படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, March 28, 2005

இறைந்து கிடக்கும் செல்வம்

ஏதோ ஒரு தகவலுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருக்க, பின்வரும் தகவல் கண்ணில்பட்டது:

தோரணை என்ற வார்த்தையும், style என்ற வார்த்தையும் தனித்தனியே பழக்கமானவையே ஆயினும் அவற்றை ஒன்றுசேர்த்துப் பார்க்கத் தோன்றியதில்லை, இக்குறிப்பை வாசிக்கும் வரை.

//style sheet என்பதை அலங்காரக் குறிப்பு என்று சொல்லுவதைக் காட்டிலும் தோரணைத் தாள் என்று சொல்லுவது சிறப்பாக இருக்கும். style என்பது இரண்டு வகைப் பயன்பாட்டில் இருக்கிறது. ஒன்று நடையுடை பாவனையை ஒட்டியது. இன்னொன்று ஒரு படிவம் எழுதுவதற்கான மாதிரி.

style comes via Old French stile from Latin stilus, which denoted a 'pointed writing istrument'. It came to be used metephorically for 'something written,' and hence for 'manner of writing'. The spelling with y instead of i arose from the misapprehension that the word was of Greek origin. It also invaded stylus, which was acquired directly from Latin.

கூர்மை என்ற பொருள் துளைப்பதின் தொடர்ச்சி. துள்>தூர் என்று விரியும். தூர்தலைச் செய்யும் கருவி தூரிகை. தூரிகை என்பதுதான் stylus கருவியைக் குறிக்கும் தமிழ்ச் சொல். (தூரிகை>தூலிகை என்ற திரிவை, இந்தையிரோப்பியச் சொற்கள் பலவற்றில் வரும் முதல் எழுத்தான சகரவொலியை ஒதுக்குவதோடு, எண்ணிப் பார்த்தால், stylus என்ற சொல்லுக்கு உள்ள தொடர்பு புலப்படும். தூரிகையின் உதவியோடு செய்வது தோரணை என்னும் அலங்காரம், அழகு படுத்தல், ஒப்பனை செய்தல். தோரணை வரைந்த துணி தோரணம்; தோரணை வரைந்த கட்டுமானம் கூடத் தோரணம் என்று தெலுங்கில் வழங்கும்.

அதோ, அவன் தோரணையாகப் போகிறான் என்றால் style - ஆகப் போகிறான் என்று பொருள். நீங்கள் எழுதும் தோரணை இப்படி இருக்கலாம் என்னும் பொழுது இந்த style-ல் எழுதலாம் என்று பொருள்.

அன்புடன்,
இராம.கி.//

மூலம்: http://kasi.thamizmanam.com/?item=167&catid=3

இராம.கி. அவர்களின் இவ்வாறான எழுத்துகள் தமிழ்-உலகம் மடற்குழு (கொஞ்ச காலமாக), அவரது வலைப்பதிவு, மற்றும் அவர் அளிக்கும் மறுமொழிகளின் வாயிலாக மட்டுமே தெரியும். அவையல்லாது அவர் வேறு இடங்களிலும் எழுதியிருக்கக்கூடும். எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ஆய்வுப்பூர்வமாகச் சிந்தித்து ஒருவர் எழுதும் எழுத்துகள் சிதறிவிடாமல் ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்டால் அச்சிந்தனைகள் வீண்போகாது. அவ்வாறான எழுத்துகள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1 comment:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இராதாகிருஷ்ணன், நீங்கள் எழுதியிருப்பதையே நான் பலகாலமாய் எண்ணி வந்திருக்கிறேன். இராம.கி போன்றவர்களின் கருத்துச்செறிவுடைய இந்த மொழியாக்கங்களை ஒரு விக்கி கொண்டோ, வேறு ஒன்றின் மூலமோ தொகுக்கவேண்டும் என்று எண்ணம் இருந்தது. இருக்கிறது. சரியாக நேரம் அமையாமல் அதைப் பற்றிப் பெரிதும் செயல்படுத்த முடியவில்லை. இத்தனைக்கும் தமிழ் உலகம் போன்ற குழுக்களில் நான் அதிகம் படித்ததில்லை. கடந்த ஓராண்டாய்ச் சில இடங்களில் அவருடைய எழுத்துக்களைப் பார்த்து வருகிறேன். படிக்க மிகவும் ஆர்வமாகவும் நிறைவாகவும் இருக்கிறது. அவரும் ஒரு வேதிப் பொறியியலாளர் என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு ஈர்ப்பு. வேதிப் பொறியியற் கட்டுரைகள் எழுத முற்பட்டால் அவரை அணுகிச் சில சொல்லாக்கங்கள் கேட்கலாம் என்றும் கூட எண்ணியிருக்கிறேன்.