படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, March 01, 2006

வரப் போகிறது அகல ரயில் பாதை!

சென்ற வெள்ளிக்கிழமையன்று (24.02.2006) நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட 'ரயில்வே பட்ஜெட்'டில் உள்ள நல்ல செய்திகளுள் ஒன்று கோவை-பொள்ளாச்சி, பாலக்காடு-பொள்ளாச்சி-திண்டுக்கல் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்படுவதற்காகப் பணம் ஒதுக்கப்பட்டிருப்பது. முழுமையாகப் பணம் ஒதுக்கப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொஞ்சம் மகிழ்ச்சியடைவேன். நிறைய மகிழ்ச்சியடைய, இன்னும் ரயில்வே எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட (அப்படித்தான் சிறுவயதில் சொல்லக் கேட்டுள்ளேன்) இப்பாதையில் ஒரு நாளைக்கு சில வண்டிகளே சென்று கொண்டிருக்கும். ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் (எனக்குத் தெரிந்த கோவை வட்டாரத்தில்), மக்களுக்கு ரயில் நிலையம் 'தொலைவில்' என்றாகிவிட்டது. மக்களும் ரயில்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. ரயில் நிலைய ஊழியரும், வண்டி ஓட்டியும் பிரம்பு வளையம் ஒன்றைப் பரிமாறிக் கொண்டு நிறுத்திச் சென்ற வண்டிகளும், நிற்காமலேயே போகின்றன. அவ்வளவுதான், சென்றதினி மீளுமா தெரியவில்லை.

நிற்க. என்னைக் கேட்டால் ரயில்வே நிர்வாகமெல்லாம் இன்னும் பிழைக்கத்தெரியாத அல்லது வருமானத்தில் மேலும் அக்கறை செலுத்தாததாக இருக்கும் நிர்வாகம் என்றுதான் சொல்வேன். உதாரணத்திற்கு, கோவை-பொள்ளாச்சிக்கு இடையே ஒரு நாளைக்கு சென்று வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும், அவற்றில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமானது. பல நேரங்களில் யோசிப்பேன், இவ்வூர்களுக்கிடையில் மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்குமென்று! ரயில்வேக்கும் நல்ல வருமானம், மக்களுக்கும் செளகரியம், பேருந்துப் புகைகளால் ஏற்படும் சூழமைச் சீர்கேடு கொஞ்சமாவது குறையும், இத்யாதி.

இன்றிருக்கும் பொருளாதார நிலையில் பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நல்ல முனைப்போடு தொலைநோக்குள்ள நிர்வாகமும், சிறந்த திட்டமிடலும், அதனைச் செயற்படுத்துதலும்தான். இப்போதைக்குக் கனவு காண்போம்!

4 comments:

தயா said...

என்னங்க இப்படி சொல்லீட்டீங்க, லாலுவின் நிர்வாகத்தில் 2001-ல் 350 கோடியாக இருந்த கையிருப்பு இன்றைக்கு 11000 ஆகியிருக்கிறதாம்.

ரயில்வே இன்னும் நிறையவே சாதிக்கலாம்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஸ்விஸ் ரயில்களைப் பார்த்து ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டீங்க! :-)

உங்களை மாதிரியே நானும் ஈரோட்டைச் சுற்றி இருக்கும் சிறு சிறு வணிக மையங்களை இணைக்கும்படியான மின்ரயில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்ததுண்டு. ஈரோட்டை மையமாக வைத்துச் சென்னிமலை, பெருந்துறை, கோபி, பவானி, அந்தியூர், மேட்டூர், நாமக்கல், திருச்செங்கோடு...

Pavals said...

கூடிய விரைவில் நடக்கும்னு எதிர் பார்த்து காத்திட்டிருக்கறது தவிற வேற ஒன்னும் செய்ய முடியலைங்க..

//கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன.// நல்ல வேளையா சில ஸ்டேஷன்கள் இன்னும் இடிக்காமாயாவது வச்சிருக்காங்க..

இராதாகிருஷ்ணன் said...

தயா, நிறையவே பணம் வச்சிருக்காங்க. பிரயோசனமா பண்ணுனாங்கன்னா சந்தோஷம்! நன்றி!

ஆமாங்க செல்வராஜ், முதல்ல கொஞ்சம் கெட்டிருந்தேன். இந்த ஊர் வண்டிகளப் பார்த்து அதிகமாயிருச்சு :-) ரயிலுக்கு பதிலாத்தான் எல்லாத்தையும் பேருந்தால இணைச்சுட்டாங்களே, அதுவே போதும்பாங்க!

ராசா,குறைஞ்சது 2-3 வருஷம் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். அகலப்பாதையா ஆக்கும்போதே மின்மயமும் செய்யலாம். ஆனா பண்ணமாட்டாங்க, அதுக்குன்னு பல வருஷம் இருந்து, வேற ஒரு பட்ஜெட்டைப் போட்டு....