சுனாமியின் தாக்குதலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஐரோப்பாவின் பெருநகரங்கள் பலவற்றில் இன்று மதியம் 12.00 மணிக்கு மூன்று நிமிட மெளனம் அனுசரிக்கப்பட்டது. தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன; கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. விமான நிலையங்கள், பங்குச் சந்தைகள், பள்ளிகள், நகரின் முக்கிய வளாகங்கள் முதலான பொதுவிடங்களில் மக்கள் அப்படியே நின்று அஞ்சலி செலுத்தியதைச் செய்திகளிலும் காணமுடிந்தது. பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அம்மூன்று நிமிடங்களுக்கு ஒலியை நிறுத்தியிருந்தனவாம்.
நிறுவனங்கள் தங்களது இணைய அகத்தின் (intranet) வாயிலாக அழைப்பு விட்டிருக்கக்கூடும் (எங்களுக்கு அப்படித்தான் செய்திருந்தார்கள்).
ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகபட்ச உதவித்தொகையை (500 மில்லியன் யூரோக்கள்) ஜெர்மனி இன்று அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இன்று தேசிய நிதிச் சேகரிப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியப் பொது ஒலி(ளி)பரப்பு ஸ்தாபனத்தின் அங்கமான ஓர் அறக்கட்டளை மூலம் நிதி சேகரிக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் அனுப்பப்படுகிறது. நிதியை இலவசத் தொலைபேசி எண், ஒரு குறிப்பிட்ட அஞ்சல்வங்கிக் கணக்கு மற்றும் இணையத்தின் மூலமாகச் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இத்துடன், பிரதானத் தொ.கா அலைவரிசையொன்றில் 100 நிமிடங்களுக்கான நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்பி அதன் மூலமும் நிதியைச் சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் (கொஞ்ச நேரம் பார்த்ததில்), பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து (இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து) செய்தியாளர்கள் மூலம் நேரடி தகவல்களைப் பெறுதல்; பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்கள் அல்லது அவர்களைச் சார்ந்தோரைப் பற்றிய செய்திகள்; அரங்கத்தில் குழுமியுள்ள பல்வேறு நாட்டைச் சார்ந்த மக்களிடையே உரையாடுதல்; பாடல்/நடனம் போன்ற ஒன்றிரண்டு கலை நிகழ்ச்சிகள் (மூன்று பேர் அடங்கிய குழுவொன்று பரத நாட்டியம் ஆடினர்) போன்றவை இடம் பெற்றிருந்தன.
இதுவரை 50 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் (1 CHF = .857 USD) மேல் குவிந்துள்ளதாகத் தெரிகிறது (ஆன்-லைன் வழியாக மட்டும்). 100 மில்லியன்களைத் தாண்டக்கூடும்.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Wednesday, January 05, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Intranet என்பதை இணைய அகம் என்று சொல்லாமல் உள்ளிணையம் என்று சொல்லலாமா?
இந்த ஆன்லைன் 'பண உதவி வசதிகள்' உதவ நினைப்பவர் உடனே (மனம் மாறும் முன்னே, அல்லது கவனம் சிதறும் முன்னே) உதவ நினைப்பவர்கள் பங்களிக்க பெரும் உதவியாக இருக்கின்றன. இன்றைய தி ஹிந்துவின் தலையங்கம் கூட எப்படி இணையம் இம்மாதிரி சமயத்தில் வேகமாக, பரவலாக தகவல் பரப்பவும், உதவிகள் கிட்டவும் வழிசெய்துகொண்டிருக்கிறது என்று சொல்கிறது.
நேற்றைய NPR செய்தியில் ஐரோப்பாவிலேயே அதிகமானவரை சுனாமிக்கு இழந்தது சுவீடன் தான் (2000?) என்றும், அதிலும் ஐந்தில் ஒருவர் குழந்தைகள் என்ற செய்தி கேட்டேன். தவிரப் பெற்றோர்களை இழந்த சுவீடன் குழந்தைகளைப் பேணுவதற்கென்று முயற்சி செய்துவருவதாகவும் செய்தி.
மான்டீஸர்: Internet என்பதற்கு அகவலை என்று சொல்லலாமா என்று யோசித்துப் பார்த்தேன். பிறகு தமிழக அரசின் கலைச்சொல் பட்டியில் கண்டதையே எடுத்து உபயோகித்தேன். உள்ளிணையம் என்பதும் நன்றாகவே உள்ளது.
காசி: சரியாகச் சொன்னீர்கள். உதவி செய்ய எண்ணியும், கொஞ்சம் தாமதம் செய்தால் போதும் பல்வேறு சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு உதவி செய்வது குறைந்தோ அல்லது நின்றோவிடும்.
செல்வராஜ்: ஐரோப்பாவில் அதிகம் பேரை இழந்தது சுவீடன்தான். உறை குளிரிலிருந்து தப்பியிருக்கச் சென்றவர்கள் போலும். நிலைமையைக் கையாண்ட விதத்தில் அந்நாட்டு அரசாங்கத்தின் (பிரதமரின்) மீது விமர்சனங்கள் வந்ததாகவும் தெரிகிறது.
Post a Comment