படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, March 12, 2004

மாட்ரிட் ரயில் குண்டுவெடிப்புகள்

மாட்ரிட் நகர ரயில்களில் நேற்று காலை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் கிட்டத்தட்ட இருநூறு பேர் பலியாகியுள்ளனர், இன்னும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. காயம்பட்டோர் ஆயிரக்கணக்கில்! என்ன பாவம் செய்தார்கள் அப்பாவிப் பொதுமக்கள்? தங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்குமென்று கனவில்கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அவரவர்பாட்டுக்கு காலையில் தங்கள் அலுவல்களுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் ரத்தமும் சதையுமாக ஓடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எத்தனையோ குடும்பங்கள் துயரத்தில் தத்தளித்துக்கொண்டுள்ளன.

ஸ்பெயின் நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில் (குறிப்பாக சுற்றுலா மற்றும் விமான நிறுவனங்களின் பங்குகள்) சரிவு (இன்று ஓரளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாம்!). இன்றைக்கு ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் இப்பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்து மாபெரும் பேரணிகள் நடந்து கொண்டுள்ளன (தொ.காவில் அவ்வப்பொழுது சிலநிமிடங்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றனர்).

இப்பாதகச் செயலைச் செய்தது யார்? அங்குள்ள மக்கள், அரசியல்வாதிகளால் உடனடியாகச் சுட்டப்படுவது ETA எனப்படும் உள்நாட்டுப் பிரிவினைவாத அமைப்பாகும். அதன் வரலாறு இரத்தக் கரைகளால் நிரம்பியது. இவ்வமைப்போ தாங்கள் செய்யவில்லையென்று மறுத்துள்ளது. ஆனாலும் அந்நாட்டு அரசு இவ்வமைப்பை பலமாகவே சந்தேகிக்கிறது. இத்தாக்குதல்களை உலகலாவிய பயங்கரவாத அமைப்பான அல்-கயிதா நடத்தியிருக்கக்கூடுமென்ற கருத்தும் நிலவுகிறது. விரைவில் உண்மை தெரியவருமென்று நம்புகிறேன்.

இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று என்ன சாதிக்கப்போகின்றன இவ்வமைப்புகள்? எந்தக் காரணத்தைக் கூறியும் இதை நியாயப்படுத்தவே முடியாது. இவ்வலைப்பதிவு பலியானவர்களின் அஞ்சலிக்காக கனத்த மனதுடன் வைக்கப்படும் ஒரு சிறு மலர்க்கொத்து.

No comments: