வேல் வேல் வெற்றிவேல்!
வேல் வேல் வெற்றிவேல்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோ....கரா!
பழனியாண்டவனுக்கு அரோ....கரா!
அரகர அரகர அரோ....கரா!
இப்படியான சத்தங்களுக்கு வருடத்தின் ஒருசில மாதங்களில் எங்கள் ஊர்ப் பகுதியில் பஞ்சமே இருக்காது (எல்லாம் சில,பல வருடங்களுக்கு முந்தைய அனுபவம், இப்போது எப்படி என்று தெரியவில்லை). அதுவும் எங்கள் வீடு பிரதான சாலையைத் தொட்டபடியாதலால் இதிலிருந்து தப்பிக்கவே வழியில்லை. இருந்தாலும் கூட்டங்களைப் பார்ப்பதற்கும், ஒலிகளைக் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனியை நோக்கி நடந்தே செல்வர். மேற்கே கேரளா, பொள்ளாச்சி, கோவை பகுதிகளின் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஒருவர் இருவர் எனச் சன்னமாக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் சாலை முழுவதும் ஆக்கிரமித்துச் செல்லுமளவிற்குக் கூட்டமிருக்கும்.
வெறுங்கால்களுடன் குடும்பத்தோடு நடக்கும் இக்கூட்டங்களில் விவசாயிகள், உழைக்கும் மக்கள், நகர்ப்புறத்தார் என பலரைக் காணமுடியும். சிலர் மாலை போட்டிருப்பர் - அதற்கு அடையாளமாகப் பச்சை, கருப்பு, மஞ்சள் நிறமொன்றில் வேட்டி, சட்டை, துண்டும், உருத்திராட்சக் கொட்டை மாலைகளும் தெரியும்.
இந்த நடைப் பயணங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சில ஊர்களிலிருந்து வரும் கூட்டங்கள் இசைக்கும் இசையும், அதற்கான காவடி ஆட்டங்களும். எங்கள் வீட்டிற்கு எதிர்புறமுள்ள பஞ்சாலைக்கு முன்பாகப் புளியமர நிழலுடன் தாரால் வேயப்பட்ட பெரிய இடமொன்று உள்ளது. அந்தி சாயும் நேரத்திற்கே வரும் கூட்டங்கள் அப்படியே இரவுத் தங்கலுக்காக அங்கு இருந்துவிடுவார்கள். வந்து சேர்ந்தவுடன் வட்டமாக நின்று பெரும் இசையுடன் காவடியோடு ஆட்டம் போடுவார்களே, கேட்டுக் காண கண்கோடி வேண்டும்! (இதை எழுதும்போதே மனது குதூகலிக்கிறது).
காவடி என்றால் வெறும் கட்டைகளை நிறுத்தி அட்டைகளை ஒட்டியதல்ல. பழுப்பு நிறத்தில் (தேக்கோ?) பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய கனமான காவடிகள். அதில் மணிகள், மாலைகள், படங்கள், சந்தனம், பொட்டு என சகலத்தையும் காணலாம். காவடியின் இரண்டு பக்கங்களிலும் மயிற்தோகைகளைச் செருகி மேலும் வனப்பேற்றியிருப்பார்கள். (சின்னப் பையன்களான எங்களில் சிலரின் நோட்டுப் புத்தகத்தில் மறுநாள் சில மயில் தோகைகள் குட்டிபோட்டுக் கொண்டிருக்கும்). இக்காவடிகளை மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் தரையில் துண்டை விரித்துத்தான் வைப்பார்கள்.
அவ்வளவு கனமான காவடிகளைத் தூக்குவதென்பதே கஷ்டமான காரியமாக இருக்கும் போது அதைத் தோளிலும் கழுத்திலும் சுழற்றி ஆட்டம் போடுவதைப் பார்க்க மலைப்பாக இருக்கும். இசைக்கு மேளம், நாதஸ்வரங்களுடன், பெரிய குழல்போன்று ஒன்றையும் வைத்து ஊதுவார்கள் (அதன் பெயர் தெரியவில்லை). இசையே ஆட்டம்போட வைக்கும்.
பஞ்சாலையை ஒட்டியிருந்த (இப்போது எல்லாவற்றையும் தூக்கிவிட்டார்கள்) ஓடுவேயப்பட்ட தரைப்பகுதி முழுவதும் மக்களோ மக்கள்தான். விடிந்ததும் காலையில் எழுந்துவந்த பார்த்தால் சாலையோர வீட்டு வாசல்களின் முன்பு பந்தல்களில் பெருங்கூட்டங்கள் உறங்கிக் கொண்டிருக்கும். ஒரு சில கூட்டங்கள் இப்படி ஓய்வெடுக்க, அருகாமை ஊர்களிலிலிருந்து நடக்கத் தொடங்கியோர் விடிய விடிய சென்று கொண்டே இருப்பார்கள். அவர்களை ஒதுக்க வாகனங்கள் எழுப்பும் ஒலியோ சொல்லி மாளாது.
பக்தி முத்தியிருந்த காலத்திலும், ஓடுற பாம்பை கண்டு மேலும் ஓடின வயசிலும் எனக்கும் பழனிக்கு நடந்து செல்ல ஓரிரு வாய்ப்புகள் கிடைத்தன. காவடியெல்லாம் இல்லை, சும்மா போய்விட்டுவருவதே பெரிய விஷயம் இதுல காவடி வேறயா? :-)
முதல் தடவை வீட்டருகாமையில் இருந்த தையல்காரர் அழைத்துச் சென்றார். பழனிக்கு முன்பாக சுமார் பத்து கி.மீ தூரத்தில் மேற்கொண்டு நடக்கமுடியாமல் அவர் நின்றுவிட்டார். வேறு வழியின்றி அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டிப்பட்டதால் முதல் பயணம் தோல்வி(?)யில் முடிவடைந்தது. பிறிதொருமுறை பள்ளி நண்பர்கள் சிலருடன் வெற்றிகரமாக நடந்து சென்ற போது பழனி முருகனுக்கு எங்களைத் தரிசிக்கும் பாக்கியம் உண்டானது.
அம்முறை ஏதோ தேர்தல் சமயமாக இருந்ததால் வழியெங்கும் கட்சிக் கொடிகளும், வளைவுகளும் நிறையக் காணப்பட்டன. சில இடங்களில் குச்சிகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை அவிழ்த்துவிட்டுச் சென்றதைக் கட்சிக்காரர்கள் யாரேனும் பார்த்திருந்தால் பெண்டு நிமிர்த்தியிருப்பார்கள். நல்லவேளை, ராத்திரியாகப் போய்விட்டதால் அவர்கள் புண்ணியம் தேடிக் கொண்டார்கள்.
மும்பைக்கு அடுத்த படியாக, பழனி எப்போதும் என்னை முகம் சுழிக்க வைக்கும் இடம் - கூட்டமும், நாற்றமும் (மற்ற ஊர்கள் மட்டும் என்ன வாழுதுவென்கிறீர்களா? இருந்தாலும் அங்கு கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது, அதான் சொன்னேன்; பழனிக்காரர்கள் கோவித்துக்கொள்ளவேண்டாம்).
ம்...எல்லாத்தையும் இப்ப நினைச்சு மட்டும் பாத்துக்க வேண்டியதுதான்.
அப்புறம், அரோகரா-வென்றால் என்னவென்று சொல்பவர்களுக்கு பழனி சித்தன்ன விலாஸ் விபூதி பொட்டலமும், பஞ்சாமிருத டப்பா ஒன்றும் அனுப்பிவைக்கப்படமாட்டாது ;-)
[அறுபத்து மூவர் விழா-வில் வந்த காவடியின் தாக்கம் மேற்கண்ட பதிவு. பத்ரிக்கு நன்றி!]
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Wednesday, March 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//பெரிய குழல்போன்று ஒன்றையும் வைத்து ஊதுவார்கள் (அதன் பெயர் தெரியவில்லை).///
கொம்பு? துந்துபி?
காவடியாட்டமும் முருக வழிபாடும் மற்ற சமய (வைணவம், சைவ) வழிப்பாடுகளில் இருந்து வேறுபட்டது. முருகன் வழிபாடு தொன்றுதொட்டு பழங்குடிகள், மலையினர் இப்படி உழைக்கும், இயற்கையோடு அதிகம் ஒன்றியவர்களால் செய்யப்பட்டதால் அதில் டையோனீசியக் கூறுகள் அதிகம் காணப்படும். வலிமையான தாள வாத்தியங்கள், துந்துபி முழக்கங்கள், அரோகரா என்ற முழக்கங்கள், காவடி ஆட்டங்கள் (காவடியே மலைவாழ் மக்கள் பொருட்களை எடுத்துச்செல்லும் முறையில் வந்தது), வேல் குத்துதல், சாம்பலை உடலெங்கும் பூசிக்கொள்ளுதல் போன்ற உடலை முன்னிறுத்தி பரவச நிலையினை அடையும் அடையாளங்கள் அதில் இன்றும் காணப்படும். இது மற்ற வழிபாடுகளில் பெரும்பாலும் இராது. மேலும் இது தமிழ் மக்களின் பழைய (வெளியில் இருந்து வராத)வழிபாடுகளில் ஒன்று என்பதையும் புலப்படுத்தும்.
நினைவுகூர்ந்ததற்கு நன்றி!
//மும்பைக்கு அடுத்த படியாக, பழனி எப்போதும் என்னை முகம் சுழிக்க வைக்கும் இடம் - கூட்டமும், நாற்றமும்//
எனக்கும் அப்படித்தான் தோன்றும். பழனியையும், திருப்பதி திருமலையையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வேன். திருப்பதி திருமலை இதை விட அதிக மக்கள் கூடுமிடம், ஆனால் அது பழனியொடு ஒப்பிடும்போது எவ்வளவு தூய்மையாக இருக்கிறது..
தங்கமணி, சுதர்சன் இருவருக்கும் நன்றி! அட ஆமாங்க, கொம்புதான் அது; இப்பத்தான் நினைவுக்கு வருது. அப்புறம், டையோனீசியக் கூறுகள் என்றால் என்னவென்று விளக்கவும்.
கிரேக்க புராணத்தின் படி டயோனிசஸும், அப்போல்லோவும் இரண்டு கடவுட்தன்மை பெற்றவர்கள். முன்னவர் வன்கலைகள் (ஆட்டம், வலிய இசை...), பின்னவர் மென்கலைகளுக்கு (ஓவியம், மெல்லிசை, கவிதை..) பொறுப்பு. முன்னவர் உடல் சார்ந்தவர், பின்னவர் மனம் சார்ந்தவர் எனக்கொள்ளலாம். ஒரு மாதிரி சூழ்ச்சியின் மூலம் முன்னவரை பின்னவர் வெற்றிகொள்வார். அதாவது மனம் உடலை வெற்றிகொள்வது.. பழங்குடிகளின் இசை, வழிபாடு, கலை இவைகளில் டயோனிசக்கூறுகள் இருக்கும். இவைகள் ஒருவிதத்தில் எளிதில் மனிதனை சிறுமைகளில் இருந்தெல்லாம் விடுவிக்கும்.. நீயேட்ஷேயின் துன்பியலின் பிறப்பு (Birth of Tragedy)இதனடிப்படையில் பிறந்த அருமையான படைப்பு.
நன்றி.
ராதாகிருஷ்ணன், ஊரில் இருக்கும் போது வருடம் ஒருமுறை பழனிக்குச் சென்ற அனுபவம் உண்டு. நடந்தெல்லாம் சென்றதில்லை. ஆனால், பூர்வீகக் கிராமத்தில் இருந்து வரும் ஒரு கூட்டத்துடன், காலையில் அடிவாரத்தைச் சுற்றி இசையோடும் தீர்த்தங்களோடும் நடந்து சென்று மலையேறியதுண்டு. சித்தனாதன் கடையை எல்லாம் விடுங்க. இந்தக் கூட்டத்தினர் ஒரு மடத்தில் தங்கித் தாங்களாகவே ஒரு பெரிய தொட்டியில் மொத்தமாய்ப் பஞ்சாமிருதம் பிசைவார்கள். ரெண்டாள் உள்ளே இறங்கிக் காலால் மிதித்துப் பிசைந்தாலும் (சுத்தமாய்த் தான் இருக்கும்:-) ) அதன் சுவைக்கு அருகே ஒன்றும் வர முடியாது.
விளக்கத்திற்கு நன்றி தங்கமணி!
செல்வராஜ், நம்மூர்ல மிதிச்சாங்கன்னா பஞ்சாமிருதம், இந்த ஊர்ல மிதிச்சாங்கன்னா பழரசம் (அதாங்க ஒயினு) ;-) நன்றி!
அட என்ன இந்த வாரம் ஒரே மலரும் நினைவுகள் வாரமாயிட்டுது. நீங்க சொல்வதெல்லாம் தினமும் பார்ப்பேன். அவர்களுடே 2கிமி கூட நடந்துபோய்த்தான் எங்க பாலிடெக்னிக்குக்குப் போவோம்.
அவர்கள் நடந்துபோன அதே மண்தடத்தில் சந்தை நாட்களில் எதிர்த்திசையில் கேரளாவுக்கு அடிமாடுகள் நடத்திச் செல்லப்படும் சோகத்தையும் பார்த்திருக்கிறேன்.
ஆமாங்க காசி, அவ்வாறு ஓட்டிச் செல்லப்பட்டது போய் பிற்காலங்களில் சரக்குவண்டிகளில் அடைத்துச் செல்லப்பட்டன(படுகின்றன?). பார்க்கக் கொடுமையாக இருக்கும்.
Post a Comment