சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பற்றி வலைப்பதிவுகளில் வந்து கொண்டிருக்கும் தகவல்களை அவ்வப்போது படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சில விஷயங்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன.
பல மாதங்களாக இங்கே வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அச்சுப்பிரதி ஒரு நாள் நின்றுவிட்டது. எப்பொழுது சந்தா முடிகிறதென்று பார்க்க நானும், சந்தா முடியப்போகுமுன் சந்தாதாரருக்கு நினைவூட்ட அவர்களும் மறந்துவிட்ட சமயத்தில் (விற்பவர்கள் இப்படியா இருப்பது?!), காலச்சுவடு இணையத்திலேயே படிக்கக் கிடைப்பது தெரியவர, அதிலேயே எப்போதாவது படிக்கிறேன். சமீப காலத்தில் காலச்சுவட்டைப் பற்றிக் கேட்கும் சில செய்திகளும் சந்தாவைப் புதிப்பிப்பதற்கு உள்ள ஆர்வத்தைத் தள்ளிப்போடுகிறது, பார்க்கலாம்.
டாலர் தேசம் என்கிற புத்தகம் வருவதற்குமுன் பா.ராகவன் தனது வலைப்பதிவில் இந்தத் தேதிக்கு முன்னால் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு 30% தள்ளுபடி தரப்படும் என்று அறிவித்திருந்தார். மலிவாகக் கிடைக்கிறதே, அப்படியாவது ஊரில் இருப்போர் படிக்கட்டுமேயென அதை இந்தியாவிலிருக்கும் உறவினர் பெற்றுக்கொள்ளும் வகையில், கடைசி நாளன்று குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு மின்னஞ்சலொன்று அனுப்பினேன். அது கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதென்று நினைக்கிறேன். அவ்வஞ்சலிலேயே, ஒருவேளை தள்ளுபடிக்கான தேதி முடிவடைந்திருந்தாலும் சாதாரண விலையிலேயே அங்கு அனுப்பி வைக்கும்படியும் எழுதியதாக நினைவு. அனுப்பும்போதே ஒருவிதத் தயக்கத்துடன் இருந்த எனக்கு, பதிலொன்றும் வராமையைக் கண்டு ஏன் அனுப்பினோம் என்றாகிவிட்டது. ஒரு பிரதியை நான் வாங்காததாலோ அல்லது அதை எனக்கு விற்காததாலோ இருவருக்கும் ஒன்றும் நஷ்டம் வந்துவிடப்போவதில்லை.
மேற்சொன்ன இரண்டு சம்பவங்களை வைத்துப்பார்த்து, கணிசமாக விற்க ஆரம்பித்துவிட்ட நிலையில் பதிப்பாளர்களுக்கு ஒரு-வாசகன் என்ன பெரிய பொருட்டாகிவிடப்போகிறான் என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.
கிடக்கட்டும் விடுங்கள், நல்ல இசையொன்றைக் கேட்போம்.
யொஹான் ஸெபாஸ்டியான் பாஹ் (Johann Sebastian Bach, 1685-1750)-ன் Air. இந்த Air-லேயே பல வடிவங்கள் (D-Dur, G,...)இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த இசை பல்வேறு கருவிகளால் இசைத்துப் பார்க்கப்பட்டுள்ளது. நான் கேட்டதில் (குழல், வயலின், ஆர்கன்), வயலினைக் கொண்டு வாசிக்கப்பட்ட D-Durதான் அருமையாக இருந்தது. இணையத்தில் தேடிப்பார்த்ததில் சுமாரான இந்த சுட்டி கிடைத்தது.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Friday, January 14, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நன்றி!
நன்றி இ.கி
By: karthikramas
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் விகடன் பிரசுரத்தில் தனித்தனி புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட ஆரம்பித்த சமயத்தில் 'விகடன் கிளப்' என்ற பெயரில் ஆரம்பித்து ஒரு முறை தபாலில் புத்தகம் வாங்குபவர்களுக்கு அடுத்த முறை புதிய வெளியீடுகள் வெளியாகும் போது முறையாக அறிவிப்பு அனுப்பிக்(தள்ளுபடியும் உண்டு?!) கொண்டிருந்தார்கள். ம்ம்ம்ம்ம்ம்.... அதெல்லாம் ஒரு காலம்...! இப்போ எல்லாம் அப்படி செய்கிறார்களா என்ன?!
By: Naandhaan
///பதிப்பாளர்களுக்கு ஒரு-வாசகன் என்ன பெரிய பொருட்டாகிவிடப்போகிறான்///
ராதாகிருஷ்ணன்: டாலர் தேசம் பற்றி மட்டும் - அதன் பதிப்பாளராக.
எங்களைப் பொறுத்தவரை இவ்வொரு வாசகரும் மிக முக்கியமானவர். அதனால் உங்கள் மின்னஞ்சலை மீண்டும் எனக்கு, என் மின்னஞ்சல் முகவரியில் (bseshadri at gmail dot com) அனுப்பவும். அதை மேற்கொண்டு செயல்படுத்துகிறேன்.
ராகவன் பற்றி நீங்கள் சொல்லியிருந்த பதிவு என் நினைவுக்கு வரவில்லை. இப்பொழுது அவர் தன் பதிவை முழுமையாக, ஆனால் தாற்காலிகமாக என நினைக்கிறேன், மூடிவைத்துள்ளார்.
அனைவருக்கும் நன்றிகள்!
பத்ரி: இன்று ஊருக்குப் பேசியபோது அங்கு கடையிலேயே புத்தகத்தை வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. பதிப்பாளராக வாசகன்மீது அக்கறை எடுத்துக்கொண்டமைக்கு நன்றி!
விகடன் புத்தகங்கள் வாங்குவதில் ஒரு சிறிய சிக்கல். அதாவது அவர்கள் செக்குகளை (உள்ளூராகயிருப்பினும்) எற்றுக் கொள்வதில்லை . இதற்காக வரைவோலைத் (demand draft) தயார் செய்து அனுப்ப வேண்டும் அல்லது மணி ஆர்டர் அனுப்ப வேண்டியுருக்கும். வரைவோலையில் இன்னொரு பிரச்சினை, அது பாதுகாப்புக் கருதி பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டியிருக்கும்.
நான் டில்லியில் இருந்த போது எனக்குச் சென்னையிலும் வங்கிக் கணக்கு இருந்தது. க்ராஸ் செய்த செக்கை அனுப்பினோமா, அது பணமாகி வந்தப் பிறகு இவர்கள் அனுப்பினார்களா என்றில்லாமல் மேலே கூறியத் தொந்திரவுகள் காரணமாக, நான் புத்தகம் இவர்களிடம் வாங்க வேண்டாம் என்றுத் தீர்மானம் செய்தேன்.
டோண்டு ராகவன்
By: Dondu
Post a Comment