படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, June 18, 2006

மொட்டு விடுதல்

பழைய ப்ரில் மசிக்குப்பி அல்லது அதுபோன்று இருக்கும் ஒரு குப்பி என்று ஏதாவது ஒன்று கிடைத்துவிடாமல் போகாது. துவைக்கும் கல்லின் ஓரத்திலோ, சுவற்றின் மேலிருக்கும் டப்பாவிலோ நீலநிற சலவைக் கட்டியின் துண்டு கொஞ்சம் நிச்சயம் இருக்கும். குப்பியில் தண்ணீரை ஊற்றி, அத்துண்டை அதற்குள் போட்டு மூடியால் மூடிக் குலுக்கினால் நுரை ஏகத்திற்கு வந்துவிட்டிருக்கும். அதை அப்படியே வைத்துவிட்டு வீட்டின் பின்புறமோ, பக்கத்தில் எங்காவதோ இருக்கும் பப்பாளி மரத்தின் கிளையொன்றிப் பிடுங்கி வந்து சிறிய தூம்பாக நறுக்கிக் கொண்டு குப்பியில் விட்டுக் கலக்கி எடுத்து உஃப் என்று ஊதினால் சில சமயங்களில் அருமையாக மொட்டுக்கள் வரும், பல சமயங்களில் தூம்பிலிருந்து நீர் மட்டுமே சொட்டும். அது சலவைக் கட்டியின் தன்மையையும், ஊற்றும் நீரின் அளவையும், ஊதும் இலாவகத்தையும் பொருத்தது.

தற்காலங்களில் குப்பிகளில் (அதன் மூடியின் உட்புறத்திலேயே குச்சிபோன்று நீட்டப்பட்டு முனையில் இரண்டு மூன்று வளையங்கள் வெவ்வேறு விட்டங்களில் செய்துவைக்கப்பட்டிருக்கும்) மொட்டு விடும் திரவத்தை விற்பதைப் போல் முன்பு கடைகளில் விற்றார்களா எனத் தெரியாது. ஆனால், ஊர்களில் நடக்கும் திருவிழாக்களின் போது ஏதேனும் சிலசமயங்களில் அவற்றை விற்பார்கள்.

கடையில் வாங்கிய குப்பியிலிருந்து மொட்டுக்களை விட எத்தனித்துக் கொண்டிருக்கும் மகளுக்குப் பப்பாளிக் குச்சியில்கூட சலவைத்துண்டைக் கலக்கி மொட்டு விடலாம் என்று தெரிந்துவிட்டிருக்காது. பப்பாளி மரத்தையே பார்த்திராத அவளுக்கு, என்றேனும் ஒரு முறையேனும் அவ்வுள்ளூர்த் தயாரிப்பைக் காண்பித்துக் கொடுத்தே ஆகவேண்டும்.

2 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நறுக்கென்று இருக்கும் பதிவு. அருமை!

இராதாகிருஷ்ணன் said...

நன்றி செல்வராஜ்!