படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, March 10, 2004

யாழ்



தமிழறிந்த அனைவருக்கும் பரிச்சயப்பட்ட வார்த்தையிது. யாழ் என்ற ஓர் இசைக்கருவி தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு காலத்தில் கோலோச்சியிருக்க வேண்டும். இல்லையெனில் பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ் ....(என்று 7 அல்லது 8ம் வகுப்பில் உருப்போட்டதாக ஞாபகம், மற்றவை மறந்துவிட்டது) என்று பலவகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. யாழர்கள், யாழினிகள் என்று ஒரு கூட்டமும் இருந்திருக்கலாம்.

தமிழ் கூறும் நல்லுலகில் இருந்த இந்த யாழ் எப்படி வழக்கொழிந்து போனது?
இது அயலிலிருந்து இறக்குமதியான கருவியா இல்லை தமிழர்களே உருவாக்கிய ஒன்றா?
ஆங்கிலத்தில் Harp எனப்படும் கருவிக்கும் யாழுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? [இந்த Harp, உலகின் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருக்கும் கருவியாம். (உபயம்:கூகிள் தேடியந்திரம்)]

விபுலானந்த அடிகள் என்பவர் கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் உழைத்து 1947-ல் யாழ் நூல் என்ற புத்தகத்தை வெளியிட்டதாக இந்த இணையப்பக்கம் தெரிவிக்கிறது. ஒருவேளை மேற்கண்ட கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கலாம். இப்புத்தகம் ஏதாவது நூலகத்தில் தூசியைத் தாங்கிக் கொண்டிருக்கும். தற்போது விற்பனையில் எங்காவது உள்ளதா என்று பார்க்கவேண்டும்.

பாரதிதாசன் காலத்தில் இக்கருவி இருந்திருக்கிறதா? "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா?" என்று அவ்விசையைக் கேட்காமல் எப்படி எழுதியிருப்பார்? (வீணையே யாழின் ஒருவடிவம் என்கிறார்கள், ஒருவேளை அதைச் சொல்லியிருப்பரோ?)

No comments: