படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, April 25, 2005

கோட்டைப் போடுங்கள்!

தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்காமலேயே பள்ளிக் கல்வியை முடிக்கும் நிலைமை உள்ளது என்பது பொதுவில் இருக்கும் ஓர் ஆதங்கம்/குற்றச்சாட்டு. இரண்டாம், மூன்றாம் மொழி எனத் தெரிவு செய்யும்போதுகூட அங்கு ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்சு அல்லது வேறேனும் ஒரு மொழி வந்துவிடுகிறது. தமிழைப் படித்து என்ன இலாபம் என்றதொரு மனநிலையோடு, பிறமொழிகளை எடுத்துப் படித்தால் அவற்றில் நிறைய மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. படிப்பென்பதே உருப்போடுவதற்கும், மதிப்பெண்களுக்கும் என்றாகிவிட்ட நிலையில் சுளுவாக எதில் வேலை முடியுமோ அத்திசையில் மாணாக்கர்கள் செல்வதில் வியப்பேது!

பெரும்பாலானோர் தமிழ் மொழிப் பாடத்தை உதறிவிட்டுப் போவதற்கு அப்பாடத் திட்டத்திலுள்ள (கவனிக்க, மொழியிலன்று) கடினத்தன்மையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதில் முக்கியமானது செய்யுள் பகுதி.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழம்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதே - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

[நினைவில் இருந்த செய்யுள் ஒன்றை உதாரணத்திற்காக அப்படியே போட்டுள்ளேன், பிழை இருந்தால் மன்னிக்கவும். எழுதியவர்-ஒளவையார். இப்பாடலின் கடைசி வரிகளை வைரமுத்து தனது படப்பாடல்கள் சிலவற்றில் கொஞ்சம் மாற்றி உபயோகித்திருப்பார்.] அருமையான செய்யுளாக இருந்தாலும் துவக்கப்பள்ளி (அப்படித்தான் நினைவு) அளவிற்கு இப்பாடல் அதிகம் என்றே நினைக்கிறேன். முதலில் கடினமான, வழக்கத்தில் குறைந்து வழங்கும் பொருள் விளங்காச் சொற்கள், பிறகு பொழிப்புரை, விரிவுரை ஆகியவற்றின் தேவை; அவற்றைச் சொல்லி விளக்கும் நபர்/விளக்கவுரைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்றால்கூட ஒப்பேற்றிவிடுவார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கஷ்டம்.

சங்க இலக்கியம் என்ற ஒன்று இல்லாதிருந்திருப்பின் தமிழ் பாடத் திட்டம் எவ்வாறு இருந்திருக்கும்? பிற நாடுகள்/மொழிகளில் உள்ள மொழிப் பாடத்தில் இப்படித்தான் கடினமான பழம் இலக்கியப் பாடல்களை ஆரம்பம் முதல், இறுதி வரை நீக்கமறப் புகுத்திக் கற்பிக்கிறார்களா?

அதற்காக சங்க இலக்கியமே வேண்டாம் என்று சொல்லவில்லை; பாடல்களுக்கு பதிலாக எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க அவற்றின் உரை, சுலபமான செய்யுள்களை மனனம் செய்யும் பயிற்சி, இத்யாதிகள் இருக்க வேண்டும். அவற்றைப் பற்றி அறிஞர்கள் சிந்திக்கட்டும்.

மொழிப் பாடத்தை எளிமைப்படுத்தி தமிழிலும் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ளாமல் நிறைய மதிப்பெண்கள் எடுக்கும் நிலை வந்தால் ஒருவேளை அது நிறையப் பேரை யோசிக்க வைக்கும். அச்சூழ்நிலையில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயப்படுத்து என்னும் சிந்தனையே மறுபரிசீலனைக்கு உரியதாகலாம்.

இக்காலத்து மாணவர்கள் படுசுட்டியானவர்கள், கோடு போட்டுக் காண்பித்தால் 'ரோடே' போட்டுவிடுவார்கள். அவ்ளோதாங்கறேன்!

3 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

செய்யுளை விடுங்கள். அது ஒரு பாடத்திட்டமாக இருந்துவிட்டுப் போகட்டும். உரைநடை மொழிதான் எளிதாய் இல்லை என்று ஒருமுறை சுவடுகள் சங்கர் உதாரணம் கொடுத்திருந்தார். (சுட்டி கொடுக்கத் தேடினேன் - கிடைக்கவில்லை). பூதியல் பாடம் ஒன்றைக் காட்டி அதையே எளிமையாக எப்படி எழுத முடியும் என்றும் சொல்லி இருந்தார். அதனால் மொழிநடையும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். எப்படியோ ஆங்கில ஊடகம் (இங்கு மிடையம் வராது தானே) வழியாய்ப் படித்த எனக்கு தமிழ்ப்பாடங்கள் (அறிவியல் முதலியன) எப்படி இருந்தன என்று நேரடி அனுபவமில்லை.

துவக்கம் என்பது சரியான பிரயோகம் இல்லை. தொடக்கமே சரி என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் தகவலுக்கு.

இராதாகிருஷ்ணன் said...

தமிழில் கற்பிக்கப்படும் மற்ற பாடங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமென்றாலும் முதலில் தமிழ் மொழிப்பாடத்தை எளிமைப்படுத்த வேண்டுமென்பதை முக்கியமாக நினைக்கிறேன்.

'தொடக்க'த்திற்கு நன்றி செல்வராஜ்!

Anonymous said...

there is nothing wrong in introducing literature of the past.but there need not be a test on memorising poems.it is more a question of presentation and writing a student friendly text that kindles interest in their
minds than including poems or portions from epics per se.
ravi srinivas