கடந்த வெள்ளிக்கிழமை (14.01.2005) சென்னையில் அகலப்பட்டைச் சேவையைத் தொடங்கிவைத்த மையத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ஜூன் மாதத்திற்குள் ரூ.10 ஆயிரம் விலையில் கணினி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ("அகண்ட அலைவரிசைச் சேவை தொடக்கம்: ஜூன் மாதத்துக்குள் ரூ.10 ஆயிரத்துக்குக் கணினி" - தினமணி, ஞாயிறு 16.01.2005 மின்பதிப்பு). மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், திரையின் விலையே ஏறக்குறைய ரூ.5000 இருக்கும் சமயத்தில் இக்கணியில் என்னென்ன வசதிகள் இருக்குமென்று தெரியவில்லை. அதுபோல மாதத்திற்கு ரூ.500-ஐ சாதாரண வீடுகளில் அகலப்பட்டை இணைப்பிற்காகச் செலவழிப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. வணிகப் போட்டிகள் பெருகும்போது இத்தொகை மேலும் குறையக்கூடும்.
மைக்ரோசாஃப்ட்டின் தமிழ் மென்பொருள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறதாம்-'ஆபீஸ்' தொகுப்பாக இருக்குமோ? வரட்டும் வரட்டும்!
இந்தியாவில் கணிப்பொருட்களுக்கான இறக்குமதி வரி (35% ?) மிக அதிகம் என்று தெரிகிறது. இந்த அளவிற்கு அதிகமாக வரிவிதிக்க வேண்டிய அவசியம் என்னவோ - உள்ளூர் தயாரிப்புகளைக் காப்பாற்றுதலா?
-----
சென்ற ஆண்டு ஈராக்கின் சிறைச்சாலையில் (அபு க்ராயிப்) நடந்த அக்கிரமங்களுக்காக அமெரிக்கச் சிப்பாய், சார்லஸ் க்ரானெர் (36), பத்தாண்டுகள் சிறைவாசம் பெற்றுள்ளார் (செய்தி). தொ.காவில் பார்த்தபோது இத்தீர்ப்பால் அவர் ஒன்றும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 'மேலிடத்து உத்தரவுகளை'யே அமல்படுத்தியதாகவும், 'போர் நடந்துகொண்டுள்ளது, அங்கு கெட்ட செயல்களும் நடக்கும்' என்ற வியாக்கியானம் வேறு. இந்த 'மேலிடங்களுக்கெல்லாம்' விசாரணை என்றே ஒன்று இருக்குமா என்பது சந்தேகம்தான். இத்தீர்ப்புகள் வெறும் கண்துடைப்பாக இல்லாமலிருந்தால் சரி.
-----
மனிதன் உருவாக்கிய வேறொரு சுனாமி
[அவுட்லுக் இந்தியா, ஜன.11 2005, The Other, Man-Made Tsunami]
-----
'இந்த வார நட்சத்திரம்'-ஆக அழைத்து, எழுதத் தூண்டிய தமிழ்மணம் குழுவிற்கு மிக்க நன்றிகள்! சுமாராக எழுதப்பட்டதாக இருந்தாலும் அவைகளையும் வாசித்து, பின்னூட்டம் அளித்து வந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த ஒரு வாரத்தில் நான் கவனித்த வரைக்கும் ரோஸாவசந்த் தான்-படித்த வலைப்பதிவுகளில் பெரும்பாலானவற்றிற்குப் பின்னூட்டமிட்டுள்ளார் என்றே சொல்வேன். இது அந்தந்த வலைப்பதிவாளர்களை நிச்சயம் உற்சாகம் அளிக்கும். அதற்காக அவருக்கு மேலும் ஒரு நன்றி! எல்லாப் பதிவுகளுக்கும் எல்லோராலும் எல்லா சமயத்திலும் பின்னூட்டம் அளிக்க இயலாது. இருப்பினும், முக்கியமான பதிவுகளுக்கு (குறிப்பாகத் துறை சார்ந்து எழுதுவோருக்கு) பின்னூட்டம் இடுவது, அதை எழுதுவோர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். இல்லையெனில், இவ்வளவு சிரமமெடுத்து எதற்கு எழுதினோம் என்ற சலிப்பே ஏற்படும். அதேபோல வலைப்பதிவாளரும், பின்னூட்டமளிப்போரை ஊக்குவிக்கும் வண்ணம் பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் அளித்தல் நலம் (குறைந்தபட்சம் கேள்விகள் எழுப்பப்படும் போதாவது).
அடுத்த வார நட்சத்திரத்தை வரவேற்று விடைபெறுகிறேன். நன்றி!
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Sunday, January 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இராதாகிருஷ்ணன்,
இவ்வார நட்சத்திரமாக மட்டுமல்ல இதற்கு முன்பும் சுவாரசியமாகவே எழுதி வந்தீர்கள். இவ்வாரம் எழுதிய விஷயங்கள் அருமையானவை. அதுவும் அந்த ஸ்விஸ் நடைப்பயணச் சாலைகளைக் கண்டதும் காதில் புகை வந்தது உண்மைதான். ;)
தொடர்ந்து எழுதுங்கள். மேற்கத்தைய சங்கீதத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் இதை ஒரு தொடராகவே எழுதலாமே? ஒரு இசைக்கலைஞரைத் தேர்ந்தெடுத்து அவருடைய வாழ்க்கை வரலாறு, இசை, அதன் தாக்கம் என்று விரிவான கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதலாமே? என்ன சொல்கிறீர்கள்?
ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். (சீரியஸாக சொல்கிறேன் ஐயா. அமாடியஸ் பார்த்ததில் இருந்து உங்களைப்போல ஒரு ஆளைத் தேடிக்கொண்டிருந்தேன்.)
ஆர்வமுடன்,
சந்திரமதி
மைக்ரோசாஃப்ட்டின் தமிழ் மென்பொருள் மிகவும் நல்ல செய்தி. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. பின்னூட்டம் என்பது உற்சாக டானிக்போல என்பது சரியே.
By: மூர்த்தி
நன்றி சந்திரமதி மற்றும் மூர்த்தி!
மதி, காதில் புகைவந்ததும், தண்ணீர் குடித்தீர்களா? ;)
மேற்கத்திய சங்கீதம் பற்றிச் சொல்ல எனக்கு அதில் ஒன்றுமே தெரியாது. இங்கு எழுதியவையெல்லாம், கேட்ட சில இசைகளின் அடிப்படையில்தான். நீங்கள் சொல்வதுபோல விரிவான கட்டுரையை (ஆங்காங்கே தேடிப்பிடித்துதான்) எழுதலாம்தான், முயற்சிக்கிறேன். நன்றி!
இராதாகிருஷ்ணன்
கொஞ்சமாக எழுதினாலும் எழுதியவைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் மனதுக்குப் பிடித்தவையாகவே இருந்தன.
நீங்கள் குறிப்பிட்டது போல மேற்கத்திய இசை பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டாலும் அதை ரசிக்கத் தெரிந்துள்ளீர்கள். ரசிக்கத் தெரிவதும் ஒரு கலைதான். மதி குறிப்பிட்டது போல மேற்கத்திய இசைகள் பற்றி இன்னும் எழுதுங்கள்.
உங்கள் "நடை" யும் நன்றாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அங்கு ஒரு தரம் வந்து அந்த வீதிகளில் நடப்பேன்.
அவியல் அருமை... பொரியலையும் எதிர் பார்க்கிறோம்
Post a Comment