படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, October 17, 2004

உறங்கும் ஊடகங்கள்

* ஜெ.ஜெயலலிதாவின் சமீபத்திய பி.பி.சி. பேட்டியைப் பற்றிய உருப்படியான ஓர் அலசல்.
* மு.கருணாநிதி, சென்ற வாரத்தில் தனக்கு விருது வழங்கப்பட்ட விழாவில், ஆட்சிக்கு வந்தால் தமிழை ஆட்சி மொழியாக்குவோம் என்று உறுதியளித்துள்ளார். முந்தைய ஆட்சியின்போது ஏன் அதைச் செய்யவில்லை, ஆட்சி மொழி ஆதல் என்றால் என்ன போன்றவற்றை விளக்கும் விலா வாரியாக ஒரு கட்டுரை.
* ச.ராமதாஸ், தொழில்நுட்ப மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வையே வேண்டாம் என்கிறார். அவர் கூறியவுடன் யாரும் அதை நிறுத்திவிடப்போவதில்லை என்றாலும், அப்படி நிறுத்தினால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி ஒரு பார்வை.
* மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் சீர்குலைவு அல்லது பெருகும் ஒழுக்கக்கேடுகளைப் பற்றிய விமர்சனங்கள்.

இவை போன்றவைகளைப் பற்றியெல்லாம் தமிழக நாளேடுகள் அல்லது/மற்றும் வெகுஜன ஊடகங்களில் எதிர்பார்ப்பதே வீணான ஒன்றோ? எப்போதுதான் அவை விழித்துக்கொள்ளப்போகின்றன?

3 comments:

Badri Seshadri said...

கருணாநிதி சொல்வது வெட்டிப்பேச்சு என்று விட்டுவிடக் கூடியதில்லை. தமிழ் செம்மொழி. வேண்டுமானால் வெட்டிப்பேச்சு விஷயத்தில் சேர்த்தி என வைத்துக்கொள்ளலாம். இப்பொழுது நடக்கும் தமாஷாவில் தமிழுக்கென எந்த உருப்படியான உதவியும் கிடைக்கப் போவதில்லை. "அதான் தமிழைச் செம்மொழி ஆக்கிட்டோமே" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார் கருணாநிதி.

ஆனால் ஆட்சிமொழி என்பது முக்கியமான விஷயம். இன்றைய தேதியில் மத்திய அரசுடன் பேச வேண்டுமானால் ஒருவருக்கு ஆங்கிலமோ, ஹிந்தியோ தெரிந்திருக்க வேண்டும். இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் மத்திய அரசுடன் எப்பொழுதாவது பேசியே ஆக வேண்டும். இன்று இல்லாவிட்டால் நாளை. பாஸ்போர்ட் வாங்க வேண்டுமா? வருமான வரி கட்ட வேண்டுமா? என்று தொடங்கி.... எத்தனை எத்தனையோ.

செம்மொழியை விட ஆட்சிமொழி விஷயம்தான் பொதுமக்களை நேரடியாக சென்றடையக் கூடியது. கருணாநிதியிடமிருந்து வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக அதை எதிர்க்கக் கூடாது.

கருணாநிதி சொல்வதென்ன? தமிழ் மட்டும் அல்ல, எல்லா இந்திய மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவது. இதில் பல்வேறு நடைமுறை சார்ந்த பிரச்னைகள் இருக்கின்றது. ஆனாலும் இது அவசியமான முறை. கணினிகள், ஒளிவழி வருடிகள் மூலம் விண்ணப்பங்களைப் படிப்பது, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழியில் பொதுமக்களுடன் பேச அலுவலகங்கள் அமைப்பது, கன்னா பின்னாவென்று ஒரு மாநில அதிகாரியை வேறொரு மாநிலத்துக்கு மாற்றாதது (அப்படி மாற்றும்பொழுது அவர் தான் போகும் மாநில மொழியை கற்றுக்கொள்ள உறுதிமொழி கொடுப்பது) என்று சில வரையறைகளை வைத்துக் கொண்டால் மத்திய அரசு மக்கள் நல அரசாக அமையும்.

ஹிந்தியும், ஆங்கிலமும்தான் நான் பேசுவேன், நீ எக்கேடு கெட்டுப்போ என்று சொல்வது - 55 வருடங்களாக நடந்து வருகிறது - இனியும் நடக்கக் கூடாது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்... இதைப்பற்றி சற்று யோசித்தபின் எழுதவேண்டும்.

ஏன் அமெரிக்காவில் அரசுப் படிவங்கள் ஸ்பானிய மொழியிலும் இப்பொழுது வருகின்றன என்று யோசித்துப் பாருங்கள்...

இராதாகிருஷ்ணன் said...

ஹரி, பத்ரி இருவருக்கும் நன்றி!
ஹரி: உங்களது பதிவுகளை முன்னர் வாசித்துள்ளேன். "அதற்கு ஊடகங்கள் பெரிசாக மதிப்பு கொடுக்காமல் இருப்பதே நல்லது." என்று விட்டுவிடக் கூடாது. இவ்விஷயத்தில் பத்ரியின் கருத்து முற்றிலும் ஏற்கத்தக்கது.
பிறகு, "வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்... இதைப்பற்றி சற்று யோசித்தபின் எழுதவேண்டும்." என்று நீங்கள் அனுமானித்துள்ள அர்த்தத்தில் பத்ரி அதைக் குறிப்பிடவில்லையென்றே எண்ணுகிறேன்.

Badri Seshadri said...

பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆங்கிலத்திலும்/ஹிந்தியிலும் (bilingual) ஆகத்தான் இருக்கின்றன. எல்லா மத்திய அரசு விண்ணப்பங்களும் இப்படியே. ஒருசில விஷயங்களில் மாநில அரசின், அல்லது உள்ளாட்சி அரசின் வழியாக செயல்படுத்தப்படும் சில படிவங்கள் (உதாரணம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது - இதனை சென்னையில்் செய்வது மாநகராட்சி ஊழியர்கள், அதனால் இந்த விண்ணப்பப் படிவம் தமிழ்/ஆங்கிலத்தில்) தமிழ்நாட்டில் தமிழில் இருக்கின்றன.

தமிழ் ஆட்சிமொழி என்னும் பட்டம் கூட வேண்டாம். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு தமிழிலும் (ஆங்கிலத்திலும், அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியானாலும், அதிலும்) எல்லாவற்றையும் செய்யக்கூடிய நிலை வேண்டும். ஆட்சிமொழியானால்தான் இது நடக்கும் என்றால் தமிழ் ஆட்சிமொழியாகத்தான் வேண்டும். கன்னடமும் கூட. மலையாளமும் கூட ...

===

மற்றபடி வெளிநாட்டில் வாழும் இந்தியர்களைப் பற்றி நான் சொன்னது... அதற்குக் காரணம் உண்டு. நான் பல வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்திருக்கிறேன். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பலதடவை பேசுவது இந்தியாவின் நேரடி அனுபவம் இல்லாததாக இருக்கிறது. இதில் 'நான் உசத்தி, நீ மட்டம்' என்ற வகையில் நான் எதையும் சொல்லவில்லை. நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். நேரடி பாதிப்பு என்பது பலவகைகளில் இந்தியாவில் வசிப்பவர்களுக்கே. என்னை ஒரு விஷயம் நேரடியாக பாதிக்கவில்லை எனும்போது அதனால் அந்த விஷயத்தைப் பற்றி தீவிரமாக யோசிக்காமல் சிலவற்றைப் பேசிவிடக் கூடிய அபாயம் உண்டு. அதைத்தான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.

இந்தியாவில் இருப்பவர்கள் அனைவருக்கும் எல்லாமும் தெரிந்திருப்பதில்லை. அதுதான் பெரிய பிரச்னையே.