ஜூரிக்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத் தூரத்திலே (ரயிலில்) இருக்கும் ஜெர்மனிக்குச் செல்ல கொஞ்சம் மெனக்கெடவேண்டியுள்ளது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிற்காவது விசா இல்லாமல் போக முடியுமா என்று தெரியவில்லை. விசா வாங்குவதற்கு ஒரு நாள் வேலையைக் கெடுத்துக் கொண்டு பெர்ன் நகருக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவும் சும்மா நினைத்த போதெல்லாம் சென்றுவிட முடியாது. பிரத்யேகத் தொலைபேசி எண் ஒன்றிக்கு அழைத்து நேரம் வாங்க வேண்டும். இத்தொலைபேசியின் மறுமுனையில் பேசுபவருக்கு அவரை அழைப்பவரிடமிருந்துதான் சம்பளம் பெற்றுத் தருவார்களோ என்னவோ (சும்மா ஒரு பேச்சுக்கு), அவ்வெண்ணை அழைக்க ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட CHF 3.15 (~$2.5) ஆகுமென்றால் என்னவென்பது! அழைத்தவுடன் விரைவில் நேரம் கிடைத்து விட்டால் நன்றாக இருக்குமா? அதனால் அழைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் நேரத்தைக் கொடுப்பார்கள்!
சென்ற ஜூன் மாதம் ஒருநாள் அதே தூதரகத்திற்குச் சென்றிருந்தபோது உப்புப் பெறாத காரணத்திற்காக விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். என்னுடைய கவனக் குறைவால் அவர்கள் கேட்ட ஒரு கடிதம் விண்ணப்பத்துடன் இணைக்காமல் விடுபட்டு விட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் தொலைநகல் மூலம் அக்கடிதத்தை உரியவர்களிடமிருந்து பெற்றுத் தர உறுதியளித்ததைக் காதில்கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் சாலையோரம் நின்று விண்ணப்பங்களைச் சரிபார்த்து மக்களை உள்ளே அனுப்பும் கணவான் ஒருவர். விளைவு, அடுத்த நேரம் கிடைக்கும் வரை, அதாவது மேலும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அன்றே விசா வாங்கிக் கொண்டு மறுநாளே ஜெர்மனி போகுமளவிற்கு தலை போகும் வேலையொன்றும் இல்லைதான்; என்றாலும் விசா வாங்குவதற்கான நடைமுறைகள் சில சமயங்களில் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன.
அனில் அம்பானிக்கும், ஆனந்த மகிந்திராவிற்கும் ரஷ்யா விசா கொடுக்க மறுத்துவிட்டது என்ற செய்தியை நேற்றைய தினமணியில் படித்த போது, முன்பு ஏற்பட்டிருந்த தேவையற்ற உளைச்சலெல்லாம் கேலிக்குரியதாகிவிட்டது. அப்பேர்ப்பட்டவர்களுக்கே விசா மறுக்கப்படும் போது நம் போன்ற சாதாரண ஆசாமிகளெல்லாம் எம்மாத்திரம்!
சென்ற ஜூலை ஒன்றாம் தேதி கூப்பிட்டிருந்ததற்கு இன்றைக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். இம்முறை அவர்கள் கேட்டதெல்லாம் சரியாக இருக்க விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
பெர்ன் நகரில் (இங்கு எல்லா இடத்திலுமே) குளிராகவே இருந்தது, மேகமூட்டம் வேறு. தூதரகத்திலிருந்து திரும்பி வரும்போது சுவிஸ் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் சுமாரான அளவில் இருக்கும் திறந்த வெளியில் கூட்டம் கொஞ்சம் இருப்பதைப் பார்த்து பேருந்திலிருந்து அங்கேயே இறங்கிக் கொண்டேன். வழக்கமாகக் நடக்கும் வாரச் சந்தைகளுக்குக் கொஞ்சம் மாறாகவே இருந்தது. பெரியவர்கள் அமர்ந்து சூடாகப் பருகிக் கொண்டிருந்த கூடாரம், பால் பொருட்களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வகை வகையான Cheese-களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வேலி போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளும் பன்றிகளும், உருளைக் கிழங்கை மண்பெட்டியொன்றில் போட்டு அதைத் தோண்டி எடுக்கும் சிறு போட்டி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் சிலர், அந்தக் குளிரில் உட்கார்ந்து கொண்டு கம்பளியிலிருந்து நூல் நூற்றுக் கொண்டிருந்த பெண் என்று பல காட்சிகள். பெர்ன் வட்டார விவசாயம், கால்நடை முதலானவை சார்ந்த தொழில்களை முன்னிருத்தும் கண்காட்சி போலிருந்தது. கேமராவையும் எடுத்துக் கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது.
கண்கவரும் நாட்டுப் புற உடையணிந்த இரு விவசாயிகள், செம்மறியாடு ஒன்றின் கால்களைக் கட்டி மேசையின் மீது படுக்க வைத்து முடிவழிக்கும் இயந்திரமொன்றில் சர்சர்ரென வழித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் காண மக்களுக்கு ஒரு காட்சியானது அது. கொஞ்ச நேரத்தில் முடி அனைத்தையும் இழந்து வெறும் தோலுடன் மற்ற ஆடுகளுக்கு மத்தியில் போய் நின்று கொண்டிருந்தது. இவ்வளவு குளிரில் அதற்குக் குளிராதா என்ற கேள்வி மனதை ஆக்கிரமித்தது. அங்கிருந்தவரிடம் மெல்ல விசாரிக்க, ஒவ்வொரு வருடமும் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் செம்மறியாடுகளின் உரோமம் வழிக்கப்படவேண்டும்; இல்லையென்றால் அவை நோய்த்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கமளித்தார். அப்படியும்கூட இருக்கிறாதா என்று ஆச்சரியத்துடன் இடத்தைக் காலிசெய்து கொண்டு வந்தேன். செம்மறியாட்டு உரோமத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வழிசெய்த தூதரகத்தாருக்கு நன்றி!
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Monday, September 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நம்ம ஊரில் பொமரேனியனுக்கு முடிவெட்டிவிடுவது கூட இதேபோல்தான். ஆனால் என்ன, வீட்டுக்குள்ளே நடக்கும், கண்காட்சியாக இருக்காது!
பின்னூட்டத்திற்கும் தகவலுக்கும் நன்றி தாணு!
//செம்மறியாட்டு உரோமத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வழிசெய்த தூதரகத்தாருக்கு நன்றி!//
:))
Post a Comment