படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, January 12, 2005

ரயிலை மறந்தோம்!

தமிழகத்தில் பிரயாணம் என்பது பேருந்தை மையமாகக் கொண்டே இருப்பது என்னளவில் கேள்விக்குரியது. கோவையிலிருந்து நாற்பது கி.மீக்குள் இருக்கும் பொள்ளாச்சியானாலும் சரி, சுமார் ஐந்நூறு கி.மீ தொலைவில் இருக்கும் சென்னையானாலும் சரி, பேருந்தில் சென்று நொந்து நூலாக யாரும் தயங்குவதில்லை. குளிரூட்டப்பட்ட சொகுசு வண்டியானாலும் சரி, குறிப்பிட்ட தொலைவிற்குமேல் பேருந்துப் பயணம் விரும்பத்தக்கதாகத் தோன்றவில்லை. பேருந்துகளிலேயே பெரும்பாலானோர் பயணிப்பது பின்வரும் காரணங்களினால் இருக்கலாம்:

பேருந்துக் கட்டணங்கள் குறைவு (ரயில் கட்டணங்களுடன் ஒப்பிடும்பொழுது).
நினைத்த நேரத்தில் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிச் சென்றுவிடுமளவில் அவை மலிந்துள்ளன.
செல்ல வேண்டிய இடங்கள் (கோவை போன்ற நகரங்களில்) பேருந்து நிலையங்களைச் சுற்றியே அமைந்துவிட்டன.
ரயில் இணைப்புகளின் போதாமை.
சரியான இணைப்புகள் இருப்பினும் எப்போதாவது ஒரு(அல்லது சில) முறை வரும் ரயில்கள்.
...
...

ரயில் நிர்வாகம் பயணிகளைத் தன்பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை விட்டுவிட்டு இருப்போர்களையும் இழந்து கொண்டிருக்கிறது (http://news.bbc.co.uk/1/hi/business/4152575.stm). இலாபமீட்டும் குறிக்கோளைக் கொண்டிருந்தார்களேயானால் சேவை, நேர்த்தித்திறன் முதலானவற்றில் முன்னேற்றம் தென்படும். இல்லையெனில் ஹைதரலி காலத்துச் சாமான்களையும் (அழுக்குப்படிந்த பெட்டிகள், ஐம்பதாண்டுகளுக்கு முன் வடிவமைத்த அதேபெட்டிகள், மோசமாகக் கையாளப்படும் ரயில்நிலையங்கள்...), முறைமைகளையும் வைத்துக் காலம் தள்ளிக் கொண்டிருக்கமாட்டார்கள். இங்கு குற்றம் சொல்வது என் நோக்கமல்ல; வளர மறுக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம்தான்.

அடிக்கடி ஒன்றை நினைத்துப்பார்ப்பேன். கோவை-மதுரைக்கிடையில் பரிதாபமான ஒற்றையடிப்பாதை போல ஒரு ரயில் பாதை செல்கிறது. இப்பாதையில் ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறையே ரயில்கள் செல்கின்றன என நினைக்கிறேன். இப்பாதையை மின்சார ரயில்கள் இயங்கும்வண்ணம் இருவழிப்பாதைகளாக மாற்றி, குறைந்தபட்சம் மணிக்கொரு முறையாவது ரயில்களை இயக்கினால் எவ்வளவு பேர் பயணடைவர்! உதாரணமாக, கோவை-பொள்ளாச்சிக்கு இடையில் மட்டும் கிட்டத்தட்ட தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நொடிக்கொருமுறை செல்லும் பேருந்துகளில் சென்று கொண்டுள்ளனர். இக்கூட்டத்தினர் கணிசமான அளவில் ரயில்களைப் பயன்படுத்தத் துவங்கினால் அச்சாலையில் பெருமளவிற்குப் போக்குவரத்துக் குறைவதுடன், எரிபொருளும் எவ்வளவோ மிச்சமாகும். ரயில்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துமாறு செய்தால் பயணச்செலவு தானாகக் குறையப்போகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற நிலையே இருக்கலாம். ம்...நாம் மட்டும் கனவு கண்டு என்ன பயன்?

-----------------

படம்:


சுவிஸில் உள்ள பிலாட்டுஸ் என்ற மலைமீது எடுத்த படம்.

இசை:

நான் வாங்கிய முதல் குறுந்தகட்டில் இருந்த பாடலென்று நினைக்கிறேன். பேத்தோவனின் [Ludwig van Beethoven (1770-1827)] Moonlight Sonata, 1st movement. அத்தகட்டில், பியானோ இசையுடன் பின்புலத்தில் வேறு சில வாத்தியங்களையும் இசைத்திருந்தனர். தூங்குமுன் கேட்டுப்பாருங்கள், இரவின் அமைதியைக் கூட்டும். mp3-ல் இப்பாடலுக்கான சுட்டி ஒன்று.

2 comments:

Kasi Arumugam said...

பொது வசதிகள் ஏற்கனவே நம் நாட்டில் குறைவு. உதாரணத்துக்கு, ஒரு மின் வாரியம் சரியாக பளுவை கையாளமுடியாததால், ஊரில் உள்ள எல்லாரும் ஸ்டபிலைசர் வைத்து ஓட்டுவோம். குப்பை கூளங்களை, சாக்கடையை ஒரு நகரமைப்பு புத்தியுடன் கையாளாததால், கொசுவர்த்திக்கு மாமூல் செலவுசெய்வோம். அதுபோலவே ரயில் போன்ற நேர்த்தித்திறன் கொண்ட வாகனத்தை குறைத்து புகையும் நெரிசலுமான தனிவாகனங்களை வளர்த்துவோம்.

ஹும்...

Chandravathanaa said...

இசையை ரசித்தேன். நன்றி