படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, December 05, 2004

நில அதிர்வு

லேசான குலங்கலுடன் ஏற்பட்ட சப்தம் கேட்டு உறக்கத்திலிருந்து விருட்டென எழுந்தோம்; ஒரு கணம் ஆடிப்போய்த்தான் விட்டிருந்தது. சரியாக அப்போது இரவு 2.53 மணி. நில அதிர்வால் ஏற்பட்ட குலுங்கல் அதுவென உடனடியாக உணரமுடிந்தது. நல்ல வேளையாக அசம்பாவிதம் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. படுக்கையைவிட்டு எழுந்து கண்ணாடி சன்னல் வழியாகவும், கதவு வழியாகவும் வெளியில் பார்த்தபோது அக்கம்பக்கத்தில் யாரும் தென்படவில்லை. இருப்பது இரண்டாவது மாடியில், மீண்டும் குலுக்கல் ஏற்படுமா என்ற அச்சம் வேறு! கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு மீண்டும் போய்ப்படுக்க உறக்கம் வருவதாயில்லை. குஜராத், ஈரான் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கக் காட்சிகள் கண்முன் ஓடின.

காலையில் எழுந்து இணையப் பத்திரிக்கையொன்றைப் பார்த்தபோது ஜெர்மனியின் தென்பகுதியிலுள்ள கருங்காட்டுப் (Black Forest) பகுதியில் 5.4 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் இருந்ததாகவும் (சேதம் பற்றிய தகவல் இதுவரை ஒன்றும் இல்லை) அதன் பாதிப்பை வடக்கு சுவிட்சர்லாந்தின் பகுதிகளில உணரமுடிந்ததாகவும் எழுதியிருந்தனர். ஜூரிக்கிற்கும் தெற்கே இருந்ததா என்று நாளைக்கு அலுவலகம் போனால் தெரியும்.

வாழ்க்கையில் முதன் முதலாக எதிர்கொண்ட நில அதிர்வு. சென்ற இரவு மறக்க முடியாதவொன்று!

2 comments:

Kasi Arumugam said...

கொஞ்சூண்டு நில நடக்கம் வரணும், பாத்திரமெல்லாம் உருண்டு விழுவதை அனுபவிக்கணும்னு ஒரு ஆசை. ஆனா, வரும்போது நம்மகிட்ட கண்ட்ரோல் பேனல் கொடுத்துட்டா வரும்? வேணாம்ப்பா.

இராதாகிருஷ்ணன் said...

நல்ல ஆசை போங்க! வூட்டாண்ட சொல்லிடாதீங்க :)