்கும். என் சார்பில், முதல் கட்டமாக என்னிடமிருக்கும் தமிழகப் பதிப்பாளர்களின் முகவரிகளை இடலாமென்றுள்ளேன். தற்சமயம், பதிப்பாளர்களின் பெயர்களை மட்டும் மேற்குறிப்பிட்ட விக்கியின் இணையப்பக்கத்தில் "பதிப்பாளர்கள்" என்ற சுட்டியின்கீழ் காணமுடியும்.

ஒவ்வொரு பதிப்பாளரின் முகவரி விவரங்களை வேறொரு பக்கத்தில் இடவேண்டும். ஏற்கனவே இடப்பட்டிருந்த ஒரு முகவரிப் பக்கத்தின் தகவல்களைச் சற்று மேம்படுத்திப் பின்வரும் வடிவத்தை யோசித்து வைத்துள்ளேன்:


அன்பு பதிப்பகம்

தொடர்பு கொள்ள

பழைய எண் 63அ, புது எண் 4அ
டாக்டர் அரங்காச்சாரி சாலை
சென்னை-600018

தொலைபேசி:
தொலைநகல்:
மின்னஞ்சல்:
இணைய தளம்:

வெளியீடுகள்


மேலதிகத் தகவல்கள்



இதில் 'வெளியீடுகள்' சுட்டியைச் சொடுக்கினால் அப்பதிப்பகத்தின் புத்தகப் பட்டியலைக் காணும்பொருட்டு வேறொரு பக்கத்தில் அவற்றை உள்ளிடலாம் (தகவல், ஆர்வம் உள்ளோர் அனைவரும்). பிறகு அங்குள்ள ஒவ்வொரு புத்தகத் தலைப்பின் சுட்டிக்கும் வேறொரு பக்கத்திலுள்ள அப்புத்தகத்தின் விவரங்களுக்கான இணைப்பை ஏற்படுத்தலாம்.

இப்போதைக்கு மேற்கண்ட உதாரண முகவரிப் பக்கத்தின் வடிவைக் குறித்த உங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கக் கோருகிறேன். (பதிப்பாளர்களின் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், இணையதளம் போன்ற விவரங்கள் என்னிடமில்லை; இருப்பினும் வருங்காலத்தில் தெரியவரும்போது சேர்த்துக் கொள்ளலாம்).

தமிழ்ப் புத்தகத் தகவல் மையத்திற்கான விக்கி 'குடிசை'யைக் கட்ட ஒரு சிறு குச்சியை எடுத்துப் போடுகிறேன். நீங்களும் வாருங்கள், கட்டுவோம்.

தொடர்புடைய சில சுட்டிகள்:
தமிழ்ப்புத்தகத் தகவல் மையம் - விக்கியும் மேலும்
தமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்
புத்தகப் பட்டியல் தரவுதளம்
இணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்
நேற்று, இன்று , நாளை

4 comments:

Chandravathanaa said...

நான் சில எழுத்தாளர்களின் பெயர்களைப் பட்டியலில் சேர்த்துள்ளேன்.
அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவுமே இல்லாமல் நான் சேர்த்த முறை சரிதானா என்பது தெரியவில்லை. நேரம் கிடைக்கும் போது நானோ, அன்றி அவர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்த மற்றவர்களோ மேலதிக விபரங்களைச் சேர்க்கலாமென நினைக்கிறேன்.

இங்கு ஈழத்து எழுத்தாளர்களையும், இந்திய எழுத்தாளர்களையும் தனித்தனியே எழுதுவா சேர்த்து எழுதுவதா என்பதில் எனக்கு சற்றுக் குழப்பம்.

இராதாகிருஷ்ணன் said...

சேர்த்த முறை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின், இருக்கும் விவரங்களைப் பார்த்து அதுபோலவும் இடலாம். விக்கியின் உதவிப் பக்கத்தையும் துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

இந்திய, ஈழ எழுத்தாளர்கள் என்று தனியாகப் பிரிக்காமல், பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் என இட்டு, விவரப் பக்கங்களில் நாடு/ஊரைப் பற்றிக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

Chandravathanaa said...

எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றிய விபரங்களை எங்கு சென்று இணைக்க வேண்டுமென்பது புரியவில்லை.

Venkat said...

ராதா - அற்புதம். மிக்க நன்றி!

சந்திரவதனா - ஈழம், இந்தியா என்றெல்லாம் பிரிக்கத் தேவையில்லை. இது மொத்தத்தில் தமிழ்ப்புத்தகங்களுக்கான தகவல் மையம். எனவே இதில் அகரவரிசைதான் முக்கியம்.

ஆனால், கட்டாயமாக ஆசிரியர் பற்றிய தகவல் பக்கத்தில் அவரது பிறப்பிடம், வதிவிடம் போன்றவற்றையும் சேர்க்கலாம்.

எப்படிச் செய்வது என்று சந்தேகமிருந்தால் edit this page என்ற இணைப்பைச் சொடுக்கவும். அங்கே உதவிக்கான இணைப்பு இருக்கும். அதை இன்னொரு சாரளத்தில் திறந்து வைத்துக்கொள்ளவும்.