படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, March 22, 2004

ஷேக் யாசின் படுகொலை

பாலஸ்தீனத்தில் இன்று ஒரு படுகொலை நடந்துள்ளது. ஹமாஸ் என்ற அமைப்பை நிறுவியவரும், மதத் தலைவருமான ஷேக் யாசின் (67) காஸாவில் இஸ்ரேலியர்களின் ஹெலிகாப்டர் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். யாசர் அராஃபாத்திற்கு அடுத்த படியாக பாலஸ்தீனர்களிடையே பிரபலமடைந்தவர் இவர் உடலால் ஊனமுற்றவரும்கூட. சென்ற ஆண்டில் ஒருமுறை நடந்த தாக்குதலில் தப்பியவர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தேர்ந்தெடுத்த பாதை வன்முறை - பெரும்பாலான தற்கொலைத் தாக்குதல்களுக்கு இது பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலியர்களின் மீதான தாக்குதல்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் யாசின் தூண்டுகோலாக இருப்பதால், அவரை முடித்துவிட்டனர். இப்படுகொலை நடந்த காலகட்டம் மிக முக்கியமானது. ஷரோன் (இஸ்ரேலியப் பிரதமர்), காஸா பகுதியிலுள்ள சில ஆக்கிரமிப்புகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார். "இஸ்ரேல் இங்கிருந்து கொஞ்சம் விலகிக் கொள்ள பாலஸ்தீனர்கள் கொடுக்க வேண்டிய விலை தான் இன்றைய படுகொலையோ" என்று ஒரு பத்திரிக்கையில் விமர்சித்துள்ளனர்.

எது எப்படியிருப்பினும் இப்படுகொலை மேலும் வன்முறையையே ஊக்குவிக்கப்போகிறது. வரும் நாட்களை நினைத்துப் பார்க்க அச்சமாயுள்ளது.

ஐநா, ஐரோப்பியக் கூட்டமைப்பு, ரஷ்யா ஆகியவை இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன. 'இஸ்ரேலுக்கு தனது நாட்டைக் காத்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளது' - இது அமெரிக்கா. ஏனெனில் "நாளை பின்-லாடனை இப்படி தீர்த்துக் கட்ட வேண்டியிருப்பதால், இன்று ஷரோனைக் கண்டிப்பது முரணாக இருக்காதா பின்னே!".

எல்லா இடங்களிலும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று சொல்லிக்கொண்டு ஆள்வோர் எதிரிகளைத் தீர்த்துக்கொண்டுள்ளனர். படைபலமும், அதிகாரமும் இருந்தால் போதும் இதற்கு. என்றுதான் விடிவுகாலமோ! :(

No comments: