படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, February 27, 2006

பறவையின் மரணம்

தேசாந்திரி என்னும் தொடரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். சென்ற இரண்டு வாரங்கள் வாசித்தேன். இவர் நிறையப் பயணம் செய்துள்ளார் போலுள்ளது. அதன்மூலம் கிடைத்த பல்வேறு அனுபங்களை எழுத்தில் பகிர்ந்து கொள்கிறார். இவர் எழுதும் விதமோ என்னவோ, வாசிக்க நன்றாக உள்ளது.

முன்பொருமுறை எப்போதோ வாசித்த கட்டுரையில் மதுரை அருகே ஒரு மலைக்குகைகளில் கண்ட சமணப் படுக்கைகள் பற்றி எழுதியிருந்தார். ஒரு வேரின் சாறு, கல்லைப் பொடியாக்கச் செய்யும் விந்தையைப் பற்றி சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாரம் பறவைகளைப் பற்றிய தனது அனுபங்கள் சிலவற்றைச் சொல்கிறார். அதில் குக்குறுவான் ஒன்று. "குக்குறுவான் மிக அழகான பறவை. குருவி போன்று இருக்கும். மேல் பாகம் பச்சையாகவும், அடியில் இளமஞ்சளும், கால்கள் லேசான சிவப்பு நிறத்திலும் இருக்கும். இடைவிடாமல் கூவும் இப்பறவை தலையை உதறி அசைப்பதைப் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும்"-என்கிறார்.

குக்குறுவானில் உள்ள மூன்று வகைகளைப் (இன்னும் கூட இருக்கலாம்) பற்றி 'தமிழ்நாட்டுப் பறவைகள்' என்ற புத்தகத்தில் காணலாம். காட்டுப் பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet, Megalaima zeylanica), சின்னக் குக்குறுவான் (White-Checked Barbet, Megalaima viridis) மற்றும் செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith Barbet, Megalaima haemacephala). மேற்குறிப்பிட்டதில் கடைசியில் வரும் குக்குறுவானைப் பற்றித்தான் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். இப்பறவையை நேரில் கண்டதாக நினைவில்லை. நாம் காணும் பறவைகள், தாவரங்களின் பெயர்கள் எல்லாவற்றையும் அறிந்தா வைத்திருக்கிறோம்! ஏதோ ஒரு பறவை, செடி என்று பொதுமைப்படுத்திவிட்டுச் சென்றுவிடுகிறோம்.

நான் பணிபுரியும் அலுவலகம் பெரிய கோபுரத்தையுடைய(tower) கட்டிடத்தில் உள்ளது. அதன் பக்கச் சுவர்களின் பெரும்பாலான பகுதியைக் கண்ணாடிகளே ஆக்கிரமித்திருக்கும். சென்ற வருட இறுதியில் ஒருநாள் காலையில் தொப்பென்று ஏதோ கீழே விழுந்ததைப் போலிருந்தது. கண்ணாடி வழியாக வெளியே பார்க்கையில் அது ஒரு சிறு பறவை (பெயர் தெரியவேண்டுமே!). வேகமாகப் பறந்து வந்து கண்ணாடியில் மோதிக் கீழே விழுந்திருக்க வேண்டும். கண்ணாடி ஜன்னலைத் திறக்கமுடியாத அமைப்பு வேறு. பரிதாபமாகக் கிடந்த அப்பறவையைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. உயிர் இருந்தது; உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். காலோ வேறொரு திசையில் மடங்கியிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தது. பிறகு சிறிது நகர்ந்த மாதிரி தெரிந்தது. சற்று நேரம் கழித்துப் பார்க்கையில் அது இருந்த சுவடு மட்டும் தான் தெரிந்தது. ஒருவேளை நிலைதிரும்பி எழுந்து பறந்திருக்கலாம்.

பறவையின் இயற்கையான மரணத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்! எங்கேயோ போய் எப்படியோ சாகிறது.

6 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

குக்குறுவான் - இந்தப் பறவையைப்பார்த்த நினைவில்லை. ஆனால் கேட்ட நினைவிருக்கிறது. 'குக் குக்' என்று கத்தும் ஒரு பறவை. எங்களூர்ப்பக்கம் 'குட்டூர், குட்டூர்' என்று ஒரு பறவை சத்தம் போடும். பெயர் தெரியாது. இடைவிடாது சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும்.

இலங்கை தபால் முத்திரைகளில் நிறைய முத்திரைகளில் பறவைகள் இருக்கும். இந்தப் பறவையையும் பார்த்த நினைவு..

'குக்குறுவான்' பற்றி மா.கிருஷ்ணன் எழுதிய 'மழைக்காலமும் குயிலோசையும்' புத்தகத்தில் படித்த நினைவு. வீட்டுக்குப்போனதும் சொல்கிறேன்.

-மதி

பி.கு.: welcome back. missed your posts.

Thangamani said...

வானுயர்ந்த கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் மோதி வருடத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறப்பதாய்ப் படித்தேன். மனிதன் தனது வளர்ச்சியில் தனது சுற்றத்தார்கள்,நண்பர்கள் தவிர பல விளிம்புநிலை மனிதர்கள், ஏழைகள், மற்ற உயிரினங்கள், பறவைகள், விலங்குகள், பல்லின உயிர்கள், தாவரங்கள் போன்றவைகளின் வாழ்வை அழிப்பதைப்பற்றி பெரிதும் கண்டுகொள்வதில்லை. சுற்றுபுரச்சூழலுக்கு சமீபகாலங்களில் ஏற்பட்ட அபயாம் போல வேறெப்போது ஏப்போதும் நிகழ்ந்திருக்குமெனத் தோன்றவில்லை.

dondu(#11168674346665545885) said...

இப்பதிவைப் பார்த்ததும் நான் போட்ட இப்பதிவு ஞாபகத்துக்கு வருகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_19.html

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய மேலே சுட்டியிடப்பட்ட பதிவில் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இராதாகிருஷ்ணன் said...

மதி, தங்கமணி, டோண்டு அனைவருக்கும் நன்றி!

எத்தனையோ பறவைகள் பெயர் தெரியாமலேயே நம் முன் வந்து செல்கின்றன!

பல பறவைகள், விலங்குகள் அழிவின் விளிம்பில்தான் உள்ளது. புலி அதில் குறிப்பிடத்தக்கதொன்று.

டோண்டு, உங்களது அப்பதிவை முன்பு வாசித்தது நினைவுக்கு வருகிறது.

Venkat said...

இராதா - குக்குறுவான் பற்றி கேள்விப்பட்டதில்லை. ஆனால் இந்தப் பறவையைப் பார்த்திருக்கிறேன். (பெங்களூர் வீட்டில் என் புகைப்படத் தொகுப்புகளுக்குள் படம் கூட இருக்கலாம்).

நீங்கள் முன்னரே இந்தப் புத்தகத்தைப் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறீர்கள். சமீபத்திய இந்தியப் பயணத்தில் இந்தப் புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை.

இராதாகிருஷ்ணன் said...

வெங்கட்,மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிப்பித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இன்னும் ஏதாவது கடைகளில் சில பிரதிகள் இருக்கலாம்.