படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, March 02, 2006

கண்காட்சிகள், வாசகர்கள், புத்தகங்கள்

சென்ற ஜனவரியில் கோவை நஞ்சப்பா சாலையில் இருக்கும் சிறைச்சாலை மைதானத்தில் 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' (நிசெபுஹ) புத்தகக் கண்காட்சியொன்றைப் போட்டிருந்தார்கள். 10% விலைக்கழிவு என்று பெரிதாக வெளியில் எழுதிப் போட்டிருந்தார்கள். உள்ளேதான் கூட்டத்தைக் காணோம்! பணியாளர்கள் இருவரைத் தவிர வாசகர்கள் ஒன்றிரண்டுபேர்தான் தென்பட்டனர்.

நிசெபுஹ என்றாலே முன்பெல்லாம் பெரும்பாலும் கம்யூனிச புத்தகங்கள், அக்கால ரஷ்ய மொழியாக்கங்கள், அவர்களது பதிப்பகப் புத்தகங்கள், 'நேஷனல் புக் டிரஸ்ட்' புத்தகங்கள் என்றிருக்கும். ஒரு காலத்தில் பேருந்து ஒன்றை நடமாடும் புத்தகக் கடையாக மாற்றி ஊர் ஊராகச் சென்று புத்தகங்களை விற்றனர்; இன்றும் உள்ளதா என்று தெரியவில்லை. பொள்ளாச்சிக்கு அப்படியொருமுறை வந்தபோது சில புத்தகங்களை வாங்கிய நினைவுள்ளது. அப்பேருந்துப் புத்தகக் கடை மிகவும் பிடித்திருந்தது.

தற்சமயம் வழக்கமான புத்தகங்களோடு, பிற பதிப்பக வெளியீடுகளும் நிறைய காணப்பட்டது. கண்காட்சியில் வாங்கியதைவிட நேரு விளையாட்டரங்கத்திலிருக்கும் அவர்களது கடையில்தான் அதிகப் புத்தகங்களை வாங்கினேன். அனைத்தும் ஊரிலேயே உறங்கிக் கொண்டுள்ளது :(

அக்கடைக்கு இரண்டுமுறை சென்றபோதும் மருந்துக்கும் புத்தகம் வாங்குவாரில்லை. இப்படி விற்பனை செய்து எப்படி வியாபாரத்தை நடத்துகிறார்களோ! வாங்க நினைத்த இரண்டு புத்தகங்கள் அங்கிருந்தும் அவற்றின் நிலையைக் கண்டு வாங்க மனம் ஒப்பவில்லை. ஒன்று-'வளம் தரும் மரங்கள்' என்னும் தொகுதி (இராம.கி. அவர்கள் பதிவின் மூலமாக அறிந்து கொண்டது). இத்தொகுதியைப் பல்லாண்டுகளுக்கு முன்பு நிசெபுஹ பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்புகள் வருவதே இல்லை என்று கடையை நிர்வகிப்பவர் சொன்னார். அங்கிருந்த அப்புத்தகங்கள் செல்லரிக்கப்பட்டு, கிழிந்து, பழுப்பேறிக் கிடந்தன. பழையவற்றிற்குத்தான் அக்கதியென்றால் 'நரிக்குறவர்களின் இனவரைவியல்'-க்கு (வெங்கட் பதிவின் மூலம் அறிந்தது) என்ன? இருந்த ஒரே ஒரு புதிய புத்தகமும் அங்கங்கு அழுக்காகிக் கிடந்தது. எப்படி வாங்குவது? கடைசி வரை அப்புத்தகம் கிடைக்கவேயில்லை :(

புதிய புத்தகங்கள் எவ்வாறு அழுக்காகின்றன?
ஒன்று பதிப்பாளர்களிடமிருந்து வரும் கட்டுகளிலேயே கதை ஆரம்பித்திருக்கலாம்.
அப்புறம் வந்த புத்தகங்களைக் கடைக்காரர்கள் பிரித்து வைக்கும்போது.
வைக்கப்படும் இடத்தின் 'அழகால்'.
அங்கு வைக்கப்படும், கையாளப்படும் முறையால்.
வாசகர்கள் தொடும்போதும், புரட்டும்போதும் அவர்களது கைகளிலிருந்து படிவதால்(இரண்டு சக்கர வாகனங்களில் கடைக்கு வருபவர்கள் - அதன் கைப்பிடியில் எவ்வளவு அழுக்கிருக்கும் என்பது கழுவும்போதுதான் தெரியும்! - அப்படியே புத்தங்களைத் தொடும்போது உயவு நெய் கூட புத்தகத்தில் படுகிறது).
....
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரரிடம் கேட்டேன், "ஏங்க இதுக்கெல்லாம் ஒரு பாலித்தீன் உறை மாதிரி ஏதாவது போட்டு வைக்கலாமல்ல? இல்லை, பதிப்பகத்துக் காரங்ககிட்டையாவது சொல்லலாமே?". "எங்களுக்கு வரும் போதே அப்படித்தாங்க வருது" என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.

புத்தகங்களையெல்லாம் நன்றாக உறையிட்டு அழுக்குப்படாமல் வைக்கலாம் என்ற அக்கறை பெரும்பாலானோருக்கு இல்லை. கடைக்காரர்களைவிட பதிப்பாளர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய காரியம் இது. இப்போதெல்லாம் உலகத்தரத்தில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அவற்றை ஒரு பாலித்தீன் உறையில் இறுகக் கட்டி கடைகளுக்குக் கொடுத்தால் புத்தகங்கள் நன்றாக இருக்குமே. ஒவ்வாரு புத்தகக் கடைக்கும் 'புரட்டும் பிரதி' என்று ஒன்றை இலவசமாகக் கொடுக்கலாம். கட்டப்பட்ட புத்தகங்களுடன் இப்பிரதியும் இருந்தால், மற்ற புத்தகங்கள் நொந்து நூலாகும் நிலை தவிர்க்கப்படும்.

அப்புறம், விஜயா பதிப்பகத்திற்குச் சொந்தமான கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். இங்கும் கூட்டம் சொற்பமே! (சற்று தொலைவிலிருக்கும் துணிக்கடைகளுக்குள் எப்போதும் மூச்சு விடமுடியாத கூட்டம்!!) வாசகர்களின் வசதிக்காக தள வசதிகள் செய்து கொண்டிருந்ததை உரிமையாளர் கூட்டிச் சென்று காண்பித்தார். இவ்வேலைகள் முடிந்துவிட்டால் நிறைய செலவு செய்து வெளியில் கண்காட்சி நடத்த வேண்டியிருக்காது என்று அவர் சொல்லக் கேட்டதாக நினைவு!! கணினி மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பட்டைக் கோடு, வருடி (scanner) போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பக்கம் வந்து பணிசெய்யும் பெண்களிடம் ஒரு புத்தகத்தைக் கேட்க பல நிமிடங்கள் தேடி எடுத்துக் கொண்டுவந்துதான் கொடுத்தார்கள். அடுத்தமுறை இந்நிலை மாறியிருக்கலாம்.

3 comments:

Badri Seshadri said...

பாலிதீன் உரையில் இறுகக் கட்டினால் பல வாசகர்களுக்குப் பிடிப்பதில்லை. இதற்கென புரட்டிப் பார்க்கும் பிரதி என்றெல்லாம் தனியாக யாரும் வழங்க மாட்டார்கள். ஆனால் இறுகக் கட்டாமல் மெலிய, திறந்து பார்க்கக்கூடிய பிளாஸ்டிக் உறைக்குள் போட்டு வைக்கலாம். புத்தகம் வாங்கக் கூட்டம் வருவதில்லை; துணிக்கடையில் கூட்டம் என்று நாம் வருத்தப்படக் கூடாது. துணியைப் போல புத்தகங்களையும் அத்தியாவசியப் பொருளாக மக்கள் உணருமாறு செய்யவேண்டியது பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வேலை.

Boston Bala said...

---அவர்களது கடையில்தான் அதிகப் புத்தகங்களை வாங்கினேன்---

என்னவெல்லாம் வாங்கினீங்க?

இராதாகிருஷ்ணன் said...

பத்ரி: ஆச்சரியமாக உள்ளது. அவ்வாறு கட்டினால் நல்லதுதானே, பிடிக்காமல் போவதன் காரணத்தை அறிவீர்களா? கண்ணதாசன் பதிப்பக வெளியீடுகள் சிலவற்றை இம்முறையில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

வேறு:கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு (அள்ள அள்ளப் பணம்) ஒன்றைக் குறித்து. ஒரு பக்கத்தில் வாசிக்கும் போது அதன் பின்பக்கத்தின் எழுத்துகள் நிழலாகத் தெரிகின்றன. காகிதத்தின் தரமாக இருக்கலாம். மேம்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

பாலா: முக்கியமானவை மட்டும் (எந்த ஒரு வரிசையிலும் இல்லை)

தமிழ் நடைக் கையேடு(அடையாளம் வெளியீடு)
தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து (காவ்யா)
விடுகதை இலக்கியம் (காவ்யா)
ஒரு சிட்டுக் குருவியின் வீழ்ச்சி (நேஷனல் புக் டிரஸ்ட் - பறவையியல் அறிஞர் சலீம் அலியின் சுயசரிதை, தமிழில்)
நமது நீர்வளம் (நே.பு.டி)
வல்லிக் கண்ணன் கட்டுரைகள் (மித்ர)
சினிமாவும் நானும் (மித்ர)
சுட்டாச்சு சுட்டாச்சு (கிழக்கு)
அள்ள அள்ளப் பணம் (கிழக்கு)

விஜயாவில்...(நினைவில் இருப்பவை)

விடுதலையின் நிறம் (விடியல் பதிப்பகம்)
அது அந்தக் காலம் (காலச்சுவடு)
தூக்கு மரத்தின் நிழலில்
அலீஸின் அற்புத உலகம் (கனவுப்பட்டறை)