முன்பொருமுறை எப்போதோ வாசித்த கட்டுரையில் மதுரை அருகே ஒரு மலைக்குகைகளில் கண்ட சமணப் படுக்கைகள் பற்றி எழுதியிருந்தார். ஒரு வேரின் சாறு, கல்லைப் பொடியாக்கச் செய்யும் விந்தையைப் பற்றி சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாரம் பறவைகளைப் பற்றிய தனது அனுபங்கள் சிலவற்றைச் சொல்கிறார். அதில் குக்குறுவான் ஒன்று. "குக்குறுவான் மிக அழகான பறவை. குருவி போன்று இருக்கும். மேல் பாகம் பச்சையாகவும், அடியில் இளமஞ்சளும், கால்கள் லேசான சிவப்பு நிறத்திலும் இருக்கும். இடைவிடாமல் கூவும் இப்பறவை தலையை உதறி அசைப்பதைப் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும்"-என்கிறார்.

குக்குறுவானில் உள்ள மூன்று வகைகளைப் (இன்னும் கூட இருக்கலாம்) பற்றி 'தமிழ்நாட்டுப் பறவைகள்' என்ற புத்தகத்தில் காணலாம். காட்டுப் பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet, Megalaima zeylanica), சின்னக் குக்குறுவான் (White-Checked Barbet, Megalaima viridis) மற்றும் செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith Barbet, Megalaima haemacephala). மேற்குறிப்பிட்டதில் கடைசியில் வரும் குக்குறுவானைப் பற்றித்தான் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். இப்பறவையை நேரில் கண்டதாக நினைவில்லை. நாம் காணும் பறவைகள், தாவரங்களின் பெயர்கள் எல்லாவற்றையும் அறிந்தா வைத்திருக்கிறோம்! ஏதோ ஒரு பறவை, செடி என்று பொதுமைப்படுத்திவிட்டுச் சென்றுவிடுகிறோம்.
நான் பணிபுரியும் அலுவலகம் பெரிய கோபுரத்தையுடைய(tower) கட்டிடத்தில் உள்ளது. அதன் பக்கச் சுவர்களின் பெரும்பாலான பகுதியைக் கண்ணாடிகளே ஆக்கிரமித்திருக்கும். சென்ற வருட இறுதியில் ஒருநாள் காலையில் தொப்பென்று ஏதோ கீழே விழுந்ததைப் போலிருந்தது. கண்ணாடி வழியாக வெளியே பார்க்கையில் அது ஒரு சிறு பறவை (பெயர் தெரியவேண்டுமே!). வேகமாகப் பறந்து வந்து கண்ணாடியில் மோதிக் கீழே விழுந்திருக்க வேண்டும். கண்ணாடி ஜன்னலைத் திறக்கமுடியாத அமைப்பு வேறு. பரிதாபமாகக் கிடந்த அப்பறவையைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. உயிர் இருந்தது; உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். காலோ வேறொரு திசையில் மடங்கியிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தது. பிறகு சிறிது நகர்ந்த மாதிரி தெரிந்தது. சற்று நேரம் கழித்துப் பார்க்கையில் அது இருந்த சுவடு மட்டும் தான் தெரிந்தது. ஒருவேளை நிலைதிரும்பி எழுந்து பறந்திருக்கலாம்.
பறவையின் இயற்கையான மரணத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்! எங்கேயோ போய் எப்படியோ சாகிறது.