படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, August 08, 2005

ஓடப்பிறந்தவர்கள்

நேற்று தொலைக்காட்சியில் கொஞ்ச நேரம் ஹெல்சிங்கியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2005ம் ஆண்டிற்கான உலக தடகளப் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது பெண்களுக்கான பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் (பந்தயத்திற்கும், போட்டிக்கும் என்ன வித்தியாசம்?). இருபது பேர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஓட ஆரம்பித்தார்கள், ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆரம்பித்ததும் ஒருவருக்குக் கால் தடுக்கிவிடவேண்டுமா என்ன? இருந்தாலும் சுதாகரித்துக் கொண்டு எழுந்து ஓடினார், அதுதான் இன்னும் பல சுற்றுகள் உள்ளனவே.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் வெகுநேரம் கஷ்டப்பட்டு முன்னால் ஓடிக் கொண்டிருந்தார் (இவரையும் சேர்த்து கேமராவின் கண்களுக்கு பெரும்பாலும் ஏனோ குறிப்பிட்ட பெண்களே அகப்பட்டார்கள், தோலின் நிறத்தாலோ?!). அவரை ஒட்டியே பத்துப் பன்னிரண்டு பேரடங்கிய ஒரு கூட்டம் சீராக ஓடிக் கொண்டிருந்தது. சராசரியாக ஒரு கி.மீட்டரை மூன்று சொச்சம் நிமிடங்களில் முடித்து விட்டிருந்தனர்! நேரம் ஆக ஆக அவரை மற்றவர்கள் தாண்டிச் செல்ல ஆரம்பித்தனர். குறிப்பாக ஒரே சீருடையணிந்த மூன்று பெண்கள். 9600 மீட்டர்கள் ஓடிக் களைத்த பின்பும் கடைசிச் சுற்றுக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ, ஓட்ட வேகத்தை முடுக்கினார்கள் பாருங்கள் அம்மூன்று பெண்களும்! கடைசியில் போட்டி அவர்களுக்கிடையில்தான், ஒரே நாட்டிற்கு மூன்று பதக்கங்களையும் அள்ளிச் சென்றார்கள்.

நிச்சயமாக எத்தியோப்பியர்கள் ஓடப் பிறந்தவர்கள்! சமீப காலங்களில் நான் கவனித்தவரை நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களில் ஆண், பெண் இரண்டு பிரிவுகளிலும் பதக்கங்களை அள்ளிக் குவிக்கிறார்கள். (Haile Gebrselassie தன் சிரிப்பு நிறைந்த முகத்தாலும், கடினமாக ஓடித் தொடர்ந்து பெற்ற பல வெற்றிகளாலும் நிறைய பேருக்குப் பரிச்சயமானவர்.)
2005 தடகளப் போட்டிகளின் இன்றைய பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளார்கள் (சுட்டியிலுள்ள பக்கம் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் என்பதை நினைவிற் கொள்க). பஞ்சம், பசி, பட்டினி என்றே அறியப்பட்ட ஒரு நாட்டின் முகத்தை உலகிற்கு வேறுவகையில் உயர்த்திக் காட்டும் இவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

பொதுவாக, தற்போது எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நிறைய விளையாட்டுப் போட்டிகளில், குறிப்பாகத் தடகளம், ஆப்பிரிக்க வம்சாவளியினர் தனிப்பெரும் இடத்தை வகிக்கின்றனர் என்றே நினைக்கிறேன்.

3 comments:

பரணீ said...

இன்று நடந்த ஆண்கள் 10,000 மீட்டரிலும் முதல் இரண்டு இடங்கள் எத்தியோப்பியர்களுக்கே. Gebrselassie யிடமிருந்து முடி சூடிய Bekele வழக்கம் போல் வென்றார்.

சுந்தரவடிவேல் said...

//(பந்தயத்திற்கும், போட்டிக்கும் என்ன வித்தியாசம்?)//
நான் என்ன நினைக்கிறேனென்றால், பந்தயத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் அச்செயலைச் செய்வார்கள், உதாரணமாக ஒரு சீழ்க்கையொலியில் எல்லோரும் ஓட ஆரம்பிப்பது. பந்தம் என்றால் கட்டு, ஒன்றாயிருத்தல் போன்ற அர்த்தங்களிருக்கின்றன.

போட்டியில் ஒருவர் மாற்றி ஒருவர் ஆடுவது. 'ஏட்டிக்குப் போட்டி'யில் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள் அல்லவா? கபாடிப் போட்டியில் ஒருவர் மாற்றி ஒருவர் பாடிப் போவது போல.

இது தவறாகக் கூட இருக்கலாம். தெரியாது :)

இராதாகிருஷ்ணன் said...

நன்றி பரணீ! நேற்று செய்திகளில் படித்தேன்.

விளக்கத்திற்கு நன்றி சுந்தரவடிவேல்! க்ரியா அகராதியிலும் பார்த்தேன், திருப்திகரமாக இல்லை. அதன் விளக்கத்தில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் தென்படவில்லை. :(