படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, June 27, 2006

சிதறல்கள்

பாஷா இந்தியா நடத்திய இந்திய வலைப்பதிவுகளுக்கான போட்டியில் தமிழுக்கு நிறைய பரிசுகள் கிடைத்துள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! இதுபோன்று தமிழ் வலைப்பதிவுகளுக்கு மட்டும் என்று சொல்லி சென்ற வருடம் திசைகள் மின்னிதழ் போட்டி ஒன்றை நடத்தியதாக நினைவு. முடிவு என்னவாயிற்று என்று பார்க்கவில்லை. ஒருவேளை அப்போட்டி கைவிடப்பட்டதோ என்னவோ?

தேன்கூடு நடந்த போட்டியில் வென்ற தமிழ் வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இப்பதிவுகளில் ஒருசிலவற்றை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவற்றில் பெரும்பாலும் விடலைப் பருவத்தில் உண்டாகும் காதலைப் (அல்லது இனக்கவர்ச்சி) பற்றியே இருந்தது.

இப்பருவத்தில் உண்டாகும் மற்றொரு முக்கியமான அனுபவம் தேர்வு காலத்தில் உண்டாகும் பயம். அதைப் பயம் என்று சொல்வதா என்றே தெரியவில்லை. அப்பயம் கல்லூரி காலத்தில் அவ்வளவாக இல்லாமல் போய்விட்டிருந்தாலும் பள்ளிக் காலத்தில் வாட்டி எடுத்தது உண்மை. அப்பொழுதெல்லாம் படிப்பை முடித்து வேலைக்குப் போவோர்களைக் கண்டால், ஆகா இவர்களுக்கெல்லாம் தேர்விற்குப் படித்து எழுத வேண்டிய வேலையில்லை, கொடுத்துவைத்தவர்கள் என்று தோன்றும். இப்பொழுதுகூட எப்போதாவது அந்தப் பாடத்தை இன்னும் படிக்கவில்லையே, நாளைக்கு எப்படிப்போய் எழுதுவது என்ற மாதிரி கனவு வரும். அந்த அளவிற்கு உள்ளது அதன் தாக்கம். இது அப்பருவத்தினருக்கு உள்ள பொதுவான உளவியல் பிரச்சனையாகக்கூட இருக்கலாம்.

நம் பிரச்சனைகள் இப்படியுள்ளதென்றால் பெரும் அழுத்தத்திற்குள் வாழும் பதின்மர்கள் சிலரின் வாழ்க்கை அதிர்ச்சிகரமாகத்தான் உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் முதலீட்டில் (25000 கோடி ரூபாய்கள் என்கிறார்கள்) நாடு முழுவதும் சில்லறை வணிகத்தில் இறங்கத் திட்டமிட்டிருப்பதாகச் செய்தி. பத்து இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். கேட்க நன்றாக இருப்பினும் இது களத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம்(சிறு வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், இத்யாதி என). பார்ப்போம்.

No comments: