படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, November 20, 2005

ஊழலை மறைக்கப்போகும் சட்டமா?

பின்வரும் செய்திக்கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் வந்துள்ளது:

பல பொதுத்துறை நிறுவனங்களின் பித்தலாட்டங்களை புட்டுபுட்டு வைத்து, பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் முகங்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிய, தணிக்கைத் துறை அதிகாரிகள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரிகளின் வேலைக்கே வேட்டு வைக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது என்பதுதான் காரணம்.

‘இனிமேல் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் தணிக்கையை தனியார்கள் மூலமே முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் வரவிருக்கும் சட்டம்.

‘‘ஊழலுக்குத் துணைபோகும் இந்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. இது நிறைவேறினால் மத்திய & மாநில அரசுகளில் நடைபெறும் ஊழல்கள் இனி வெளியே தெரியாமலே போய் விடும். இப்படியரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து ஊழலுக்குத் துணைபோகத் துடிக்கும் இந்த ஆட்சியை பதவியிலிருந்து இறக்கு வோம்...’’ என்று அதிரடி முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி.யும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ரூப்சந்த் பால். இவர்தான் மத்திய & மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார்.

ரூப்சந்த் பால் தலைமையில் அணிதிரண்டிருக்கும் தணிக்கைத் துறை அதிகாரிகள், வரவிருக்கும் புதிய சட்டத்தினால் ஏற்படும் கேடுகளை பொது மக்களுக்கு விளக்கும் வேலையில் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். அந்த சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ‘அகில இந்திய வணிக தணிக்கை அதிகாரிகள் சங்க’த்தின் நிர்வாகிகளைச் சந்தித்தோம். நம்மிடம் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் ஆக்ரோஷமாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே...

‘‘இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாக 1,230 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தணிக்கை செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. நாடு முழுவதும் 900 தணிக்கை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களை இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். இவ்வளவு அதிகமாகப் பணம் புழங்கும் இடத்தில் அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள்தான் தணிக்கை செய்ய வேண்டும். ‘இந்த அதிகாரிகளை மத்திய அரசோ, மாநில அரசோ கட்டுப்படுத்தக் கூடாது. அது சுதந்திரமான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் தணிக்கை முறை, வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதாக இருக்கும்’ என அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் கம்பெனி சட்டத்தின் 619 பிரிவை ஏற்படுத்தினார்.

இப்போது இந்த சட்டத்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்குப் பதிலாக புதிய கம்பெனி சட்டத்தை அறிவிக்கப்போகிறது. இந்த புதிய சட்டப்படி பார்த்தால் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் எந்த ஒரு தனியார் தணிக்கை நிறுவனத்தையும் தங்கள் கணக்குகளை சரிபார்க்க அமர்த்திக் கொள்ளலாம். இதன்மூலம் இதுவரை இந்திய மக்களின் பிரதிநிதிகளாக பொருளாதாரத்தின் கண்காணிப்பாளர்களாக வலம்வந்த நாங்கள், வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் வெளியில் தெரியாமலே போய்விடும்.

இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களையெல்லாம் கண்டுபிடித்தது எங்கள் கண்கள்தான். சுர்ஹித் லாட்டரி ஊழல், பீகாரைக் கலக்கிக் கொண்டிருக்கும் மாட்டுத் தீவன ஊழல், போஃபர்ஸ் ஊழல், யூரியா ஊழல், பழைய வீராணம் ஊழல், டான்ஸி நில விற்பனை முறைகேடு, கலர் டி.வி. ஊழல் என எல்லாவற்றையும் கண்டுபிடித்தது நாங்கள்தான்.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும். சரியாகச் சொல்லப்போனால் இன்னும் சில வருடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.

தனியார் தணிக்கை முறையில் என்னென்ன முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறோம். அண்மையில் மூடப்பட்ட ‘குளோபல் டிரஸ்ட் வங்கி’ தான் அதற்கு சரியான உதாரணம். இந்த வங்கியின் 2003-04ம் ஆண்டுக்கான தணிக்கையை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டது. அதில், நாட்டிலேயே சிறந்த வங்கியாக, பொருளாதாரத்தின் உச்சத்தில் இருக்கும் வங்கியாக குளோபல் டிரஸ்ட் வங்கியை வர்ணித்திருந்தது. ஆனால், அடுத்த வருடத்திலேயே வங்கியின் நிதி நிலைமை படுபாதாளத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் அரசியல்வாதிகளின் துணையோடு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகள் இனி சுலபமாக வாங்கி விட முடியும். எப்படியென்றால் தனியார் முதலாளிகள் கண் வைக்கும் பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக தணிக்கை செய்து அதையே காரணமாகக் காட்டி நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகு தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு தயாராக இருக்கும். இடதுசாரிகள் எவ்வளவுதான் கத்தினாலும் விற்கத் துணிபவர்கள் தணிக்கை அறிக்கையை காரணம் காட்டிப் பேசுவார்கள் என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்கள்.

பிறகு, எல்லாம் போகட்டும், எங்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இந்தியாவில் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டிபோட முடியவில்லை என்பதுதான். இதன் அர்த்தம் என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நேர்மையற்ற முறையில் குறுக்கு வழிகளை மட்டுமே கடைப்பிடித்து தங்கள் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும். இதற்காக முறை கேடாக செலவிடப்படும் தொகைக்கு கணக்கு வழக்கு இருக்காது. காரணம் அவையெல்லாம் தனியார் பணம். ஆனால், இந்திய பிரஜைகளின் வரிப்பணம் சம்பந்தப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அப்படியொரு குறுக்கு வழிகளில் பயணம் செய்ய எங்கள் தணிக்கைத்துறை அனுமதிக்காது. காரணம் இந்தியாவின் பொருளாதாரமும், நாட்டின் இமேஜும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் சொல்கிறோம்... ஈரானி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி கொடுத்த பரிந்துரையின்படிதான் மத்திய அரசு இப்படியரு முடிவு எடுப்பதாக அறிவிக்கிறார்கள். ஈரானி என்பவர் யார் என்றால் மத்திய அரசுக்குச் சொந்தமான வி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முறைகேடாக வாங்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவர் என்று எங்களால் விமரிசிக்கப்பட்டவர்.

உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்பதை பொதுமக்கள்தான் யோசிக்க வேண்டும்’’ என்று கொதித்து முடித்தார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருப்பவர் மூத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன். இவர் ‘பொதுத்துறை நிறுவனங்களின் நாடாளுமன்ற கமிட்டி’ யின் தலைவராகவும் இருந்தவர். ‘‘ஒட்டு மொத்த இந்தியர்களும் வரவிருக்கும் மோசமான ஒரு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய புனிதப் பணியை செய்ய வேண்டிய வேளை இது’’ என்று தனது பிரசாரத்தைத் துவக்கி இருக்கிறார் செழியன்.

5 comments:

Thangamani said...

தகவலுக்கு நன்றி இராதாகிருஷ்ணன்.

சுந்தரவடிவேல் said...

இதைப் போன்ற செய்திகள் பெருமளவில் ஊடகங்களில் பரப்பப் படுவதும், அலசப் படுவதும் இல்லை. என்னவோ சங்கராச்சாரியாரும், குஷ்புவும் நினைவுக்கு வருகிறார்கள்.

Venkat said...

இராதாகிருஷ்ணன் - நன்றி. சுந்தரவடிவேல் சொல்வதைப்போல நாம் இதைப் போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்துவதில்லை.

தணிக்கையை மட்டும் ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும், முழு நிறுவனத்தையுமே விற்றுவிடலாமே :(

Unknown said...

தணிக்கைத்துறை 100% சரியாகச் செயல்படுகிறதா என்று தெரியாது.அவ்வாறு இருக்கவும் இருக்காது :-). எல்லாத்துறைகளிலும் கருப்பு ஆடுகள் இருக்கும். இருந்தாலும் இவர்களால் பல முக்கிய ஊழல்களைக் வெளிக்கொண்டுவர முடிந்தது.

வரப்போகும் சட்டம் சரியோ தவறோ நமது அரசியல்வாதிகள் இதை ஆக்கபூர்வமாக விவாதிக்கவேண்டும். "ஊழல மறைக்கப்போகும் இந்த்ச் சட்டம் பற்றித் தமிழனுக்குச் சொரணையே கிடையாது" என்று குஷ்பூவோ, சுகாசினியோ சொன்னால்தான் தமிழ் உலகத்துக்கு இது முக்கியமான விசயமாக ஆகும்.

தகவலுக்கு நன்றி இராதாகிருஷ்ணன்.

இராதாகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றிகள்!

இவைபற்றிய விவாதங்கள் நடைபெறாதது வருத்தத்திற்குரிய விதயம். போராட்டங்கள் பயனில்லாமல் வேறு எதற்கோதான் நடைபெற்றுக்கொண்டுள்ளன.