படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, October 11, 2006

சாவுகள் குறைவுதான்!

குண்டு வெடிப்பாலோ, துப்பாக்கிச் சூட்டாலோ அல்லது வேறு ஏதாவது வன்முறையாலோ மக்கள் சாகாத நாளில்லை என்றாகிவிட்டது சபிக்கப்பட்டுவிட்ட நாடொன்றில். எத்தனை பேர்தான் உயிரிழந்திருப்பார்களோ என்ற கேள்வி அவ்வப்போது மனதில் எழுந்தாலும் வரையரையில்லாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளில் அதற்கான பதிலைத் தேட ஒருவித விரக்தியே மிஞ்சுகிறது.

இன்றைக்கு வந்திருக்கும் ஒரு செய்தியின்படி அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்று எடுத்த கணக்கின்படி ஈராக்கில் அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு 655,000 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏகத்திற்குப் புளுகி, தாக்குதலை உண்டாக்குவதற்கான வழிகளைத் தந்திரமாக வலிய ஏற்படுத்திக் கொண்டு, எதிர்பேதுமில்லாமலேயே தாக்கி அழித்து, அவ்வாறான ஓராயுத்தையும் கண்டறியாமல், பின்பு அல்கயிதாவுடன் தொடர்பு என்று ஆர்ப்பரித்துக் கொண்டு அதற்கும் சான்றில்லாமல், உலகிலேயே இந்த நாடுதான் மகா மோசமானது, தீயசக்தி அது இதுவென்று பிதற்றி ஒரு நாட்டையே ஒருவிதத்தில் குதறி அழித்துவிட்டார்கள்.

முந்தைய ஆட்சியாளர்கள் உத்தமர்கள் அல்லர்தான், இருப்பினும் ஒருவேளை அவர்களே அதிகாரத்தில் இருந்திருந்தாலுங்கூட இந்த அளவிற்குச் சாதாரண மக்கள் உயிரிழந்திருக்கமாட்டார்கள். புஷ் கூறுவதுபோல மேற்சொன்ற கணக்கெடுப்பு நம்பத்தகுந்ததாகவே இல்லாவிட்டாலும், சொல்லப்பட்ட எண்ணிக்கையில் 25 விழுக்காடுகூடவா சரியாக இருக்காது? தன் நாட்டில் பூனைக்குக் காய்ச்சல் வந்தாலே டமாரமடித்து உலகறியச் செய்துவிடும் 'மேலை' நாடுகளுக்கு பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றிப் பெரிதாகக் கவலையொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை. வாழ்வே சாவாகிவிட்ட இம்மக்களுக்கு விடிவு அருகிலிருப்பதற்கான சாத்தியக்கூறுகள்கூட குறைவாகவே உள்ளது.

No comments: