படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, February 19, 2004

"தமிழ்நாட்டுப் பறவைகள்"

டேவிட் ஆட்டன்பரோவின் 'The Life of Birds'-ஐ வாசித்த சமயத்தில், தமிழிலும் இப்படி ஒரு புத்தகம் இருந்தால்....என்று ஏங்கியதுண்டு. இந்த அளவிற்கு நேர்த்தியான, அரிய புகைப்படங்கள், ஆழமான செய்திகளுடன் ஒரு புத்தகத்தைத் தரமாகப் பதிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்று தோன்றுகிறது. நமக்குள்ள திறமை குறைவு காரணமல்ல, வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாததுமே முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். ஆர்வமும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இன்றைய வாழ்க்கையில் பறவைகளைப் பார்க்கவேறு நேரம் இருக்கிறதா நம் மக்களுக்கு! இருப்பினும் ஹிந்து பத்திரிக்கையின் புத்தக மதிப்புரைப் பகுதியில் தமிழ்நாட்டுப் பறவைகள் என்ற தலைப்புடன் ஒரு மதிப்புரையைக் கண்டவுடன் மகிழ்வேற்பட்டது. தமிழில் இம்மாதிரியான பல்துறைப் புத்தகங்கள் அடிக்கடி வந்தால் நன்றாயிருக்கும். ஊருக்குச் செல்லும்போது வாங்கிப் படிக்கத் திட்டம்.

பறவைகளைக் காண்பது சுகமான அனுபவம். ஆளரவமற்ற குளத்தில் மீனைப் பார்த்துக் காத்திருக்கும் ஒற்றைக் கொக்கு, மாலை நேரத்தில் கூட்டமாய்ப் பறந்து பறந்து வட்டமடித்து மரத்தில் அமரும் ஒரு வகையான குருவிகள் (இவற்றின் பெயர் தெரியாத அளவிற்கு நம் புலமை உள்ளது! ம்..), புழுதியில் குளித்துச் சிலிர்த்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள், குழாயில் ஒழுகும் நீரைப் பருக எத்தனிக்கும் காகம் என பறவைகளைக் கண்ட காட்சிகள் மனதில் விரிகின்றன.

கிராமத்தில் வீட்டின் முன்புறம் உள்ள நூற்பாலையில் நிறைந்து கிடக்கும் மரங்களில் [தற்போது பெரும்பான்மையானவை வெட்டப்பட்டு கட்டிடங்களாக மாறிவிட்டன :( ] காலை ஐந்து மணிவாக்கில் பறவைகள் எழுந்து சத்தமிட்டுவிட்டு, மெல்ல மெல்ல உணவு தேடி அவை பல திசைகளில் பறந்துவிடும். ஊரை விட்டு வந்தபின்னும் பலகாலம் இப்பறவையொலிகள் காதில் விழும் பிரமை ஏற்பட்டுள்ளது. சொல்லி வைத்தாற்போல் மாலை அனைத்து பறவைகளும் இம்மரங்களுக்குத் திரும்பிவிடுகின்றன. மீண்டும் சிறிது நேரம் ஒலிமயம் (தங்களது அன்றைய அனுபவங்களைப் பேசிக்கொள்ளுமோ என்னவோ!). இவற்றில் பெரும்பான்மையானவை காகங்கள், மைனாக்கள், குருவிகள். கிளி, புறாக்களைப் பார்ப்பது எப்போதாவது நடக்கும். கூட்டமாக நெருங்கிப் பறக்கும் குருவிகளின் ஒருங்கிணைந்த வானவேடிக்கைக் காட்சிகள் ஒவ்வொரு முறையும் பிரமிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாய் வந்து ஒரு மரத்தை ஆக்கிரமிக்கும், பின்பு சில நிமிடங்களில் சர்ரென ஒன்றாய் மேலெழுந்து பறக்கும் இவற்றின் அழகினைச் சொல்வது அவ்வளவு சுலபமல்ல. இவை எதற்காக இவ்வாறு செய்கின்றன என்பது ஒரு புதிராகவே உள்ளது. இன்னும் பறவைகளைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

No comments: