படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, September 12, 2005

தீவிரவாதிகளும் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா?

அசோசியேட்டட் பிரஸ்ஸை ஆதாரம் காட்டி உள்ளூர்ப் பத்திரிக்கையொன்று இன்று போட்டிருந்த தலைப்புச் செய்தி சற்று திக்கென்றுதான் இருந்தது. அதன்படி (அதை நான் புரிந்துகொண்டவரையில்), அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் அல்லது குடிமக்கள் மீது எந்த ஒரு நாடோ, பயங்கரவாதக் குழுக்களோ பேரழிவு ஆயுதங்களைக் (WMD) கொண்டு தாக்கத் திட்டமிட்டால், அவற்றை 'வருமுன் காக்கும்' பொருட்டு எதிர்காலத்தில் அந்நாடு/குழுக்களின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது எனப் பென்டகன் திட்டமிடுவதாகச் சொல்கிறது. கூடவே, பதுங்கு குழிகளை அழித்தெறியவும் ஓர் அணுஆயுதத்தைத் தயாரிக்கப் போகிறார்களாம். ஏற்கனவே பன்னாட்டுப் படையினரின் சில தாக்குதல்களில் கதிரியக்கத்தை உண்டுபண்ணும் வஸ்துகள் ஒளிந்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது சொல்லப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்டாகும் விளைவுகள், எதிர்விளைவுகள் எங்கு போய் முடியுமோ! கவலையாக உள்ளது. ஆயுதங்களால் உண்டாக்கப்படுவதா அமைதி? ம்...

[வேறு]
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பேச்சு ஒன்றிற்கு மாநில அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அச்செய்தியின்படி பார்த்தால் மத்திய அமைச்சர் சென்னை உஷாராக இருப்பது நல்லது என்ற தொணியில் சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு ஒரு மறுப்பை (அல்லது விளக்கத்தை) மாநில அமைச்சர் அறிவிக்க விரும்பினால் "தங்கள் அக்கறைக்கு நன்றி, ஏற்கனவே தமிழக அரசு அதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, விவரங்களை இங்கே காணவும்" என்று சொல்லி ஒரு சுட்டியைக் கொடுத்தால் கண்ணியமாகப் போயிற்று.

அதைவிடுத்து, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வரும் 'அரைவேக்காடு', 'ஆதாரமில்லாத புத்தி', 'உளறுதல்', 'கேலிக்கூத்து' போன்ற வார்த்தைகளைக் கூறுவது அமைச்சர் பதவிக்கு நயம் சேர்ப்பதாகத் தோன்றவில்லை. அக்கருத்தை அமைச்சராகத் தெரிவித்தாரா அல்லது அவரது கட்சி உறுப்பினராகத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. எப்படியிருப்பின் என்ன?

மக்களும் இதுபோன்ற சொற்களைக் கேட்டு வெட்கும் நிலையை இழந்து விடத்தானே பொதுவில், அதுவும் உயர் பதவியிலுள்ளவர்களால் கூட அவை உபயோகிக்கப்படுகின்றன.

2 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நீங்கள் சொல்லியிருக்கும் இரு விஷயங்களும் உண்மையே. அதிலும் அமெரிக்கா இப்படி ஒரு முடிவை எடுக்குமானால் அது அணுப் போருக்கு உலகை அழைத்துச் சென்றுவிடும் என்று அச்சம் ஏற்படுகிறது.

அமைச்சர் ஜெயக்குமாரின் அறிக்கையை ஜெயா டிவியில் பார்க்க நேரிட்டது. ஒரு கட்சிப் பிரமுகராய்த் தான் தெரிந்தது (பாவம், அம்மாவிடம் திட்டு வாங்கி இருப்பார் என்று தோன்றியது).

[வேறு] தமிழகத்தின் நிதியாளுமை குறித்து பாராட்டியிருக்கும் நடுவண் அரசின் ஒரு அமைப்பு பற்றிப் பார்த்தீர்களா? கடந்த பத்து (இருபது?) ஆண்டுகால அளவில் இந்த மதிப்பீட்டில் இந்தியாவில் தமிழகமே முதலிடம் வகிக்கிறதாம். மன்னிக்க, சரியான சுட்டி/இணைப்பு இல்லை.

இராதாகிருஷ்ணன் said...

அப்படியொன்றைப் பார்க்கவில்லை செல்வராஜ், கிடைத்தால் பார்க்கிறேன். நன்றி!