படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, June 11, 2006

தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள்

ஆனந்த விகடன் 18.06.06 இதழின் "தமிழ் மண்ணே வணக்கம்!" பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். முதலில் இக்கட்டுரையைப் பதிப்பித்த விகடனுக்கு நன்றி! தமிழகத்திலுள்ள (மற்றும் வரும்) ஈழத்தமிழ் அகதிகளின் நிலை மோசமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை உரத்துச் சொன்ன கட்டுரையாளரும் பாராட்டுக்குரியவர். அக்கட்டுரையிலிருந்து சில மேற்கோள்கள் பின்வருமாறு:

"இரக்கம், கருணை, மனிதநேயம் போன்றவையெல்லாம் கவிதை எழுதுவதற்கும், அடுக்குமொழியில் பேசுவதற்கும் மட்டுமே என ஒதுக்கிவைத்துவிட்டோம். நடிகைகளின் தற்கொலை களுக்கு என்ன காரணம் என்று ஆராய நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால், ‘நடுக் கடலில் படகு கவிழ்ந்து இலங்கை அகதிகள் சாவு’ என்கிற துயரம் பற்றி நினைக்க யாருக்கும் நேரம் இல்லையா? "

"’அகதிகளின் மறுவாழ்வுக்கான சட்டபூர் வமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்கிற ஐ.நா&வின் 1967&ம் ஆண்டின் ஒப்பந்தத்திலும் இந்தியா ஏனோ கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந் தத்தை ஒப்புக்கொண்டால் உடன்படிக்கை களைச் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அச்சத்தால் இன்று வரை அகதிகளின் மறுவாழ்வில் மௌனம் சாதிக் கிறோம். அந்தச் சட்டபூர்வ நிர்ப்பந்தம் இல்லா மல் போனதால், ‘எங்கிருந்தோ வருபவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?’ என்று சுயநலத்தோடு நடந்துகொள்ள வசதியாக இருக்கிறது."

"இந்தியா முழுவதும் நடக்கிற அதிகார, அரசியல் கொள்ளைகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அகதிகளின் நல்வாழ்வுக்கு செலவு ஆகாது. ஒரு குடும்பத் தலைவருக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகையாக வழங்குகிறது அரசு. ஒரு மாதம் முழுக்க அந்த ரூபாயில் எப்படி வாழ முடியும் என்று சிந்திக்க யாருக்கும் அவகாசம் இல்லை. குழந்தைகளாக இருந்தால் 45 ரூபாய், 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 90 ரூபாய், பருவமடைந்தவர்களுக்கு 144 ரூபாய் என வயது அடிப்படையில் மாதந்திர உதவித் தொகை அளிக்கப்படுகிறது. சுத்திகரிக் கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கே பத்து ரூபாய் செலவழிக்க வேண்டிய காலகட்டத்தில், 45 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படிக் குழந்தைகளுக்குப் பால் புகட்ட முடியும்? "

"டயானா இறந்த துயரத்துக்கு அஞ்சலிக் கவிதைகள் எழுதும் நம் தமிழினப் படைப்பாளிகள், அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை நினைக்காமல் இருப்பதுதான் இன்னும் வேதனை. தங்களின் இரக்கத்துக்குச் சின்னதாக எதிர்ப்பு வந்தாலும், இரக்கப் படுவதைக்கூட நிறுத்திக்கொள்கிறார்கள் நம் கலைஞர்கள். ‘எதுக்கு வம்பு?’ என்று கூச்சப்படாமல் பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பதில் தருவ தற்குக்கூட அச்சப்பட்டு மௌனமாக இருந்துவிடுகிறார்கள். ஆயுதங்களைவிட ஆபத்தானது அந்த மௌனம்!"

5 comments:

வெற்றி said...

இராதாகிருஷ்னன்,
சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.
ஈழத்தையும் தமிழகத்தையும் பிரிக்கும் கடல் உப்பானது ஈழத்தமிழர்கள் விட்ட சோகக் கண்ணீரால் என்றாராம் அறிஞர் அண்ணா. அண்ணாவின் வழியே தன்வழி எனக் கூறிவரும் கலைஞர் ஈழத்தமிழ் அகதிகளின் துயர் துடைப்பார் என நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

குழலி / Kuzhali said...

இதே எண்ணங்களுடம் என் பதிவு
http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_11.html

சுந்தரவடிவேல் said...

//ஆயுதங்களைவிட ஆபத்தானது அந்த மௌனம்!//
பதிந்தமைக்கு நன்றி.

Thangamani said...

பதிவுக்கு நன்றி இராதகிருஷ்ணன்.

இராதாகிருஷ்ணன் said...

அகதிகளின் பிரச்சனைகளை ஆராய அமைச்சர் குழுவை தமிழக முதல்வர் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்தியொன்று தெரிவிக்கிறது. http://thatstamil.oneindia.in/news/2006/06/14/refugee.html
ரவிக்குமாரின் குமுறலுக்கு அருத்தமில்லாமல் போகவில்லை.