படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, June 22, 2005

ஸ்விஸ் ரயில் வலை ஸ்தம்பிப்பு

அலுவலகத்திலிருந்து இன்று மாலை வீடு வர கொஞ்சம் தாமதமானது. பேருந்திலிருந்து இறங்கியதும் பார்த்தால் அருகாமையிலிருந்த பேருந்து மற்றும் ட்ராம் நிறுத்தங்களில் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருந்தது. சில சமயங்களில், ட்ராமின் தடத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பிரச்சனை சரியாகும் வரை (ஒரு சில மணி நேரங்கள்) அதன் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, ட்ராமிற்கு பதிலாக பேருந்துகளை இயக்குவார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் விபத்து நடந்திருக்குமோ (அப்படியொரு விபத்தும் அப்பாதையில் நடந்ததாக இதை எழுதுவதற்குச் சற்று முன்னர் நண்பரொருவர் தொலைபேசியில் தெரிவித்தார்) என்று நினைத்துக் கொண்டே சாலையைக் கடந்து கொண்டிருக்க இரயில் நிலையத்தின் ஒலிபெருக்கியில் ஏதோ சொல்லி முடித்திருந்தார்கள்.

வீடு வந்த சேர்ந்த சில மணி நேரங்கள் கழித்து இணையத்தில் செய்திகளைப் பார்த்தபோதுதான் விதயமே தெரிந்தது. மாலை 6 மணிக்கு சற்று முன்னதாக நாட்டின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறின் காரணமாக முழு ஸ்விஸ் ரயில் வலையும் ஸ்தம்பித்து விட்டது. இங்கு மின்தடை கேட்டறிந்திராத ஒன்றால், இச்செய்தி ஆச்சரியமளித்தது. மின்கோளாறிற்கான காரணங்களை வரும் நாட்களில் அலசிக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிடுவார்களென்றாலும், இன்றைய பிரச்சனையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருங்கே பாதிக்கப்பட்டுவிட்டனர்-அதுவும் வேலை முடிந்து வீடு செல்லும் நேரத்தில்! 20:00 மணி வாக்கில் முதல் இரயில் ஓடத் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இப்பிரச்சனையின் பாதிப்பு நாளை (காலை) வரை இருக்கக்கூடும்.

இந்நாட்டுப் போக்குவரத்தில் இரயில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. இங்குள்ள இரயில் அமைப்பானது நம்பகத்தன்மை, காலந்தவறாமை, நேர்த்தித்திறன் முதலானவைகளுக்குப் பெயர்பெற்றது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே!

3 comments:

துளசி கோபால் said...

இங்கே நியூஸியிலே ரெண்டு நாளைக்கு முன்னாலே யாரோ ரெண்டு மெயின் கேபிளைத் தெரியாம வெட்டிட்டாங்கன்னு,

இன்டர் நெட், செல்ஃபோன், பேங்க் எஃப்பாஸ் எதுவுமே வேலை செய்யலை. 5 மணி நேரம் ஆச்சு. கடைகண்ணியெல்லாம் வியாபாரம், ஏன்? நாடே ஸ்தம்பிச்சுப் போச்சு!

என்றும் அன்புடன்,
துளசி.

இராதாகிருஷ்ணன் said...

கஷ்டந்தாம் போங்க! அந்த வடங்கள் (cable) இன்னோருவாட்டி யாரு கையிலயும் கெடைக்காம இருந்தாச் சரி :-)

Chandravathanaa said...

இந்த செய்தியை எமது தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன்.
மின்சாரக்கோளாறு காரணமாக இப்படி நடந்தது என்ற போது....
எனக்கும் ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிதான் நினைவில் வந்தது.